டாக்டர் அலர்மேலு ரிஷி அவர்கள் சுமார் 72 வயதுடையவர். ஆனால்
அப்படியே திருப்பிப்போட்டாலும் அதாவது 27 என்று வயதைக்
குறைத்தாலும் அவருடைய சுறுசுறுப்புக்கும், செயலுக்கும்
அதுவும்கூட அதிக வயது என்றுதான் சொல்லவேண்டும்.
சாதிக்கவேண்டும் என்ற விதை மனதுக்குள் விதைக்கப்பட்டுவிட்டால்
தகுந்த சூழல் வரும்போது விருட்சம் விஸ்வரூபம் எடுத்துச்
சாதிக்கும் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். 65வது வயதிலும்
விடாமுயற்சியோடு தனது முனைவர் பட்டத்தை வாங்கிச்
சாதித்திருக்கிறார். அவரின் விடாமுயற்சிக்கும்
சுறுசுறுப்புக்கும் வேறு விளக்கம் தேவையிருக்காது என
நினைக்கிறேன். சமீபத்தில் அமெரிக்கப் பண்பலை வரிசையில் அவரின்
"பழமொழி" பற்றிய நிகழ்ச்சியொன்றைக் கேட்கும் வாய்ப்புக்
கிடைத்தது. தொடர்புகொண்டபோது அதே கலகலப்புடன், அவருடைய 72
ஆண்டுகால அனுபவங்களையும், இன்னும் எத்தனையோ கனவுகளோடும்,
ஆசைகளோடும் சாதிக்கத் துடிப்பதையும் நம்மிடையே
பகிர்ந்துகொள்கிறார்.
?
நீங்கள்
வானொலியில் பழமொழி பற்றிப் பேசுவதற்கான உந்துதல் என்ன?
கலிபோர்னியாவில் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வளாகத்தில்
புதன்கிழமைகளில் காலையில் 6.30 முதல் 9மணி வரை
FM
ஒலிபரப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்
நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். இதில் நேயர்கள் தொலை பேசிமூலம்
நேரடித்தொடர்பு கொண்டு நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம். தங்கள்
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். திருக்குறள் பற்றிய ஒரு
தமிழ் நிகழ்ச்சியைக் கேட்ட போதுதான் பழமொழி பற்றிப் பேசலாமே
என்றாள் என் மகள். காரணம் நான் அடிக்கடி பழமொழி கூறுவதுண்டு.
அவற்றில் சில பழமொழிகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
நிகழ்ச்சியைக் கேட்கும் அன்பர்களுக்கும் தங்களுக்குத்
தெரிந்த, சுவைத்த பழமொழிகளை மற்றவர்களோடு பரிமாறிக்கொள்ள
வாய்ப்பு கிடைக்கும் என்பதும் ஒரு காரணம். இதுபற்றி நிகழ்ச்சி
அமைப்பாளர் திரு. ஸ்ரீகாந்த் அவர்களிடம் தெரிவித்தபோது "நீங்களே
அப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தலாமே" என்றார். இதற்கு முன்
ஆசிரியர் தினத்தையொட்டி ஒரு நிகழ்ச்சியும், காந்தி ஜெயந்தி
பற்றி ஒரு விநாடி வினா நிகழ்ச்சியும் இங்கு நான்
நடத்தியிருப்பதால் இந்த வாய்ப்பையும் மகிழ்ச்சியோடு
ஏற்றுக்கொண்டேன்.
?
பழமொழிகள் வாழ்க்கைக்கு
எந்தவிதத்தில் பயன்படுகின்றன? அவற்றின் மூலம் நமது கலாசாரம்,
பாரம்பரியம் உணர்த்தப்படுகிறதா?
வாழ்க்கையில் அனுபவம் கற்றுத் தரும் பாடத்தை உலகத்தில் எந்தப்
பள்ளியும், கலாசாலையும் கற்றுத் தர முடியாது. அனுபவத்தின்
அடிப்படையில் தோன்றியவைதான் பழமொழிகள். தமிழ் மட்டுமல்ல, உலக
மொழிகள் பலவற்றிலும் பழமொழிகள் உண்டு. இதில் ஒரு வேடிக்கை
என்னவென்றால் ஒரே பொருளில் வெவ்வேறு மொழிகளில் பழமொழிகள்
இருக்கக் காணலாம். உதாரணத்திற்கு "மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
என்று தமிழில் சொல்கிறோம். இதையே ஆங்கிலத்தில் "All
that glitters are not gold"
என்கிறோம். ஒரு சிறப்பு என்னவென்றால் தமிழ் மிக மிகப்
பழமையான அதே நேரத்தில் வளமான ஒரு மொழி என்பதால் இதில்
பழமொழிகள் மிக அதிக அளவில் உள்ளன. நகர்ப்புறங்களில் சமீப
காலத்தில் ஆங்கில ஆதிக்கம் அதிகமாகிப் போனதால் தாய் மொழித்
தமிழில் பேசுவதே குறைந்து போய்விட்டது, இதனால் பழமொழி வழக்கு
அன்றாட வாழ்க்கையில் வெகுவாகக் குறைந்து விட்டது. ஆனால்
கிராமப் புறங்களில் இன்றும் பேச்சுக்குப் பேச்சு பழமொழி இடம்
பெறக் காணலாம்.
அனுபவத்தில் கண்ட சில உண்மைகள் பழமொழிகளாகி வாழ்க்கைப்
பாதைக்கு வழிகாட்டியாகின்றன. தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்
கூடாது என்பதற்காகவே சொன்னது போல் "அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும்" என்று ஒரு பழமொழி கூறுகிறது. அதுபோலவே
தோல்வி என்பது தவிர்க்க இயலாத ஒன்று என்பதற்காக "ஆனைக்கும்
அடி சறுக்கும்" என்ற பழமொழி மனந்தளர்ந்து விடாதிருக்க வழி
சொல்லிக் கொடுக்கின்றது. பெரியவர்கள் வயதில் இளையவர்களுக்கு
ஆசிகள் வழங்கும் போது அருமையான ஒரு பழமொழியோடு சொல்வார்கள்.
"ஆல்போல் தழைத்து அருகு போல் வேரோடி" நீடூழி வாழ்க என்பார்கள்.
ஆலமரம்போல் வாழ வேண்டும் என்பதன் பொருள் நம்மைச்
சேர்ந்தவர்களுக்கு நிழல் தந்து அரவணைத்து உற்றுழி உதவியும்
உறுபொருள் கொடுத்தும் வாழவேண்டும்.
அருகு போல் வேரோடி என்பதற்கு தென்னை வாழை மரங்களைப் போல்
வேரோடு சாயாமல் எந்தச் சூறாவளிக்கும் வெள்ளத்திற்கும்
அடித்துச் செல்லப் படாமல் தலை வணங்கிப் பின் இயல்பாய் தலை
நிமிர்ந்து விடும் அருகம்புல் ஆழமாய் வேரோடி நிற்பதைப்போல்
வாழ்க்கையில் துன்பத்தைக் கண்டு துவளாமல், இன்பம் வந்தபோது
தலைகனம் கொள்ளாமல் எப்போதும் ஒரே தன்மையில் நீடூழி வாழ
வேண்டும் என்பதுதான் இந்த வாழ்த்தின் பொருள். "நீர் அடித்து
நீர் விலகாது"என்பதும் பகை உணர்வு உறவு முறைகளை முறித்து
விடாது. முறித்து விடக் கூடாது என்பதற்காகச் சொல்லப்பட்டது.
இவைகளை வைத்துப் பார்க்கும்போது நம்முடைய போற்றுதற்குரிய
பழமொழிகள் எல்லாம் நம்முடைய பாரம்பரியமான குடும்பம், உறவு,
அரவணைப்பு, போன்ற சீரிய பண்புகளைப் பிரதிபலிக்கும்
கலாச்சாரத்தைத்தான் வெளிப்படுத்துகின்றன.
?
அரைநூற்றாண்டுக்கு மேல் இந்திய
மண்ணிலும் இப்போது அமெரிக்க மண்ணிலும் இருக்கிறீர்கள்.
தங்களின் மனதில் இந்தியா அமெரிக்கா பற்றிய தாக்கம்?
பிறந்தது முதல் இந்திய மண்ணிலேயே 65 வயதுவரை வாழ்ந்தபின்
கடந்த 7 ஆண்டுகளாகத்தான் இந்தியா அமெரிக்கா என்று போய் வந்து
கொண்டிருக்கின்றேன். வேலை நிமித்தமாக என் மூத்த மகள் இரண்டு
குழந்தைகளோடு அமெரிக்கா வந்தபோது உதவிக்காக அவளுடன்
மிச்சிகனில் தங்கியிருந்தேன். மேற்படிப்புக்காக அமெரிக்கா
வந்த என் இளைய மகள் இப்போது திருமணமாகி ஒரு குழந்தைக்கும்
தாயாகி இருப்பதால் இப்போது அவளுக்கு உதவியாக வந்து போய்க்
கொண்டிருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை அவசியத்தின் காரணமாய்
இடம் மாறினாலும் என் கொள்கையைப் பொறுத்தவரை நான் என்றுமே
தமிழ்க் கலாசாரத்தை விட்டுக் கொடுக்க விரும்பாதவள். இதனால்
நான் அமெரிக்கக் கலாச்சார விரோதி என்பது பொருளல்ல. அவரவர்
கலாச்சாரத்தைப் பின்பற்ற அவரவர்க்கு உரிமை உண்டு. திணிக்கப்
படுவதல்ல கலாச்சாரம். நம்முடைய தேசப்பிதா மகாத்மா காந்தியையே
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். லண்டனில்
வட்டமேசை மாநாட்டிற்கு ஒரு இந்தியராகவே உடை அணிந்து சென்றது
இந்தத் தலைமுறையினருக்கு எந்த அளவிற்குத் தெரியும் என்று
எனக்குத் தெரியாது. பாரம்பரியக் கலாச்சாரம் அழிந்து விடக்
கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதனால் நான் ஒரு
conservative
என்று முடிவெடுத்து விடவேண்டாம். "புலியைப் பார்த்துப் பூனை
சூடு போட்டுக் கொள்ளவேண்டாம்" என்பதுதான் என் கருத்து.
?
கம்பராமாயணமும் இராம நாடக
கீர்த்தனையும் நூல் பற்றிக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்
என் குடும்பம் ஒரு சங்கீதப் பரம்பரையைச் சேர்ந்தது. நான்
முறையாக சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை[பொருளாதார வசதியின்மை]
என்றாலும் இசையில் ஆர்வம் உண்டு. கேள்வி ஞானம் உண்டு. மறைந்த
N.C.வசந்தகோகிலம்
அவர்கள் இசைத்தட்டில் பாடியுள்ள "ஏன் பள்ளி கொண்டீர் ஐயா
ஸ்ரீரங்கநாதரே" என்று தொடங்கும் இராம நாடகக் கீர்த்தனை
பள்ளிப் பருவத்திலேயே என்னை மிகவும் கவர்ந்தது. காரணம்
இராமாயணம் முழுவதும் -இராமன் அவதாரம் முதல் பட்டாபிஷேகம் வரை-
8 சரணங்களில் ஒரே கீர்த்தனையில் அமைந்திருந்த அழகுதான்.
இதுபோல் இன்னும்
M.S.சுப்புலஷ்மி,
D.K.பட்டம்மாள்,
மதுரை மணி அய்யர்,
G.N.பாலசுப்பிரமணியன்
போன்றோர் பாடியுள்ள இராம நாடகக்கீர்த்தனைகள் என்னை மிகவும்
கவர்ந்திருந்தன. எனவே முனைவர் பட்டத்திற்கான ஆய்வு
மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்த போது இதையே தலைப்பாக கொண்டேன்.
கல்வி அறிவு உடைய சான்றோர் விளக்கிக்கூறி, மற்றவர் புரிந்து
கொள்ளவேண்டிய செய்யுள் வடிவில் இருப்பது கம்பராமாயணம். இதே
இராம சரித்திரத்தைப் பாமரரும் புரிந்து கொள்ளும், வகையில்
எளிய பேச்சு மொழியில், இசை வடிவில் ஒரு நாடகம் பார்ப்பது
போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாகக் கீர்த்தனைகளாகப் பாடினார்
சீகாழி அருணாசலக் கவிராயர், கி.பி.1712 முதல் 1779 கால
கட்டத்தில் வாழ்ந்த இவர் இயற்றிய இராம நாடகக் கீர்த்தனையை
கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பர் இயற்றிய
இராமாயணத்தோடு ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்தேன்.[comparative
study].
?
தங்களது 65-வது வயதில் முனைவர்
பட்டம் பெற்றீர்கள். அந்த ஆர்வமும் ஊக்கமும் எங்கிருந்து
வந்தன?
நான் அரசுக் கல்லூரிகளில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த
காலகட்டத்திலேயே முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொள்ள
முயற்சித்தேன். ஆனால் சென்னைப் பல்கலைக் கழகத்தின்
தமிழ்த்துறையில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு
வாய்ப்பு கிடைப்பது எளிதாக இல்லை, இது வேதனைக் குரிய ஒன்று
என்றாலும் நான் மனந்தளரவில்லை. எப்படியும் என் வாழ்நாளில்
டாக்டர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்ற ஒரு வேகம், ஒரு தாகம்
எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. என் நம்பிக்கையும்
வீண்போகவில்லை. வாய்ப்பு ஒரு நாள் என்னைத் தேடி வந்தது. நான்
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய ஆண்டில்தான்
இந்த வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்பது ஒரேமுறைதான்
வாயிலைத்தட்டும் என்பார்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும்
ஆய்வை மேற்கொள்வது என்று முடிவு எடுத்தேன். பள்ளிப்
பருவத்திலேயே வாய்ப்பு கிடைத்தால் இராம நாடகக் கீர்த்தனைகள்
முழுவதையும் படிக்கப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள்
வேர் விட்டிருந்தது. M.A. பட்டவகுப்பு படிக்கும் காலத்தில்
எனக்குக் கம்ப ராமாயணத்தில் சுந்தரகாண்டம் பாடப் பகுதியாக
இருந்தது, அதைக் கற்பித்த பேராசிரியர் தங்கவேலனார் அவர்கள்
இராமாயணத்தில் ஊறித் திளைத்தவர். இராமனைப் பிரிந்து
இலங்கையில் அரக்கியர் மத்தியில் சிறைப் பட்டிருக்கும் சீதை
அனுமனிடம் "இன்னும் ஒரு திங்களில் என்னை இராமன் சிறை மீட்க
வில்லை என்றால் அவர் இருக்கும் இடத்திலேயே எனக்கு ஈமக் கடனைச்
செய்துவிடச்சொல்" என்று கூறுவதாக வரும் பாடல்களைச்
சொல்லும்போது பேராசிரியர் உண்மையிலேயே கண்ணீர் விடுவார். சீதை
இறந்தே போய்விட்டது போல் குரலில் தேம்பல் ஒலி எழும். இதனால்
எனக்குக் கம்பராமாயணத்திலும் ஈடுபாடு ஏற்பட்டது. எனவேதான்
செய்யுள் வடிவில் கம்பராமாயணத்தையும் இசை வடிவான இராமநாடகக்
கீர்த்தனையையும் ஒப்பாய்வு செய்தேன்.
1980இல் முயன்று 12 ஆண்டுகள் காத்திருந்து 1992இல் சென்னை
பல்கலைக் கழகத்தில் பகுதிநேர ஆய்வாளராகப் பதிவு
செய்துகொண்டேன். அப்போது சென்னை மாநிலக் கல்லூரி
தமிழ்த்துறைத் தலைவராக இருந்த டாக்டர். இரா.கு.நாகு
அவர்கள்தான் என் ஆய்வுக்கு வழிகாட்டி[guide]. அவர் வைணவ
இலக்கியங்களில் மூழ்கித் திளைத்தவர் என்பதோடு சென்னைப்
பல்கலைக் கழகத்தில் வைணவத்தொடர்பான தலைப்புக்களில் முன்று
Ph.D மாணவர்களை உருவாக்கியவர். குடும்பப் பொறுப்புக்களின்
இடையீடு காரணமாக என் ஆய்வுப் பணி நீண்டு கொண்டே போனாலும்,
2000இல் ஆய்வினை வெற்றிகரமாய் முடித்து பட்டமளிப்பு
விழாவிலும் நேரில் கலந்துகொண்டு என் 65வது வயதில் டாக்டர்
பட்டம் பெற்றேன். தேர்வாளர்கள் என் ஆய்வுக் கட்டுரையை
வெகுவாகப் பாராட்டியதோடு புத்தகமாகக் கொண்டு வருவதற்குரிய
எல்லாத் தகுதிகளும் பெற்றிருப்பதாகக் கூறினார்கள். அவ்வாறே
2007 ஜனவரியில்
மாண்புமிகு.ஜஸ்டிஸ்.P.கோகுலகிருஷ்ணன், மஹாராஷ்டிராவின்
முன்னாள் கவர்னர் தலைமையில் என் ஆய்வுக்கட்டுரை புத்தக
உருவில் வெளியிடப்பட்டது. ஆய்வில் ஈடுபட்டிருந்த காலங்களில்
"பசி நோக்கார்; கண் துஞ்சார்; கருமமே கண்ணாயினார்" என்ற
அவ்வையார் வாக்கு என் அளவில் உண்மை. நான் ஆய்வேட்டை முடித்து
அதன் கட்டுரைச் சுருக்கத்தை பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப
வேண்டிய நேரத்தில் ஒரு சோதனை. நான் சாலையில் நடந்து
கொண்டிருந்த நேரத்தில் ஓடிவந்த ஒருவர் என்மீது மோதி எனக்கு
விலாப்புறத்தில் அடிபட்டு படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமை
ஏற்பட்டது. அந்த நேரத்தில் கடவுளே உதவிக்கு வந்தது போல்
வந்தார் என்னுடன் மாநிலக் கல்லூரியில் உடன் பணியாற்றிய
திரு.மெய்கண்டார் அவர்கள். நான் படுத்தபடியே சொல்லச் சொல்ல
அவர் அதை எழுதி அச்சடித்து பல்கலை கழகத்திற்கு உரிய நேரத்தில்
நேரில் கொண்டு போய்க் கொடுத்துதவினார். அவருக்கு என் நன்றி
என்றும் உரியது.
தொடர்ச்சி அடுத்த பக்கம்>>>