200
சிறுகதைகள், 10 நாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற
கவிதைகள் எழுதியுள்ள ஷைலஜா ஏ.எஸ்.ராகவன் அவர்களின்
புதல்வி. நகைச்சுவை ததும்ப பேசுவதில், எழுதுவதில்
சிறந்தவர். இணையத்தில் மரத்தடி மற்றும் தமிழுலகம்
நடத்திய கதை, கவிதை போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.
ஷைலஜா இப்போது ஒலி
FM
- ல் பகுதிநேரப் பணியில் இருக்கிறார்.
இவர் ஒரு சமூக சேவகியும் கூட. நிலாச்சாரலுக்காக அவருடன்
ஒரு நேர்காணல்:
உங்கள் முதல் எழுத்தின் வெளிப்பாடு குறித்துச் சொல்லுங்கள்
ஷைலஜா. எங்கிருந்து இதுவரை வந்திருக்கிறீர்கள்? மகிழ்வைப்
பகிர்ந்து கொள்ளுங்கள் இங்கே...
பத்துவயதில்
எழுதிய முதல் ஜோக் ஆனந்தவிகடனில் உடனேயே பிரசுரமானபோது
அடைந்த மகிழ்ச்சிக்கு இன்றுவரை ஈடு இணை இல்லைதான்...
முதற்கட்டுரை கதையென தாய்வீடாய் விகடன் ஆனது. பிறகு கல்கி,
கலைமகள், அமுதசுரபி, தினமலர் நடத்திய சிறுகதைப் போட்டிகளில்
பரிசுபெற்ற போது மேலும் எழுத ஆர்வம் அதிகமானது.
விகடனின்
பவழவிழாப் போட்டியில் படத் தொடர்கதைக்கு 30000 ரூபாய்
பரிசுபெற்று அந்தப் பாராட்டுப் பத்திரத்தை காமராஜர் ஹாலில்
பல பிரபலங்கள் முன்னிலையில் மேடையேறி பெற்றுக்கொண்ட ஆனந்தம்
நெஞ்சில் என்றும் நிரந்தரம்.
பள்ளிநாட்களில் ஆண்டுவிழா, சுதந்திரதின நிகழ்சிகளுக்கு நாடகம்
எழுதி நடித்து அதற்கான ஒத்திகை பார்க்கும் சாக்கில் வகுப்பை
கட் அடிப்பது பிடித்திருந்தது! ஏதாவது ஜோக், கதை எனச்
சொல்லிக்கொண்டே இருந்ததால் தோழிகள் கூட்டம் என்னைச் சுற்றியே
வந்தது.
ராகவன் அவர்களின் மகள் என்பதில்
எப்படி உணர்கிறீர்கள்?
அப்பா
ஏ.எஸ்.ராகவன் மூலமாகத்தான் எனக்கு பாரதி கம்பன்
அறிமுகம்; கவிதை எழுத ஆர்வம் வந்தது. ஸ்ரீரங்கத்தில்
முதன் முறையாக எனக்குத் திருமணம் ஆகிய சிலவருடங்களில்
கவியரங்கமேடை ஏறினேன். சொந்த மண்ணில் அரங்கேற்றம்;
சிந்தை குளிர்ந்தேன். சித்திரை வீதியில் கீற்றுக்
கொட்டகை போட்டு மேடைக்குக் கீழ் நூறு நாற்காலிகள்
போடப்பட்டிருந்தன. மாலைமணி 6 ஆயிற்று. கவிதை படிப்பவர்கள்
ஐவரும் மேடை ஏறினோம். கீழே நாற்காலியில் வந்து யாரும்
உட்காரவில்லை
தெருவில்
நடந்தபடியே மேடை நோக்கி ஒருபார்வை பார்த்துப் போனார்களே தவிர
ஒருத்தராவது வந்து நின்று கேட்கத் தயாராய் இல்லை. மேடையில்
அதிகம் பேர் தெரிய கீழே ஆடியன்ஸ் எண்ணி மூன்றே பேர்தான்,
அதில் ஒன்று என் அம்மா இன்னொன்று என் ஐந்துவயது மகள்.
மஞ்சற்பையை வீசிக்கொண்டு போன ஒருவர், ரிக்ஷா ஓட்டும் செந்தில்
என இருவர் மனமுவந்து நாற்காலியில் வந்து அமரவும் கவியரங்கம்
அரம்பமானது.
கவிதை முடிந்ததும் ஒரு மாமி மடிசார் தடுக்க என்னை நோக்கி
ஓடிவந்தார்,, "ஆஹா நீ வாசித்த கவிதை அற்புதம்!" என்று
பாராட்ட வந்துவிட்டர்களென என மனம் துள்ளியது.
"என்னடிம்மா புடவை இது மைசூர்சில்க்கா, இல்லே சாதா பட்டா?"
என்றதும் என் முகம் போனபோக்கை எப்படிச் சொல்ல?
இலக்கியவாதிகளுடனான சந்திப்பு...
அப்பா
எழுத்தாளராயிருந்ததால் சாவி, மணியன், ஜெயகாந்தன் என்று பலரை
சிறுமியாய் இருக்கும்போது பார்த்துப் பேசினாலும் எழுத்தாளர்
கூட்டங்களுக்கு அப்பாவுடன் போய் முதல் வரிசையில்
உட்கார்ந்ததும் செவி அந்தச் செந்தமிழ் பேச்சில் செல்லாது;
பொங்கல், கேசரி என்று அடுத்து வழங்கப்போகும் கணத்திற்குக்
காத்திருக்கும் மனதும் வயிறும்.
ஜெயகாந்தன்
ஸ்ரீரங்கம் வந்தபோது வீட்டிற்கு வந்தார். பள்ளிச் சிறுமியான
எனக்கு அப்போது அவருடைய கதைகளைப் பற்றி எதுவும் விமர்சிக்கத்
தெரியவில்லை. அவரிடம், "மாமா என்னை தெற்குவாசல் கடைக்கு
அழைத்துப் போய் நன்னாரி சர்பத் வாங்கித் தரீங்களா?" என்று
கேட்க அவர் மறுக்காமல் உடனே என்னை அழைத்துப்போனார். வரும்
வழியில் எனது கட்டைகுட்டையான் சுருண்ட தலைமுடி செழித்து வளர
வேண்டும் என்றவர் அங்கே ஒரு கடையில் நுழைந்து அப்போது
பிரபலமாயிருந்த காந்தரால் என்னும் தைலத்தை வாங்கித் தந்தார்...
"மைதிலிக்குட்டி! அடுத்ததடவை உன்னை நான் பார்க்கறப்போ
கூந்தலில் நல்ல வளர்ச்சி தெரியணும், தவறாம இதை தடவிக்கோம்மா"
என்றார் பாசத்துடன். அடுத்த சிலவருடங்களில் அவரைப் பார்க்க
நேர்ந்தபோது, "ஜெய்மாமா! நல்ல வளர்ச்சிதான் இப்போ நீங்க
வாங்கித்தந்த அந்தக் கூந்தல் தைலக் கம்பெனிக்கு!" என்றேன்.
அவர் பெரிதாய்ச் சிரித்துவிட்டார்..
மேடை நாடக அனுபவம் குறித்து
சொல்லுங்கள்...
கணவரின்
அலுவலக அண்டுவிழாவுக்கு எங்கள்வீட்டு மொட்டைமாடியில் நாடக
ஒத்திகை நடந்தது. காபி டிபன் விநியோகித்துக் கொண்டிருந்த
என்னை நாடகத்தின் பிரதான நடிகை அன்று வரவில்லை என்று
ஒத்திகையில் குரல் கொடுக்கச் சொன்னார்கள். பிறகு "நீங்களே
நல்லா வசனம் பேசறீங்க.. நடிக்கறீங்க.." என்று வைத்த ஐஸில்
உருகி அந்த நாடகத்தில் நானே நடித்தேன். 14 குழுக்கள் பங்கு
பெற்று அளித்த நாடகங்களில் எங்கள் குழுவில் நடித்த எனக்குச்
சிறந்த நடிகை கேடயம் கொடுத்தனர். ஆனால் அதை வாங்க நான்
போகவில்லை. எனக்குக் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவே இல்லை.
அந்த நாடக இயக்குநர் என் சார்பில் பெற்றுக்கொண்டுவந்து
தந்தபோது திகைப்பும் ஆனந்தமும் ஏற்பட்டது நிஜம்.
மறுநாள்
கணவரின் கம்பெனி நாடகப்பரிசு அறிவிப்பு விழா வைபவத்திற்கு
புறப்படத் தீர்மானித்தேன். ஏனெனில் அதே நாடகம்தான் இங்கும்
போட்டியில் கலந்துகொண்டது. ஒருவேளை இதற்கும் பரிசு கிடைக்குமோ
என ஆர்வமானது. என்ன ஆச்சர்யம்! அங்கும் எனக்கே சிறப்புப்பரிசு!
அவ்வளவுதான் அத்துடன் நடிப்புக்கு
முற்றுப்புள்ளியிட்டுவிட்டேன். எமக்குத் தொழில் எழுத்து
அல்லவா?
எழுத்தைக் கடந்து வாசிப்பு (குரல்
அளிக்கும்) பணி?
விளம்பரப்
படங்களுக்குப் பின்னணி குரல் கொடுப்பதும் பெங்களூர் வானொலி
நிலையத்தில் என் கதையை நானே வாசிப்பதும், நிகழ்ச்சியை
சிலசமயம் தொகுப்பதும் எனச் செய்துவருகிறேன். அண்மையில்
இணையதள வானொலி olifm ல் பகுதிநேரப் பணி செய்கிறேன். சிபி
டாட் காம் வலைப்பத்திரிகையில் கவிதைகளை ஒலிக்கோப்பாய்
வாசித்து அனுப்புகிறேன்.
பிடித்த எழுத்தாளர்?
பிடித்த
பிடிக்காத எழுத்தோ எழுத்தாளரோ என்று ஏதுமில்லை யாருமில்லை.
ஏனெனில் புதியவர்கள் பலர் பிரமிக்க வைக்கின்றனர்.
எல்லாவற்றையும் வாசித்து ஏற்பதை ஏற்கிறேன்.
உங்கள் சமூகசேவைப் பணியில் நீங்கள்
சந்தித்த புது அனுபவம் குறித்து...?
பெங்களூரில்
ஒரு கன்னட சமூக அமைப்புடன் கிராமங்கள் சென்று
படிப்பறிவில்லாத பெண்களுக்கு விழிப்புணர்வுச் சேதிகளை
சொல்லித் திரும்பப் புறப்பட்ட பொழுது ஒரு பெண்மணி என்னிடம்
கன்னடத்தில்," என்னம்மா வந்துபார்த்த்திட்டு சும்மா போறீங்களே"
என்றாள். "பரவால்லம்மா... டீ காபில்லாம் போட்டுச்
சிரமப்படாதீங்க. போறவழில பாத்துக்கறோம்" என்றேன் களைப்பில்
நிஜமாய் காபி குடிக்கலாம்போலிருந்த ஆவலை அடக்கிக் கொண்டு.
உடனே அந்தப் பெண், "அட வந்து இத்தினி நேரம் பேசி எங்க நேரம்
வேஸ்ட் செஞ்சிட்டு சும்மவா போறீங்க, ஏதும் நூறு அயிரம் பணம்
தருவீங்கன்னு பாத்தாஆஆஆ?" என்று ஏளனமாய் கேட்டாளே பார்க்கணும்!
உங்கள் படைப்புகள், படைப்பிற்கான
பரிசுகள் குறித்துச் சொல்லுங்கள்...
200
சிறுகதைகளுக்கு மேல் எழுதினாலும் சிறந்த படைப்பாய் எதையும்
எழுதாத ஏக்கம் இன்னமும் இருக்கிறது. ராஜ் டிவியில் நாகா
இயக்கதில் ரமணி வர்ஸஸ் ரமணியின் 3 பகுதிகள் நான் எழுதினேன்.
வானொலி நாடகங்கள் 12 வந்துள்ளன.
ஒரே ஒரு
சிறுகதைத் தொகுப்பும் (திரும்பத் திரும்ப.. திருமகள்
பதிப்பகம்), லில்லி தெய்வசிகாமணி வெளியிட்ட கோவை விஜயா
பதிப்பகத்தின் நந்தவனத் தென்றலில் என் சிறுகதை ஒன்றும் வானதி
வெளியீடான திரு மகரம் தேர்ந்தெடுத்து அளித்த சிறுகதைப்
படைப்புகளில் எனது கதையும் இடம் பெற்றுள்ளன.
நாவல்கள் 10,
தொடர்கதை 4 (விகடனில் பரிசுப் படத்தொடர்கதை, கலைமகள் தினபூமி,
தினச்சுடர் (பெங்களூர்) இணையத்தில் மரத்தடி, தமிழுலகம்
நடத்திய கதை, கவிதைக்கு பரிசுகள் பெற்றுள்ளேன்.
பொதிகை 2
வருடங்களுக்கு முன்பு நடத்திய பொங்கல் நிகழ்ச்சி விமர்சனப்
போட்டியில் சிறந்த விமர்சனமென எனக்குப் பரிசாக பத்தாயிரம்
ரூபாய்க்கான பட்டுப்புடவையை அளித்தனர்....திருமணமான புதிதில்
ஆயிரம் ரூபாய் புடவைக்கு ஆசைப் பட்டபோது அப்போதிருந்த
குடும்ப சூழ்நிலை காரணமாய் அந்த ஆசை நிறைவேறவில்லை. அப்புறம்
நான் ஆசைப்படவுமில்லை. இப்போது சென்னைக்கு நேரில்போய் பொதிகை
நிலையத்தில் பிரபல மனிதரின் கையால் அதைப்பெற்றுக் கொண்டபோது
கண் பனித்துத்தான் போனது...
*********