நம் உடலுக்குள் இருக்கும் மனம் என்ற மலர் எப்போதும் நம்முடைய
வேண்டாத எண்ணங்களாலும், செய்கைகளாலும், பேராசைகளாலும்,
விரியாமல் அப்படியே மூடியபடி இருக்கிறது. அதற்கு மேலும் பல
அழுக்குகள் அதைத் திறக்க முடியாதபடி தடுக்கின்றன.
இந்த மன அழுக்கை எடுப்பதற்கு முன், நம்மைச் சுற்றி இருக்கும்
"ஆரா" என்ற ஒளிவட்டத்தைச் சுத்தப்படுத்தி, பின் உடலுக்குள்
இருக்கும் ஏழு சக்கரங்களையும் சுத்தப் படுத்தினால் உடலும்
மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்தச் சக்கரங்களையும்,
ஆராவையும் சுத்தப்படுத்த "ரெய்கி" என்ற பயிற்சி உதவுகிறது.
குழந்தை அழுகிறது, அதன் தாய் அதைப் போய் அன்புடன் தூக்கித்
தன் தோளில் சாய்த்துக் கொண்டு தன் கைகளால் தடவி விட அது
அழுகையை நிறுத்துகிறது. ஒரு நண்பன் மிகுந்த பிரச்சினையில்
இருக்கிறான், அன்புத் தோழன் அவனிடம் சென்று அவனுக்கு ஆறுதல்
சொல்லி அவன் தோளைத் தன் கைகளால் தடவ அவன் மிகுந்த ஆறுதல்
பெறுகிறான். இதே போல் ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகிறோம், அங்கு
ஒரு நோயாளியின் அருகில் அமர்ந்து அவரது கையை நம் கையுடன்
சேர்த்து வைக்க, அந்த நேரத்தில் அவரும் மனம் தேறுகிறார். இதே
போல் காதலன், காதலியின் வருத்தத்தைத் தோளை வருடி அணைத்து
போக்குகிறார். இதே போல் பல அனுவங்களை நம் வாழ்க்கையின் பல
கட்டங்களில் பார்க்கிறோம். இந்தச் சாதாரண தொடுதலுக்கே
இத்தனைச் சக்தி என்றால், பிரபஞ்சத்தில் நமக்குத் தெரியாமல்
மறைந்திருக்கும் அந்த "ரெய்கி" சக்தியை நம் உச்சந்தலை வழியாக
இறக்கி, பின் நம் கைகளில் கொணர்ந்து, அதை மனிதர்களிடம்
தொட்டுப் பாய்ச்ச அந்தப் பிராணசக்தி உடலின் ஒவ்வொரு
சக்ராவிலும் ஊடுருவிப் போய் அங்கிருக்கும் எதிர்மறை
அடைப்புக்களை எடுத்து விடுகிறது.
"ரெய்கி" என்பது ஜப்பான் மொழியின் சொல். "ரெ" என்றால் ஆத்மா
"soul"
'கீ' என்றால் 'சக்தி' என்றும் சொல்லலாம். இந்தச் சக்தியைச்
"சீ "என்று சீன மொழியிலும் 'பிராண' என்று சம்ஸ்கிருதத்திலும்
"மன" என்று 'ஹாவாய்' மொழியிலும் கூறுகிறார்கள். இந்தச் சக்தி
(vital
energy)
உலகத்திற்கே பொதுவான ஒன்று. இதை எல்லா உயிர்களிடத்திலும்
காணலாம். இது எடுக்க எடுக்கக் குறையாத ஒன்று. நம்
எல்லோரிடத்திலும் இந்தச் சக்தி இருந்தாலும் அதை உணர வைத்து
வெளியில் கொண்டுவர ஒரு குரு தேவை. அந்தக் குரு நமக்கு தீட்சை
கொடுத்து (attunement)
அந்தச் சக்தியை உணர வைத்து, அதனால் பல அனுபவங்களைப் பெறவும்
செய்கிறார். தீட்சை பெற்ற பின் பிரபஞ்சத்தின் பிராண சக்தியை
நமக்கு விரும்பிய இடத்துக்கு நம் கைவழியே பாய்ச்சுவது
சாத்தியப்படுகிறது.
டாக்டர் மிகாவு உஸியி இதைத் திரும்பக் கண்டுப்பிடித்தார்
என்றுதான் சொல்லவேண்டும். நம் பாரதத்தில் இது
இருந்திருக்கிறது. அதர்வ வேதத்தில் இத்தகைய குணமாக்குதலைப்
பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
"அயம் மே ஹஸ்தோ பகவான் அயம் மே பகவத்தர
அயம் மே விஷ்வ பேஷ்ஜோ அயம் சிவாபிமரசன"
இந்தக் கைகளில் உடல் நிலையைச் சரியாக்கும் சக்தி இறைவனால்
கொடுக்கப்பட்டிருக்கிறது. அது நாடியில் இருக்கும் தடங்கலை
எடுத்து விடுகிறது. வலது கையில் ஔஷத சக்தி மேலும்
நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இரு கைகளினாலும் உடலைத் தொட
நன்மை, மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றுன் மூப்பிலிருந்தும்
விடுதலையளிக்கிறது என்ற பொருளில் இந்த சுலோகம்
அமைந்திருக்கிறது.
"ஹஸ்தாப்யாம் தசசாகாப்யாம் ஜிஹ்வா வாசப் புரோகவி
அனாமயிலுப்யாம் ஹஸ்தாப்யாம் தாப்யாம் தாபி மிருசோ மசி"
நம் பத்துவிரல்களும் மிகவும் உயர்ந்தவைகள். அத்துடன் நாக்கு,
அதனின்று வரும் ஒலி நல்லதிர்வுகளோடு நம் வியாதியைக்
குணப்படுத்துகின்றன. நான் கைகளாலும், ஒலியினாலும் உன்னை
மிகவும் அன்புடனும் வினயத்துடனும் தொடுகிறேன்" (athervaveda
4-13.6-7)
பின்பு ரெய்கி வந்த விதத்தைச் சொல்கிறேன்.
*******