"வாழ்க்கை என்பது மிகப்பெரிய ஏமாற்று வேலை.....
அதை அறிந்துகொள்பவர் அதிலிருந்து விடுபடுகிறார்."
- புத்தர்.
நலம்தானேடி கண்ணூ?
நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதவேண்டியதாயிற்றுடி.
மன்னித்துக்கொள். உனக்கு எழுதவில்லையே தவிர, எப்பவும் என்னுள்
நீதான் குருதியென ஓடிக்கொண்டிருக்கிறாய்!
" இந்த வாழ்க்கை என்பது ஒரு ஏமாற்று வேலை" என்று சொன்ன
புத்தனின் காலடியில் ஒரு லட்சத்து நூத்தியெட்டுத் தடவையாவது
விழுந்து கும்பிடலாம்போல தோணுதுடியம்மா.ஞானிகள் என்றும்
மரிப்பதில்லை.அவர்கள் இந்த காற்றிலும் வெளியிலும் தூணிலும்
துரும்பிலும் வாழ்ந்துகொண்டேதான் இருப்பார்கள் என்பதால் நான்
மானசீகமாக அதியற்புத ஞானியான புத்தரின் பாதங்களில் தொடர்ந்து
விழுந்தவண்ணமாயிருக்கிறேனடி!
பல நூறு ஆண்டுகளுக்கு முன் அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும்
காலம்தாண்டி வாழ்க்கை இன்னும் நமக்கோர் மிகுபெரும்
ஏமாற்றாகத்தானே மிஞ்சியிருக்கு? காலம் எதுவாய் இருந்தால்
என்ன? அப்பவும் இப்பவும் மனிதன் அப்படியேதானே மாறாமல்
இருக்கிறான்!
மனிதன் என்று நான் பிறரைச் சொல்வதாய் எடுத்துக்கொள்ளதே. அந்த
மனிதன் நான்தான்! நான் எனக்கு இந்த வாழ்க்கையை ஏமாற்றாக
ஆக்கிக்கொண்டுவிட்டேன்! என் மொத்த வாழ்க்கைக்கும் நானேதானேடி
பொறுப்பு!இதை உனக்கு எழுதுகையில் எனக்குள் முகிழ்க்குமிந்த
பொறுப்புணர்வை மட்டும் அப்படியே தக்கவைத்துக்கொள்ள
முடிந்துவிட்டால்...? இந்நேரம் நானும் புத்தனாக
ஆகியிருப்பேனடி அம்பிஹே!
ஆனால், உனக்கெதுக்கு புத்தன்?! நான் புத்தனாகிவிட்டால் என்னை
ஏறெடுத்துப் பார்ப்பாயா நீ? நான் வீதிவீதியாய் சடாமுடியுடன்,
அழுக்கு உடுப்புடன் சாமியாராகவோ பிச்சைக்காரனாகவோ
அலைந்துகொண்டிருக்க வேண்டியதுதான்!
உன்பாட்டுக்கு உன் பாதையில் 'எனக்கென்னே'ன்னு
போய்க்கிட்டேஇருப்பே நீ! சரிதானே?
கடவுளே இந்த பூமிக்கு இறங்கிவந்தாலும், அகண்டுவிரிந்த
சாக்கடையாய் குப்பை கூளங்களுடன் இழிந்து, துர்வீச்சத்துடன்
கிடக்கும் இந்த நவீன வாழ்க்கையை நிமிர்த்திவிடமுடியும் என்று
நம்புகிறாய்? ம்ஹூம்! வாய்ப்பே இல்லை! விஞ்ஞானம் மேலும்
மேலும் அறியாமையையே கொண்டுவரும் கொடுமையை அறிந்துகொள்ள
முடிகிறதா உன்னால்? விஞ்ஞானம் தானே கோடிக்கணக்கானோரைக்
கொன்றுகுவிக்க விதவித ஆயுதங்களின் உற்பத்திக்கு வலிகோலியது!
மனிதன் மூளைப்பலத்தால் இதுவரை என்னத்தைப் பெரீசா
சாதிச்சிருக்கான் மனுஷன்! ஓலைக்குடிசையில் வாழும்
கிராமத்தானின் முகத்தில் காணும் நிம்மதிகூட நவீன மாநகர்களில்,
மாடமாளிகை கூட கோபரங்களில் வாழும் ஸோ கால்ட் நவீன மனிதனுக்கு
இல்லையடியம்மா!
பூமிக்கு கடவுள் வந்தால் அவரும் மனிதரோடு மனிதராய் ஒரு வாய்
சோற்றுக்கும் லாட்டரிதான் அடித்துக்கொண்டுதான் திரிவார்!
அல்லது மனிதனால் மாற்றியமைக்கப்பட்ட இந்த அதிசெயற்கையான
உலகைக் கண்ணுற்று பைத்தியமாகிவிடுவார், பாவம்! மனிதனின்
அரசியல் ஆட்டங்களும் திருட்டுத்தனங்களும் தில்லுமுல்லுகளும்
கடவுளை நேரடியாகக் கீழ்ப்பாக்கத்துக்கே அனுப்பிவைத்துவிடும்!
அப்புறம் அங்கிருப்பவர்களெல்லாம் அல்லோலகல்லோலப்பட
வேண்டியதுதான்! ஏனெனில், இருப்பதிலேயே அதிபயங்கர பித்தனாக ஆகி
அங்கு பைத்தியங்களோடு பைத்தியமாயலையும் வைத்தியர்களுக்கே
வைத்தியம் பார்த்து வாரிக்கட்டிக்கொள்வாரர் கடவுள்!
அப்புறம்,ராணுவம் வந்துதான் அவரை அங்கிருந்து மீட்டெடுக்கணும்!
நல்லவேளை,அப்படியான முட்டாள்தனமான காரியங்களை ஒருபோதும்
செய்வதில்லை கடவுள்! அவர் தான் உண்டு தன் தியானம் உண்டென
எங்கோ இமயமலையின் ஆளரவமில்லா பனிக்குகையுள்
ஒளிந்துகிடக்கிறார் கண்மூடி! அவருக்கு இங்கு நடக்கும்
அசுரத்தனமான கூத்துக்களையெல்லாம் பார்த்து பைத்தியமாகிட
விருப்பமில்லைபோல! சரி, அவராவது பிழைத்துப்போகட்டும், போ!
ஒன்னே ஒன்னு மட்டும் உறுதிடி கண்ணு: நாம் யாரும் இங்கு
திருப்தியாக வாழவில்லை! வாழவும் முடியாது! இந்த உண்மையை
எவனொருவன் ஒப்புக்கொள்கிறானோ, அவன் மட்டுமே வெற்றிகொள்ள
முடியும்னு தோணுதுடி அரக்கத்தனமான, மேடுபள்ளங்கள் நிறைந்த
இக்கொடிய வாழ்வை!
நம் மனசை நாமே நம்பிடக்கூட முடியலையேடீ! அதுக்கு ஏதாவது
மார்க்கமிருந்தால் சொல்!
உன் மனமே உன்னை நம்பவைத்துக் கழுத்தறுத்துவிடுகிறது
என்பதுதான் கொடுமை! உன் மனமே உன் சாபம்! அதுவே உன் பேய்!
அதுவே உன் வலி! அதுவே உன் வியாதி! வசமாய் ஏமாற்றி உன்னை
நட்டாற்றில் தள்ளிவிடும் நயவஞ்சகன் அது!
அலையோஅலையென்று சர்வசதாகாலமும் நாயாய் அலைந்துதிரியும் நம்
மனசு, நமக்கே இப்போது எஜமானனாய் இருப்பதுதான்டி உச்சபட்சக்
கொடுமை! இதனால் என்னாகுமென்று யோசித்துப்பார். அதை எஜமானனாய்
ஏற்றுக்கொண்டு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
தவியாய்த் தவித்துழல்பவர்கள்தான் உலகின் 99.9 சதவீத மக்கள்!
இது இன்று நேற்று நடந்த பிழை அல்ல: காலங்காலமாய், யுகயுகமாய்
அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆதிக்கூத்து இது!
நம் மனசின் பிடியில் நாம் இருக்கும்வரை நானும் நீயும் எவரும்
வாழ்வின் உண்மையான அனுபூதியை அடையப்போவதில்லை! நாம் வெறும்
நிழல்களையே உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்! அந்த
நிழல்களின் மூலத்தை எப்போது தரிசிக்கிறோமோ அன்றுதான் நாம்
நாமாவோம்.அதுவரை இந்த வாழ்க்கை நமக்கான உண்மையான வாழ்வாக
இருக்கப்போவதில்லை. நிச்சயம் அது ஒரு அதிபெரும்
ஏமாற்றுவேலையாய்த்தான்டி இருக்கும்.அதில் உனக்குச் சந்தேகமா
என்ன!
சரி, நான் உனக்கு அறிவுரை ஏதும் வழங்க இயலாது! குருடன்,
இன்னொரு குருடனுக்கு வழைகாட்டுவதுபோல் ஆகிவிடும் அது! உன்
வலையை நீயேதான் அறுத்தெறியவேண்டும்! உன் சிறையிலிருந்து
நீயேதான் மீண்டாக வேண்டும்! எனக்கு எதும் தெரியாது!
தெரியாது! தெரியாது! தெரியாது! –இதுதான் புத்தர் தன்
உயிர்பிரியும் தருவாயில்,அவரிடம் அறிவுரை கேட்டுநின்ற தன்
தலைமைச்சீடன் ஆனந்தனிடம் சொன்ன வார்த்தை! அதை அவர் மூன்றுமுறை
அழுத்தந்திருந்தமாகச் சொல்லிவிட்டு உயிர்விட்டாராம்!
அதையேதான் உனக்குநான் திருப்பிவிடுகிறேன்! எனக்கும் தெரியாது
எதுவும்! அவரவரும் அவரவருக்கான மார்க்கத்தை அவரவரே தேடிக்
கண்டடையவேண்டியதுதான்! யாரும் யாருக்கும் எந்த உதவியையும்
வழங்கிக்கொள்ள இயலாது! இயற்கையே அதற்கான வழியை
வைத்திருக்கவில்லை!
|சொல்லப்போனால், இயற்கைதானே நம் மனசையும் உடலையும்
உற்புவித்தது: மனம்போன போக்கிலும் உடல்போன போக்கிலும் போனால்
என்னாகுமென்று பார்! அப்புறம் பருத்திவீரன் கதைதான்!
இந்த மடலில் உனக்கென்று கவிதை ஏதும் இல்லை. அதுக்குப்பதில்,
புத்தனின் சொற்களை உனக்குள் எப்போதும் மௌனமாய்த்
தியானித்துக்கொண்டிரு: வாழ்க்கை என்னும் ஏமாற்றிலிருந்து
தப்பிப்பதற்கான மார்க்கம் எப்படியும் புலப்பட்டுவிடக்கூடும்
உனக்கு.அப்போது அது உனக்கு மட்டுமேயான மார்க்கமாக
தனித்தன்மையுடன், ஒளியுடன் விளங்கும்! உதாரணத்துக்கு,
உனக்கான வழியானது எனக்கும், எனக்கான வழியானது உனக்கும்
ஒருபோதும் ஒத்துவராது இந்த விஷயத்தில்! தேடு, தேடு,
தேடிக்கொண்டேயிரு…உன்னை நீயே!
ஆம்! நீயேதான் உனக்குள் தேடி உன்னைக் கண்டடைய வேண்டும்:
மீண்டும் சொல்கிறேன், இந்த வெளிப்புற வாழ்வை மட்டும்
ஒருபோதும் நம்பிவிடாதே! புத்தன் சொன்னதுபோல, இது ஒரு
ஏமாற்றுவேலை!
சரி, நீண்டுகொண்டே போகுது மடல்: பிறகு பேசுவோம், விரிவாகவும்
ஆழமாகவும் நுண்மையாகவும். நீ மேலும் நுட்பமானவளாக ஆகவேண்டும்
என்பதுதானடி என் விருப்பமும் கடவுளின் விருப்பமும்!
*******