<<<சென்ற மடல்
என் இனிய அதீ!
எப்டிடி
இருக்கே? நல்லாருக்கியா?
நொம்ப நாளாச்சுடி ஒன்னோட பேசி! கோச்சுக்காதடி செல்லம்!
அப்பாடா, இப்பத்தான்டி எனக்கு மூச்சுவிட முடிஞ்சிருக்கு.
எதைச் செய்யனுமோ அதை மட்டும் செய்றேன்! எதையெல்லாம்
ஒதுக்கனுமோ அதையெல்லாம் ஒதுக்கிட்டேன்! இல்லே, நானா ஒதுக்கலே,
அதுவா ஒதுங்கிப்போயிருச்சு எல்லாம்..எல்லா அழுக்குகளும்,
எல்லாக் குப்பைகளும்!
எல்லாம் உன் ஆசிதான்! இதை சந்தேகமில்லாமல் உறுதியாகச்
சொல்றேன்! நிச்சயம் நீ எனக்காகப் பிரார்த்தித்திருக்கிறாய்!
இல்லையெனில், கொப்பரையிலிட்ட எண்ணையாய் பொரிந்து
கரிந்துகொண்டிருந்த நான் இப்படி பனிக்கட்டியாய் ஆகியிருக்கும்
அதிசயம் எப்படி நடந்திருக்கும்!
எந்த வலிகளுமற்று அல்லது எல்லா வலிகளையும்
விட்டொதுக்கியிருக்கும் வெற்றிகரமானதொரு - நிறைவுமிக்கதொரு
தருணத்தில் நான் எழுதும் முதல் மடலடி இது! நீ நம்பினாலும்
நம்பாவிட்டாலும் – அது எனக்கேகூட ஆச்சர்யமாத்தான் இருக்கு.
அப்படிப்பட்ட ஒரு நிலை (condition
) எனக்கு வாய்த்திருப்பதை என் உயிருக்கும் மேலாகிய உன்னிடம்
எப்படி மறைப்பேன்?
ஆம்... நம்பத்தான் முடியாது, ஆனா, நம்பித்தான் ஆகனும் நீ.
இப்படிப்பட்ட நிலையை அடைய, நான் தினந்தோறும் தியானம்
செய்கிறேன்! அதுவும் அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து, ஐந்து
முதல் ஆறு வரை. இதுவரை அமானுஷ்யமான விஷயங்களை வெறும்
கற்பனைக்காகப் பேசியும் எழுதியும் படித்தும் வந்த நான்,
இப்போது முதல் முதலாக அவற்றையெல்லாம் நேரடியாக அனுபவித்து
வருகிறேன் என்றால் நம்புவாயா! நம்பித்தான் ஆகனும் நீ!
அடடா, இந்த வாழ்க்கைதான் எத்தனை அற்புதமானது! எப்படி இதை நான்
சதா விமர்சனம் செய்தபடி எரிச்சலுற்று எரிந்துபோய்
கரிக்கட்டையாய் வாழ்ந்திருந்தேன் இத்தனைநாளா?
ஆனாலும் ஒரு உண்மை என்னன்னா, இந்த வாழ்க்கையென்னவோ
அப்படியேதான் இருக்கு. நான்தான்டி மாறிருக்கேன். வாழ்க்கையப்
பத்தின என் உள்பார்வைதான்டி மாறிருக்கு. என் அகக்கண்தான்டி
இப்போ திறந்திருக்கு... அதுதான் விஷயமே!
முழுமையை நோக்கிய பயணத்தை நான் ஏற்கனவே ஆரம்பிச்சுட்டேன்டி.
இனிமே அந்தப் பயணம் எப்பவும் என்னென்னைக்கும் தொடரும்டி கண்ணு!
என்ன வேடிக்கைன்னா, அதில் வெற்றி தோல்விங்கிறதெல்லாம்
கெடையாதுடி. அதையெல்லாம் கடந்த அனுபூதிடி அது! ஆஹா!
அதையெல்லாம் எப்படி வார்த்தையிலே சொல்வேன்? நீயும் அதை
நேரடியா அனுபவிச்சுப் பார்! அதான் அதுக்கு ஒரே வழி! நீயும்
தியானம் செய்!
எப்போது அதை அடைந்தேனோ அப்போதே என் அனைத்துத் தேடல்களும்
நின்றுவிட்டன. நான் அடையவேண்டிய முக்கியப் புள்ளியை
அடைந்துவிட்டேன்! இனி வாழ்க்கையில் சறுக்கல் என்பதே இல்லை!
வளர்ச்சி மட்டும்தான்! அதுவும் எல்லையற்று விரியும் என் ஆன்ம
யாத்திரையில் நீயும் என்னுடன் இணையனும்! நீயும் தியானிக்கனும்!
உன்னையும் நான் அதீத அன்புடன் அழைக்கிறேன் வா! வந்து இந்த
அதீத யாத்ராவில் கலந்துகொண்டு என் அங்கமாகி என்னுடன்
கலந்துவிடு! அப்போதுதான் நான் பூர்ணத்துவத்தை எய்த இயலும்!
நீயில்லாமல் என் யாத்திரை பூர்த்தியாகாது!
இதோ உனக்கான கவிதை
:
கண்ணாடிச் சட்டகங்களாலான கல்லறையும்
உனக்கான என் தேடலும்
கண்ணாடிச் சட்டகங்களாலான
கல்லறைக் கூண்டினுள்
உயிரோடு புதையுண்டுள்ளன
எண்ணறு சவங்கள்
அவை இமைக்க மறந்து
எதையோ வெறித்துப்பார்க்கின்றன
கணினிகளின் திரைகளுக்குள்
மனித விஷமிகளால்
உண்டாக்கப்பட்ட எண்களாலான
விஷக்கோடுகள்
பாம்புகளாய் நெளிகின்றன அவற்றுள்
ஆயினும்
குளிரூட்டப்பட்ட கண்ணாடிச் சவ அறைகள்
இயற்கைக் காற்றற்று
அசையாதிருக்கின்றன
பிண நெடியோடு
பிணங்களை இயக்குவிக்கும்
அமானுஷ்ய விசையொன்றை
கண்டறிந்துள்ளனர்
நவீன உலகின்
முகம்தெரியா விஞ்ஞானியர்
எந்த யுகத்திலும்
கண்டிரா வகையில்
இமையாக் கண்களோடு
கணினிகளை இயக்கும்
உயிர்ச்சவங்களோடு
இன்னொரு சவமாய் நானும்.
உள்ளே அழுகிப்போயிருப்பினும்
ஆண் பெண் பேதமற்று
ஒட்டிப்பிடித்த ஜீன்ஸ் பாண்ட்
சட்டைககளில்
வினோதமாயிருப்பினும்
பெண் சவங்களின் ஸ்தனங்கள் மட்டும்
மேல் சட்டைகளை முட்டித் துருத்தி
புடைத்துத் தெரிகின்றன
அவர்களை
பெண்கள்தானென அறியும்பொருட்டு!
சுரிதார் அணிந்த பெண்டிர் சிலர்
துப்பட்டாக்களை
தத்தம் கழுத்துகளில் சுற்றி
தூக்குக் கயிறுகளாய் ஆக்கியுள்ளனர்
அவர்களின் ஸ்தனங்கள்
மேலாடையுள் அமுங்கியோ
அல்லது தொலைந்தோ போயுள்ளன!
அதிநவீனக் கண்ணாடிக்கூண்டுகளால்
ஆகியிருப்பினும்
குளிரூட்டப்பட்டிருப்பினும்
இத்திறந்தநிலைக் கல்லறைகள்
எண்களின் விஷங்களை யருந்தி
உயிரோடு செத்துக்கிடக்கும்
விதவிதச் சவங்களின்
கூட்டுக்கிடங்காய்!
நவீன வாழ்வின் அடையாளங்கள் இவை
உலகெங்கிலும்
விரிந்துபரந்திருக்கும்
இக்கல்லறைகளுள்
எங்கோவொரு கல்லறையுள்
உயிர்ப்போடிருப்பாயென நம்பி
உனைத்தேடியலைகிறேன்
நீயோ
இன்னும் இன்னுமென
கணினிகளை இயக்கி
எண்களின் விஷச் சாறருந்தி
உன்னுயிர்ப்பை
மெல்லமெல்லக் கரைத்துவருகிறாய்
உணர்வேதுமற்று!
*******