ஒரு
ஆண்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் எழுதுவது சாத்தியமல்ல.
தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் நடந்த முக்கியமான
நிகழ்வுகளின் செய்திச் சிதறல்களின் தொகுப்பு இது.
கடந்த ஆண்டின் நல்ல நிகழ்வுகள் தொடரவேண்டுமெனவும்,
மதங்களினாலும், மொழிகளினாலும் பிளவு படாமல் சிந்தையினால்
ஒன்றுபட புது ஆண்டு வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன்
2007ம் ஆண்டை இருகரம் நீட்டி வரவேற்போம்.
இந்தியச் செய்திகள்
மார்ச்சில் அமெரிக்க அதிபர் புஷ் விஜயம், இந்தியாவும்
சைனாவும் 1962 ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த நாதுலா கணவாயை
வணிக உறவுகளுக்காக திறந்தது - இவைகள் நமது அயல் நாட்டு
உறவுகளில் முக்கிய மைல் கற்கள்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமான அணுசக்திக்கான ஒப்பந்தம்
எதிர்க்கட்சிகளால் மிக மோசமாக வருணிக்கப்படுகிறது. ஆளும்
கட்சி இந்த ஒப்பந்தத்தினால் ஏற்படும் நன்மைகளை பலவீனமாக
பட்டியலிட முயன்றாலும் நாட்டை அமெரிக்காவிற்கு அடகு
வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சர்ச்சையைத் தொடர்கின்றன.
2001 ம் ஆண்டு டிசம்பர் 11 ந்தேதி பாராளுமன்றத் தாக்குதல்
சம்பவத்தில் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு உதவி செய்ததாக
காஷ்மீரைச் சேர்ந்த அப்சலுக்குத் தூக்குதண்டனை
விதிக்கப்பட்டது. இது இரு பெரிய சர்ச்¨சைக்கு வித்திட்டது.
அப்சலின் மனைவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு செய்ய,
தூக்கிலிடக்கூடாது என பலரும், தூக்கில் போட்டே ஆகவேண்டுமென
பா.ஜ.க வும் கச்சை கட்டிக்கொண்டுள்ளனர்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டு வழங்க
அரசு முடிவு செய்ததை அடுத்து மருத்துவ மாணவர்களும்
டாக்டர்களும் போராட்டத்தில் குதித்தனர். சுப்ரீம் கோர்ட்
தலையிட்டதை அடுத்து போராட்டதைத் திரும்பப் பெற்றுக்கொண்ட
அவர்கள், ஆண்டின் இறுதியில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை
பாராளுமன்றதில் நிறைவேற்றியதால் மீண்டும் போராட்டத்தில்
இறங்கினர்.
தில்லியில் குடியிருப்பு பகுதியில் உள்ள 44 ஆயிரம் கடைகளுக்கு
சீல் வைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து வேறு
வழியின்றி சீல் வைப்பு நடவடிக்கையை டில்லி அரசு மேற்கொண்டது.
இதைத் தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன.
ஆதாயம் தரும் பதவியில் இருப்பவர்கள் பாராளுமன்ற அல்லது
சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாதென தேர்தல் கட்சி
அறிவித்ததும், ஆதாயம் தரும் பதவியில் இருந்த அமிதாபச்சனின்
மனைவி ஜெயாபச்சனின் பதவி பறிக்கப்பட்டது. இது சும்மா இருந்த
சங்கை ஊதிக் கெடுத்தது போல் ஆகி சோனியா காந்தியும் பதவி விலக
நேர்ந்தது. பதவியை ராஜினாமா செய்த சோனியா மீண்டும்
எதிர்பார்த்தது போல் வெற்றி பெற்றார். பிரச்சினை இதோடு
தீராமல் தொடர 56 பதவிகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு
இப்போதைக்கு ஓரளவு சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காகாக லஞ்சம் வாங்கிய 11 எம்
.பீக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டார்கள். பாராளு மன்றம்
எடுத்த நடவடிக்கையில் நீதி மன்றம் தலையிட முடியாதென சபாநாயகர்
சோம்நாத் சாட்டர்ஜீ அறிவித்தார்.
1994 ம் ஆண்டு தன் உதவியாளரைக் கொன்ற வழக்கில் மத்திய மந்திரி
சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மத்திய மந்திரி
ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்
தடவை. நீதி தாமதமானாலும் மறுக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை
இது ஊட்டி இருக்கிறது.
தனக்கென ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம். இதுவே
கம்யூனிஸ சித்தாந்தம். மேற்கு வங்காளத்தில் டாட்டா
நிறுவனத்தின் கார் தொழிற்சாலைக்காக 997 ஏக்கர் விவசாய நிலத்தை
மேற்கு வங்க அரசாங்கம் கையகப்படுத்தி இருக்கிறது. இதை
எதிர்த்து திரினாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜீ தொடர்ந்து
உண்ணவிரதம் இருந்து வருகிறார். இது போல விவசாய நிலங்களைக்
கையகப்படுத்தும் போது மற்ற இடங்களில் இடது சாரிக்கட்சியினர்
செய்வதைத்தான் இப்போதுமம்மதா பானர்ஜீ மேற்கு வங்கத்த்தில்
செய்கிறார்.(கடைசியாகக் கிடைத்த செய்திப்படி மம்தா
உண்ணாவிரதத்தைக் கைவிட்டிருக்கிறார்.)
தமிழகச் செய்திகள்
தமிழகம் மே மாதத்தில் சட்ட சபைத் தேர்தலைச் சந்தித்தது.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்ற தி.மு.க, பா.ம.க
, காங்கிரஸ், மா. கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய
யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி 163 இடங்களைப்
பெற்றது. நடிகர் விஜயகாந்த் ஒரு மூன்றாவது சக்தியாக
உருவெடுக்கும் சாத்தியக் கூறுகளை இந்தத் தேர்தல் உணர்த்தியது.
96 இடங்களைப் பெற்ற தி.மு.க. ஆட்சியை அமைத்தது. கலைஞரின்
இலவச கலர் டி.வி , ரூபாய்க்கு 2 கிலோ அரிசி, இலவச நிலம் ஆகிய
வாக்குறுதிகள், கூட்டணி பலம் போன்றவை இந்த வெற்ற்¢க்கு
உறுதுணையாக இருந்தன எனலாம். கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில்
பங்கேதும் தரப்படவில்லை. எது சாக்கென்று
காத்துக்கொண்டிருக்கும் எதிர்க் கட்சித்தலைவர் ஜெயலலிதா இந்த
அரசு மைனாரிட்டி அரசு எனச்சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டு
மகிழ்கிறார்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கே பரிச்சயமான சிக் குன் குனியா என்ற
பெயர் இந்த ஆண்டு தமிழகத்தில் காலடி வைத்ததால் சுமார் 50
ஆயிரம் மக்கள் இந்தக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.
கொசுவினால் பரவும் இந்த நோயால் யாரும் இறக்கவில்லை என ஆளும்
கட்சியும் , இறந்தவர்களின்(?) எண்ணிக்கையைப் பட்டியலிட்டு
எதிர்க்கட்சியும் நோய் தடுப்பை மறந்து அரசியல் நோயால்
பீடிக்கப்பட்டார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த ஆண்டு
அச்டோபர் 13, 14 தேதிகளில் தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவின்போது வன்முறைகள் பெருமளவில் நடந்தது என, ஆளும்
கூட்டணியில் உள்ள மார்க்ஸிஸ்ட் கட்சியே குற்றம் சாட்டியது.
மறு தேர்தல் நடத்த வேண்டுமென கண்டனக் குரல்கள் எழுந்தன.
இத்தனை கலவரங்களுக்கு இடையில் சற்றே பெருமைப்பட வேண்டிய
விஷயம்
பல ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருந்த பாப்பாபட்டி,
கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாக்காச்சியேந்தல் ஆகிய
ஊராட்சிகளுக்கு இப்போது தேர்தல் நடந்தது.
முல்லை பெரியாறு பிரச்னை கேரளாவிற்கும் தமிழ்நாட்டிற்கும்
இடையே ஒரு விஸ்வரூப பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. உச்ச
நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 136 லிருந்து 142 அடியாக
உயர்த்த தீர்ப்பு வழங்கியிருந்தாலும், கேரள அரசு அதை
நிறைவேற்றாமல் தட்டிக்கழித்து வருகிறது. பிரதமர் முன்னிலையில்
இரு அரசுகளும் பேச்சு வார்தைகள் நடத்தியும் எந்தப் பயனும்
இல்லாமல் போக முதல்வர் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பதாகக்
குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன.
*****