99 வார்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு மறு தேர்தல் நடத்த
வேண்டும் என உயர் நீதி மன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு தமிழக
அரசை வெகுவாகவே காயப்படுத்தியிருக்கிறது. இல்லையென்றால்
அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு திருமண விழாவில், "நீதிபதிகள்
ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்.
அவர்களுக்குள்ள எல்லையோடு அவர்கள் நிற்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல"
என்று பொத்தம் பொதுவாக நீதிபதிகளை ஒரு வாங்கு
வாங்கியிருக்கிறார். அடக்கி வாசிக்க வேண்டிய முதல்வரோ
பூனைக்கு மணி கட்டும் வேலையைத் தனது அமைச்சர்
செய்திருப்பதாகப் பாராட்டியிருக்கிறார்.
இந்த அமைச்சர்கள் மட்டும் வானத்திலிருந்து குதித்தவர்களா? ஏதோ
அப்பாவி மக்கள் அறியாமல் செய்த பிழைகளினால்தானே இவர்கள் இன்று
பதவியிலிருக்கிறார்கள்!
ஜெயலலிதா நீதித்துறையின் மீது திடீர்க் கரிசனத்துடன்
அவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். உடனே கருணாநிதி
எத்தனை முறை ஜெயலலிதா நீதித்துறையை அவமதித்திருக்கிறார் எனப்
பட்டியல் கொடுக்கிறார். ஜனநாயகம் குரங்கு கைப் பூமாலையாகச்
சிக்கித் தவிக்கிறது.
நகராட்சித் தேர்தலுக்கு வேட்பாளர்கள் மனுத் தாக்கல்
முடிவடையும் வேளையில் பல தே.மு.தி.க. தொண்டர்கள் தி.மு.வினர்
தங்களைப் போட்டியிலிருந்து விலகுமாறு குண்டர் படையோடு
அச்சுறுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள். இது உண்மையென்றால்
வேதனையாகவே இருக்கிறது. அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும்
போட்டியிடாத நிலையில் தி.மு.க. கூட்டணிக்கு இது அல்வா போன்ற
வாய்ப்புத்தானே! போதாக் குறைக்கு வாக்காளர்கள் 'நமக்கேன்
வம்பு?' என்று வீட்டிலேயே பதுங்கும் நிலை வேறு. வெற்றிக் கனி
கையில் இருக்கிறது. ஏனிந்த வேண்டாத வேலை?
***
ரயிலுக்கு நேரமாச்சு!
விருதுநகரில் பா.ம.க. தலைவர் ஒரு பொதுக்கூடத்தை
முடித்துக்கொண்டு முத்து நகர் விரைவு வண்டியில் ஏறுமுன் ரயில்
கிளம்பிவிட்டது. அது எப்படி ஒரு மத்திய அமைச்சரின் தந்தை,
கூட்டணிக் கட்சித் தலைவர் ஏறுமுன் ரயில் கிளம்பலாம்?
தொண்டர்கள் ஆவேசத்துடன் சங்கிலியைப் பிடித்திழுக்க அபராதம்
தண்டனை விதிக்கப்படுகிறது. தொண்டர்களுக்கல்ல. ரயிலைக்
கிளப்பிய அதிகாரிகளுக்கு!
இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.
(பெரிசுகளோடு இதுதான் ரோதனையே!)
ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது ரயிலைப் பிடிப்பதற்காகக்
காரில் வருகிறார். லெவல் க்ராஸிங் கேட் மூடி விட்டார்கள்.
அவர் என்ன செய்தார், ஒரு கையில் பெட்டியும், ஒரு கையில்
படுக்கையும் எடுத்துக் கொண்டு, காரில் இருந்து இறங்கி
ஸ்டேஷனுக்கு நடந்தே போய் விட்டார்.
இந்தக் காலத்தில் இதையெல்லாம் சொன்னால், "சும்மா ரீல்
விடாதீங்க" என்பார்களோ என்று பயமாயிருக்கிறது.
***
இந்தியா டுடே, ஓ.ர்.ஜி. மார்க், ஏ.சி. நீல்சன் அண்மையில்
நடத்திய கருத்துக் கணிப்பின்படி தரவரிசைப்பட்ட மாநில
முதலமைச்சர்களில் சிறந்த முதலமைச்சராக குஜராத்தின் நரேந்திர
மோடி முதலிடமும், பீஹாரின் நிதீஷ் குமார் இரண்டவது இடமும்
பெறுகின்றனர். தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் ஏழாவது இடத்தில்
இருக்கிறார். இந்தக் கருத்துக் கணிப்பை இந்தியா டுடே
வெளியிட்டுள்ளது.
***
ஆறு படங்களில் வெற்றி கண்ட ஷில்பா ஷெட்டி இன்று
Big Brother
நிகழ்ச்சியில் வெற்றி பெற்று ஹாலிவுட் நடிகையாகிறார். அதே
போல, ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிற
ம.தி.மு.க. பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றப்
போவது உறுதி.
- நாஞ்சில் சம்பத்
நாம்: அடடா, என்ன லாஜிக், என்ன லாஜிக்!
***
பழமொழி
கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாக முடியாது.
- விஜயகாந்தை விமர்சித்து ஜெயலலிதா
***
அப்சலைக் தூக்கிலிடும் உச்சநீதி மன்றத் தீர்ப்பை
ஜனாதிபதியிடம் அனுப்பியது ஏன்? கலாமின் தலைமுடி அவரது
பார்வையை மறைக்கிறது. அவரால் அப்சலின் கோப்பைத் தேட
முடியவில்லையோ என்னவோ?
சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே
***
அன்பே சிவம்
நான் 1997ல் சிறையில் இருந்தபோது சிவபெருமான் என் முன் தோன்றி
சைவமாக மாறும்படி சொன்னார். அவர் வார்த்தையை மீற முடியவில்லை.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.
***
இந்தாருங்கள் மெல்வதற்கு ஒரு பிடி அவல். மத்திய அரசு,
ராஜாங்க மந்திரி, தி.மு.க.வைச் சேர்ந்த ரகுபதியின் நேரடி
உதவியாளர் ஷகீல் அக்தர். இவரை அதிரடியாகத் தமிழ்நாட்டுக்கு
மாற்றி விட்டார்கள். ஜெயலலிதா சொல்லும் காரணம்:
'மேற்கத்தி
நாட்டுத் தூதர்களுக்கு, அவர் முக்கியத் தகவல்களைக்
கொடுத்துக்கொண்டிருந்தது 'ரா' என்னும் உளவுத் துறைக்குத்
தெரிந்து, அவர்கள் பரிந்துரையின் பேரில்தான் அவரை
மாற்றினார்கள்.' இவ்வளவு முக்கிய விஷயம் மந்திரிக்குத்
தெரியாமல் இருந்திருக்குமா என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
ஜெ. தானே சொல்கிறார் என்று அலட்சியப்படுத்துவதற்கில்லை. 'புலி
வருகிறத' கதை போல அது நிஜமாகவும் இருக்கக் கூடும். உண்மையைத்
தெளிவு படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
அது சரி, 'பாரம்பரிய எதிரி' மு.க. என்ன சொல்கிறார்? "சம்பந்தப்பட்ட
அதிகாரி 2002ல் அல் உம்மா தலைவர் இமாம் அலியைச் சுட்டுக்
கொன்றவர். பாருங்கள், பாருங்கள், ஜெயலலிதா அவருக்கு மெடல்
வழங்கும் போட்டோவை.." ..
அதெல்லாம் சரிதான் தலைவரே, இப்போது பிரச்சினை, அவர் தகவல்களை
அயலாருக்குக் கொடுத்தரா என்பதுதானே?
*****