தினகரன் பத்திரிகை
தொடர்ந்து பல மக்கள் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருகிறது.
அவற்றில் சில ஆளும் கட்சியையும் கூட்டணியையும்
சங்கடப்படுத்துபவை. முதல் சர்ச்சை தமிழகத்திலுள்ள மத்திய
அமைச்சர்களுள் சிறப்பாகப் பணியாற்றுபவர் யாரென்பது. தயாநிதி
மாறனுக்கு 70 சதவிகித மக்கள் வாக்களித்திருப்பதாகக் கூறி,
கட்சிக்குள்ளேயும் கூட்டணிக்குள்ளேயும் குழப்பம்
ஏற்படுத்தியது. அடுத்து பூதாகரமான விவகாரம் கருணாநிதியின்
அடுத்த அரசியல் வாரிசு யார்? இதற்கு ஸ்டாலினுக்கு 70
சதவிகிதமும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் என முடிவு வெளியானதும்
அழகிரி ஆதரவாளர்கள் கொதித்தெழ மதுரையே ரணகளமாகியது. தினகரன்
பத்திரிகை அலுவலர்கள் மூன்றுபேர் வன்முறைக்குப் பலியானர்கள்.
இதில் வியப்பு என்னவென்றால் அழகிரிதான் இந்த வன்முறைக்குக்
காரணம் என்பது போல சன் டி.வி.யில் செய்தி ஒளிபரப்பினார்கள்.
கலைஞர் தலைமையிலுள்ள காவல் துறை மவுனமாக இருந்து வேடிக்கை
பார்த்தது என்று சொன்னது சன் டி. வி. கலைஞரோ தினகரன்
பத்திரிகை நிர்வாகிகளிடம் இம்மாதிரி, கருத்துக் கணிப்பு
வெளியிடவேண்டாம் என்று சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்று
சொல்கிறார். செய்திகளையும் வன்முறையையும் ஏதோ ஜெயா டி.வி.
ஒளிபரப்புவதுபோல விஸ்தாரமாகக் காண்பிப்பதைப் பார்க்கும்போது
கருணாநிதி குடும்பத்திற்குள் நிலவும் பூசலின் வெளிப்பாடுதான்
இந்தக் கருத்துக்கணிப்பும் வன்முறையும் எனத் தோன்றுகிறது.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன், ஸ்டாலின் ஒரு பக்கம் நிற்க,
கருணாநிதி தனித்து விடப்பட்டிருக்கிறாரோ என்ற ஐயமும் எழுகிறது.
சன் டி. வி. யும் 'சன்'களும் கருணாநிதியின் கைகளை விட்டு
நழுவுகிறார்களோ!.
***
மத்திய சுகாதார
அமைச்சர் ஓர் உத்தரவு போட்டார், பீடிக்கட்டுகளில் அபாயத்தைக்
குறிக்கும் மண்டை ஓடு எலும்புச் சின்னம் போட வேண்டும் என்று.
இதை எதிர்த்து பீடித் தொழில் அதிபர்கள் கால வரையற்ற
உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதற்கு
பீடித் தொழிலாளர் சம்மேளனம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தம் பீடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத்
திசை திருப்புவதற்காக என்று இவர்கள் சொல்கிறார்கள். பல
இடங்களில், பீடித் தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும்
சேர்ந்தும் கூட ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். இவர்கள்
தரப்பு வாதம் என்ன? மண்டை ஓடு எலும்புச் சின்னம் போடுவதால்,
கம்பெனி பெயர் போடும் இடம் குறைந்து விடும். போலிகள்
அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஏற்கெனவே, பள்ளிக்கூடம்,
ஆலயங்களுக்கு அருகில் புகையிலைப் பொருள்கள் விற்கக் கூடாது
என்று சட்டங்கள் போட்டதில் பீடி விற்பனை குறைந்து விட்டது.
மேலும் கட்டுப்பாடுகள் விதித்தால் தொழில் நசித்துப் போய்,
பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கிற நிலை ஏற்படும்.
புகையிலைப் பொருள்கள் கெடுதல் விளைக்கும் என்பது சரிதான்.
வேலை இழப்பு பற்றிச் சொல்வதும் சரி போலத்தான் தெரிகிறது.
இந்தப் பிரச்சினையின் பல பரிமாணங்களுக்குள் நுழையாவிட்டாலும்
நமக்கு அடிப்படையாக எழும் ஒரு கேள்வி, இந்த மண்டையோடு விதி
சமாசாரம் எல்லாம் சிகரெட்டு, மதுபான வகைகளுக்குக் கிடையாதா?
அரசாங்க மதுபானக் (டாஸ்மாக்) கடைகளில் இப்போது இரடடிப்பு
வருமானம் பெருகி இருக்கிறதாம்.. விலையிலோ எந்தவித மாற்றமும்
இல்லை. ஆகவே குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருக்கிறது
அல்லது குடிப்பவர்கள் இன்னும் அதிக அளவில் குடிக்கிறார்கள்.
தலையைத் தொங்கப் போட்டு கொள்ள வேண்டிய விஷயம் இது
***
அதிசயம், ஆனால் உண்மை, தமிழக அரசுத் தொழில் துறை சட்ட
மன்றத்தில் வழங்குவதற்காக ஒரு கொள்கை விளக்க ஆவணம்
தயாரித்துள்ளது. அதன் முதல் பக்கம் அழகாக மிளிரும் வாசகம்,
முதல் அமைச்சர்: புரட்சித் தலைவி ஜெயலலிதா. இத்தனைக்கும்
இந்தத் துறை கலைஞரின் நேரடிப் பார்வையில் இயங்குகிறது.
Cut and
paste
கலாசாரத்தின் விளைவாக இருக்கும் போலும்!
***
இனி உங்கள் இஷ்டம்போல பஸ்களை உடைக்கலாம், எரிக்கலாம், பொதுச்
சொத்துக்களை நாசம் செய்யலாம். அரசாங்கம் உங்களை
ஒன்றும்செய்யாது (முடிந்தால் பாதுகாப்புக் கொடுக்கும்?)
ஆமாம், அரசியல் கட்சிகள், ஜாதிக்கட்சிகள், ஊர்வலம்,
கதவடைப்புகள் நடத்தும்போது பொது சொத்துக்கள் நாசம்
செய்யப்பட்டால் அந்தக் கட்சிகள் இழப்பீடு செய்ய வேண்டும்
என்ற சட்டம் 1992ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கொண்டு
வரப்பட்டது. அந்தச் சட்டம் அனைவரது, குறிப்பாக பா.ம.க.
கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க திரும்பப் பெறப்படுகிறது.
காரணம், கட்சிகள் ஊர்வலங்கள் நடத்தும்போது சமூகநல விரோதிகள்
செய்யும் எரிப்புக்களுக்கும், உடைப்புக்களுக்கும் கட்சி
பொறுப்பேற்க முடியாதாம்.
பந்த் ஊர்வலம் நடத்தும்போது அரசியல் கட்சிகள் சமூக உணர்வோடு
பொதுமக்களுக்குத் துன்பம் ஏற்படுத்தாமல் நடத்த ஏற்பாடு
செய்வது அந்தந்தக் கட்சிகளின் கடமை என்பதை யார் சொல்வது?
மொத்தத்தில் நமது வரிப்பணம்தானே பாழாகிறது? சொன்னாலும்
செவிடன் காது சங்குதானே!
***
உலக அளவில் அதிக செல்வாக்கு பெற்ற 100 பேர் பட்டியலை டைம்
பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் அகில இந்தியக் காங்கிரஸ்
தலைவி சோனியா, மற்றும் பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டல்,
பெப்சிகோவின் இந்திரா நூயி இடம் பெற்றுள்ளனர். வழக்கமாக இடம்
பெற்றுவந்த அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பெயர் பட்டியலில் இல்லை.
ஒசாமா பின் லேடன் இருக்கிறார்.
டைம் பத்திரிகை, சோனியாவைப்பற்றிக் கூறும்போது, கணவனை இழந்த
மிகப்பிரபல குடும்பத்தின் தலைவியான ஒரு பெண் ஒரு பெரிய
கட்சியை நிர்வகிக்கிறார். இத்தாலியில் பிறந்த கத்தோலிக்க
மதத்தைச் சேர்ந்த பட்டப் படிப்பு கூடப் படிக்காத ஒருவரைத்
தலைவியாக இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது, அமெரிக்காவில் இப்படி
நடக்குமா? என்று கேட்டிருக்கிறது.
என்ன செய்வது? அமெரிக்காவில் இளிச்சவாயர்கள் இல்லை
போலிருக்கிறது!
***
சுப்ரிம் கோர்ட்டில் ஒரு வழக்கு. 1999ம் ஆண்டில் தொடரப்பட்டது,
தில்லியில் மின் விநியோகம் சரியாக இல்லாததால் பொதுமக்கள்
பாதிக்கப்படுவதைக் கண்டித்தும் மின் விநியோகத்தை அதிகரிக்க
தில்லி அரசு தவறிவிட்டதாகவும் வழக்கு. அரசுக்கு வாதாடிய
வக்கீல் கூறுகிறார், "அரசியலமைப்பு சட்டப்படி ஒரு சாதாரணக்
குடிமகன் மின் சப்ளை போன்ற பிரச்சினைக்காக சட்டமன்றத்தை அணுக
முடியாது. தில்லியில் மின் சப்ளையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு
உத்தரவிடும் சூப்பர் கமிஷனாக சுப்ரீம் கோர்ட் செயல் பட
முடியாது" என்று.
இந்த அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்டதற்கு இதுவும் வேண்டும்
இன்னமும் வேண்டும்.
***
சொன்னார்கள்:
'ஒரு ப்ரூஃப் ரீடராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்த
கருணாநிதியின் சொத்துக்கு இன்று வானமே எல்லை' - ஜெயலலிதா
பிழை திருத்துவது ஒன்றும் தவறானது அல்ல. நூலின் பிழையையும்
திருத்தி வருகிறேன் நாட்டின் பிழையையும் திருத்தி வருகிறேன்'
- கருணாநிதி
*******