கருணாநிதி -
ஜெயலலிதா சர்ச்சைகளையே எத்தனை நாள் எழுதுவது என்று அலுப்புத்
தட்டிக் கிடந்த நமக்குப் புத்துணர்ச்சி தரத்தான் போலும் மாறன்
-கலைஞர் குடும்பங்களுக்கிடையேயான சர்ச்சை சூடு பிடிக்கிறது.
அன்புக்கரசி வளைகாப்புக்குக் கலைஞர் போகப்போவதில்லையாம்.
சமரச முயற்சிகளுக்குக் கலைஞர் ஒப்புக் கொள்ளவில்லை. சமரசம்
பேச வந்தவர்களை, "ரவுடியின் தந்தையுடன் என்ன பேச்சு வேண்டிக்
கிடக்கிறது?" என்று சொல்லிக் கலைஞர் திருப்பி அனுப்பி
விட்டார். "சண்டை செய்தாலும் நாம் சகோதரர் அன்றோ?" என்று
ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து விட்டதாகத் தெரிகிறது.
சரத், ராதிகா ஆதரவுடன் கலைஞர் டி.வி. தொடக்கம், கனிமொழிக்கு
மத்திய அமைச்சர் பதவி, அறிவாலயத்திலிருந்து சன் டி. வி.
வெளியேற்றம் என்று அடுத்தடுத்து விறுவிறுப்பான காட்சிகள்
தொடரும். "கொலை பண்றாங்க" காட்சிகள் ஏதாவது நிகழ வாய்ப்பு
இருந்தால் இனிமேல் கலைஞர் டி.வி. யில் தான் பார்க்க வேண்டும்.
முரசொலியில் கலைஞர் தீட்டியுள்ள கவிதை:
மாறன், அமிர்தம், செல்வம்
மருமகப் பிள்ளைகள்
மான் குட்டிகளாய் மார் மீதும் தோள் மீதும்
பாய்ந்து விளையாடிய காட்சியெல்லாம் கனவாக
ஓய்ந்து போயினவே..என் இளமையோடு அவை
ஒழிந்து போயினவே.
பலிக்காத கனவுகளால் மனம் வலிக்காது.
ஜொலிக்காத கூழாங்கற்கள்
குப்பைக்கே போகும்"
இப்படியாகக் கலைஞர், உறவுக்கு சாம கவி பாடிவிட்டார்.
கலைஞர் பொன்விழாக் கூட்டத்தில் சொன்ன குறளை இந்த நேரத்தில்
எண்ணிப்பார்த்தால் தயாநிதி, கலைஞர் உறவு முறிந்தது தெளிவாகும்.
கலைஞர் சொன்ன குறள்,
"கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்."
போரில் வீரன் யானையின் மீது வேலை எய்ய, அது களிற்றின் மேல்
தைத்துக் கையை விட்டுப் போய் விட்டது. அந்த நேரத்தில்
யானையும் ஓடிவிட, அவன் தனது உடம்பிலே தைத்திருந்த அம்பை
எடுத்துப் போரிட்டான் என்பது பொருள்.
இதில் கைவேல்
என்பது தயாநிதியையும் யானை என்பது அவர்கள் குடும்பச்
சானலையும் குறிக்கிறதாம். அந்த நிலையில் உடலில் தைத்த அழகிரி
என்ற வேலை வைத்துக்கொண்டு கலைஞர் போரிடுகிறார் எனப் பொருள்
சொல்லப்படுகிறது. எதிர்காலத்தில் மெய்வேல் கனிமொழியைக்
குறிக்கும் என்று பல பரிமேலழகர்கள் உரை சொல்லி வருகிறார்கள்.
***
உத்தரப்
பிரதேசத்தில் கவர்னர் தன் உரையின்போது "இது வரை உ.பி.யில்
முலாயம் சிங்கின் சட்டவிரோதமான காட்டாட்சி நடந்து வந்தது"
என்று சொல்லியிருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் அமிதாப்
பச்சன் உ.பி.யில் குற்றங்கள் குறைந்து விட்டதாகக்
கூறியிருப்பது தவறு. மாஃபியா குற்றவாளிகள் ஆதிக்கம்
அதிகரித்துள்ளது என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
கவர்னர் தனது உரையின்போது புது அரசு மேற்கொள்ள இருக்கும்
வளர்ச்சித் திட்டங்கள், பணிகள் பற்றிக் கூறுவது நியாயம். அதை
விட்டு சட்டம் ஒழுங்கின் பாதுகாவலாராக இருக்க வேண்டிய கவர்னரே
இப்படிக் கூறியிருப்பது கேலிக்கூத்து. சட்டசபை ஆளும்
கட்சியின் அரசியல் மேடையல்ல. மாயாவதியின் குரலாக இருந்து
அவர்கள் என்ன எழுதிக் கொடுத்தாலும் அதைக் கிளிப்பிள்ளை போலப்
படிப்பது அரசியல் அமைப்பிற்கே முரணானது. வளர்ச்சிக்
கருத்துக்களை மட்டும் தனது உரையில் எடுத்துக் கொண்டு கட்சி
அரசியலைப் புகுத்தாமல் இருப்பது நடுநிலைமை வகிக்க வேண்டிய
கவர்னரின் கடமை. சாஞ்சா சாயுறபக்கம் சாயும் செம்மறிடல்ல
கவர்னர் பதவி.
கொசுறு
நடந்த சட்டசபைக் கூட்டத்தின்போது மாயாவதியும் முலாயமும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லையாம், ஜெயலலிதா கலைஞர்
அரசியலை அறிந்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல.
***
வங்கிகள் எம்.பி.க்களுக்குக் கடன் தர மறுக்கின்றன என்று
பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
வங்கி அதிகாரிகள் சொல்வது: அவர்களிடம் நம்பகத்தன்மை
இல்லாததுதான் காரணம். ரிஸர்வ் வங்கி நடத்திய ஆய்வில்
அரசியல்வாதிகள், வக்கீல்கள், மொத்த விற்பனையாளர்கள்
ஆகியோர்தாம் பெருத்த அளவில் தவணை செலுத்தத் தவறுகின்றனர்
என்று தெரிய வந்துள்ளதாம். தனியார் வங்கிகள் போலீஸார்,
வக்கீல்கள், மற்றும் அரசியல்வாதிகளுக்குக் கடன் தருவது
கிடையாதாம்.
நோ கமெண்ட்ஸ்.
*******