அரசியல் ரீதியாகப்
பழிவாங்க முயற்சிப்பது ஒரு தொடர்கதையாக நீள்கிறது. பிரதிபா
பாட்டில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் குடியரசுத் தலைவர்
பதவிக்கு வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது கணவர்
தேவி சிங் ஷகாவத் நடத்திவந்த பள்ளியில் 1998ல் ஒரு ஆசிரியர்
தற்கொலை செய்து கொண்டாராம். இப்போது அவரது மனைவி திடீரென
ஞானோதயம் வந்து கிரிமினல் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
பாரதிய ஜனாதா கட்சி இதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று
எங்கப்பா குதிருக்குள் இல்லை என்பதுபோல் சொல்லியிருக்கிறது.
அரசியல் நாகரீகமென்றுதான் வளருமோ!
****
ராஜா பையா முலாயம்
சிங்கின் அரசில் ஒரு முக்கிய மந்திரியாக இருந்தவர், இன்று
தாதாவாகவும் கொள்ளைக்காரராகவும் குற்றம் சாட்டப்பட்டுத்
தலைமறைவான அவர் தேடப்பட்டு வருகிறார். பல கொலைக் குற்றங்களில்
சம்பந்தப்பட்டவராம் இவர். அதனால்தானே மந்திரியாக முடிந்தது
என்று சொல்ல வேண்டாம். இன்று எதிர்க்கட்சி மாயாவதி அரசு
ஆட்சிக்கு வந்ததும் அரசியல் எதிரிகளை வேட்டையாடும் நாடகம்
துவங்கிவிட்டது.
இந்த நிலையில் மாயாவதிக்கு 52 கோடி அளவில் சொத்துக்களாம், இது
அவரே கொடுத்த கணக்கு, நகைகள், வைப்பு நிதி, அசையும் அசையாச்
சொத்துக்கள். இவற்றை எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்
கொள்ளலாம் என்று தொண்டர்கள் கூறியிருக்கிறார்களாம். மக்கள்
பணத்தை மக்களுக்காக உபயோகப்படுத்துவதுதானே முறை என்று
அரசியல்வாதிகளிடம் கேட்கக் கூடாது.
****
சொன்னதும்
சொல்லாததும்
ஜனாதிபதி தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயன்றனர்,
ஆனால் தன்னுடைய நிலையை உறுதிப்படுத்தி இந்தியாவிற்கு ஒரு
நல்ல எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறார் கலாம் அவர்கள் -
கருணாநிதி
கலாம் போட்டி போடாதது நாட்டிற்கு நல்ல
காலம் என்கிறீர்களா? (ஏதோ நம்மாலானது :-)
ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலின்போது 10 கிலோ அரிசி வாங்கினால்
10 கிலோ இலவசம் என்றார். இது ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு
குவாட்டர் இலவசம் என்பதுபோலவே தோன்றுகிறது. - ஸ்டாலின்
நல்ல உதாரணம் - இப்படிச் சொன்னாதான்
மக்களுக்குப் புரியுமா?
மதுரை மேற்குத்
தொகுதியில் தி.மு.க.வினர் பணத்தைத் தண்ணீராக செலவழித்தனர்,
ஒரு ஓட்டுக்கு 1500 ரூபாய் கொடுக்கப்பட்டது, வாக்காளர்கள்
மிரட்டப்பட்டனர். - வைகோ
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, முந்தைய ஆட்சியில்
ஈரல் சேதம் அடைந்திருந்தது, இப்போது ஈரலே காணாமல் போய்விட்டது.
- பா.ம.க. தலைவர் ராமதாஸ்
அப்போ கட்சி மாறுவதுன்னு நிச்சயம்
பண்ணிட்டீங்களா?
****
நெல்லிக்காய்
மூட்டையான முன்றாவது அணி கலாமைத் தேர்தலில் நிற்க வைக்கும்
முயற்சியில் தோல்வி அடைந்ததும் மூலைக்கு மூலை சிதறிவிட்டது -
உங்கள் முடிவு என்ன என்று கேட்பதற்கு யாராவது கிடைத்தால்தானே?
*******