|
|
அப்துல் கலாம்
என்ற அற்புத மனிதர்
ஜனாதிபதி பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று ஓய்வு
பெற்றார் கலாம். அதுவரை பொறுக்க முடியவில்லை அரசு
அதிகாரிகளால்! அன்று மாலை அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே,
தில்லியில் பல அரசு அலுவலகங்களில் அவரது படத்தைக் கழற்றி
வைத்து விட்டார்களாம். அத்தனை அவசரம், சுறு சுறுப்பு
அவர்களுக்கு, இதே சுறு சுறுப்பைத் தங்கள் பணிகளில் காட்டினால்
நன்றாக இருக்கும். பொதுமக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும்,
இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், சிறுவர் சிறுமிகளுக்கு
கலாம் மாமாவாகவும் திகழ்ந்து, ஒரு தனி முத்திரை படைத்த
சாதனையாளர் இவர். ஜனாப் அபுல் பக்கிர் ஜைனுலாதீன்
அப்துல்கலாம் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.
ஆனால் 100 கோடிக்கும் மேற்பட்ட இந்தியமக்களின் இதயத்தில்
நீங்காத இடம் பெற்றுவிட்டார் என்று காட்டினால் நன்றாக
இருக்கும்.
கலாமின் செயலர் பி.எம். நாயர் சொல்கிறார், "ஜூலை 14ம் தேதி
2003-ல் காலை 8.40-க்கு எனக்கு ஒரு போன் வந்தது,
அடுத்தமுனையில் ஜனாதிபதி. இதுபோல ஜனாதிபதி நேரில் பேசுவது
மிகவும் அபூர்வம். அவர் அப்போது மென்மையான குரலில், "மிஸ்டர்
நாயர், நேற்று இரவு என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை, எனது
அறை ஒழுகிக் கொண்டிருந்தது' என்றாராம். இதைக் கேட்டதும் நான்
அதிர்ச்சியடைந்தேன். வேறு ஒரு ஜனாதிபதியாக இருந்தால் வேலையே
பறிபோயிருக்கும். நான் அதிர்ச்சி அடைந்ததை உணர்ந்த அவர், "எனக்குத்
தெரியும் உடனடியாக இப்பிரச்சினையை நீங்கள் சரி
செய்துவிடுவீர்கள் என்று" எனச் சொன்னாராம். அவரது மனித
நேயத்துக்கும், நிர்வாகத் திறமைக்கும் இது ஒரு சோற்றுப்பதம்.
மெய்த் திருப்பதம் மேவென்ற போதிலும் இத்திருத் துறந்து
ஏகென்ற போதிலும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத்திருக்கும் முகம்” என்று கம்பன் வருணித்தது இன்று அப்துல்
கலாமைத் தவிர வேறு யாருக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?
அதிபர் மாளிகையில் தம் உறவினர் வந்து சாப்பிட்டதற்கெல்லாம்
கையிலிருந்து பணம் கட்டி வந்தாராமே? முன்னால், பின்னால்,
இருந்தவர்கள், இருப்பவர்களை ஒப்பு நோக்கிப் பார்ப்பதைத்
தவிர்க்க முடியவில்லையே!
***
அரசியலான
குடியரசுத் தலைவர் தேர்தல்
'ஒருவழியாகக் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தது. முதல்
முறையாக ஒரு பெண் நாட்டின் மூத்த குடிமகளாகியிருக்கிறார்.
ரொம்பச் சந்தோஷம். இந்தியநாட்டு மாதர் குலமே பெருமிதத்தால்
விம்முகிறது. எல்லாம் நாட்டுக்காக அயராமல் பாடுபடும் நமது
அரசியல்வாதிகளால்தான்' என்றெல்லாம் சொல்ல ஆசைதான். ஆனால்
தேர்தல் நடந்து முடிந்த விதத்தைப் பார்க்கும்போது இது ஏதோ
குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த விசயமாகத்
தெரியவில்லை. யாரை நிறுத்துவது என்பதில் ஆரம்பித்து எல்லாமே
கோணல். ஏதோ பெண் ஜனாதிபதிதான் பதவிக்கு வரவேண்டும் என்பதுதான்
நாட்டின் விருப்பம் என்பதுபோல வித்தை காட்டிய ஐக்கிய முன்னணி
ப்ரதீபா பாட்டிலைத் தேர்ந்தெடுத்ததின் பின்னணி எல்லோருக்கும்
தெரிந்த ரகசியம். இடதுசாரிக் கட்சிகள் விரும்பிய வேட்பாளரான
பிரனாப் முகர்ஜியை நிறுத்த காங்கிரஸ் மறுக்க, சிவராஜ்
பாட்டிலை இடதுசாரிக் கட்சிகள் வெறுக்கக் கடைசியாக லாட்டரி
விழுந்தது ப்ரதிபா பாட்டிலுக்கு. அதற்கு முந்திய நாள்வரை அவர்
நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார் தனக்கு அதிர்ஷ்டம்
கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டப்போகிறது என்று. ஆனால்
அவரிடம், அவரது பாபாவின் ஆவி கூறியிருந்ததாம், 'ஒரு பெரிய
பதவி காத்திருக்கிறது' என்று (மனிதர்களைவிட ஆவிகளை நம்புபவர்?).
இதுவரை நாட்டு மக்களுக்கு, ஏன், பல அரசியல்வாதிகளுக்குக்கூட
சோடா பாட்டில் மட்டும்தான் தெரியுமே ஒழிய ப்ரதிபா பாட்டீல்
யார் என்பது தெரியாது. அதைப் பற்றிக் கவலை என்ன? அவர் ஒரு
பெண். ஐக்கிய முன்னணியில் அனைவருக்கும் ஓகேயானவர். வேறென்ன
தகுதி வேண்டும்?
பா.ஜ.க. துணை ஜனாதிபதி ஷெகாவத்தை சுயேச்சையாக நிறுத்தியது
அதைவிட வினோதம். சுயேச்சை வேட்பாளர் என்றால் எல்லாத்
தரப்பினரும் ஆதரவு தருவார்கள், மதச்சார்பு முத்திரை நீங்கும்
என்பது அவர்களது கணக்கு. பசுத்தோல் போர்த்தினாலும் அது
புலிதானே! அவர்களுக்கே தங்கள் கொள்கைகளின் மீது
நம்பிக்கையில்லை என்பதையே அது காட்டியது.
ஜனாதிபதிப் பதவிக்கு நின்ற ப்ரதிபா பாட்டில் மீது
ஆயிரத்தெட்டு குற்றச்சாட்டுக்களை பழைய குப்பைகளைத் தோண்டி
கண்டுபிடித்தது பா.ஜ.க. 'ஆதாரம் இல்லை. எல்லாம் பொய்' என்று
ஈனஸ்வரத்தில் முனகினாலும் துணிவுடன் 'அனைத்தும் கட்டுக்கதை'
என்று அடித்துச் சொல்ல ப்ரதிபா பாடில் உட்பட யாரும்
முன்வரவில்லை. அவர்மீது தொடரப்பட்ட வழக்கும் ஆகஸ்ட்
மாதத்திற்கு ஒத்திவைக்கப் பட்டது. இனி அது பழைய பரணில்தான்
தூங்கும் (நாட்டின் ஜனாதிபதி தூய்மையானவராக இருப்பதுடன்
தூய்மையானவர் என்று தோற்றமளிக்கவும் வேண்டும்).
Justice should not only be done but also seems to have
been done
என்பது போல.
நமது கலைஞர் பிரதிபாவை ஆதரிப்பதில் ஒரு படி முன்னே போய் ஒரு
பெரிய மகளிரணியையே பிரம்மாண்டமான அளவில் நடத்திவிட்டார். 'இந்தப்படை
போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' என்ற பாணியில் கூலிக்கு
மாரடிக்கும் மகளிர் கூட்டமும் கொடுத்த காசிற்குக்
கத்திவிட்டுப் பின்னர் பிரியாணி சாப்பிடப் போய்விட்டது.
ப்ரதிபா பாட்டிலுக்கு நமக்கு இவ்வளவு ஆதரவா என்று ஆச்சரியம்.
பிறகு 'பாட்டிலு'க்கு ஆதரவு இருக்காதா என்ன? இதற்கு
பிரதியுபகாரமாக சோனியாவிடமிருந்து கனிமொழிக்கு மத்திய
அமைச்சர் பதவி கிடைக்கலாம்.
நெல்லிக்காய் கூட்டணியான ஜெயலலலிதா அணி நடந்து கொண்டவிதம்
அதைவிட வேடிக்கை. 'அப்துல்கலாம்தான் எங்களது சாய்ஸ்' என்று
முழங்கிவிட்டு மூக்கறுபட்டு 'யாரையும் ஆதரிக்கமாட்டோம்' என்று
கூட்டணி முடிவெடுத்த நிலையில் அ.தி. மு.க.-வும் அதன் 'ஜிங்-சாக்'-கான
ம.தி.மு.க.-வும் எதிர்பாராத வகையில் ஷெகாவத்துக்கு
வாக்களித்தது மூன்றாவது அணியின் முதுகில் குத்திய செயல்
என்றால், எனக்கொன்றுமே தெரியாது நான் ஊரிலேயே இல்லை, இந்தக்
குழப்பத்துக்கு தேர்தல் கமிஷன்தான் காரணம் என்று ஜகா
வாங்கியது உச்சகட்ட தமாஷ்.
இந்திய அரசியல் அரங்கத்தில் முதன்முதலாகக் குடியரசுத் தலைவர்
தேர்தல் இத்தனை அமளி துமளிகளோடு அரங்கேறியிருக்கிறது.
குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் பாட்டில் ஐக்கிய
முன்னணியின் வேட்பாளராக இருந்தாலும் அவர்களது ரப்பர்
ஸ்டாம்ப்பாக இல்லாமல் நாட்டின் முதல் குடிமகள் என்பதையும்
அரசியல் சாசனத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பு தன்னிடம்
இருக்கிறது என்பதையும் உணர்ந்து, அப்துல் கலாம் அமர்ந்த அந்த
இருக்கையின் கண்ணியத்தையும் காப்பார் என்ற நம்பிக்கையுடன்
அவருக்கு வாழ்த்துக்கூறுவோம்.
***
"பிரதிபா
பாட்டில் போடும் முதல் கையெழுத்து பெண்கள்
இடஒதுக்கீட்டுக்காகத்தான் இருக்கவேண்டும்" - பா.ம.க. தலைவர்
இராமதாசு
அப்போ அவங்க கையெழுத்தே போட மாட்டாங்களா?
***
இப்போது
ஜெயலலிதாவிற்கு அறிக்கை விடும் வேலையைக் குறைக்க வைகோவோடு
பா.ம.க. தலைவர் இராமதாசும் சேர்ந்துவிட்டார். நித்தம் ஒரு
அறிக்கை. எதற்கும் ஒரு எல்லை உண்டு என கலைஞர் கொதிக்க,
எங்களுக்கு வாய்ப்பூட்டுப் போடமுடியாது என்று பதிலடி
விட்டிருக்கிறார் இராமதாசு. அன்பினால் கட்டுப்பட்டிருக்கும்
அவர் அணிமாறுவதற்குக் காலம் கனியக் காத்திருக்கிறார்.
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|