ரெடி, டேக். 123
மீண்டும் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் - மீண்டும்
சர்ச்சைகள் - எதிர்கட்சிகள் எழுப்பிய எல்லாப் பிரச்சினைகளும்
சுமூகமாகத் தீர்ந்து விட்டன என்கிறது காங்கிரஸ். ஆனால்
கம்யூனிஸ்ட், பா.ஜ. க. என்று எல்லாத் தரப்பிலிருந்தும் இந்த
மாற்றங்கள் பழைய மது புதிய பாட்டிலில்அவ்வளவுதான் என்கின்றன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் மாயவலைக்குள்
சிக்கவைக்கும் என்றும், இந்தியாவின் சுதந்திரம் வெகுவாகப்
பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. என்னதான் அமெரிக்கா
அணு சக்தி ஆக்கப்பூர்வமாக மின்னுலைகள் தயாரிக்க உதவும் என்று
சொன்னாலும், ஹைட் சட்டத்திலுள்ள நிபந்தனைகள், அமெரிக்காவின்
வெளியுறவுக் கொள்கைகளை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்று
கட்டுப்படுத்தும். மேலும் நம் அணு உலைகள் அமெரிக்காவின்
சோதனைக்கு உட்பட்டு இருக்கும். எதிர்காலத்தில் இந்தியா
விரும்பினாலும் அணுகுண்டுச் சோதனை நடத்தமுடியாது. இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கைகளில் அமெரிக்கா மூக்கை நுழைக்கும்.
நம் அணுச்சோதனைக் கூடங்கள் அமெரிக்காவின் மேற்பார்வையிலேயே
இயங்கவேண்டியதாயிருக்கும். இப்படி ஒரு அடிமை சாசனத்தை எழுதிக்
கொடுத்து ஒரு அணுசக்தி ஒப்பந்தம் போடவேண்டுமா? கண்களை விற்று
ஓவியம் வாங்கினால் கைகொட்டிச் சிரிக்கமாட்டார்களா? என்று
எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ப்புக்களை
வெளியிட்டுள்ளன. ஒரு பாமரனுக்கு இதனால் என்னென்ன நன்மைகள்,
தீமைகள் என்று ஆராயத் தெரியாது. ஆனால் மத்திய அரசு இந்த
ஒப்பந்தத்தினால் ஏற்படும் நன்மைகளை, பாதிப்புக்களை ஒளிவு
மறைவின்றி மக்களுக்குத் தெரிவிப்பது அவசியம். மேலும் ஒரு
அன்னிய நாட்டிடம் 40 வருடங்களுக்குச் செய்து கொள்ளும்
ஒப்பந்தத்திற்கு மக்களவையின் அனுமதிகூடத் தேவையில்லை. மத்திய
மந்திரிசபை அங்கீகாரம் அளித்தால் போதும் என்ற சட்ட விதி
நகைப்பிற்குரியதாக இருக்கிறது.
ஒப்பந்தத்தை எதிர்க்கும் எதிர்கட்சிகளும் இதை காங்கிரஸ் அரசை
எதிர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதாமல், தங்களது நேர்மையான
கருத்துக்களை வெளியிடவேண்டும். அணு சக்திக்காகப் போடப்படும்
ஒப்பந்தத்தில் சில விதிமுறைகள் இருப்பது இயற்கை. அவை இரண்டு
நாடுகளின் சுதந்திரத்தையும் பாதிக்காத வகையில் அமையவேண்டுமென
எதிர்பார்ப்பதில் தவறில்லை. மொத்தத்தில் இந்த ஒப்பந்தத்தினால்
ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து 'குணம் நாடிக்
குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொள்வது' அரசின் கடமை.
அணு ஆயுத ஒப்பந்தம் பற்றி கம்யூனிஸ்ட் தலைவருடன் ஒரு
கற்பனை பேட்டி
நிருபர்: இந்தியா அமெரிக்காவுடன் போட்டிருக்கும் 123
ஒப்பந்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தலைவர்: நாங்கள் இதனை வன்மையாக எதிர்க்கிறோம்
நிருபர்: அப்படியென்றால் ஐக்கிய முன்னணி கூட்டணியிலிருந்து
விலகுவீர்காளா?
தலைவர்: இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துத் தீர்மானங்கள் போடுவோம்
நிருபர்: கூட்டணியிலிருந்து விலகுவீர்களா?
தலைவர்: எதிர்ப்பு ஊர்வலங்கள் நடத்துவோம்
நிருபர்: கூட்டணியிலிருந்து.....?
தலைவர்: பார்லிமென்ட்டில் எங்கள் கட்சி அரசை வன்மையாகக்
கண்டிக்கும்
நிருபர்: கூட்டணியிலிருந்து.....?
தலைவர்: இப்போது எனக்கு நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்
சமாளிப்பு
அரசு உதவி பெறாத கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட
ஒதுக்கீட்டிற்காக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் படையெடுத்து,
மீண்டும் தோல்வியைத் தழுவியிருக்கிறது மத்திய அரசு. தடையை
நீக்கக் கோருபவர்கள் அதற்கான காரணங்களைக் கூற வேண்டாமா?
சரியாக வீட்டுப்பாடம் செய்யாமல் போனால் இந்த கதிதான்.
அவர்களுக்கும் தெரியும் முடிவு என்னவென்று. என்ன செய்வது
கூட்டணிகளைச் சமாளிக்க ஏதாவது செய்து தொலைக்க
வேண்டியிருக்கிறதே
சொன்னார்கள்
"டைட்டானியம் தொழிற்சாலை கண்டிப்பாக வராது. எல்லோரும் போய்
வீட்டில் நிம்மதியாகத் தூங்குங்கள்" - பாமக தலைவர் இராமதாசு
"ஹும் என் தூக்கத்தைக் கெடுத்துட்டு எல்லோரையும் நிம்மதியாத்
தூங்கச் சொல்றீங்களே! இது என்ன நியாயம்?" - கருணாநிதி (சொல்ல
நினைத்தது)
***
"டாடா
ஆலை விசயத்தில் தமிழக அரசு அமைத்துள்ள கண்துடைப்புக் குழுவின்
அறிக்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். ஒரு வேளை அந்தக் குழு ஆலை
வேண்டாமென அறிக்கை அளித்தால் ஏற்றுக் கொள்வோம் - பாமக தலைவர்
இராமதாசு
ஆலை வேண்டாம்னு சொன்னா அது நியாயமான குழு, வேணும்னு சொன்னா
கண் துடைப்புக் குழுவா? நீங்க இராமதாசு இல்லை! ராம தமாசுங்க!!
***
"இந்தியாவின்
தொழில் வளர்ச்சிக்கு நேர்மையான முறையில் செயல்பட்டுப்
பங்களித்திருக்கிறது டாடா நிறுவனம்" - கலைஞர்.
"காமராஜர்
சோஷலிசம் டாடா பிர்லா பாயாசம்" கோஷத்திலிருந்து ரொம்பவும்
முன்னேறியே வந்து விட்டோம்!
ஆர்ப்பாட்டமா? அம்மா ரெடி!
அருப்புக்கோட்டையில் ரயில் நிலையத்தையும் முன் பதிவு செய்யும்
இடத்தையும் மூடி விட்டார்களாம். செல்வி ஜெயலலிதா அதிமுக
தலைவர்கள் தலைமையில் அதனை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம்
நடக்கும் என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே பெரிய
ஆளுங்க நீங்க. அருப்புக்கோட்டைனாலும் சரி! அமெரிக்க
ஒப்பந்தம்னாலும் சரி! உடனே தவறாமப் போராட்டம் நடத்திடறீங்க!
அகில இந்தியத் தலைவராகணும்னா சும்மாவா? ஒன்னு செய்யுங்க!
அமெரிக்காவுல ஏதோ பாலம் இடிஞ்சு விழுந்துடுத்தாம், அதை
எதிர்த்து ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்யுங்களேன்! அகில உலகத்
தலைவரகலாம்! அப்படியே எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருந்த
மளிகைக் கடையை மூடிட்டாங்க! அதுக்கும் உங்க ஆளை அனுப்பி
வச்சீங்கன்னா.....
வெறும் விளையாட்டல்ல
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கட்சியை வளர்க்க,
நகரங்கள், கிராமங்கள்தோறும் இளைஞர்களைத் திரட்டி, கிரிக்கெட்
அணிகள் உருவாக்கி அதன் மூலம் கட்சியை மக்களிடையே
பரப்பவேண்டும் என்று சொல்கிறார். திரு.சிதம்பரத்தின் மகன்
கார்த்திக்கோ கராத்தே மூலம் இளைஞர்களைக் கவர நினைக்கிறார்.
ஏற்கனவே ஜெயலலிதா பட்டி தொட்டிகளிலெல்லாம் விளையாட்டுப்
போட்டிகள் நடத்தி இளைஞர்களைக் கவரவேண்டும் என்று
சொல்லியிருக்கிறார். அரசியல் வெறும் விளையாட்டல்ல என்று
எப்போது இந்தத் தலைவர்களுக்குப் புரியும்? ஒரு வேளை
அடிதடிக்கு, உருட்டுக்கட்டை, கராத்தே, குஸ்தி இதெல்லாம்
பின்னாடி பயன்படும்னு முடிவு பண்ணிட்டாங்களோ என்னமோ?
*******