சிரிக்கப் போவது யாரு?
கஷ்டமாகத்தான் இருக்கிறது அணு ஆயுத ஒப்பந்தம் பற்றியே
திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருப்பதற்கு. என்றாலும்
விட மாட்டார்கள் போலிருக்கிறதே, நமது அரசியல்வாதிகள்?
1 2 3 என்பதற்குத் தமக்கே உரிய முறையில் விளக்கம்
தந்திருக்கிறார் லாலு. சப்பாத்தி, தண்ணீர், மின்சாரம். இந்த
மூன்றுக்கும் 1 2 3 ஒப்பந்தம் இன்றியமையாதது என்பது அவர்
கட்சி.
நடுவில் அத்வானிஜி நாங்கள் எங்கே எதிர்த்தோம் என்கிற ரீதியில்
ஓர் அறிக்கை விட்டார். அவர் அடுக்கியது (1,2,3, என்று) மூன்று
பாயிண்ட்கள்.
1) இடது சாரிகள் போல் அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாக இதை
நாங்கள் எதிர்க்கவில்லை. யுக்திபூர்வமான பங்கேற்புக்கு
நாங்கள் எதிரியில்லை.
2) இந்த ஒப்பந்தம் சமமில்லாதவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட
யுக்திபூர்வ அடிபணிவு ஆகும். இதை நாங்கள் எதிர்க்கிறோம்.
3) இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் இந்திய
அரசு தனது அணுசக்திச் சட்டத்தைத் திருத்தி அமைத்தால் இந்த
ஒப்பந்தத்தை நாங்கள் ஒத்துக் கொள்வோம்.
இப்போது அந்தர்பல்டி அடித்து பழைய முழு எதிர்ப்பு நிலைக்கே
வந்து விட்டார். ஜின்னா சமாசாரம் நினைவுக்கு வந்து விட்டது
போலும்!
இடது சாரி-காங்கிரஸ் தண்யுத்தத்தில் இடதுசாரிக்குத்
தாற்காலிக வெற்றி கிடைத்து விட்டது போல் தெரிகிறது. 14 பேர்
கொண்ட அரசியல் கமிட்டி அமைக்கப்படப் போகிறது. இதில் இடது சாரி
6 உறுப்பினர்கள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 8 பேர். அணு
ஆயுத ஒப்பந்தம், மற்றும் அமெரிக்காவின் ஹைட் சட்டம் பற்றி
இந்தக் கமிட்டி ஆலோசனை நடத்தும். இந்த ஒப்பந்தம் மட்டுமல்ல,
அரசாங்கத்தின் அமெரிக்க ஆதரவு நடவடிக்கைகள் அத்தனையையும்
நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொன்ன இடதுசாரிகள், இப்போது
இத்தோடு விட்டு விட்டார்கள். ஒப்பந்தத்தை
நடைமுறைப்படுத்துவதில் இந்தக் கமிட்டியின் கருத்துகள்
கணக்கில் கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதற்கு
அர்த்தம் இரண்டு தரப்புக்குள்ளும் தெளிவாக இருப்பதாகத்
தெரியவில்லை. ஏதோ முகத்தை (இரு தரப்பும்) காப்பாற்றிக்
கொள்வதற்காகச் செய்து கொண்ட ஏற்பாடு போல் தெரிகிறது.
கடைசியாகச் சிரிக்கப் போவது யார் என்று தெரியவில்லை.
அழப்போவது இந்திய மக்களாக இல்லாத வரைக்கும் சரி.
***
குப்பை மேடுகள் கோபுரமாக..
சென்னை நகரம் நரகமாகி வருகிறது. நகரக் குப்பையை நிர்வாகம்
செய்து வந்து கொண்டிருந்த ஓனிக்ஸ் ஒப்பந்தம் முடிந்து விட்டது.
நீல் என்ற நிறுவனத்துக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்
பட்டிருக்கிறது. நிழல் அருமை வெயிலில் என்பது போல் ஓனிக்ஸின்
பெருமை இப்போதுதான் தெரிகிறது. சென்ற சில தினங்களில் சென்னை
குப்பை நகரம் ஆகி விட்டது. குப்பைத் தொட்டிகள் இல்லை. கம்பெனி,
குப்பைகளை அள்ள ஏற்பாடுகள் செய்யவில்லை. இத்தகைய பெரிய நகரின்
குப்பை நிர்வாகத்தை ஏற்கும் அனுபவமோ திறமையோ இந்தக்
கம்பெனிக்கு இல்லை என்கிறார்கள். கவுன்சிலர்கள் அதிகாரிகள்
பேரில் குற்றம் சாட்டுகிறார்கள். தீர விசாரித்து ஒப்பந்தம்
தர வேண்டாமா? ஏர் கண்டிஷன் அறையில் உட்கார்ந்து, பேப்பரில்
எழுதித் தந்ததை வைத்துக் கொண்டு ஒப்பந்தம் போடலாமா? "பத்து
நாளில் எல்லாம் சரியாகி விடும்" என்கிறார் உள்ளாட்சித் துறை
அமைச்சர். அதற்குள் குப்பை மேடுகள் கோபுரம் அளவுக்கு உயர்ந்து
விடும் போல் தெரிகிறது. ஆளும் கட்சிக்குக் கெட்ட பெயர்
வாங்கித் தருவதற்காகவே இப்படிச் செய்கிறார்களோ?
***
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷரீஃபும் பெனாசிர்
பூட்டோவும் விரைவில் நாடு திரும்பப் போவதாக
அறிவித்திருக்கிறார்கள். ஷரீஃப் செப்டம்பர் 10ம் தேதி
பாகிஸ்தானுக்குத் திரும்பி தேர்தலில் முஷாரஃபை சந்திக்க
இருக்கிறார். பெனாசிர் செப்டம்பர் பதினான்காம் தேதி நாடு
திரும்பும் நாளை அறிவிப்பாராம். பூட்டோ, ஆட்சியில் பங்கு
பெறுவது பற்றி முஷாரஃபுடன் பேசி வருகிறாராம்! ஜனநாயகம்
திரும்பினால் சரி!
*******