கண்ணாமூச்சி ஏனடா?
வேடிக்கையாகத்தான் இருக்கிறது: கம்யூனிஸ்டுகள் ஒன்று மீசையை
ஒட்ட வெட்டிவிட்டு கூழ் சாப்பிட வர வேண்டும் அல்லது கூழ்
வேண்டாம், மீசை இருக்கட்டும் என்று ஆண்பிள்ளைத்தனமாக இருக்க
வேண்டும். இரண்டும் கெட்டானாக பிரகாஷ் கரத்தும் யெச்சூரியும்
காங்கிரஸ் அலுவலகத்திற்கும் கட்சி அலுவலகத்துக்கும் நடையாய்
நடந்து அணுசக்தி விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கவும் மனமில்லாமல் ஆட்சியை விட்டு
விலகவும் விரும்பாமல் அலைவதைப் பார்த்தால் பரிதாபம்தான்
ஏற்படுகிறது. குழு அமைத்த மறு நாளே குழப்பம், காங்கிரசும்
கம்யூனிஸ்டுகளும் மாறி மாறி அறிக்கை. கபில் சிபல் வேறு
குழுவின் முடிவை ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை என்று
சொல்லி ஒரு குண்டைப் போட்டிருக்கிறார். வேலியில் போகும் ஓணானை
எடுத்து மடியில் போட்டுக்கொண்டு 'குத்துதே குடையுதே' என்று
இப்போது அலறுவதால் என்ன பிரயோசனம்? நிமிட்ஸ்
அணுக்கப்பலுக்கும் இப்போது நடக்கும் மலபார் 2007 கூட்டு
ராணுவப் பயிற்சிக்கும் கண்டன ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள்
நடத்துவதுபோல மக்களை ஏமாற்ற ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டுப்
போக வேண்டியதுதானே! காங்கிரஸ் தனது பிடியை விடப்போவதில்லை.
இழக்கப்போவது என்னவோ கம்யூனிஸ்டுகள்தான்! நாக்கைத் தொங்கப்
போட்டுக்கொண்டு "நீங்கள் அரசுக்கு ஆதரவை விலக்க மாட்டீர்களா?"
என்று பா.ஜ.க.வும் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்.
எதற்கு இந்தக் கண்ணாமூச்சி?
காக்க... காக்க
செப்டம்பர் ஐந்தாம் தேதி ஆசிரியர் தினம் மிகச் சிறப்பாகக்
கொண்டாடினார்கள். நல்லாசிரிய விருதுகள் வழங்கப்பட்டன. இவை
பத்திரிகைகளில் பிரதான செய்தி. ஆனால் வெளிச்சம் போடப்படாதவை,
இன்னும் பல கிராமங்களில் ஆசிரியர்களே இல்லை, பள்ளிக்கூடங்கள்
இல்லை. ராஜஸ்தானில் மேவாட் எனுமிடத்தில் பள்ளிக்கூடம் மோசமான
நிலையில் இருப்பதோடு ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆறாவது வரை
படிக்கும் 100 மாணவர்களுக்கு ஒரே ஆசிரியர். இன்னுமொரு
பள்ளியில் 150 மாணவர்கள், ஆனால் பள்ளி திறப்பதே கிடையாது,
ஆசிரியர் இருந்தால்தானே?
குழந்தைகள் பள்ளிக்குப் படிக்க ஆர்வமாக வருகிறார்கள்,
ஆசிரியர்கள்தான் கிராமப்புறங்களுக்கு வர மாட்டேன்
என்கிறார்கள். ராஜஸ்தானில் மட்டுமல்ல, அனேக மாநிலங்களில் இதே
நிலைமைதான்.
கிராமப் புறங்களில் கல்வி வசதிக்காக யுனெஸ்கோ பல கோடிகளைச்
செலவழிக்கறது. அரசங்கமும் பல திட்டங்களைத் தீட்டுகிறது.
திட்டம் நிறைவேறுவதைக் கண்காணிக்கப் பல குழுக்கள்
நியமிக்கப்படுகின்றன. எல்லாம் புள்ளி விவரங்களிலும், அரசாங்க
விளம்பரங்களிலும் இருக்கின்றனவே தவிர பள்ளி மாணவர்கள் இன்னும்
காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது நியாயமா?
24 மணி நேரத்திற்குள் மருத்துவக் கலூரிப் படிப்பில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான சான்றிதழில் கையெழுத்துப் போட வேண்டும் என
மத்திய அமைச்சர் அன்புமணிக்கு ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
அன்புமணிக்கும் அகில இந்திய மருத்துவக் கல்லூரி டைரக்டர்
வேணுகோபாலுக்கும் இடையே நடக்கும் பனிப்போரில் பகடையாக
மாட்டியவர்கள் இந்த மாணவர்கள். ஒரு ரிஜிஸ்டிராரை நியமிப்பதில்
இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாட்டினால் ஏதோ இதன் மூலம்
வேணுகோபாலைப் பழிவாங்குவதாக எண்ணி மாணவர்களின் எதிர்காலத்தில்
கைவத்துள்ளார் அமைச்சர். ஊருகெல்லாம் நியாயம் பேசும் இவரது
மருத்துவத் தந்தை இவருக்கு புத்தி சொல்லக்கூடாதோ!
இந்த வாரம் அன்புமணி வம்புமணியாகவே மாட்டிக்கொண்டிருகிறார்
போலிருக்கிறது. எல்லா மருத்துவக் கல்லூரிகளில் தேர்ச்சி
பெற்ற மாணவர்க்ளும் கட்டாயமாக ஓராண்டு கிராமப்புறங்களில் சேவை
செய்ய வேண்டும் என்று சொல்லியிருகிறார். இதை எதிர்த்து
மாணவர்கள் போராட்டம். மருத்துவக் கல்லூரிக்காக 20 லட்சம் 30
லட்சம் என்று பணம் கொடுத்துப் படிக்கும் மாணவர்களிடம்
லட்சியங்களை எதிர்பார்க்க முடியுமா?
சொன்னார்கள்!
அ.தி.மு.க. ஆட்சியில் கடைசியில்தான் கொஞ்சம் மணல் கொள்ளை
நடந்தது, இப்போ மணல் கொள்ளை அதிகமா நடக்குது.
- பா.ம.க. எம்.எல்.ஏ. தமிழரசு
அம்மா அவர்களே, மீன் ரெடியா இருக்கு, சீக்கிரம் வலையை வீசிப்
பிடிங்க.
- நாம்
முதல்வரின் குடும்பக் குழந்தைகளும், உயரதிகாரிகளின்
குழந்தைகளும் தொழிலாளியின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்
அருகருகே அமர்ந்து படிக்க வேண்டும்.
- பா.ம.க. தலைவர் ராமதாஸ்
உங்க பேரக் குழந்தைகள் மட்டும் தில்லியிலே கான்வென்டிலே
படிக்கனுமாக்கும்!
- நாம்
நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று பாரதியார் சொன்னார்.
ஆனால் நூறாண்டுகளுக்குப் பிறகும் நதிகளை இணைக்கும் திட்டம்
அரசியல் செயல்திட்டக் குறிப்பில் மட்டும் இருக்கிறது.
- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்
கலாம்
கூண்டிலேருந்து வந்த பிறகுதான் இந்த மாதிரி சுதந்திரமா பேச
முடிகிறதுங்க.
- நாம்
போகப்போகத் தெரியும், இந்தப் பூவின் வாசம் புரியும்:
தமிழகத்தில் இன்னொரு நடிகர் சரத் குமாரின் கட்சி
மலர்ந்திருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் இனிமேல்
அரசியல்வாதிகள் சினிமாவில் நடிக்கப் போகவேண்டியதுதான்.
சரத்தும் 'இங்கு காமராஜர் ஆட்சி கிடைக்கும் 'என்று கடை
விரித்திருக்கிறார். வியாபாரம் எப்படி? போகப் போகத் தெரியும்.
போரடிக்கும் போராட்டங்கள்
குளித்தலையில் குழாயில் தண்ணிர் வரவில்லையா? சாத்தூரில்
சாக்கடை அடைத்துக் கொண்டுவிட்டதா? அனுப்புங்கள் ஒரு
எஸ்.எம்.எஸ். ஜெயலலிதாவிற்கு. உடனே அவர் பொழுதுபோகாத ஒரு
முன்னாள் அமைச்சரைப் போராட்டம் நடத்த அனுப்பி வைப்பார்.
இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. ஜெயலலிதாவின் போராட்டங்கள்
ஏதோ தமிழகத்தில் இவர் ஆட்சியில் இருக்கும்போது பாலாறும்
தேனாறும் ஓடி மக்கள் சகல செளபாக்கியங்களுடன் இருந்தது போலவும்,
இப்போது இந்த இரண்டாண்டுகளில் அப்படியே நிலைமை தலைகீழாக மாறி
மக்களில் நிலை கவலைக்கிடமாகி விட்டதாகவும் போராட்டம்
நடத்துவது அவருக்கு மட்டுமல்ல, பார்வையாளர்களுக்கும் ஒரு
பொழுதுபோக்காகத்தான் இருக்கிறது
*******