விடிவெள்ளி?!
அரசியல் வானில்
ஒரு விடிவெள்ளி முளைத்துவிட்டது, இருண்டு கிடந்த
இந்தியாவிற்கு ஒளியூட்டும் ஒரு நட்சத்திரமாக ராகுல் காந்தி
காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயளாளராக
நியமிக்கப்பட்டுவிட்டார்!!!! இளைஞரணித் தலைவர் போன்ற கூடுதல்
பொறுப்புக்கள் வேறு! மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களும்
சோனியாவின் தயவால் பதவியிலிருக்கும் மந்திரிகளும் போட்டி
போட்டுக் கொண்டு ராகுல் மீது பாராட்டு மழையைப் பொழிகின்றனர்.
அவர்தான் காங்கிரஸின் வெற்றியை அடுத்த தேர்தலில் உறுதி
செய்வாராம்.
சுதந்திரம் பெற்று அறுபதாண்டுகளாகியும் நம் அரசியல்
தலைவர்களுக்கு தனி நபர் துதியும் அடிமைத்தனமும் போகவில்லை.
இன்னும் ராகுல் பிள்ளை, பேரன் என்று வாரிசு அரசியல் தொடர்ந்து
கொண்டேதான் இருக்கும்.
நினைத்தாலே
கவலை தரும் நில நீர் மட்டம்
உலகில் ஆப்பிரிகாவை அடுத்து நீர் பற்றாக் குறையால்
பாதிக்கப்படும் நாடு இந்தியா என ஆய்வுக் குழுக்கள்
அறிவிக்கின்றன. இந்தியாவிலும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு
அடுத்ததாக இதனால் பாதிக்கபடப் போவது தமிழ்நாடுதானென்பது கவலை
தரும் செய்தி.
நீர் நிலைகள் அண்மையில் உள்ள இடங்களில் 10 அடியிலேயே வந்த
தண்ணீர் இப்போது 80 அடி தோண்டினால் கூட கிடைப்பதில்லை.
மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுவது, தமிழ்நட்டில் உள்ள
பல ஆறு ஏரிகளைத் தூய்மைப்படுத்துவது, வாய்ப்புக்கள் உள்ள
இடங்களில் தண்ணீரை சுத்தம் செய்து மீண்டும் வெளி
உபயோகத்திற்குப் பயன் படுத்துவது, நீரை வீணாக்காமல்
பொறுப்புடன் பொதுமக்கள் நடந்துகொள்ள விழிப்புணர்வு ஆகிய
பல்வேறு நடவடிக்கைகளைப் பொறுப்புடன் அரசு மேற்கொள்ள வேண்டும்.
தேவையற்ற வாதப் பிரதிவாதங்களையும், வாக்கு வங்கியைத்
தக்கவைத்துக் கொள்வதற்காகக் கேள்விக்குரிய சலுகைகளை
அளிப்பதையும் விடுத்து மண், நீர் வளம் காக்கும் ஆக்க
பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பது அரசின் தலையாய கடமையாகும்.
முன்னாள் ஐ.ஐ.டி. பேராசிரியரும், சிறந்த சமூக
சிந்தனையாளருமான திரு சுவாமிநாதன் அவர்கள் "எவ்வளவு கடுமையான
பிரச்சினை நம்மை எதிர்நோக்கி இருக்கிறதென்பதையாவது நாம்
புரிந்து வைத்திருக்கிறோமா? இந்த நிலவுலகின் நீடிதத
எதிர்காலத்திற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?" என்றெல்லாம்
ஆதங்கப்படுகிறார். அரசியல், மதத் தலைவர்கள் இதைப்பற்றி
சிந்தனை செய்யவில்லையே என்பது இவரது அங்கலாய்ப்பு.
Alternative
Technology, sustainable development
ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசிய காந்திஜி, இந்தப்
பிரச்சினையைப் பற்றி சீரிய சிந்தனைகள் வைத்திருந்தாராம்.
மறு பக்கம்
ஒரு மகிழ்ச்சியான
செய்தி - இன்னொன்று சோகமான செய்தி.
முதலில் மகிழ்ச்சியான செய்தி:
துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவிற்கு
அடுத்தபடியாக அதிகப்படியான கோடீஸ்வரர்கள் இருக்கும் நாடு நமது
இந்தியா. 2007ம் ஆண்டின் கணக்குப்படி இந்தியாவில் பத்து
லட்சத்துக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்க்ள் (millionaires)
எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்கிறது ஃபோர்ப்ஸ்
பத்திரிகை. பலமான பொருளாதார வளர்ச்சியும் பங்கு வர்த்தகத்தின்
எழுச்சியும்தான் இதற்குக் காரணமென்று பொருளாதார வல்லுனர்கள்
கூறுகிறார்கள்.
இந்தச் சந்தோஷம் ஒரு புறமிருக்க,
இந்தியாவில் 77 சதவிகிதம் பேர் (83.6 கோடி) ஒரு நாளைக்கு 20
ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிக்கிறார்கள் என்று சொல்கிறது
அமைப்பு சாராத நிறுவனங்களுக்கான தேசிய கமிஷன். இவர்கள்தான்
வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள். என்று கூறப்படுகிறது.
இந்த எண்ணிக்கை அமெரிக்கா. இந்தோனேஷியா, பிரேசில், மற்றும்
ரஷ்யாவின் மொத்த ஜனத்தொகையைவிட அதிகம்.
இந்த கமிஷனின்
சேர்மன் சென் குப்தா, ''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியினால்
75 சதவிகித மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. உயர்மட்ட,
மற்றும் நடுத்தர வர்க்க மக்கள்தான் பயனடைகிறார்களே தவிர
கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் யாருக்கும் இந்த வளர்ச்சியினால்
எந்தப் பயனும் கிட்டவில்லை" என்று சொல்கிறார். 1990ல்
கொண்டுவரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கை பணக்காரர்களைத்தான்
மேலும் பணக்காரர்களாக்கியிருக்கறதே தவிர வறுமைக் கோட்டிற்குக்
கீழே இருப்பவர்களுக்கு எந்தப் பிரயோசனமும் இல்லை என்பதைத்தான்
இது காட்டுகிறது. நம் இந்தியாவில் ஏற்படும் பொருளாதார
மாற்றங்களை வீக்கம் என்று சொல்லலாமே தவிர வளர்ச்சி என்று கூற
முடியாது.
தொல்லைக்
காட்சி
சன் டி.வி. நிறுவனம் சாடிலைட் சேவையை ஆரம்பிக்கப் போவதாகவும்
மாதம் 75 ரூபாய் கட்டினால் போதும் செட் டாப் பாக்ஸ் மற்றும்
ஆன்டனா இலவசம் என்றும் அறிவித்த மறுநாளே கேபிள் டி.வி.
ஆபரேட்டர்கள் போர்க்கொடி தூக்கி விட்டார்கள். எல்லாம் இலவசம்
என்பதெல்லாம் சும்மா ஏமாற்று வேலை என்று பொதுமக்களுக்காக
முதலைக் கண்ணீர் விடுகிறார்கள். டாடாவும் டிஷ்னெட்டும்
இப்போது சாட்டிலைட் சேவையை அளித்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள். அதற்கெதிராக இவர்கள் ஏன் போராடவில்லை?
காலத்திற்கேற்ப மாறுதல்கள் வருவது இயற்கை. ஒரு ரூபாய்க்கு
connect
India
என்று டெலிபோன் புரட்சியை ஏற்படுத்திய தயாநிதிமாறன் இன்று ஒரு
ரூபாய்க்கு ஒரு சேனல் தருகிறார். இரு கரம் நீட்டி வரவேற்கலாமே!
சொன்னதும்
சொல்ல விட்டதும்
"வாஜ்பாய் அவர்கள் விரைவில் குணமடைந்து நாட்டிற்கு
வழிகாட்டுவார் என்று பிரார்த்திப்போம்" - பா.ஜ.க. தலைவர்
அத்வானி
"பா.ஜ.க. கட்சியில் பிரதமர் பதவிக்குப் போட்டியே கிடையாது.
அந்தப் பதவிக்கு அத்வானிதான் முற்றிலும் தகுதியானவர்" -
சத்ருகன் சின்கா
'அடியே' என்று கூப்பிட பெண்டாட்டியைக் காணோம் - பிள்ளை
பேர் சந்தான கோபாலகிருஷ்ணனா? - அரசியல் அண்ணாசாமி.
பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி அமைப்பீர்களா என்ற
கேள்விக்கு ஜெயலலிதா ஒரு புன்னகையை பதிலாக அளித்தார் -
செய்தி
உன் புன்னகை ஒன்றே போதுமடி என்று அகமகிழ்வார்களோ
பாஜகவினர் -அரசியல் அண்ணாசாமி
"ஜெயலலிதா இன்னும் எங்கள் கூட்டணியில் நீடிக்கிறார்" -
சந்திரபாபு நாயுடு
பாவம் சார் நீங்க - பகல் கனவுக்கும் ஒரு எல்லை வேண்டாமா?
- அரசியல் அண்ணாசாமியின் ஆதங்கம்
"ரகளை செய்யும் எம்.பி.க்களை திரும்ப அழைக்கும் சட்டம் கொண்டு
வருவதை நான் ஆதரிக்கிறேன்" - சோம்நாத் சட்டர்ஜி
அது சரி, அந்த எம்.பி.க்களின் ஆதரவு இவருக்குக் கிட்டுமா?
- அண்ணசாமியின் சந்தேகம்
"நான் மரம் செடி கொடிகளை நேசிப்பவன், அவைகளிடம் 'உங்களுக்கு
உரம் வேண்டுமா தண்ணீர் வேண்டுமா?' என்று கேட்பேன்" - பாமக
தலைவர் ராமதாஸ்.
நன்றாக வளர்ந்த பிறகுதானே அதை வெட்ட முடியும்? - பழசை
மறக்காத அண்ணாசாமி
*******