பொதுவாக நாம்
காலிஃப்ளவர் சமைக்கும்பொழுது பூவை சமைத்து விட்டு அதன்
தண்டையும் , இலையையும் எடுத்து எறிவது வழக்கம். அந்த
இலையையும், தண்டையும் உபயோகித்து இந்த சத்தான சூப்பைத்
தயாரிக்கலாம் . குழந்தைகளுக்கும் , வயதானவர்களுக்கும்
ஏற்றதாகும்.
தேவையான
பொருட்கள்:
ஒரு பூவிலிருந்து நீக்கப்பட்ட இலைகளும்
தண்டுப்பகுதியும்,
தக்காளி -1
உருளைக்கிழங்கு - 1(துருவிக்
கொள்ளவும்),
வெங்காயம் - 1(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
பூண்டு - 3(அ) 4 பல்,
மிளகு - 7(அ) 8 (காரத்திற்கேற்ப) ,
ஜீரகம் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப ,
மேலே
தூவுவதற்கு - (கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிஃப்ளவர் எல்லாம்
கலந்து 2(அ) 3 மேசைக்கரண்டி),
அரிசி கலந்த நீர் - 2 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி,
பால் - 50
ml
(optional)
செய்முறை:
காலி ஃப்ளவரின் சுற்றியுள்ள இலையையும்,
தண்டுப்பகுதியையும் நன்றாகக் கழுவிய பின்னர் சிறு துண்டுகளாக
வெட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் பாத்திரத்தில் பொடியாக
நறுக்கிய இலை,தண்டுப்பகுதியுடன் , அரிசி களைந்த நீர்,
நறுக்கிய தக்காளித் துண்டுகள், துருவிய உருளைக்கிழங்கு,
நறுக்கிய பூண்டு துண்டுகள், நறுக்கிய வெங்காயம், மிளகு,
ஜீரகம்,உப்பு, சர்க்கரை சேர்த்துத் தேவையான நீர் ஊற்றி , மேல்
தட்டில் பொடியாக நறுக்கிய காய்கறித்துண்டுகளைச் சேர்த்து
வேக வைத்துக் கொள்ளவும். குக்கர் பாத்திரத்தில் வேக வைத்த
காய்கறிகளின் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்து விட்டு
காய்கறிகளை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வடிகட்டிய நீரையும்
சேர்த்து சிறிது ஓடவிடவும். பரிமாறும் பொழுது இந்த சூப்பை
நன்றாக சூடு பண்ணி கீழே இறக்கி பாலைக் கலந்து தனியாக
வைத்திருக்கும் காய்கறித்துண்டுகளைத் தூவி கப்களில் ஊற்றிப்
பரிமாறவும்.
சைனீஸ் சூப்
போன்று விரும்புபவர்கள் இதனுடன் ஒரு தேக்கரண்டி வினிகர், ஒரு
சிட்டிகை அஜினமோட்டோ சேர்த்துப் பரிமாறலாம்.. இந்த சத்தான
சிக்கன சூப் நட்சத்திர ஹோட்டல் சூப்களை விடச் சுவையாக
இருக்கும்.
*****