குறிக்கோள்
அசைக்கமுடியாத குறிக்கோள் வெற்றியாளரின் முதலாவது
குணாதிசயமாகும். குறிக்கோளுக்காக உழைத்தமைக்கு
ஆங்கில அகராதியை உருவாக்கிய டேனியல் வெப்ஸ்டர்
சிறந்த உதாரணமாவார். டேனியல் வெப்ஸ்டரைப் பற்றி
சிட்னி ஸ்மித் குறிப்பிடுகையில் டிராயர் அணிந்த
நீராவி எஞ்ஜின் போன்றவர் அவர் - மனித எஞ்ஜின் என்று
அவரைக் குறிப்பிடுகிறார்.
திடமான குறிக்கோள் இல்லாமல் உலக மாந்தரில் எத்தனை
லட்சம் பேர் வாழ்க்கையை வீணடிக்கின்றனர்! 16,000 பேரை
அணுகி வாழ்வில் உங்கள் திடமான குறிக்கோள் என்ன? என்று
நெப்போலியன் ஹில் கேட்ட போது, அவர்
கண்டுபிடித்தது-அப்படி ஒரு குறிக்கோள்
பெரும்பாலோருக்கு இல்லை என்பதுதான்!
பேருந்தில் ஏறியவுடன் நடத்துநர் கேட்கும் கேள்வி-
எங்கே போக வேண்டும்? எனக்குத் தெரியாது என்று நீங்கள்
பதில் அளித்தால் எப்படி இருக்கும்? சாதாரண பேருந்துப்
பயணத்திற்கே குறிக்கோள் தேவை என்றால் வாழ்க்கைப்
பயணத்திற்கு எவ்வளவு திடமான குறிக்கோள் வேண்டும்.
கப்பலைச் செலுத்த வேண்டிய மாலுமி முதலில் எடுத்துக்
கொள்வது காம்பஸை-திசை காட்டும் கருவியைத்தான்!
குறிக்கோளுடன் கூடிய புத்திசாலித்தனமான உழைப்பு:
வெற்றி பெற்றோருக்கும் வெற்றி பெறாதோருக்கும் இடையே
உள்ள வேறுபாடு குறிக்கோளை நோக்கிச் செயல்படும்
புத்திசாலித்தனமான உழைப்பு மட்டுமே ஆகும்.
கவனியுங்கள், கடின உழைப்பு அல்ல, புத்திசாலித்தனமான
உழைப்பு.
நமக்குத் தேவை:
SMART WORK! HARD WORK
அல்ல
தோல்வியுறுவோரும் உழைக்கிறார்கள் ஏனோ தானோவென்று!
சரியான தடத்தில் செல்லாது, இப்படி அப்படி என்று
வெவ்வேறு விதங்களில் சக்தியை வீணடிக்கிறார்கள்.
பாய்ந்து வரும் வெள்ளம் வேகமாக ஓடி, இருந்த இடம்
தெரியாமல் மறைகிறது. ஆனால் சீராக விழும் சிறுதுளி
நீர் கடும்பாறை மீது பட்டுப்பட்டு அதை உடைக்கிறது
கார்லைல் கூற்று இது!
சக்தி எங்கே? கண்டு பிடியுங்கள்
அவர் மேலும் கூறியது நான் சிறுவனாக இருந்தபோது
இடிதான் மனிதனைக் கொல்கிறது என நினைத்தேன், வளர்ந்து
பெரியவனானபோது தான் தெரிந்தது, மின்னலே மனிதர்களை
கொல்கிறது என்று.
சக்தி மின்னலில் உள்ளது. இடியில் அல்ல.
ஓசைப்படுத்தாதீர்கள். ஒளி வெள்ளம் பாய்ச்சுங்கள்.
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை தளராது
செல்மின்! -விவேகானந்தர்
குறிப்பேட்டுடன் படியுங்கள்
இந்த வெற்றிக்கலை கட்டுரைகள் ஒரு திட்டமான பாதைக்காக
வகுக்கப்பட்டுள்ளது. படிக்கும்போதே ஒரு தனி
நோட்டுடனும், பேனாவுடனும் உட்காருங்கள். நீங்கள்
இதில் படிக்கும் ஒவ்வொரு கருத்தையும் விரிவாக்கி,
வளமாக்கி உங்கள் உள்ளத்தில் இருத்திப்
பயன்படுத்துங்கள்.
எதில் வெற்றி பெற வேண்டுமென நினைத்தாலும்
குறிக்கோளின் மீதுள்ள பற்று இன்றியமையாதது. அதை
அடையும் வரை அடுத்ததை நினைக்கக்கூடாது. எவரெஸ்ட் மீது
டென்சிங் ஏறியது போல.
அடக்கம் தேவை
அடக்கம், வெற்றி ஏணியின் முதல் படி. அடக்கமாக மாறி
விடுங்கள். அடக்கத்துடன் உங்களைச் சுற்றி
உள்ளவர்களைக் கவனியுங்கள். அவர்கள் அன்போடு,
தாபத்தோடு, கோபத்தோடு, பயத்தோடு, சந்தோஷத்தோடு,
ஏழ்மையோடு, தோல்வியோடு, வெற்றியோடு இருக்கும் போது
உற்றுக் கவனியுங்கள்.
சுற்றுப்புற சூழ்நிலையைக் கவனியுங்கள்
உலகத்தில் பத்துச் சோம்பேறிகளுக்கு நேர் விகிதத்தில்
பத்தாயிரம் நிலையில்லா மனம் உடையோர் இருக்கிறார்கள்.
இவர்கள் மத்தியில் நீங்கள் வாழ வேண்டியுள்ளது. கவனம்!
மீண்டும் கவனம்! இந்த மனிதர்களிடமிருந்து புதிய
யோசனைகளை, கருத்துகளை உருவாக்கி, செயல்படுத்தி வெற்றி
பெற வேண்டும்.
தனியே அமர்ந்து சிந்தியுங்கள்
இவர்களிடமிருந்து விடுபட்டு, விலகி தினமும் ஒரு
பதினைந்து நிமிடம் தனியே அமர்ந்து, சிந்தித்து உங்கள்
குறிக்கோளுக்குச் செயல்வடிவம் கொடுக்கத்
திட்டமிடுங்கள். குறிக்கோளைச் சுருக்கமாக,
தீர்க்கமாக, தெளிவாக பேப்பரையும், பேனாவையும் எடுத்து
எழுதிவிடுங்கள் - உடனே!
ஆரம்பியுங்கள் உடனே
எப்படி ஆரம்பிப்பது? கவலையே வேண்டாம். இந்த
அத்தியாயத்தின் இறுதியில் உள்ள உபயோகமான குறிப்பைப்
பயன்படுத்துங்கள் அல்லது அதுபோல் உங்களுக்கு
உகந்ததாக ஒன்றை நீங்களே தயாரியுங்கள்.
ஒழுங்கான அமைப்பிலான முயற்சி தேவை
ஒழுங்கான அமைப்பிலான முயற்சி (ORGANISED
EFFORT)
எதிலும் தேவை. அதை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனில்
உங்கள் ஊரில் அருகே உள்ள தண்டவாளத்தைப் பாருங்கள்.
எவ்வளவு கவனத்துடன், திட்டத்துடன் வடிவமைப்புடன்
தீர்க்கமான கருத்துடன் முயற்சி எடுத்து தண்டவாள ரயில்
பாதை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு
அமைக்கப்பட்டுள்ளது! பாம்பன் பாலம், ஹௌரா பிரிட்ஜ்
இப்படி பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
செயலில் காட்டுங்கள்
பல நூறு வார்த்தைகளால் குறிக்கோளை வரையறுத்து
எழுதுவது மட்டும் போதாது. ஒரு சிறு செயலே வலுவானது.
எழுதவும் வேண்டும். எழுதியதைச் செயல் வடிவம் ஆக்கவும்
வேண்டும். எழுத்தில் மட்டும் உள்ள குறிக்கோள் நாண்
ஏற்றிய அம்பு, குறிக்கோள் இல்லாத அம்பு திசை இல்லாது
போகிற போக்கில் போகும் அம்பு. இரண்டும் பயன் அற்றவை.
இலக்கும் செயலும்
இலக்கும் வேண்டும். ஏற்றிய நாணிலிருந்து அம்பு இலக்கை
நோக்கிச் செயல் வடிவம் பெற்றுப் பறந்து தாக்கவும்
வேண்டும். நாணிலே பூட்டிய அம்பு இலட்சியம் இருந்தும்
செயல்படுத்தாத சோம்பேறித்தனத்தைக் குறிக்கும்.
வில்லிலிருந்து எங்கோ போகும் அம்பு இலட்சியமில்லாமல்
வெறுமனே சக்தியைச் செலவழிக்கும் வெற்றி அற்ற
உழைப்பைக் குறிக்கும். சிந்தியுங்கள். சக்தியுடன்
செயல்படுங்கள். திடமான ஒரு குறிக்கோளைத்
தேர்ந்தெடுங்கள். ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும்.
சீரான உடல் நலம் வேண்டும். எதை வேண்டுமானாலும் உங்கள்
சிந்தனை மூலம் முடிவு செய்ததை - குறிக்கோளாகக்
கொள்ளுங்கள்.
இயற்கைக்கு இயைந்த இலக்கு
ஆனால் ஒன்றே ஒன்று. நீதிக்கும், நியாயத்திற்கும்
புறம்பான குறிக்கோள் ஜெயிக்கவே ஜெயிக்காது. நிலைக்கவே
நிலைக்காது. இயற்கையின் விதிகள் மறைந்திருப்பவை. அவை
உங்களுக்குத் தெரியாது என்பதால், அவை இல்லாது
போய்விடுவதில்லை. மின்சாரம் பாய்வது தெரியாமல் வயரைத்
தொட்டால் ஷாக் அடிக்காமல் போகுமா? ஆகவே இயற்கை
ரகசியங்களை, நியதிகளை உற்றுக் கவனித்து அவற்றோடு
இயைந்து உங்கள் குறிக்கோளை அமையுங்கள்.
ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன் என்ற குறிக்கோளில்
தவறு இல்லை. ஆனால் திருடியோ, தவறான வழியிலோ அதை
அடைவது என்றால் அது தவறு. மீறினால் இயற்கை நியதி
தண்டித்து விடும் - கண்டிப்பாக.
கண்ணாடி முன் பயிலுங்கள்
திடமான குறிக்கோளை தினமும் காலைக் கண்ணாடி முன் -
அல்லது முடிந்த போதெல்லாம் - சொல்லுங்கள்.
டாய்லட்டில், குளியல் அறையில் திடமாக எண்ணுங்கள்.
சுய யோசனை (AUTO
SUGGESTION)
பலம் மிக்க ஒரு சக்தி.
இலட்சியமாய் மாறுங்கள்
சுருக்கமாகச் சொல்வதென்றால் இலட்சியமும் நீங்களும்
ஒன்றிய நிலையில் இருக்க வேண்டும். உலகம் உங்கள்
வளவளப் பேச்சை கேட்கத் தயாரில்லாதபோது, உங்கள்
செயலால் நீங்கள் நிமிர்ந்து நின்றால் அது உங்களை
ஆச்சரியத்துடன் பார்க்க ஆரம்பிக்கும்.
உள்ளுவதெல்லாம் உயர்வாய் எண்ணுக
எண்ணத்தில் கஞ்சத்தனமே வேண்டாம், உயர்வாய் எண்ணுங்கள்.
உலகத் தலைவர்களில் உங்களைக் கவர்ந்த சிலரின் பெயரை
எழுதிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் திடக்
குறிக்கோளைக் கொண்டவராக இருப்பது தெரியவரும்,
அலெக்ஸாண்டர், ஆபிரகாம் லிங்கன், சந்திரகுப்தன், ராஜ
ராஜசோழன், நெப்போலியன், புத்தர், மகாத்மா காந்தி....
ஆண்டரூ கார்னீகியின் புத்திமதி இது:- எல்லா
முட்டைகளையும் எடுத்து ஒரு கூடையில் வையுங்கள். அதை
யாரும் எத்திவிடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். இதன்
கருத்து என்ன? உங்கள் சக்தி அனைத்தையும் ஓர் இடத்திலே
குவியுங்கள். அதைச் சிதற விடாதீர்கள் என்பது தான்!
உங்கள் குறிக்கோளை அடைய உதவும் அனைத்தையும் நாடுவது
உங்களது இயல்பாக மாறிவிடும். குருடன் ஒருவன்
நொண்டியைப் பார்த்தான். நண்பனே, என் மேல் உட்கார்ந்து
வழி காண்பி, உனக்கு நான் கால், எனக்கு நீ கண்.
இருவரும் பயன் அடையலாம் என்றான்!
உலகில் உங்கள் குறிக்கோளை அடைய உதவும் அனைத்தையும்
நாடுங்கள்; அனைவரையும் சந்தியுங்கள்.
குறிக்கோளை சிதற அடிக்கும் அனைத்தையும் விட்டு
விலகுங்கள்; அனைவரையும் வெறுத்து ஒதுக்குங்கள்.
எஎஎஎ சூத்திரம்
குறிக்கோளை நிர்ணயித்த உடன் ஏன் அதை
விரும்புகிறீர்கள்? அதை அடைய வேண்டிய தகுதிகள் என்ன?
எப்போது அதை அடைய வேண்டும்? எப்படி அடைய
இருக்கிறீர்கள்? என்பதை நிர்ணயுங்கள்.
எதை?
எப்போது?
எப்படி?
எவ்வாறு?
(தொடரும்)