பயம்
குறித்த நான்கு அடிப்படை உண்மைகள்:
1) பயம் எதிர்காலத்தில் மட்டுமே வாழ்கிறது:
பயம் எப்போதுமே எதிர்காலம் குறித்தது. எதிர்காலத்தில்
ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அதீதக் கற்பனையில்
நிதர்சனமான நிகழ்காலத்தின் சுவையை இழப்பது
புத்திசாலித்தனமானதல்ல என்பது சொல்லாமலேயே புரியும்.
அந்தந்த நொடியை முழுவதுமாய் அனுபவித்து வாழும்
வாழ்க்கையில் பயத்துக்கு இடமே இல்லை.
நிகழ்காலத்தில் வாழ்வது குறித்து நாம் ஏற்கெனவே
பார்த்திருக்கிறோம்
2) பயத்தின் ஆதாரம் இழப்பு பற்றியது. இழப்பு எதைக்
குறித்தேனும் இருக்கலாம் - உயிர், செல்வம்,
செல்வாக்கு, இன்னபிற...
'எதனைக் கொண்டுவந்தோம் அதனை இழப்பதற்கு?' என்ற
பகவத்கீதை வாசகத்தின் பொருளை முற்றுமாய் உணர்ந்த
மனதிலும் பயம் குடியிருக்க இயலாது. கீழ்க்கண்ட
கேள்விகளை உங்களுக்குள் கேட்டுப் பாருங்கள்:
அ) எதனை இழப்பது குறித்து எனக்கு பயம்?
ஆ) அதனை இழந்தால் என்னதான் நடக்கும்?
சில சமயம் இது போன்ற எளிமையான கேள்விகள் ஆழந்த
ஞானத்தை அடைய உதவும்
3) ஆசை அல்லது விருப்பம் இல்லாத இடத்தில் பயம்
இருப்பதில்லை
அதாவது நம்முடைய விருப்பத்துக்கு மாறானவை நமக்கு
நேர்ந்துவிடுமோ என்கிற எண்ணம்தான் பயத்தைத்
தோற்றுவிக்கிறது. கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்டுப்
பாருங்கள்:
அ) வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்
என்னென்ன இருக்க/நடக்க வேண்டும்?
ஆ) வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால்
என்னென்ன இருக்க/நடக்கக் கூடாது?
உதாரணத்துக்கு, உங்கள் பதில் 'நான் கோடீஸ்வரனாக
இருக்க வேண்டும்?' என்றிருக்கிறதென்னு வைத்துக்
கொள்வோம். ஏன் என்ற கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.
மகிழ்ச்சியாக இருக்க ஏன் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும்?
இந்த விதி எங்கிருந்து வந்தது? இத்தகைய சட்ட
திட்டங்களைப் போடுவது யார்? நாம்தானே? ஏன் இத்தகைய
விதிகளை நாம் விதித்துக் கொள்ள வேண்டும்?
நாம் மனதுக்குள் திடமாய் போட்டுக் கொள்ளும் இத்தகைய
விதிகள்தான் பயத்துக்கான பலம் வாய்ந்த அஸ்திவாரமாக
அமைகின்றன. மூங்கில் போல வளைந்து கொடுத்தால்
புயலுக்கும் புன்னைகைக்கலாம்.
4) பயம் என்பது வெறும் உணர்ச்சி; அது உண்மையல்ல
உதாரணமாக 'விமானம் விபத்துக்குள்ளாகிவிடுமோ?' என்று
எழுகிற பயம் வெறும் உணர்ச்சியேயன்றி அது விபத்து
என்கிற நிகழ்வல்ல. கானல் நீருக்கு யாரேனும் அணை
கட்டுவார்களா? அது ஒரு மாயத் தோற்றம். நீர் போலத்
தோன்றினாலும் அது நீரல்ல. அது போல மனதில் விபத்து
நடப்பது போலத் தோற்றம் எழுந்தாலும் அது விபத்தல்ல.
ஒரு மாயை.
அடுத்தமுறை பயம் உங்களைத் தாக்கும் போது, தைரியமாய்
அதனை எதிர் கொண்டு, 'நீ வெறும் மாயை. உண்மையில்லை'
என்று சொல்லிப்பாருங்கள். ஆச்சரியப்படும் விளைவுகளைக்
காண்பீர்கள்.
இந்த நான்கு உண்மைகளையும் மனதின் ஆழத்தில்
உள்வாங்கிக் கொள்ளும்போது பயத்தினை எதிர்கொள்ளத்
தேவையான ஆற்றல் கிடைக்கும்.
(அடுத்த இதழில் முடியும்)