<<<சென்ற வாரம்
ராம்ஜி
நல்ல புத்திசாலி மாணவர். ஆனால் தோல்வி குறித்த
பயத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருப்பவர். படிப்பு
முடியப் போகும் தறுவாயில் பணிக்கான
நேர்முகங்களிலெல்லாம் தோல்வியையே தழுவி வந்தார்.
அவரது வழக்கமான நேர்முகம் இப்படித்தானிருக்கும்:
நேர்முகத்துக்கு நன்றாக தயார் செய்திருக்கிறார்
ராம்ஜி. நண்பனைக் கேள்விகள் கேட்கச் செய்து
அனைத்திற்கும் அருமையாய் பதில் சொல்லிவிட்ட திருப்தி
அவரிடமிருக்கிறது. நேற்றிரவே எடுத்துவைத்த மடிப்புக்
கலையாத சட்டையும் ஆடையுமாய் மிடுக்காக இருக்கிறார்.
11 மணிக்கு அவருக்கு நேர்முகம். 10.45க்கு விடுதியை
விட்டுக் கிளம்பி டிபார்ட்மெண்டை நோக்கி நடக்கிறார்.
பயம் மெல்லத் தன் வலையை விரிக்கிறது.
'இரண்டாவது செமஸ்டரில் கணக்கில் வாங்கிய அரியர்ஸ்
பற்றித் தெரிந்தால் தெரிவு செய்ய மாட்டார்களோ?'
குப்பென வியர்க்கிறது. கர்சீப்பை எடுத்து முகத்தைத்
துடைத்துக் கொள்கிறார்
'முகம் இப்படிப் பேயறைந்தது போலிருந்தால் அவர்கள்
என்னை மட்டமாக எடை போடுவார்களோ?' கால்கள்
பின்னுகின்றன.
'ஷுவின் ஓரத்தில் லேசாக மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஷுவையே சரியாக பராமரிக்கத் தெரியாத எனக்கு வேலை
கிடைக்க வாய்ப்பே இல்லை. என் வாழ்க்கை மிகப்பெரிய
தோல்வி'
அதற்குள் அவருக்கு அழைப்பு வந்து விடுகிறது.
அறைக்குள் நுழையும் போது ராம்ஜியின் கவனம் முழுவதும்
அவர்கள் தன்னை மட்டமாக எடை போட்டுவிடுவார்களோ என்ற
பயத்திலேயே இருக்கிறது. கேட்கப்பட்ட கேள்விகளில் மனதை
ஈடுபடுத்த இயலா நிலையில் ஏதோ ஒரு பதிலை
உளறிவைக்கிறார்.
பின் என்ன? வழக்கம் போல தோல்வி.
ஒரு நாள் இரவு திடீரென அவருக்கு பயம் குறித்த இந்த
நான்கு உண்மைகளும் உறைக்கின்றன என வைத்துக் கொள்வோம்.
மறுநாள் அவரது நேர்முகம் எப்படிப் போகும்?
'இரண்டாவது செமஸ்டரில் கணக்கில் வாங்கிய அரியர்ஸ்
பற்றித் தெரிந்தால் தெரிவு செய்ய மாட்டார்களோ?' பயம்
மெல்லத் தன் கூரிய நகங்களால் சுரண்டுகிறது.
ராம்ஜிக்கு பயம் பற்றிய உண்மை தெரிவதால், 'இப்போது
நான் நல்ல மதிப்பெண் வைத்திருக்கிறேன்.
நேர்முகத்துக்கு நன்றாகத் தயார் செய்திருக்கிறேன்.
அவர்களும் எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.
அதை பயன்படுத்தப் போகிறேன். எதிர்காலத்தில் என்ன
நடக்கும் என்பதை வரும்போது பார்த்துக் கொள்ளலாம்'
என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறார். தன்னம்பிக்கை
தலைதூக்குகிறது. பயம் மெல்லப் பதுங்குகிறது.
பத்தடி நடந்திருப்பார். அவரை எப்போதும்
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பயம் தன்
தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. இம்முறை
சற்று அதிரடியாக தலையை நீட்டுகிறது.
'என்னைப்
பார்த்தால் படிக்கிற, பொறுப்பான மாணவனாய்த் தெரியாதோ?
பார்த்தவுடன் மட்டமாய் எடை போட்டுவிடுவார்களோ?
கேவலமாய் நடத்துவார்களோ?'
பயம் குறித்த மற்றொரு உண்மையை எடுத்துச்
சொடுக்குகிறார் ராம்ஜி. 'அப்படி கேவலமாய் எடை
போட்டால்தான் என்ன? உயரத்தில் ஓரடி குறைந்து விடப்
போகிறதா அல்லது சாப்பாட்டில் மண்
விழுந்துவிடப்போகிறதா? நானும் நேர்முகம் செய்யும்
நிறுவனத்தாரும் இந்த நிமிடம் வரை எந்த சம்பந்தமும்
இல்லாதவர்கள்; அவர்களுக்கு ராம்ஜி என்ற மனிதன்
குறித்து எந்தத் தனிப்பட்ட கருத்தும் இருக்கப்
போவதில்லை. இவர்கள் வேலை தந்துதான் என் வயிறு
நிரம்பப் போவதில்லை. அப்படி இருக்க, இதில் நான்
இழக்க என்ன இருக்கிறது?'
பயம் அதிர்ச்சியடைகிறது. தன் பிடி தளர்வதை உணர்ந்து
தன் வன்முறைத் தாக்குதலைத் துவங்குகிறது. 'ஷ¤வின்
ஓரத்தில் லேசாக மண் ஒட்டிக் கொண்டிருக்கிறது. ஒரு ஷ¤வையே
சரியாக பராமரிக்கத் தெரியாத எனக்கு ஒரு நாளும் வேலை
கிடைக்கப்போவதில்லை. ஓரிரு வருடங்கள் பெற்றோரை நம்பி
இருக்கலாம். அதன் பிறகு...?'
ராம்ஜி இம்முறை ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்ளவில்லை.
தைரியமாய் எதிர்த்து நிற்கிறார். விகாரமாய் நீண்ட
பற்களுடன் இளித்துக் கொண்டு நிற்கும் பயத்திடம், 'நீ
ஒரு மாயை. வெறும் உணர்ச்சி. உண்மை இல்லை' என்கிறார்.
ராம்ஜியின் தெளிவு பயத்தை விரட்டியடிக்கிறது.
நேர்முகத்தை நேர்த்தியாய் செய்து பணி உத்தரவைப்
பெறுகிறார் ராம்ஜி.
பயத்தின் பலவீனத்தை அறிந்து கொள்வதால் மட்டுமே
சிலருக்கு பயம் விலகிவிடலாம். மற்றும் சிலருக்குத்
தொடர்ந்து இந்த உண்மைகளை நடைமுறைப் படுத்திப்
பார்த்து அனுபவத்தில் உணர்ந்து கொண்டால் மட்டுமே பயம்
தெளியும். பய அட்டவணை இதற்கு உதவலாம்
அநேகமாக நாம் பயப்படும் சம்பவங்கள் நடக்கமாலேயே
போகலாம் அல்லது நாம் பயப்படும் அளவுக்கு மோசமாக
இல்லாமல் இருக்கலாம். அதனைத் தொடர்ந்து பதிவு செய்து
கொண்டு வரும்பொழுது, பயத்தின் மாயத்தன்மைக்கான தாரம்
நமக்குக் கிடைக்கும். அதற்குத்தான் இந்த பய அட்டவணை:
|
எண் |
நாள் & நேரம் |
சூழ்நிலை விபரம |
பயம |
நிகழ்வு % |
குறிப்பு |
|
1
|
ஜுலை
2007; காலை 10 மணி |
மேலாளர் அழைத்திருக்கிறார் |
வேலை
போய்விடுமோ? |
0% |
மேலும் பொறுப்புகள் தரவே அழைத்தார் |
|
2
|
ஜுலை
2007; காலை 10 மணி |
குழந்தை பள்ளியிலிருந்து சரியான நேரத்தில்
வரவில்லை |
காரில் அடிபட்டு இறந்திருப்பானோ |
30%
|
விளையாடும்போது கீழே விழுந்து கையில் சிராய்ப்பு |
அதீத
அடர்த்தியுள்ள பயங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
ஆழ்மனதில் இருக்கும் நம்பிக்கைகள் காரணமாக அமையும்
பொழுது, வெளிமனதின் புரிதல்கள் உதவாமல் போக
வாய்ப்புகளுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் நமது மைய
நம்பிக்கைகளை அறிந்து மாற்று நம்பிக்கைகளை
உருவாக்குவதன் மூலம் பயத்தின் அடர்த்தியை சிறிது
சிறிதாகக் குறைக்கலாம். அது பற்றி முன்பே மனசே சுகமா
தொடரில் பார்த்திருக்கிறோம்.
முயன்று பாருங்கள்... இழப்பதற்கு என்ன இருக்கிறது?
*******