எனது அருமை நண்பர்
படித்தவர், பொறியியல் பட்டம் பெற்றவர், நல்லவர்,
எதையும் உடனே செய்து முடிக்கவேண்டும் என்ற பேரார்வம்
கொண்டவர். நினைத்த உடன் செயலில் ஈடுபடுபவர். ஆனால்
அவர் அடைந்த வெற்றி பத்து விழுக்காட்டைத்
தாண்டியதில்லை! வெளியூருக்கு நீண்ட தூரம் பயணம்
செய்ய முடிவு எடுப்பார். இரயிலில் முன்பதிவு செய்ய
நேரம் இடம் தராது. இடிபாடுகளுக்கு இடையே பயணித்து
அல்லல் படுவார். ஒரு சிறு தொழில் நிறுவனம் துவக்க
நினைத்தார். உடனே கடன் வாங்கிப் பணம் திரட்டி
நிறுவனத்தைத் துவக்கினார். பற்பல காரணங்களினால்
தோல்வியைத் தழுவினார். வாங்கிய கடனைத் திருப்பிக்
கொடுக்க இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு நண்பர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு
பொதுத் துறை நிறுவனத்தில் இளநிலை அதிகாரியாகப்
பணியாற்றி வந்தார். திடீரென லண்டனில் சென்று
மேற்படிப்புப் படிக்க விரும்பி, தனது பணியிலிருந்து
விலகி வெளிநாடு சென்றார். சென்ற விரைவிலேயே, இரண்டு
மூன்று மாதங்களில் ஏற்க முடியாத காரணங்காட்டி, தாய்
நாடு திரும்பினார். மீண்டும் தேர்வெழுதி, வெற்றி
பெற்று மற்றொரு பொதுத்துறை நிறுவனத்தில் அதிகாரியாகப்
பணி ஏற்றார்!
மற்றொருவர் இள வயதினர். தலை சிறந்த ஒரு
பத்திரிக்கையில் பணியாற்றி வந்தார். மேல் நாட்டில்
உயர்கல்வி பெறத் தன் பணியைத் துறந்து, அங்கு சென்று,
சில மாதங்களில் படிப்பை உதறிவிட்டுத் தாயகம்
திரும்பினார். ஓரிரு லட்ச ரூபாய்களை இழந்தார்!
ஏதோ ஒரு காரணத்தைக் கூறி ஒரு வல்லரசு மற்றொரு
நாட்டுடன் அண்மையில் போரிட்டது. வெற்றி, தோல்வி
யாருக்கு என்று விளங்காமலே போர் முடிவிற்கு வந்தது.
யானை பிடிக்கப் போய் எலியைப் பிடித்து வந்த
கதையாயிற்று! இவ்வாறு நமது சமுதாயத்தில் தனியார்,
அரசுகள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள்
அவசர அவசரமாக முடிவுகள் எடுப்பதும், அவற்றை
விலக்கிக்கொள்வதும் வாடிக்கையாக மாறி விட்டன! இதைப்
போன்ற பல நிகழ்வுகளைக் காண்கிறோம். இதற்கான
காரணங்களைச் சிந்தித்தோமானால், எவ்விதத்
தயக்கமுமின்றி நம் கண்களில் தெரியும் காரணம்,
வள்ளுவன் வகுத்த வழியைக் கடைப்பிடிக்காமையேயாகும்.
ஆம்! வள்ளுவர் வாக்கு "எண்ணித்துணிக கருமம்
துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" திரு.மு.வ.வின்
தெளிவுரை: "செய்யத் தகுந்த செயலையும், வழிகளை எண்ணிய
பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப்
பார்க்கலாம் என்பது குற்றமாகும்". வள்ளுவர் 'தெரிந்து
செயல் வகை' என்னும் அதிகாரத்தில் விளக்குவதைப் போல,
ஒரு செயலைத் தொடங்குமுன், அதனால் ஏற்படும் நல்ல, தீய
விளைவுகளை ஆராய்ந்து செய்ய வேண்டும். ஒரு செயலைத்
திறமையோடு செய்யத் தெரிந்தவர்களுடன் கலந்து, நன்கு
ஆலோசித்து, தாமும் நன்கு எண்ணிப் பார்த்துச்
செய்பவர்களுக்குக் கடினமான செயலென்று ஒன்றில்லை.
தோல்வியும் வருவதற்கு வாய்ப்பில்லை! செய்யவேண்டிய
முறைப்படி நன்கு சிந்தித்துச் செய்யாத முயற்சியினால்
தொடங்கும் பணிக்கு, பல பேர் சேர்ந்து துணையாய்
இருந்தாலும் அது தோல்வியில்தான் முடியும்.
காந்தி அடிகள் கருத்து: "எந்த ஒரு செயலாக இருந்தாலும்,
தீவிரமாகச் சிந்தித்து, உரியோரைக் கலந்து ஆலோசித்து,
உரிய நேரத்தில், உரிய முடிவை எடுப்பதே அறிவார்ந்த
செயல். அவ்வாறு எடுக்கப்பட்ட முடிவை, எத்தகு இடர்பாடு
வந்தாலும், அதை மாற்றாது செயலாக்க வேண்டும்"
ஆனால் இன்று நடைமுறையில், வாழ்வில் நாம் காண்பது 'முடிவு
எடுப்பது, அது மாற்றப் படுவதற்காகவே' என்ற மனப்
பாங்கு. ஏற்ற முடிவை அமல் படுத்துவதில் சிறு தடைகள்
ஏற்பட்டாலும், அதை எதிர்த்துச் செயல்படும்
மனவலிமையில்லாது, மனம் தளர்ந்து முடிவை மாற்றிக்
கொள்ளுகிறோம். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
எண்ணித்துணிய வேண்டும்! துணிந்தபின் வெற்றிக்கு
இட்டுச் செல்லும் வழி முறைகளைப் பின்பற்றி வெற்றி
அடைய வேண்டும்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துவது எப்படி? அது யாரால்
முடியும்? வள்ளுவர் விடை: 'எண்ணியார் திண்ணியர்
ஆகப்பெறின்'. ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணி,
எண்ணியபடி செயல் ஆற்றுவதில் உறுதியுடன் இருப்பாரானால்
அவர் எண்ணியபடியே செயலில் வெற்றி அடைய முடியும்.
பாரதி கருத்துப்படி நல்லதை எண்ணி, திண்ணிய
நெஞ்சத்தோடும், தெளிந்த நல் அறிவினோடும் செயல்
ஆற்றினால் எண்ணிய முடிதல் திண்ணம். இதையே 'கொன்றை
வேந்தன்' "நுண்ணிய கருமம் எண்ணித்துணி" என்று கூறும்.
எந்தச் செயலையும் நன்கு ஆலோசித்தே செய்ய வேண்டும்.
அதிலும் நுண்ணிய கருமம் என்றால் எல்லாவிதமான
செயல்பாடுகளையும் நுணுக்கமாக முன் யோசனையுடன்
திட்டமிடல் வேண்டும். எண்ணிச் செயல் படும் பாங்கு
நுணுக்கமான செயல்பாடுகளுக்குத் தேவை.
சீரிய முடிவு எடுத்தலுக்கு இன்றியமையாத ஓர் அங்கமாக
மேலாண்மைத் தத்துவ ஆசான் பீட்டர் ட்ரக்கர் என்பவர்
வள்ளுவர் கருத்தை வலியுறுத்துவார்.
"இறுதி முடிவு எடுக்குமுன், சீராகச் சிந்தித்து,
செவ்வனே திட்டமிட்டு நன்கு ஆராய்ந்து, விளக்கமாக
ஆய்ந்து செயல் படவேண்டும். ஒரு பிரச்சினைக்குத்
தீர்வு காண்பது எப்படி? பிரச்சினையின் அனைத்துப்
பரிமாணங்களையும் புரிந்துகொண்டு, தீர்க்கும் முறைகளை
ஆராய்ந்து, சிந்தித்து, விவாதித்து, பல தீர்வுகளைக்
கண்டு, அதனுள் சரியான உயர்ந்த தீர்வைத் தேர்வு செய்ய
வேண்டும். அந்த முடிவைக் காலம் தாழ்த்தாது அமல்
படுத்த வேண்டும்."-பீட்டர் ட்ரக்கர்.
இத்தகு இருபதாம் நூற்றாண்டு மேலாண்மை உத்திகளை 2300
ஆண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பெருந்தகை
விளக்கியுள்ளார். "சூழ்ச்சி முடிவு துணிவெய்தல்
அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது" ஒரு செயல்
பற்றி நன்கு ஆராய்ந்து எண்ணுவதின் முடிவு துணிவைப்
பெறுவதுதான். அந்தத் துணிவைப் பெற்ற பிறகு, செயலைத்
தொடங்கக் காலம் கடத்தினால் அது தோல்வியில், தீமையில்
முடியும்.
இக்கருத்துக்களை மனத்தில் ஏற்று செயலாற்றினால் வெற்றி
உறுதி! எண்ணித்துணிவோம்! செயல் படுவோம்! செயல்
படுத்துவோம்! வெற்றி காண்போம்!
*********