"அகல
உழுவதைவிட ஆழ உழுவதே மேல்" என்று சொல்லக்
கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதற்குக் காரணம், ஏற்கனவே பயிரிடப்பட்டு அறுவடை
செய்யப்பட்ட பயிர்கள் மேற்புற மண்ணின் சத்துக்களை
உறிஞ்சியிருக்கும். கலப்பையை நன்றாகப் பதித்து,
ஆழமாக உழும்போது வளமான அடித்தட்டு மண் மேலே வந்து
மேற்புற மண்ணுடன் கலக்கும். ஆழமாக உழவில்லை என்றால்
மேற்புற மண் மட்டுமே கலைக்கப்படும். பயிர்களுக்குத்
தேவையான சத்து கிடைக்காது.
உழுவதற்கு காலதாமதமாக ஆனாலும் பரவாயில்லை, ஆழ உழுவதே
சாலச்சிறந்தது. நமது கிராமப்புறங்கள் நமது
நல்வாழ்க்கைக்குச் சொல்லும் பாடங்கள் எத்தனை எத்தனையோ!
ஆனால், அவற்றின் அர்த்தங்களை நாம் சரியாக உள்வாங்கிக்
கொள்வதில்லை. மேம்போக்காக வாழ்பவன் தண்ணீரில் ஆடும்
காகிதக்கப்பல் போன்றவன். அலைந்துகொண்டேயிருப்பான்,
இலக்கைச் சென்றடைய மாட்டான்.
அது சரி.. ஏன் இலக்கைச் சென்றடைய வேண்டும்?
வாழ்க்கையில் வெற்றி என்பதே ஒரு இலக்கை குறிவைத்து
முன்னேறும் பயணம்தான். பல பேர் இலக்கை நிர்ணயித்துக்
கொள்வார்கள். ஆனால் அதைச் சென்றடைய சரியான வழியைக்
காணமாட்டார்கள். அல்லது அதைக் கண்டாலும் அதன்மேல்
முழு நம்பிக்கை வைத்து முன்னேறமாட்டார்கள். ஒரு
செயலில் இறங்கி விட்டால் அதன் முழு பரிணாமத்தையும்
தெரிந்து கொள்ளவேண்டும். ஆழமாக... வெகு ஆழமாகச்
சென்று அதன் உட்பொருளைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
கடலில் முத்தெடுக்க வேண்டும் என்று முடிவு
கட்டிவிட்டால் ஆழத்திற்குச் சென்றால் தான் அது
கிடைக்கும். மேலே நம்மைத் தேடிவரும் என்று அலைந்து
கொண்டிருந்தால் நாம் கைப்பற்றுவது காலாவதியாகிப்போன
வெறும் சிப்பி மட்டுமே. முத்தைத் தவறவிட்டுவிடுவோம்.
நீங்கள் எவ்வளவு விஷயங்கள் தெரிந்து
கொண்டிருக்கிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல.
தெரிந்து கொண்டது ஒரே ஒரு விஷயமென்றாலும் அதை எந்த
அளவிற்கு உள்வாங்கியிருக்கிறீர்கள், அதன் சகல
பரிமாணங்களையும் பல கோணங்களில் அலசியிருக்கிறீர்களா
என்பதே சாதிக்கத் துடிக்கும் கனவான்களுக்கு நமது
கேள்வி.
உங்களுக்கு விவேகானந்தர் பிடிக்குமென்றால் நீங்கள்
அவரது உபதேசங்கள் முழுவதையும் கற்றுத் தெளியவேண்டும்
என்பது அவசியமில்லை. அத்தனை உபதேசங்களையும் காதில்
வாங்கிப் போட்டுக் கொள்வோமே தவிர நடைமுறையில்
ஒன்றைக்கூட உருப்படியாக பின்பற்ற மாட்டோம். இதுதான்
நிதர்சன உண்மை.
அவரது ஒரு உபதேசத்தை முழுமையாகக் கடைபிடித்தாலே அது
பெரிய வெற்றிதான். அவர் சொல்வது,
Take
up one idea. Make that one idea your life - think
of it, dream of it, live on idea. Let the brain,
muscles, nerves, every part of your body, be full
of that idea, and just leave every other idea
alone. This is the way to success.
இதுதான் வெற்றிக்கான வழி.
இப்போது ஒரு ஜென் கதை.
ஒரு கண்டிப்பான பாட்டு வாத்தியாரிடம் பாடல் பாடக்
கற்றுக் கொள்ள சென்றான் ஒரு இளைஞன். முதல் நாள் கற்ற
அதே பாடலே, இரண்டாம் நாள் பாடமாகவும்,
அதற்கடுத்தடுத்த நாட்களின் பாடமாகவும் அமைந்தது. வேறு
எதையுமே அவர் சொல்லித் தரவில்லை. ஒரே பாடலையே
திரும்பத் திரும்பப் பாடி எரிச்சலாகி வெறுத்துப் போன
இளைஞன் அந்த வாத்தியாரை விட்டு ஒருநாள் ஓடியே போனான்.
தற்செயலாக பாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த அந்த
மண்டபத்திற்குள் நுழைந்தவனை பாடகன் என நினைத்து
அவனையும் போட்டியில் சேர்த்துக் கொள்ள, தனக்குத்
தெரிந்த அந்த ஒரு பாடலையே அவன் சிறப்பாகப் பாட,
மக்களின் கைத்தட்டலில் அரங்கமே அதிர்ந்தது. முதல்
பரிசைத் தட்டிச்சென்ற அவனை மற்ற போட்டியாளர்கள்
அழைத்து அவனது குருவைப் பற்றி விசாரித்தனர்.
பின்னாளில் அவனே மிகச்சிறந்த பாட்டு வாத்தியாராக
ஆனான் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதுதான் வெற்றிக்கான வழி. ஒன்றைப்
பிடித்துக்கொள்ளுங்கள்... நன்றாக... மிக நன்றாக.
மாணவர்களுக்குச் சொல்வது, ஒரு பாடத்தை நன்றாகக்
கற்றுத் தெளியுங்கள், மற்றொரு பாடத்திற்குத் தாவுமுன்.
அந்த முதல் பாடத்தில் கற்ற விஷயங்கள் மற்ற பாடங்களை
ஆழமாகக் கற்றுக் கொள்ள நல்ல அடிப்படையாக இருக்கும்.
"முதல் கோணல் முற்றும் கோணல்" என்பது தெரிந்ததுதானே.
இந்த நேரத்தில் சிலர் குரலை உயர்த்துவது கேட்கிறது.
"இந்த அதிவேக உலகத்தில் ஒரு விஷயத்தையேப் பிடித்துத்
தொங்கிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். பல்வேறு
விஷயங்களையும் நாம் ஒரே நேரத்தில் கற்றால்தான்
மற்றவர்களுடன் போட்டி போட முடியும்."
ஆனால் அப்படிச் சென்றவர்கள் ஒரு கட்டத்தில் அதல
பாதாளத்தில் விழுந்து கிடப்பது எளிதாகக்
காணக்கிடைக்கும் காட்சி. பல்வேறு விஷயங்களைக்
கற்றுக்கொள்ள நினைப்பதில் தவறொன்றுமில்லை. ஆனால்
குறைந்த பட்சம் ஓரிரு விஷயங்களிலாவது உங்கள் அறிவு
ஆழமாக இருக்கட்டும். ஆழம் என்பதற்கு சரியான வரையறை,
ஒரு வேலை என்று எடுத்துக்கொண்டால், உங்களைத் தவிர
வேறு யாரையும் அந்தக் குறிப்பிட்ட வேலைக்காக
மற்றவர்கள் தேடக்கூடாது. அந்த அளவுக்குத் தெளிவும்,
புரிதலும் உங்களிடம் இருக்க வேண்டும்.
இதுதான் வெற்றிக்கான வழி. ஒன்றைப்
பிடித்துக்கொள்ளுங்கள்... நன்றாக... மிக நன்றாக.
"அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்"
*******