ஹாலிவுட்
படங்களின் கற்பனைக் கருக்கள் அசுர வேகத்தில் நிஜமாகி
வரும் இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உண்மையில்
மகிழ்ச்சி தருவது எது?
நண்பரிடம் கேட்டேன்! அவருக்குக் கார் வாங்க
வேண்டுமாம், அதுதான் அவருக்கு மகிழ்வைத் தருமாம்.
ம்ம்.. நல்ல விஷயம்தான். ஆனால், கார் வாங்கிய பல பேர்
அதைவிடக் காஸ்ட்லியான காரை நம்மால்
வாங்கமுடியவில்லையே என ஏங்கும் மனோநிலையை அவர்
அறியவில்லை போலும்!
மற்றொருவரிடம் கேட்டால் பெரிய வீடு வேண்டுமாம்.
பெரிய வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். அது எவ்ளோ
பெரிசு என்ற அளவுகோலில் தான் இருக்கிறது வேடிக்கை.
சொந்த வீடு வைத்திருக்கும் பலரிடமும் இருக்கும்
சந்தோஷம் காணாமல் போய்விடும், பக்கத்திலேயே தன்
வீட்டை அடித்துப்போடும் அட்டகாச அழகுடன் மற்றொரு வீடு
வந்துவிட்டால்!
ஒரு முப்பதாயிரம் சம்பளம் வாங்குற அளவுக்கு வந்தாப்
போதும் என்று தற்போது நினைப்பு, தன் வயதொத்த
நண்பர்கள் அதே அளவு சம்பளம் வாங்கும்போது. ஆனால்
அந்தச் சம்பளத்தை நாம் எட்டும்போது, அப்போதாவது
சந்தோஷம் வருமா? எப்படி வரும்? நாம் ஒப்பிட்ட
நண்பர்கள் நம்மைவிட டபுள் மடங்கு
வாங்கிக்கொண்டிருப்பார்கள். எப்படி நமக்குத் திருப்தி
வரும்? அல்லது எப்போதுதான் மனநிறைவு அடையப்போகிறோம்?
மகிழ்ச்சி என்பது ஒரு போய்ச்சேரும் இடமே அல்ல. அந்த
இடத்தை அடைந்து விட்டால் இனியெல்லாம் சுகமே என்று
உற்சாகமாய் ஆடிப்பாட.. அது ஒரு பயணம். இலக்கில்லாத
பயணம். எப்போது முடியும் என்பது நம் கையில் இல்லை.
ஐந்திலக்க எண்ணில் மாதச் சம்பளம், வல்வோ மாடல் கார்,
கிரானைட்டால் இழைத்த வீடு என்பதெல்லாம்
மகிழ்ச்சிக்கான எல்லைகளே அல்ல. இவையெல்லாம் நம்
பயணத்தில் நடுநடுவே சந்திக்கும் மனமயக்கும் மாயைகள்.
இவைகளெல்லாம் வேண்டாம் என யாரும் ஒதுக்கச்
சொல்லவில்லை. நாம் ஒன்றும் முற்றும் துறந்தவர்களல்லர்.
சொல்லப்போனால் அடுத்தடுத்து இவைகளை இலக்காகவைத்து
நகரும்போதுதான் நமக்கும் சலிப்பின்றி வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால், சந்தோஷத்தை மட்டும்
இவை கிடைக்கும்வரை ஒத்திப்போடலாமா?
ஒரு ஜென் துறவியிடம் ஒருவர் கேட்டார், "ஐயா நான்
சந்தோஷமாக வாழவேண்டும். எனக்கு உபதேசம் செய்யுங்கள்"
ஜென் துறவி சொன்ன பதில். "சாப்பிடும்போது சாப்பிடு,
தூங்கும்போது தூங்கு"
நான்கே வார்த்தைகளில் என்ன ஒரு தத்துவம்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதுகூட நம் மனம் வேறு
ஏதேனும் நிகழ்வைப் பற்றியோ, அந்நிகழ்வின் விளைவைப்
பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று 4
மணிக்கு ஒரு வாடிக்கையாளரிடம் பணத்தை வசூலித்துவிட
வேண்டும். அதை வாங்கிவிட்டால் இன்று மற்றொரு ஆர்டர்
போட்டுவிடலாம். கடையில் உட்கார்ந்து சிந்திக்க
வேண்டிய விஷயம், கடைவாயினுள் இட்லியைத் திணித்துக்
கொண்டிருக்கும்போது நினைவில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இட்லியின் சுவையை அனுபவித்தோமா?
சொல்லப்போனால் உணவில் கவனம் வைத்து அதை
சாப்பிடாவிட்டால், நம் ஜீரண உறுப்புகளுக்குத் தான்
வேலை அதிகமாகும். உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணம்
காரணமாக சகல வயிற்று வியாதிகளும் வரும். வேலையில்
கவனம் செலுத்த முடியாது, இன்னபிற விஷயங்களிலும் மனம்
ஈடுபட மறுக்கும். தேவையா இது?
சாப்பிடும்போது சாப்பிடு. தூங்கும்போது தூங்கு!
ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக்
கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த
சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.
கடவுள் திடீரென உலகில் தோன்றி அறிவித்தார். "இன்னும்
24 மணிநேரம் மட்டுமே இந்த உலகம் இருக்கும். பாவங்கள்
அதிகரித்து விட்டதால் இதை அழிக்கப்போகிறேன்"
என்ன நடக்கும் என நினைக்கிறீர்கள்?
நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் கண்ணீர்
ததும்ப அன்புடன் கட்டித் தழுவுவதை விட வேறு எதைக்காண
முடியும்?
அன்பு, பாசம், நட்பு இவை தரும் சந்தோஷ கணங்களுக்கு,
பணமும் பணம் குட்டி போட்ட ஜடங்களும் நிகராகி விடுமா?
ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கக்
கற்றுக்கொள்ளுங்கள், நல்ல கார், பெரிய வீடு, உயர்ந்த
சம்பளம் - கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும்.
*******