"அம்மா! ..ம்மா! இந்தக் கொஸ்டினுக்கு என்னம்மா ஆன்சர்?"
குடுகுடுவென்று ஓடி வந்து தன் அம்மா மடியில் தொப்பென்று
விழுந்தான் ரவி.
"வந்துட்டயா? கழுகுக்கு மூக்கிலெ வேக்குமே! எப்போ அம்மா டிவி
கிட்ட உக்காந்துப்பான்னு பாத்தாயா? வந்துடுவான்! ஏன்டா!
காலைலேந்து என்னடா செஞ்சிண்டிருந்தே? எல்லா வேலையும்
இப்பத்தான் முடிச்சு ஆஞ்சு ஓஞ்சு வந்து உக்காந்தேன்!
வந்துட்டயே! போ! போ! உள்ளே போய் படி! அப்பறம் சொல்றேன்!"
"போம்மா! நீ எப்பக் கேட்டாலும் அப்பறம் அப்பறம்னு சொல்றே!
நான் இப்போ டிவி அணைக்கப் போறேன் ஹும்ம்ம்! அம்மா! ம்மா!
இந்தக் கணக்கு எப்படி போடனும்? சொல்லேன்!"
"காலம்பற அப்பா இருக்கச்ச ஒண்ணும் கேக்காதே! அப்போ கம்ப்யூடர்
கேம் விளையாடுவே! அப்பா போனப்பறம் என் கழுத்த அறு. ஒரு
சீரியல் கூட நிம்மதியாப் பாக்க விடமாட்டயே, சரி, எந்தக்
கணக்குக் காமி!"
கமலா மேலெழுந்தவாரியாய்ப் பார்த்து விட்டு, "என்ன ரவி! இந்த
சிம்பிள் கணக்குக் கூடத் தெரியலையா? நாலும் நாலும் பெருக்கி
போடு!"
"சரிம்மா!"
டிவி நிற்கவில்லை. தொடர்ந்து தன் வேலையைச் செய்துக்
கொண்டிருந்தது. நடு நடுவே சேனலும் மாறியது, கமலா அதிலேயே
லயித்துப் போனாள்.
"அம்மா! கணக்குப் போட்டாச்சு. சரியான்னு பாரேன்!"
"திரும்ப வந்துட்டயா! வந்து தொலை!"
"என்னடா இது? பெருக்கச் சொன்னா கூட்டிண்டு வந்திருக்கியே,
மண்டு! மண்டு! மூளைலே களிமண்ணா, என்ன?"
வாசற்கதவு சற்றுத் திறந்திருந்ததால், அந்த நேரம் பார்த்து
நான் உள்ளே நுழைந்தேன்.
"கமலா! எப்படி இருக்கே, சௌக்கியமா? ரொம்ப நாளாச்சு உன்னப்
பாத்து. ஆமாம், நீ யார மண்டு-ன்னு திட்டினே?"
"இதோ இருக்கானே பிரஹஸ்பதி! அவனைத்தான்! ஒரு சீரியல் கூட
பாக்கவிடாம நடுநடுவ்லெ
வந்து என் கழுத்தை அறுக்கிறான். நல்ல வேளை, நீ வந்தே. டேய்
ரவி! இந்த டீச்சர் வந்திருக்கா, கொஞ்சம் நாழி உள்ளே போய் படி!
என்ன விசாலம் சரியா? நான் இந்தச் சீரியல் முடிஞ்சதும்
வந்துடறேன்"
கமலா எனக்கு சின்ன வயதிலிருந்தே தோழி, ஒரு சினிமாப் பைத்தியம்!
எனக்கு உரிமையுடன் ஒரு பொறுப்பைத் தந்து விட்டாள். நானும் அதை
ஈசியாக எடுத்துக் கொண்டு ரவியுடன் விளையாட்டு மூலமாகவே
கணக்கைச் சொல்லிக் கொடுத்தேன். பின் அவளுடன் சிறிது நேரம்
கழித்தப்பின் வீடு வந்தேன் ஆனாலும் என் தோழியின் வீட்டில்
நடந்த சம்பவம் என் மனதை மிகவும் பாதித்தது.
குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்திலும், ஹோம்வொர்க்
செய்யும் நேரத்திலும், பரீட்சை நேரத்திலும் கண்டிப்பாக
பெற்றோர்கள் டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள்
கொஞ்சம் ஓய்வாக இருந்தால் படிப்பு முடித்திருந்தால்
அவர்களுக்கு உபயோகமான ஜியாகரபிகல் சேனல், கியான், டிஸ்கவரி
சேனல் அனிமல் பிளானட், போன்றவற்றில் வரும் ஆவணப் படங்களைக்
காட்டலாம். அறிவு வளரும். இதே போல் கிவிஸ் சம்பந்தமானப்
போட்டிகள், இசை, நடனம் போன்ற போட்டிகளும் காட்டலாம். தவிர
நிறைய விஞ்ஞான சம்பந்தமான படங்களும் சரித்திர சம்பந்தமானப்
படங்களும் காட்டலாம். உ.ம்: திப்புசுல்தான், வீர சிவாஜி,
கட்டப்பொம்மன், கப்பலோடிய தமிழன் , ஔவையார், ஜான்சி ராணி ,
சர்தார், பகத் சிங்...
இவைகளினால் தேசப்பற்று உண்டாகிறது, இது இல்லாமல் நம்முடன்
அவர்களைச் சீரியலில் உட்கார வைத்து பழிக்குப் பழி, கொலை,
எதிர்த்துப் பேசுதல், ஜெயில், அடிதடி, ஹிம்சை, பிஞ்சிலேயே
காதல் என்று பார்ப்பது ஆரோக்கியமானதல்ல. குழந்தைகளின் மனம்
பச்சை மண் போன்றது. அதில் இப்போது எது விதைத்தாலும் வளரும்,
நல்ல விதை விதைப்பது பெற்றோர்களின் கடமையல்லவா? குழந்தை
வளர்ப்பில் பல தியாகங்கள் செய்துதான் ஆக வேண்டும்.
அப்போதுதான் நல்ல மனிதர்களை உருவாக்கி சிறந்த சமுதாயம்
படைக்கலாம்.
*******