"ஸ்வேதா! நான்
கௌம்புறேன், டைம் ஆச்சு, டிபன் எல்லாம் வேண்டாம், கேன்டீன்ல
சாப்டுக்கிறேன்டா, ப்ளீஸ்..சொன்னாக்கேளு! நைட் எல்லாம் ஒடம்பு
சரியில்லாம இருமிக்கிட்டுக் கெடந்தேல்ல, இங்க வா! முதல்ல பெட்
மேல இருக்கற ஒன்னோட மருந்து, மாத்திரை எல்லாத்தயும் எடுத்துவை.
ஸ்வரேஷ் எடுத்துச் சாப்ட்டாலும் சாப்டுருவாம்பா" என்றபடியே
தன் ஒன்றரை வயது மகனைத் தூக்கி ஹாலில் விட்டு விட்டுச்
சமையலறையில் இருந்தவளிடம் விடைபெற்று அவசர அவசரமாகச்
சென்றுவிட்டான்.
செல்போனை 'வைப்ரேஷன்' மோடில் வைத்திருந்தாலும் தொடர்ந்து யாரோ
அழைப்பதை உணர்ந்து எரிச்சலாகிப் போனான் நிதிஷ். சமீபத்தில்
இம்போர்டரிடமிருந்து வந்த க்ளைம் பற்றி மேனேஜிங் டைரக்டர்
மிகக் காரசாரமாக கான்ஃபரன்ஸ் ரூமில் விவாதித்துக்
கொண்டிருந்தார். நிதீஷ், அந்த நிறுவனத்தின் மேலாளர்,
பொறுப்புள்ள பதவி. அவர் கேள்விகளைச் மாளித்து ஒரு வழியாக
வெளியே வந்தவன் செல்போனை எடுத்துப்பார்த்தான். ஏழு மிஸ்டு
கால்ஸ், இரண்டு மெஸேஜ் வேறு. எல்லாம் மனைவி ஸ்வேதாவிடமிருந்து.
கோபம் தலைக்கேறியது, 'காலையில கௌம்பும்போதே மீட்டிங்
இருக்குனு சொல்லிட்டுத்தானே அவசர அவசரமா வந்தேன்,
அப்படியென்ன தலைபோற விசயம்' என்று மனதுக்குள் கடிந்துகொண்டே,
மெஸேஜைப் படித்தான். குழந்தையின் உடல் நிலை கவலைக்கிடம் என்ற
செய்தியைப் படித்து இடிந்தே போய்விட்டான் நிதிஷ்.
படபடப்புடன் மருத்துவமனையை அடைந்து ரிஷப்சனில் பெயர் சொல்லி
விசாரித்த போது அருகிலிருந்த டாக்டர் அவனை அழைத்து, "வெரி
ஸாரி, சிரப், டேப்ளட்ஸ் எல்லாம் நிறைய முழுங்கி,
ஓவர்டோஸாகிடுச்சு. காப்பாத்த முடியல. கொஞ்சம் முன்னாடிக்
கொண்டு வந்துருந்தாக்கூடக் காப்பாத்தியிருக்கலாம்" என்றார்
நிதீஷ் இடிந்து போய் கீழே விழப்போகும் தருவாயில், டாக்டர்
தாங்கலாகப் பிடித்துப் நாற்காலியில் அமரவைத்தார்.
"ஐயோ! அவள எடுத்து வைக்கச் சொன்ன நான், அந்த மருந்தெல்லாம்
நானே எடுத்து வச்சுட்டுப் போயிருக்கலாமே! கண்ணுக்குத்
தெரிஞ்சே இப்படி எம்புள்ளய நானே கொன்னுட்டனே!' என்று
கதறும்போது அருகில் நின்ற அனைவருமே கலங்கி விட்டனர்.
"என்னெ மன்னிச்சுருங்க! பாவி! நானே எம்புள்ளயக் கொன்னுட்டேன்,
அப்பவே சொன்னீங்களே! நான் கேர்லெஸ்ஸா இருந்துட்டேங்க! கொஞ்சம்
முன்னாடி கொண்டு வந்துருந்தாலும் காப்பாத்தியிருக்கலாமே!
அதுக்குத்தானெ நான் ஒங்களுக்கு போன் பண்ணேன். டாக்ஸிக்குக்
கால் பண்ணிக் கொண்டு வர்றதுக்குள்ள எல்லாமே போச்சே!" என்று
புலம்பினாள்
சுலபமாய்த் தவிர்த்திருக்கக் கூடிய மரணம். குற்றம் யார்
பக்கம்?
*******