பழைய தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாட்டு "பழசாய்ப் போன
பாத்திரங்கள் எல்லாம் பரணையின் மேலே ஒதுங்கிக்கணும்" என்று.
வயசானவர்கள் என்றாலே ஏதோ பழமைவாதிகள் போலவும், புதிதாகச்
சிந்திக்கத் தெரியாதவர்கள் போலவும் சித்தரிக்கப்படுவது
ஒன்றும் புதிதல்ல.
தலையில் நரையும் முகத்தில் சுருக்கங்களும் தோன்ற
ஆரம்பிக்கும்போதே நமக்குள் ஒரு கவலை பிறக்கிறது. நமது
இளமைக்காலம் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டிருக்கிறது,
முதுமையின் வாயிலை நாம் தட்டிக்கொண்டிருக்கிறோம் என்று.
இளமையில் நாட்கள் சிறிதாகவும் வருடங்கள் நீளமானதாகவும்
இருக்கின்றன. முதுமையிலோ வருடங்கள் சிறிதாகவும் நாட்கள்
நீண்டதாகவும் இருக்கின்றன என்று கூறுகிறாரொரு ரஷ்ய அறிஞர்.
எல்லோருக்கும் நீண்ட நாள் உயிர்வாழ ஆசைதான். ஆனால் யாரும்
முதுமையடைவதை விரும்புவதில்லை.
'சின்ன வயதில் நாம் செய்யாத தவறுகளுக்காக நம்மைக்
கண்டிக்கிறார்கள். ஆனால் வயதான பிறகோ நம்மிடம் இல்லாத
குணங்களுக்காக நம்மைப் பாராட்டுகிறார்கள். வயதான பிறகும்
மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி மனதளவில் இன்னும் குழந்தையாகவே
இருப்பதுதான்' என்று முதுமையைப் பற்றி பலர்
கூறியிருக்கிறார்கள்.
வயதாவது என்பது வேறு. முதுமை அடைவது என்பது வேறு.
இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முதுமை என்பது
வயதானதும் நமக்கு வாழ்க்கையில் உள்ள பிடிப்பை இழப்பது.
வயதாவது என்பது எல்லோருக்கும் ஏற்படும் ஒரு இயற்கையான
நிகழ்ச்சி. நாம் சிரிப்பையோ மகிழ்ச்சியையோ வயதாவதால்
இழப்பதில்லை. சிரிப்பதையும் மகிழ்ச்சியாக இருப்பதையும்
நிறுத்துவதால்தான் நமக்கு வயதாகிறது. வாழ்க்கையை அதன்
அனுபவங்களிலிருந்து உணருங்கள். நீங்கள் இப்போதும் இருபது
வயதிற்கு முன்னால் எப்படியிருந்தீர்களோ கொஞ்சமும் மாறாமல் அதே
போலவே இருந்தால் உங்கள் வாழ்க்கையில் 20 வருஷங்களை நீங்கள்
வீணடித்திருக்கிறீர்கள் என்று பொருள். எப்போதும்
சிரித்துக்கொண்டே இருங்கள். உங்களைக் கண்டே நீங்கள்
சிரியுங்கள். நமக்கு முன்னால் முதுமையடைந்தவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ளுங்கள்.
வயதாவதற்கும் வளர்ச்சியடைவதற்கும் நிறைய வித்தியாசங்கள்
இருக்கின்றன. வயதாவதென்பது தவிர்க்கமுடியாத நிகழ்ச்சி -
உடலைப் பொறுத்தது. வளர்ச்சி அடைவது நம் மனதைப் பொறுத்தது.
உங்களுக்கு 15 வயதே ஆகியிருந்து ஒரு வருஷம் ஒன்றுமே செய்யாமல்
இருந்தால் உங்களுக்கும் 16 வயசாகிவிடும். அதே போல் 65
வயதானவர் ஒன்றும் செய்யாமல் படுக்கையில் படுத்திருந்தால் ஒரு
வருஷத்தில் 66 வயசாகிவிடும். ஆனால் நாம் எந்த அளவுக்கு
வாழ்க்கையில் முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நமது
வளர்ச்சியைச் சொல்லும். யாருக்கு வேண்டுமானாலும் வயசாகலாம்.
அதற்குத் தனித் திறமை தேவையில்லை.
உலகத்தில் பல மாறுதல்கள் ஏற்படும்போது நாமும் பழைய
பஞ்சாங்கமாக இல்லாமல் நம்மையும் காலத்திற்குத் தகுந்தாற்போல்
மாற்றிக் கொள்வதுதான் வளர்ச்சி. வயதானவர்கள் தாங்கள் இதுவரை
செய்ததை எண்ணி வருத்தப்படமாட்டார்கள். செய்யாமல் விட்டதைப்
பற்றித்தான் வருத்தப்படுவார்கள். என்ன சாதித்தோம் என்று
கழிவிரக்கப் படுபவர்கள்தான் சாவைக்கண்டு அஞ்சுகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை கோடானுகோடி ஆண்டுகளாகியும் வானில் காலை
ஆறுமணிக்கெல்லாம் 'டானெ'ன்று (Dawn?)
சிவப்புக் குழம்பாகக் கதிரவன் எழுவதை தினம் தினம்
பார்க்கும்போது இன்றுதான் புதிதாகப் பிறந்தது போலத்
தோன்றுகிறது. பூத்துக் குலுங்கும் மலர்களின் வண்ண ஜாலங்களைப்
பார்க்கும்போது இறைவன் வண்ணத் தூரிகையினால் படைத்த வி(ந்)த்தை
என்னைப் பரவசப் படுத்துகிறது. இயற்கையின் ஒவ்வொரு எழிலும்
தினமும் என்னை உற்சாகப்படுத்துகின்றன.
காலத்திற்கேற்ப நிகழும் மாறுதல்களுக்கு என்னைப்
பழக்கப்படுத்திக் கொள்கிறேன், என் மருமகள் காபியைக் கையில்
கொண்டு கொடுக்கும் போது, "என்ன இப்படி ஆறி அவலாய் இருக்கிறது,
காபியா இது?" என்று சொல்வதில்லை. "ஏன் நீ எடுத்து வருகிறாய்,
நான் வந்து குடிக்க மாட்டேனா?" என்று ஆதுரத்துடன் சொல்கிறேன்,
என் மகனும் மனைவியும் குடும்பம் பற்றி, குழந்தைகள், பண
விவகாரம் பற்றிப் பேசும்போது, நான் மூக்கை நுழைப்பதில்லை.
என்னை அபிப்பிராயம் கேட்கும்போது மட்டும் எனது கருத்துக்களைக்
கூறுகிறேன். ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர்பர்ப்பதில்லை.
அவர்களிடம் திணிப்பதில்லை. பேரன் "தாத்தா! கதை சொல்லு" என்று
ஓடிவரும்போது ராமாயணத்தையும், மகா பாரதத்தையும் சொல்கிறேன்.
அவனுக்காக தினம் தினம் படிக்கிறேன். பேத்தி என் கையைப்
பிடித்து இழுத்து பறவைகளையும், கார், காக்கா, தண்ணீர் என்று
ஒன்றொன்றாகப் பிஞ்சுக் கைநீட்டி ஆர்வத்துடன் காட்டிக்
குதூகலிக்கும்போது நானும் எனது வயதை மறந்து அவளோடு
கைதட்டுகிறேன். ஆனந்தம் அடைகிறேன்.
எனக்கு வடுவூர் துரைசாமி அய்யங்காரும் பிடிக்கும்.
சுஜாதாவையும் தெரியும். அணுஆயுத சோதனை பற்றி, கிரிக்கெட்
பற்றி என்று பல சுவாரஸ்யமான விஷயங்களைப் படிக்கிறேன்.
கர்ணனின் சிவாஜியையும் பிடிக்கறது. சிவாஜியின் ரஜினியையும்
பிடிக்கிறது. அரியக்குடியையும் ரசிக்கிறேன், அண்டங்காக்கா
கொண்டைக்காரியையும் முணுமுணுக்கிறேன்.
என்ன? எனக்கு வயதாகிறதா? நான் நம்பமாட்டேன். என்னுடைய
நரையையும், முகச்சுருக்கங்களையும் கொண்டு என் வயதை எடை
போடாதீர்கள். என்னால் உங்களைபோல வேகமாய் நடக்க முடியாமல்
இருக்கலாம். பழைய சக்தி இல்லாமல் போகலாம். என் வயது அறுபதைத்
தாண்டியிருக்கலாம். அதெல்லாம் ஒரு எண்ணிக்கைதான். ஆனால்
இன்னும் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற தாகம் என்னை விட்டுப்
போகவில்லை. என் வெளித்தோற்றத்தைப் பார்த்து என்னை
மதிப்பிடாதீர்கள். உள்ளேயிருக்கும் அந்த என் நம்பிக்கையையும்
பூப்போன்ற ஆன்மா ஒளிர்வதையும் பாருங்கள்.
வருடங்களை வைத்து வயதைக் கணக்கிடாதீர்கள்! நான் என்றுமே
புதிதாய்ப் பிறப்பவன்! அன்போடு வாழக் கற்றுக்கொண்டால், முழு
மனத்திருப்தியோடு நாம் மரணத்தைச் சந்திக்க முடியும்!
*******