ஒரு நாள் என் வீட்டு அட்டத்தில் ஒரு எலி ஏறி அங்கு துவம்சம்
செய்ய ஆரம்பித்தது.
எலி என்றாலே எனக்கு படு அலர்ஜி. ஆகையினால் என் பணிப்பெண்ணின்
உதவியை நாடினேன். அவளும் பரணில் ஏறி எலியை விரட்ட அது ஒரு
நிமிடத்திற்குள் கீழே "சரசர" என்று இறங்கி சன்னல் வழியாக
வெளியே போய்விட்டது. என்னிடம் நீண்ட ஒரு பெருமூச்சு. அப்போது
பணிப்பெண் என்னிடம் "அம்மா இங்குட்டு நிறைய நோட்டு
இருக்கும்மா, திரும்ப எலி வந்தா, எல்லாத்தையும் கடிச்சுப்
போட்டுடும். கீழே எங்கனாச்சும் பத்திரமாக
வச்சுக்கங்க"என்றாள்.
அதில் என் பாட்டியின் பாட்டு நோட்டு இருந்தது. ஒரே
பழுப்புக்கலரில் பார்த்தாலே கிழியும் போல் இருந்தது. நிறைய
பாரதியாரின் பாடல்களும் இருந்தன. என் பாட்டி நன்றாகப்
பாடுவார். ஒரு பாடலை மனதில் முனகிக் கொண்டு அடுத்த பக்கம்
பிரித்தேன். அதில் பாரதிதாசன் என்று எழுதியிருந்தது, கீழே ஒரு
பாடலும் இருந்தது, ஆர்வம் மேலோங்கப் படித்தேன்.
காப்பி எதற்காக நெஞ்சே
காப்பி எதற்காக
கையில் சுக்குடன் மல்லி இருக்கையிலே (காப்பி எதற்காக)
தீப்படச்செய்யும் சிலிர்க்கும் இனிப்புக்கு
வாய்ப்புற்றதெங்கு வளர்ந்த தென்னாட்டில் (காப்பி எதற்காக)
ஆட்பட்டாய்ச் சக்தி சமயங்களுக்கே,
அடிமை வியந்தாய் ஆள்வோர் களிக்க
பூப்போட்ட மேல் நாட்டு சிப்பம் வியந்தாய்
போதாக்குறைக்கு தீதாய் விளைந்திட்ட (காப்பி எதற்காக)
திரும்பும் பக்கமெல்லாம் மேலே வளர்ந்தும்
சிவந்து தித்திப்பைச் சுமந்து வளைந்தும்,
கரும்பு விளைத்திடும் இந்நாட்டு மண்ணும்
கசப்பேறச் செய்திடும் சுவையே இல்லாத (காபி எதற்காக)
இந்தப் பாடல்தான் எத்தனை அழகு!
நம் நாட்டில் இயற்கை வளத்திற்குப் பஞ்சமேது? ஆயுர்வேதத்திலும்
இயற்கை வைத்தியத்திலும் இந்தச் சுக்கு மல்லிக்காப்பி முதலிடம்
வகிக்கிறது. காலையில் இதைக் குடிக்க வயிறு சீராகிறது,
வாயுத்தொல்லை நீங்குகிறது.
இந்தப் பாடலில் கவிஞர் அன்னியப் பொருளின் மேல் இருக்கும்
மோகத்தைப் பற்றியும் மக்கள் மாறி வருவதையும் அவர்கள்
அன்னியரின் உடுப்புக்களின் மேல் ஒரு ஈர்ப்புக் கொண்டு அதை
அப்படியே நகல் செய்வதையும் மனமொடிந்து கூறுகிறார்.
வெளியிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவர்கள் இங்கு
எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு கொட்டம் போட, மக்களும்
அடிமைத்தனத்தை உணராது ஆட்டம் போட, போதாக் குறைக்கு
காப்பிச்செடி வேறு இந்த மண்ணிலா என்ற கேள்வி எழுப்புகிறார்.
இனிய கரும்பு அழகாக மேல் வரை வளர்ந்து தென்றலில் ஊஞ்சலாட
அந்த இனிப்பு மண்ணும் கசப்பேறச் செய்யும் இந்தக் காப்பிச்
செடி தேவையா என்று நெஞ்சு குமுறுகிறார்.
என் தாத்தா பலதடவை, பாட்டியிடம் காப்பி கேட்கும் போதெல்லாம்,
என் பாட்டி இந்தப் பாட்டைப் பாடுவார். என்னைக் கவர்ந்த
இந்தப்பாடல் உங்களையும் கவர்ந்திழுக்கும் என நம்புகிறேன். என்
பாட்டியின் நோட்டில் இருந்தபடியே எழுதி இருக்கிறேன்.
*******