<<<<<சென்ற
பாகம்
?கேள்வி:
இப்பொழுது சர்வதேச திரைப்பட விழாவுக்காக 100
கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள். இதன் நோக்கமே
சர்வதேசத் திரைப்படங்களைப் பார்க்கும் நாமும் உலகத்
தரத்துக்கு படம் பண்ண வேண்டும் என்பதுதான். ஆனால்
இந்த விழாக்களில் உண்மையான ஒரு ஃபிலிம் மேக்கர்
வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றது.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என சொல்லுங்கள்.
சேரன்:
செலக்சன் கமிட்டி இருந்து வெளிநாட்டில் இருந்து ஏதோ கிடைத்த
படங்களை எடுத்து வந்து போடக்கூடாது. அனைத்தும் நல்ல படங்கள்
என்று சொல்லும் அளவிற்கு இருக்க வேண்டும். ஆனால் அங்குள்ள
நண்பர்கள் யாரோ சொன்னார்கள் என்று கேள்விப் படாத படங்களை
எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறோம். சில படங்கள்
நன்றாக இருக்கின்றது, சில படங்கள் நன்றாக இல்லை. நம் ஊரிலேயே
நிறைய படங்கள் நல்ல படங்கள் இருக்கின்றது. அதை நாம்
வெளிநாட்டவருக்கு காண்பிக்கலாம். ஆனால் நமது நல்ல படங்களுக்கு
நாமே அங்கீகாரம் தருவதில்லை என்பதுதான் உண்மை.
நாம் நடத்தும்
உலகத் திரைப்பட விழாவில்கூட சர்வதேசப் படங்களுடன் போட்டியிடத்
தேர்ந்தெடுக்கப்படும் நமது படங்களில் நல்ல படங்கள்
இருப்பதில்லை. போட்டிக்குத் தகுதியுள்ள படத்தைத்
தேர்ந்தெடுப்பது 15 பேர் கொண்ட கமிட்டி. தவமாய்த் தவமிருந்து
கூட நல்ல படம்தான், அந்த படத்தை ஏன் போட்டிக்கு செலக்ட்
செய்யவில்லை என்று யாரிடமும் கேள்வி கேட்க முடியவில்லை.
ரிலீஸ் ஆகிவிட்ட படங்களைப் போட்டியில் சேர்த்துக் கொள்வதில்லை
என்கிறார்கள். ஏன் என்று புரியவில்லை. ரிலீஸ் ஆகாத படங்களைப்
போட்டியில் கலந்து கொள்ள அனுப்பிவிட்டு திருப்பி
பெட்டிக்குள்ளேயே போட்டுக் கொண்டால் போட்டியில் ஜெயித்த
அடையாளம் என்ன என்பதை மக்கள் எப்படி உணர்வார்கள், மக்களுக்கு
எப்படித் தெரியும்?
ஆட்டோகிராஃபை
மெயின் ஸ்ட்ரீம் செக்ஷனில் சேர்த்திருக்கிறார்கள். கலெக்சன்
பாயிண்ட் ஆப் வியூவில் ஏகோபித்த வரவேற்பை மக்களிடம் பெற்ற
படம், பெரிய ஹிட் என்பதுதான் மெயின் ஸ்ட்ரீம் படத்தின்
அடையாளம். ஆர்டிஸ்ட் வேல்யூவினால் ஓடிய படங்களையும் இந்தப்
பிரிவில் சேர்த்தால் ஆட்டோகிராஃப் போன்ற நல்ல படங்களுக்கு
என்ன மரியாதை? நம்மைப் பற்றி வெளிநாட்டுக்காரர்கள்தான் என்ன
நினைப்பார்கள்? இந்தப் படத்துக்கு இந்த ஊர் மக்களிடம்
வரவேற்பென்றால் என்றால் இந்த ஊர் மக்களின் மனவளர்ச்சி என்ன
என்று யோசிக்கமாட்டார்களா? இவ்வளவுதான் இந்தியா என்று
நினைக்க மாட்டார்களா?
மதர்
இண்டியா என்பது ஒரு மிகப் பிரமாதமான படம் ஹிந்தியில்.
அந்தப் படம் பெரிய அளவில் மக்களால் வரவேற்கப்பட்டது.
அப்பொழுது அந்தப் படத்தை மெயின் ஸ்ட்ரீமில் கொண்டு
வந்தால் நியாயம். ஆனால் நீங்கள் மெயின் ஸ்ட்ரீம்
என்று சொல்லி விட்டு, சிவகாசினு ஒரு படத்தைக் கொண்டு
வந்து போடுகிறேன் என்று சொல்கிறீர்கள். அது விஜய்யோட
படம்தான். எங்கள் ஊர்க்காரர் படம்தான். எனக்கு சந்தோஷம்தான்.
ஆனால் அந்த படத்துடைய தன்மை என்ன? அது கமர்ஷியல்
பார்முலா உள்ள, ஹீரோயிசம் உள்ள ஒரு ஸ்க்ரிப்ட்.
அது வெறும் ஒரு எண்டெர்டெயின்மெண்ட் பிலிம். அது
ஒரு ரசிகனுக்கான படம். ஒரு நாட்டினுடைய அடையாளத்திற்கான
படம் இல்லை. மண்ணோட அடையாளம் இல்லை, நம் இந்திய
நாட்டினுடைய அடையாளம் இல்லை. அந்தப் படத்தை மெயின்
ஸ்ட்ரீமில் போடும் பொழுது, இதுதான் தமிழ்நாடு என்று
நினைப்பான். இதுதான் நம்முடைய தவறு. அது மாற்றப்பட
வேண்டும்.
படங்களின்
தேர்வு முறைகளில் மாற்றம் வேண்டும். இனிமேல் ஒவ்வொரு
படத்தையும் செலக்ட் செய்வதற்குக் காரணம் சொல்ல வேண்டும்.
தேர்வுக் கமிட்டியில் இருப்பவர்கள் நாங்கள் ஏன் இந்தப்படத்தை
தேர்வு செய்தோம், இந்தப் படத்தினுடைய தன்மை என்ன, இதில் என்ன
சொல்ல வந்திருக்கின்றார்கள், இதனால்தான் இந்தப் படத்தைத்
தேர்வு செய்திருக்கின்றோம் என்பதை எல்லாம் தயவு செய்து
ஸ்டேட்மெண்டில் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால்தான்
மக்களுக்கும் புரியும். சிவகாசியை ஏன் தேர்வு செய்தோம்
என்பதைச் சொல்ல வேண்டும் இல்லையா. சொன்னால் மக்களுக்குத்
தெரிந்து விடும் இல்லையா. மக்கள் கேள்வி கேட்பார்கள் இல்லையா,
இதை ஏன் இந்தியப்படம் என்று அடையாளம் காட்டுகின்றீர்கள் என்று
கேட்பார்கள் இல்லையா. அந்த மாதிரி மாற்றங்கள் தேவை.
விருது
வழங்குவதிலும் இதே குழறுபடிதான். 16 பேரில் தமிழ்நாட்டில்
இருந்து இரண்டு பேர் - அதிலும் ஒருவர்தான் வருகின்றார்.
இன்னொருவர் வரமாட்டேன் என்கின்றார். ஆர்க்யூ பண்ணால் தான்
விருது என்றால் அது என்ன விருது? மொழி எதற்கு அதற்கு?
உணர்வுதானே முக்கியம். அப்பா என்பது ஹிந்திக்கு வேறு அப்பா,
தமிழ் நாட்டிற்கு வேறு அப்பாவா? இல்லையே. தவமாய் தவமிருந்து
படத்திற்கு எந்த விதமான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. சிறந்த
படம், சிறந்த இயக்கம் எதற்குமே. ஏன்? சிறந்த படத்திற்கான
அடையாளமாக என்ன வைத்திருக்கின்றார்கள் என்பது புரியவில்லை.
இதெல்லாம் வேண்டாம் என்று வெளியில் போகாமால் உள்ளுக்குள்ளேயே
போராட வேண்டி இருக்கின்றது.
விருதுகளில்
பாலிடிக்ஸ் இருக்கின்றது. எல்லோருக்கும் வேண்டியவர்கள்
வேண்டாதவர்கள், பிடித்த படம், பிடிக்காத படம், இவர் ஏற்கனவே
நமக்கு விஷ் பண்ணி இருக்கின்றார், இவர் நம்மை அன்று பார்த்து
பேசாமல் போய் விட்டார் - இதெல்லாமும் கணக்கிலெடுத்துக்
கொள்ளப்படுகிறது. தவிர, வியாபாரமும் புகுந்துவிட்டது. ஒரு
விருது வழங்கும் விழாவை சூட் செய்து அப்படியே சேனலில்
போடுகின்றார்கள். அதற்கு அவர்களுக்கு நிறையப் பணம்
கிடைக்கின்றது. அப்பொழுது அந்த சேனல்காரர்கள், 'என்ன ஸார் ஒரே
படத்திற்கு எல்லா விருதுகளையும் கொடுத்தீர்கள் என்றால்
ஆர்ட்டிஸ்ட் நிறைய பேர் விழாவிற்கு வர மாட்டார்கள். விருதைக்
கலந்து கொடுங்கள், ஒரு படத்திற்கு டைரக்டருக்குக் கொடுங்கள்,
ஒரு படத்திற்கு ஆர்ட்டிஸ்டுக்குக் கொடுங்கள். அப்பொழுதுதான்
நிறையப் பேர் வருவார்கள், ஃபங்சன் சுவாரஸ்யமாக இருக்கும்.
ஸ்பான்சர் நிறைய கிடைக்கும்' என்று வியாபாரம் செய்கிறார்கள்.
அதனால் ஒரிஜினலாக திறமை உள்ளவன் காணாமல் போய் விடுகின்றான்.
அந்த படத்திற்கு ஹீரோவிற்குக் கொடுத்தாகி விட்டது, அதனால்
டைரக்டருக்கு வேண்டாம் என்றால் உழைப்பு என்ன ஆவது? எனக்கு
விருதே வேண்டாம். மக்கள் கைத்தட்டினார்களா அது போதும்
என்றுதான் தோன்றுகிறது.
?கேள்வி:
பிறகு இன்னொரு விஷயம் ஸார், உலகத்தில் எங்கேயுமே சக
இனத்தை சேர்ந்தவர்களுடைய போராட்டம் அங்கீகரிக்கபடாமல்
இருக்காது. ஈழத்தமிழர் போராட்டத்திற்கு நம் சமூகமே சரியாக
இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை. தமிழ் சினிமாவில் அதை
எடுப்பதற்கு எதாவது முன்னேற்பாடுகள் இருக்கின்றதா?
சேரன்:
கண்டிப்பாக கண்டிப்பாக, என் இனத்துடைய உணர்வு அது, உரிமை அது.
என் இனத்துடைய குமுறல் அது. அதை சினிமாவுக்குள் தகுந்த சமயம்
பார்த்துக் கொண்டு வரவேண்டும். ஆனால் என்னுடைய மக்களுடைய
வாழ்க்கையை வியாபாரமாக்குவதற்காகப் படம் எடுக்க விரும்பவில்லை.
உணர்வாக சொல்ல வேண்டும் என்று விருப்பப்படுகின்றேன்.
*****