கமலோடு
நடிப்பதென்றால் பல நடிகர்கள் அதைப் பெரும் பாக்கியமாகவே
கருதுவார்கள். அதுவும் கமல் பத்து அவதாரங்களில் நடிக்கும்
தசாவதாரத்தில் நடிப்பதென்றால்? டிஷ்யூம் மற்றும்
அற்புதத்தீவில் கலக்கியுள்ள குள்ள நடிகர் ஃபரூக்கிற்கும்
கமலுடன் நடிக்க ஆசை ஏற்பட்டதில் வியப்பில்லை. அவர் தனது ஆவலை
டைரக்டர் ரவிகுமாரிடம் தெரிவிக்க அவரும் ஏதாவது சின்ன
வேடத்தில் ஃபரூக்கைப் புகுத்த முயற்சி செய்கிறாராம். இது
நடந்தால் கமலுக்கு இன்னொரு அபூர்வ சகோதரர்.
***
டைரக்டர்
வசந்தபாலனின் வெயில் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில்
கலந்துகொண்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்பது உங்களுக்குத்
தெரிந்திருக்கும். இது படங்களுக்கான போட்டிப் பிரிவில் கலந்து
கொள்ளாவிட்டாலும் அங்கு திரையிடப்படுவதே பெரிய பெருமை.
இப்போது 'வெயில்' ஷாங்காய் திரைப்பட விழாவில் போட்டியிடுகிறது.
இந்தப் படம் ஆசியாவிலிருந்து வந்துள்ள புதுமுக
டைரக்டர்களுக்கான பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது
தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை. இந்தப் பட்டத்தை வெல்ல
வசந்தபாலனுக்கு நம் வாழ்த்துக்கள்.
***
தமிழ்த்
திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பவர் பூபதி
பாண்டியன். அவரது 'தேவதையைக் கண்டேன்', மற்றும் 'திருவிளையாடல்
ஆரம்பம்' குறைந்த செலவில் எடுக்கப்பட்ட வெற்றிப் படங்கள்.
ஆவர் இப்போது எடுக்கும் மலைக்கோட்டை படத்திற்கு பட்ஜெட்டைப்
பற்றிக் கவலைப்படாமல் சற்று தாராளமாகவே செலவழிக்கச்
சொல்லியிருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். அதனால் டைரக்டரும்
கதாநாயகன் விஷால் முதலில் தோன்றும் ஆரம்பக் காட்சியையே
பிரம்மாண்டமாக எடுத்துக் கலக்கியிருக்கிறாரம். இந்தக்
காட்சியை எடுக்க ஏழு நாட்களும் 50 லட்சமும் செலவாயிற்றாம்.
***
12-B
புகழ் நடிகர் ஷாம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.
பாங்காக்கில் 'Go
Island’ல்
டைரக்டர் அதியமானின் 'தூண்டில்' படத்திற்கான
படப்பிடிப்பின்போது நடந்த நிகழ்ச்சி.
Jet Ski
படகில் கடலிலிருந்து கரைக்கு வேகமாக வரும் காட்சி. இந்தக்
காட்சிக்காக சதிஷ் என்பவரோடு ஒத்திகை பார்த்துக்
கொண்டிருக்கையில் ஒரு பாறையில் படகு மோத அந்த வேகத்தில் சதீஷ்,
மற்றும் ஷாம் இருவருமே படகிலிருந்து கடலில் விழ, தனக்குத்
தெரிந்த கொஞ்ச நஞ்ச நீச்சலைக் கொண்டு ஷாம் ஒருவாறு
சமாளித்தார். மறுபுறம் சதீஷ் கடலில் தத்தளிக்க அருகிலிருந்த
சில சீனர்கள்தான் அவர்களைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு
சேர்த்தார்களாம். பின்னர் கேள்விப்பட்ட செய்தி, படப்பிடிப்பு
நடந்த இடம் மிகவும் அபாயகரமானதாம், ஷாமும் சதீஷும் பிழைத்து
மீண்டதே அதிசயமாம்!
***
திரைப்படங்களில் வில்லனாக நடிக்கும் மன்சூர் அலிகான் "என்னைப்
பார் யோகம் வரும்" என்று ஒரு படம் தயாரித்திருக்கிறார். ஆனால்
அவருக்கு ஏனோ யோகம் வரவில்லை. படத்தை வெளியிடுவதற்கு
தியேட்டர் கிடைக்கவில்லை. நொந்துபோன மன்சூர் ஒரு புதுமையான
விளம்பரத்தைப் பத்திரிகைகளில் கொடுத்திருக்கிறார். "தியேட்டர்
கிடைக்கலையோ தியேட்டர், நல்ல ஏ.சி. தியேட்டர் கிடைக்குமா
தியேட்டர்' என்று ஏலம் போடும் அளவுக்கு. பெரிய பேனர் என்றால்
சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கும் தியேட்டர்
சொந்தக்காரர்கள் புதுத் தயாரிப்பளர்களைக்
கண்டுகொள்ளாமலிருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம். இந்த
விளம்பரத்தைப் பார்த்த பிறகாவது எந்தத் தியேட்டர்காரராவது
முன்வருகிறார்களா பார்க்கலாம்!
***
'சிவாஜி' படம்
ஒரு வழியாக ஜூன் 15ஆம் தேதி நிச்சயம் வெளிவந்து விடுமாம்.
இதற்கிடையில் சிவாஜி என்பது தமிழ்ப் பெயரா? வரிவிலக்கு
அளிக்க முடியுமா? என்பதில் சின்னப் பிரச்சினை. பின்னர் 'சிவாஜி'
என்பது பெயர்ச்சொல்தான். அதனால் வரிவிலக்கு அளிக்கலாம் என்று
அரசு தீர்மானிக்க தயாரிப்பாளர் முகத்தில் ஒரு நிம்மதி.
*******