வன்முறைப்
படங்களையும், வக்கிரப் படங்களையும் திரையில் பார்த்து,
அலுத்துச் சலித்த தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மாறுதலான
படம் - சிரித்து ரசிப்பதற்காகவே எடுக்கப்பட்ட படம்.
வடிவேலுவை
இரட்டை வேடத்தில் கதாநாயகனாக வைத்துப் படம் எடுத்த
துணிச்சலுக்காகவே சங்கர், சிம்பு, தேவனைப் பாராட்டலாம்.
கதை என்று
பெரிதாக - ஏன் சிறிதாகக்கூட ஒன்றுமில்லை - இரட்டைவேடம் -
ஒருவன் வில்லன், மாமாவின் கைப்பாவையாக, சொல்புத்திக்காரனாக
சோழபுரத்தை ஆட்சி செய்கிறான். சகோதரன் சுயபுத்தி வேறு
இடத்தில் உக்கிர(உத்தம) புத்திரனாக வளர்ந்து சோழபுரத்தையும்
தனது அண்ணனையும் மாமாவின் பிடியிலிருந்து விடுவிப்பதுதான் கதை.
70 சதவிகிதம்
உத்தம புத்திரன், மீதி கட்டபொம்மன் மற்றும் தற்கால பாலிடிக்ஸ்
கலந்த கலவை.
இரண்டு
வேடங்களிலுமே வடிவேலு கலாய்க்கிறார் என்றாலும், மன்னன்
வேஷத்தில் போர் என்றாலே பயந்து நடுங்கும் எலிகேசியாக
ஜமாய்க்கிறார். கரடியே இவரது கோழைத்தனத்தைக் கண்டு காறித்
துப்புவதும், வல்லவராயன் படையெடுத்துவர நடு நடுங்கிப்
போர்வீரர்களுடன் வீரவசனம் பேசிவிட்டு வெள்ளைக்கொடியுடன்
எதிரியின் காலில் விழுந்து சரணாகதி அடையும் இடத்திலும், "சே,
இவனிடமா சண்டை செய்ய வந்தோம்!" என்று நொந்து நூடிலாகி
வல்லவராயன் திரும்பிப்போகிறார்.
ஜாதிச் சண்டைக்கென்று தனிக்
களம், அந்தப்புர இருபத்தினாலு மணிநேர சேவை, அக்காமாலா கப்சி
என்று பானங்களைத் தனது சுயலாபத்திற்காக அறிமுகம் செய்வது
என்று எல்லாக்கட்டத்திலும் வடிவேலு - வெடிவேலுதான்!. "எனது
கைகளை மட்டும் அவிழ்த்துவிடு. உன் காலில் விழுந்து
மன்னிப்புக் கேட்கிறேன்" என்று கெஞ்சும்போது நடிப்பில்
மிஞ்சுகிறார் வெடிவேலு!
உக்கிரபுத்திரனாக வரும் நேரத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சம்
என்றாலும் நடிப்பில் பஞ்சம் வைக்கவில்லை. சுத்தமான தமிழ்
உச்சரிப்பைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிக்சன்
துரையுடன் கட்டபொம்மன்-ஜாக்சன் துரை பாணியில் உரையாடுவது
வடிவேலு நகைச்சுவைப் பாத்திரத்தில் மட்டுமல்ல, சீரியஸ்
ரோலிலும் பரிமளிக்ககூடியவர் எனக் காட்டுகிறது.
நாசர்
வழக்கம்போல் அமர்க்களப்படுத்துகிறார். மனோரமா
வீணடிக்கப்பட்டிருக்கிறார். கதாநாயகிகள் இருக்கிறார்களாம் -
சொன்னார்கள்!
பாடல்களும், காட்சி அமைப்புக்களும் நம்மை கதை நடந்ததாகக்
கூறப்படும் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன.
கதை, வசனம்,
இயக்கம் - சிம்புதேவன் - அல்ல சிரிப்புதேவன்.
மொத்தத்தில்
இவன் இம்சை அரசனல்ல, நகைச்சுவை அரசன்!
*******