 |
இதழ் 335 |
 |
அக்டோபர் 22 2007
|

|
|
| |
 |
add nilacharal to your favourites |
 |
nilacharal as your homepage |
|
|
 | Home
>> | Cinema |
| திரை விமரிசனம் - கற்றது தமிழ்
- ஜன்பத் |
| | தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது கலைக் கல்வியைப் பாடமாகப் படித்தவர்கள் ரூபாய் 2000-க்கு ஏங்குவதை வலிமையாக வெளிப்படுத்தி சமூக ஏற்றத் தாழ்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
'ராம்' திரைப்படம் ஜீவாவை சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகர் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது. ராம் டைரக்ட் செய்திருக்கும் இந்தப் படத்திலும் இன்னுமொரு வெகு வித்தியாசமான பாத்திரம். பல கதாநாயகர்கள் நடிக்கத் தயங்கும் ரோல். ஆனால் துணிச்சலாக ஏற்று நடிப்பிலும் பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவா. ராமுக்கும் ஜீவாவிற்கும் ஏதோ ராசியிருக்கிறது.
தன்னிலை விளக்கமாக விரிகிறது திரைக்கதை. பிரபாகர் எனும் எம்.ஏ. தமிழ் படித்த இளைஞன். வாழ்க்கையில் இளமையிலிருந்து பல துயரங்களை, நெருங்கியவர்களது மரணங்களைச் சந்திக்கிறான். தான் கற்ற தமிழும் அவனுக்குச் சோறு போடவில்லை. ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்தான் தமிழ் படிப்பான் என்று அவனைக் கேவலமாகப் பார்க்கிறது. +2 முடித்ததும் மேலே தமிழ் படிக்க விரும்புவதாகச் சொல்லும்போது அவனது தோழி ஆனந்தி (அஞ்சலி), ''ஏன் மார்க் குறைச்சலா வாங்கிட்டியா?' என்று கேட்கிறாள். ஆறுகிலோ அரிசி + ஆறுகிலோ கோதுமையை அரைத்து வருவதுடன் அந்த மூன்று நாள் சமாச்சாரத்தையும் சேர்மனின் மனைவிக்கு வாங்கிக் கொடுத்தவுடன்தான் அவனுக்கு 2000 ரூபாயில் ஒரு வேலையே கிடைக்கிறது. இப்படி வாழ்க்கையில் பல துயரங்களை அனுபவித்த இளைஞனின் மன அழுத்தத்தை, பொங்கிவரும் சினத்தை வெளிப்படுத்துகிறது கதை. கடையில் சிகரெட் பிடித்ததற்காக போலிசாரல் கேவலப்படுத்தப்பட்ட அவனுக்கு தற்கொலை முயற்சியிலும் தோல்விதான். பின்னர் ஆரம்பிக்கிறது கொலைவெறி - பயணச்சீட்டு கொடுப்பவரிலிருந்து வரிசையாக!
இந்தப்படத்தில் அவ்வப்போது காணப்படும் சில நல்ல விஷயங்களை முதலில் சொல்லுவோம். பிரபாகருக்கும் அவனது அடுத்த வீட்டு ஆனந்திக்கும் இடையே உள்ள நட்பு யதார்த்தமாக படமாக்கப்பட்டிருப்பதில் ஒரு கவிதை தெரிகிறது.
'நெசமாத்தான் சொல்றியா?' என்ற வார்த்தையை வெவ்வேறு தருணங்களில் ஆனந்தி பிரயோகப்படுத்துவது தனி அழகு.
தகவல் தொழில் நுட்பம் படித்தவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது கலைக் கல்வியைப் பாடமாகப் படித்தவர்கள் ரூபாய் 2000-க்கு ஏங்குவதை வலிமையாக வெளிப்படுத்தி சமூக ஏற்றத் தாழ்வுகளை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இடத்தில் வசனங்களுக்கும், டைரக்டருக்கும், ஜீவாவிற்கும் சபாஷ் போடலாம். இதுதான் கதையின் மையக் கருத்தா என்றால் இல்லை. ஜீவா 22 கொலை செய்ததாகச் சொல்கிறார். ஏற்றத் தாழ்வினால் மனம் பாதிக்கப்பட்டதுதான் காரணம் என்றால் டிக்கெட் கொடுப்பவரையும், பீச்சில் காதலிப்பவர்களையும் ஏன் கொல்லவேண்டும்? 'டச் மீ இப் யூ டேர்' என்ற பனியன் போட்ட பெண்ணின்மீது கலாசார மாற்றத்தில் ஏற்பட்ட கோபம் வேறு.
ஒரு காதல் கதை, ஒரு தமிழ் படித்த இளைஞனின் சோகக் கதை, தன்னை அவமானப்படுத்திய போலிசைப் பழிவாங்கும் கதை, ஒரு மனச்சிதைவு பிடித்த மனிதனின் கதை என பல கதைகள். கடைசியில் கதாசிரியர், டைரக்டர் என்ன சொல்ல வருகிறார் என்பதே குழப்பமாக இருக்கிறது. பல விஷயங்களை ஒரே படத்தில் திணித்துவிட வேண்டுமென்ற ஆவலில் படம் திக்குத் திசையின்றி செல்கிறது. ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு தெளிவாகச் சொல்லியிருக்கலாம். படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை யாரும் சிரித்துவிடக்கூடாது என்பதுதான் டைரக்டரின் விருப்பம் போலிருக்கிறது. ஆனாலும் ஆனந்தி தன் அப்பா இறந்து கிடக்கும் பிணவறைக்கு வெளியே போடும் கூக்குரல் அளவுக்கு மிஞ்சும்போது நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. ஒளிப்பதிவு (என்.ஆர்.கதிர்) நயம் என்றால், பல இடங்களில் இசை (யுவன் சங்கர் ராஜா) அளிப்பது பயம். கஞ்சா அடித்து ஜீவா சாமியார்களுடன் அடிக்கும் கொட்டம் தாங்கலைடா சாமி!
வீடியோ காமிராமேனாக கருணாஸ் பரிமளித்திருக்கிறார். ஜீவா ஏன் தன் கதையைத் தானே சொல்லிப் படமெடுத்து அதைக் கொண்டு சன் டி.வியில் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ளுகிறார் என்பது டைரக்டருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
நிஜமாகவே சொல்வதென்றால் ஜீவா கற்றது தமிழ் நாம் பெற்றதோ தலைவலி
மேலும் பல..... |
|
|
|
|
Source: suratha.com
|
|