|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
|
|

இவ்வளவு அமர்க்களத்தோடும் ஆர்ப்பாட்டத்தோடும்,
எதிர்பார்ப்புகளோடும் எந்த ரஜினி படமும் - ஏன் எந்த இந்தியப்
படமுமே வந்ததில்லை.
இந்த பரபரப்பிற்குக் காரணம் முந்தைய ரஜினி படமான
சந்திரமுகியின் அமோக வெற்றி- திரையுலக ஜாம்பவான்களாக
விளங்கும் ரஜினி, சங்கர், ஏவி.எம் நிறுவனம், ரஹ்மான்
ஆகியோரின் கூட்டணி. பணத்தை பணம் என்றுபார்க்காமல் செலவழித்து
எடுக்கப்பட்ட படம்.
கதை என்னவென்று கடைசிவரை சஸ்பென்ஸிலேயே தயாரிப்பாளர்கள் -
வைத்திருந்த காரணம் படம் பார்த்த பிறகுதான் புரிந்தது -
கதையென்று ஒன்று இல்லாததுதான் என்று..!
பென்சில் கோடு போன்ற மெல்லிய கரு! அயல் நாட்டிலிருந்து இலவசக்
கல்வி, இலவச மருத்துவம் இந்திய மக்களுக்கு அளிக்க வேண்டும்
என்று பல கனவுகளோடு 250 கோடி ரூபாயை மூட்டையாகக் கட்டிக்
கொண்டுவரும் ஒரு இளைஞன்(?) பண முதலைகளாலும், லஞ்சம் வாங்கும்
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளாலும் பாதிக்கப்பட்டு
அனைத்தையும் இழக்கிறான். வில்லன் "இனிமேல் பிச்சை எடுத்துப்
பிழைத்துக் கொள்" என்று ஒரு ரூபாயைக் கொடுக்க அந்த ஒரு ரூபாயை
வைத்துக்கொண்டு அதிரடியாகக் கதாநாயகன் பழிவாங்குகிறான் என்பது
கதை.
ரஜினி படத்திற்கு கதையா முக்கியம்? ரஜினி - சங்கர்
காம்பினேஷனில் ரசிகர்கள் என்ன என்ன எதிர்பார்க்கிறார்களோ
அத்தனையையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள் . ரஜினி ஸ்டைல்
சங்கரின் பிரம்மாண்டம் எல்லாமே நம்மை கனவுலகுக்கு இழுத்துச்
சென்று பிரமிக்க வைக்கின்றன. சஹானா பாடல்
எடுக்கப்பட்டிருக்கும் கண்ணாடி மாளிகை, அதன் பின்னணியில்
நீர்வீழ்ச்சி, பூந்தோட்டம், ரஜினி, ஸ்ரேயாவின் உடைகள் (ஸ்ரேயாவுக்கு
மட்டும் ஏன் துக்குனூண்டு டிரெஸ்!) எல்லாமே கண்களுக்கு
விருந்து. பில்லா ரங்கா பாஷாதான், அதிரடிக்காரன் பாடல்கள்
படமாக்கப்பட்டிருக்கும் விதம் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக
உள்ளது. அரங்க அமைப்புகளுக்காக தோட்டா தரணிக்கு ஒரு 'ஓ'
போட்டே ஆகவேண்டும்.
முதல்பாதி காமெடியாகவும் பின் பகுதி அதிரடியாகவும்
சொல்லப்பட்டிருக்கிறது . காமெடியில் விவேக்கும் ரஜினியும்
கூட்டு சேர்ந்து கலக்குகிறார்கள். தேர்தல் கமிஷன்
அலுவலகர்களாக ஸ்ரேயாவின் வீட்டிற்குள்ளே சென்று ஸ்ரேயாவைப்
பாடவும் ஆடவும் சொல்வதும் ஸ்ரேயா 'ரா ரா 'பாட்டிற்கு அபிநயம்
பிடிக்கும்போது போலீஸ் லிவிங்ஸ்டன் கதவைத் தட்டி உள்ளே
நுழைந்து 'லகலகலக' என்பதும் சரியான கல கல. பட்டிமன்ற ராஜா (ஸ்ரேயாவின்
தந்தையாக நடிக்கும் பாக்கியம் பெற்றவர்) வீட்டுக்கு
எதிர்வீட்டில் இருந்து கொண்டு ராஜா குடும்பத்தினரை
வெறுப்பேற்றும் சாலமன் (ஜாலிமேன் ) பாப்பய்யாவை இனி வெள்ளித்
திரையிலும் அடிக்கடி காண வாய்ப்பிருக்கிறது. "ஏம்மா என்னைக்
கருப்பாப் பெத்தே?" என்று ரஜினி அம்மாவிடம் கேட்கும்போது "வெளுப்பாயிருந்தா
நீ அழுக்காயிடுவேன்னுதாண்டா "என்று வடிவுக்கரசி சொல்லும்போது
நரசிம்மராவ் கூடச் சிரித்து விடுவார்
முன்பாதிவரை பூவாக இருந்த ரஜினி பின் பாதியில் புயலாக மாறி
சிங்கமாக கர்ஜிக்கிறார். தன்னைப் பிச்சைக்கார நிலைமைக்குக்
கொண்டுவந்த வில்லன் சுமனையும் மற்ற லஞ்ச ஊழல்
பெருச்சாளிகளையும் கதிகலங்கவைத்து அதிரடியாகத் தன் லட்சியத்தை
நிறைவேற்றுகிறார்.
ஆனாலும் பெரும்புள்ளிகளின் ஆடிட்டர்களையும் டிரைவர்களையும்
வைத்து அவர்கள் ஒளித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை
வெளிக்கொண்டு வருவதாகக் காண்பிப்பது காதில் பூ
சுற்றுவதுபோலிருக்கிறது. இறந்துவிட்டதாகக் கருதப்படும் சிவாஜி
மொட்டை கெட்டப்பில் வந்து சிவாஜி சிலையைத் திறக்கும்போதும்
வில்லன் சுமனைப் பழிவாங்கும் காட்சியிலும் படு சுறு சுறுப்பு.
சண்டைக்காட்சிகளில் கனல் தெறிக்கிறது. வானத்தில் பறந்து
பறந்து புவியீர்ப்புசக்திகளின் எல்லாவிதிகளையும் தாண்டி ரஜினி
வில்லன்களைப் புரட்டுகிறார். இசைக்கருவிகள் கடையில் நடக்கும்
சண்டையில் பின்னணியாக எல்லா இசைக்கருவிகளையும் ஒலிக்க
வைத்திருப்பது ரஹ்மானின் சாமர்த்தியம். ரஹ்மானின் இசையில்
பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன என்றாலும் அந்தப்பாடல்கள்
எடுக்கப்பட்ட விதத்தினால் அவை மேலும் மெருகேறுகின்றன. காதல்
காட்சிகள் ஒன்ற முடியாமலிருக்கின்றன. சிங்கத்துக்கு வயசு
தெரிவதை மறுக்க முடியாது.
சூயிங்கம்மை ஸ்டைலாக வாயில் தூக்கிப்போட்டுக் கொள்வதும் ஒரு
ரூபாயை சுற்றி சுழட்டுவதும் இந்தப் படத்தில் ரஜினியின்
ஸ்பெஷல் ஸ்டைல். 'சும்மா அதிருதுல்ல' என்று பன்ச் டயலாக்
விடும்போது தியேட்டர் அதிருகிறது.ரஜினி வாங்கிய
சம்பளத்துக்குக் குறைவில்லாமல் உழைத்திருக்கிறார்.
ஸ்ரேயாவுக்குக் கவர்ச்சி உடையில் வந்து போவதைத் தவிர பெரிய
வேலையெல்லாமில்லை. வைகைப்புயலால் கரை ஒதுங்கியிருந்த
விவேக்கிற்கு இந்தப்படம் ஒரு திருப்புமுனை. வெள்ளைவேஷ்டி
வெள்ளை சட்டையில் வந்து மெதுவாகப் பேசியே கழுத்தை அறுக்கிறார்
சுமன் - சரியான வில்லத்தனம். சுமன் இறக்கும்போது ரஜினி அவர்
கொடுத்த ஒரு ரூபாயை மொட்டை மாடியிலிருந்து வீச அது 'பச்சக்'
என்று சுமனின் நெற்றியில் ஒட்டிக்கொள்வது ரஜினியால் மட்டுமே
முடியும் அதிசயம்.
கே.வி ஆனந்தின் ஒளிப்பதிவு, சுஜாதாவின் வசனங்கள் எல்லாமே
படத்துக்கு சிறப்பு சேர்க்கின்றன. இத்தனை நாள் ஆவலுடன்
காத்திருந்த ரசிகர்களைச் சற்றும் ஏமாற்றவில்லை சிவாஜி -
தமிழ்த் திரைப்பட சகாப்தத்தில் மிகச் சிறந்த பொழுதுபோக்குப்
படங்களில் ஒன்றாக இதனைக் கண்டிப்பாகக் கருதலாம்.
ஆனால் ஒரு நடுநிலை திரை ஆர்வலராகப் பார்த்தால், சங்கருக்கு
லஞ்ச லாவண்யத்தை விட்டால் வேறு சப்ஜெக்டே கிடைப்பதில்லையா
என்ற கேள்வியையும், ரஜினிக்கு ஃபார்முலாவை விட்டு வெளியே வர
விருப்பமே இல்லையா என்ற அலுப்பையும் தவிர்க்கமுடியவில்லை.
பின் குறிப்பு: அமெரிக்காவாகட்டும் ஆண்டிபட்டியாகட்டும்
ரஜினிக்கு ஏகோபித்த ரசிகர்களுண்டு என்பதை அமெரிக்காவில்
இந்தப்படத்தைக் காண நேரிட்டபோது அறிய நேரிட்டது. தியேட்டரில்
எழுந்த விசில் சத்தமும் கூச்சலும் 'அகிலமெல்லாம் சென்றாலும்
நம் மக்கள் நம் மக்களே' என்பதைப் பறை சாற்றியது. பலர் சிவாஜி
டி ஷர்ட் அணிந்து தங்களது ரஜினி பக்தியை வெளிப்படுத்தினார்கள்.
ஐ டாஹோ என்னும் இடத்தில் முதல் காட்சியில் வந்திருந்த
அனைவருக்கும் சர்க்கரைப்பொங்கல் வழங்கினார்களாம் . இது எப்டி
இருக்கு?
******* |
|
|
|
|
New Page 1
|
|
மேலும்
பல.....
|
|
|
|
|
Tamil magazine Tamil news,poem,story,movie & song reviews
|
Best viewed @ 1024x768
resolution |
|
tamil magazines,
Hindu devotional songs,
tamil links,
tamil movies,
tamil songs,
tamil dvd,
tamil news,
tamil,
tamil comedy,
tamil movie,
tamil music DVDs,
bharatanatyam,
Yoga DVDs,
carnatic music,
tamil cinema,
sivaji movie,
cricket world cup,
tamil ebooks,
web design,
web design resources
|
|
Privacy Policy|Terms of use|Disclaimer|
Copyright Nilacharal Ltd - All Rights Reserved Worldwide | |
|