ஸயின்ஸ் ஃபிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைக் கதையான 'ஸ்டார்
வார்ஸ்' வெளிவந்த காலம் தொட்டு இப்போதும் பல சேனல்களில்
சக்கைப் போடு போட்டு வரும் விஷயம் அனைவரும் அறிந்ததே! இந்த
விண்வெளித் தொடரின் ரசிகர்கள் மனம் குளிரும் புதிய செய்தி
ஒன்று இப்போது வந்திருக்கிறது! ஸ்டார் வார்ஸை எழுதிய ஜார்ஜ்
லூகாஸ் புதிய 100 எபிசோடுகள் கொண்ட தொடரை எழுத
ஒப்புக்கொண்டுள்ளார். தயாரிப்பாளரான ரிக் மக்கெல்லம் உற்சாகம்
ததும்ப, "இது உண்மை தான்; ஜார்ஜ் லூகாஸ் ஒரு மணி நேரம் கொண்ட
நூறு எபிசோடுகளை எழுத இருக்கிறார்; 2007ல் இது ஆரம்பிக்கும்"
என்று உறுதிபடுத்தியுள்ளார். இந்தத் தொடர் பல வருட காலம்
ஓடும் என்று இப்போதே சின்னத்திரை விமரிசகர்களும், விண்வெளி
ஆர்வலர்களும், அறிவியல் புனைக்கதை ரசிகர்களும் கட்டியம் கூறி
விட்டனர். இந்த நூறு எபிசோடுகளுக்கான கதைக் களம் 'Revenge
of the Syth'
மற்றும்
A New Hope
என்ற இரு ஸ்டார் வார்ஸ் திரைப்படங்களில் வரும் இடைவெளியான 19
ஆண்டுகளில் நடந்தவற்றைக் கூறும். இதில் முக்கிய
கதாபாத்திரங்களுக்கு அவ்வளவாக இடமில்லாமல் காலக்ஸியில் உள்ள
துணைக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்.
ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்!
1966ம் ண்டு ஸ்டார் ட்ரெக் என்ற புதிய தொலைக்காட்சித் தொடர்
ஒன்று ஆரம்பமானது. நட்சத்திரத் தொகுதிகளுக்கு ஒளியை விட
வேகமாகப் பயணம் செய்யும் ஸ்டார்ஷிப்பில் - நட்சத்திரக்
கப்பலில்- பயணம் செய்யும் சாகஸ வீரர்களைப் பற்றிய தொடர்
நிகழ்ச்சி இது. ஓரிரு வாரங்கள் ஒளிபரப்பிவிட்டுத்
தொலைக்காட்சி நேயர்கள் இதை விரும்புகிறார்களா என்று
பார்ப்போம்; விரும்பினால் தொடரலாம், விரும்பா விட்டால்
நிறுத்தி விடலாம் என்ற துணிகர முயற்சியில் ஜீன் ரோடன்பெர்ரி
இதை ஆரம்பித்தார்.
என்ன ஆச்சரியம், அவரே எதிர்பார்க்காத அளவு மக்கள் வெள்ளம்
இதைப் பார்க்கக் குழுமியது; முந்தியது. அன்று ஆரம்பித்த தொடர்
இன்று வரை உலகில் உள்ள பெரியவர் முதல் குழந்தைகள் வரை
அனைவரையும் நாற்காலியை விட்டு அசையாமல் கட்டிப் போட்டு
விட்டது!
காலக்ஸிகளுக்கு - நட்சத்திர மண்டலங்களுக்கு - இடையே பயணம்
எப்படி சாத்தியமாகும்? இதைப் பற்றி நன்கு ஆராய்ந்த
ரொடன்பெர்ரி 'வார்ப் ட்ரைவ்' (Warp
Drive)
என்ற ஒரு கருத்தைப் பயன்படுத்தினார்.
வார்ப் ட்ரைவ் என்றால் என்ன?
நட்சத்திரக் கலத்தைச் சுற்றி இருக்கும் வெளி (Space)
வளைந்து கொடுத்து வெகு சீக்கிரத்தில் போக வேண்டிய நட்சத்திரத்
தொகுதிக்குக் கலம் செல்ல வழி வகுக்கும்! இந்தக் கலத்திற்கு
எண்டர்பிரைஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. லட்சக்கணக்கான
ஸ்டார் ட்ரெக் விசிறிகள், நாஸா விண்ணில் அனுப்ப இருந்த
கலத்திற்கு எண்டர்பிரைஸ் என்ற பெயரையே சூட்ட வேண்டும் என்று
வற்புறுத்தினர்! நேயர்கள் விருப்பம் வென்றது!!நாஸா விண்ணில்
அனுப்பிய கலத்திற்கு எண்டர்பிரைஸ் என்றே பெயர் சூட்டப்பட்டது!
இந்த 'வார்ப் ட்ரைவ்' என்ற கருத்தை அந்தக் கால ஆயிரத்துத்
தொள்ளாயிரத்து அறுபதுகளில் இருந்த விஞ்ஞானிகள் அதீதமான கற்பனை
என்று எண்ணிப் புன்னகை புரிந்தார்கள். ஆனால் வெல்ஷ்
விஞ்ஞானியான மிகுவல் அல்குபியர் (Miguel
Alcubierre),
இதைப் பற்றி ஆராய்ந்து கடந்த காலத்திற்குப் பயணம் செய்வது
சாத்தியமான விஷயம் தான் என்று பூடகமாக அறிவித்தார்.
ஸ்டார் ட்ரெக் நிகழ்ச்சிகள் இருபத்தி மூன்றாம் நூற்றாண்டில்
நடக்கும் நிகழ்ச்சிகளாகச் சித்தரிக்கப்பட்டவை.அதில் ஸ்டார்
ட்ரெக்
IV தி
வாயேஜ் ஹோம் (The
Voyage Home)
என்ற படத்தில் இருபதாம் நூற்றாண்டிற்கு வந்து அரிய வகைத்
திமிங்கிலங்களை எடுத்துக் கொண்டு இருபத்தி மூன்றாம்
நூற்றாண்டிற்குச் சென்று பூமியைப் பாதுகாப்பதாக ஒரு கதை
ஒளிபரப்பப்பட்டது. உலகெங்கும் உள்ள மக்கள் இதைப் பெரிதும்
விரும்பிப் பார்த்தனர்.
ஆக, விஞ்ஞான ஒளிபரப்பு முதலில் ஆரம்பிக்கப் பட்ட போது முகம்
சுளித்தவர்கள்
கூட பின்னால் அது கொள்கை அளவில் சாத்தியமே என்பதை அறிந்து
வியந்தனர்.
இந்த ஸ்டார் வார்ஸ் தொடருக்குப் பின்னால் ஏராளமான செய்திகள்
உள்ளன; அவற்றைப் பின்னால் பார்ப்போம்.
தொடர் மீண்டும் வரப்போகிறது; இந்த ஆண்டில் ஆரம்பிக்க
இருக்கிறது என்பது உலகச் சின்னத்திரை தொழிலுக்கே ஒரு நல்ல
செய்தி என்பதில் ஐயமில்லை!
*******