அலுவலக வேலையையோ அல்லது வீட்டு வேலையையோ தொடர்ந்து செய்து
செய்து வாழ்க்கையே அலுத்துப் போனவர், சதா சிடுமூஞ்சியாக
இருப்பவர், வாழ்வின் மென்மையான அம்சங்களை ஒரு போதும்
ரசித்திராதவர் என்று இந்த வகையில் உங்களுக்குத் தெரிந்தவர்கள்
யாரேனும் இருந்தால் அவர்களுக்கு நீங்கள் ஒரு உதவியைச் செய்ய
முடியும். போகோ சேனலில் தவறாமல் அவ்வப்பொழுது ஒளிபரப்பாகும்
Just
For Laughs,
Gags
நிகழ்ச்சியை அவர்கள் பார்க்குமாறு தூண்டுங்கள். வாழ்க்கையின்
விநோதமான மெல்லிய பரிமாணத்தை உணர்வதன் மூலம் அவர்கள்
புத்துணர்ச்சி பெறுவர்.
தம்மை மறந்து புன்முறுவல் பூக்கச் செய்யும் இந்த நிகழ்ச்சியை
125 நாடுகளில் உள்ளோர் தவறாமல் பார்க்கின்றனர். ஜாதி, மத, இன,
மொழி, பால், அந்தஸ்து பேதமற்றது என்பதோடு பண்பாடுகளுக்கும்
அப்பாற்பட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை இது பெறுகிறது! இதில்
டயலாக் கிடையாது. ஆகவே மொழிபெயர்ப்பிற்கான அவசியம் இல்லை
என்பதால் அனைத்து நாடுகளிலும் உடனடி அங்கீகாரம் இதற்குக் கிடைத்து விட்டது. அருமையான பின்னணி இசை ஒலிக்கும்;
நிகழ்ச்சி நடக்கும்;
நம் முகத்தில் மென்னகை தவழும்! தேர்ந்தெடுக்கப்பட்ட சில
ஒலிகள் மட்டும் அவ்வப்பொழுது தேவையென்றால்
சேர்க்கப்பட்டிருக்கும்! கள்ளங்கபடமற்ற மனிதரிடம் அல்லது
அப்பாவியாகச் செல்லும் மனிதரிடம் சில திடீர் சேஷ்டைகளும்,
கொனஷ்டைகளும் செய்யப்பட்டால் அப்போது என்ன நடக்கும் என்பதைக்
காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சிதான் இது!
இது ஒரு ரியாலிடி ஷோ! காமரா கண்ணுக்குத் தெரியாத இடத்தில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்க நிகழ்ச்சிகள் அனைத்தும் படமாகும்.
வீட்டில் நம் பையன் திடீரென ஒரு பாம்பை நம் கழுத்தில் போட
நாம் அலற அவனே அது ரப்பர் பாம்பு என்பதைக் காண்பிக்க சிரித்து
'வழிகிறோம்' இல்லையா, அது போலத் தான் வித விதமான நிகழ்ச்சிகள்
இருக்கும்.
உதாரணத்திற்குச் சில காட்சிகளைக் காணலாம். (20-4-07
போகோவில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகள் 1 முதல் 6 வரை உள்ளன;
மற்றவை முன்னால் ஒளிபரப்பப்பட்டவை)
1) இரண்டு கறுப்புக் கண்ணாடி மற்றும் கறுப்பு உடை அணிந்த
குண்டர்கள் குறுகலான வழியில் இரு பக்கத்திலிருந்தும் வந்து
பாதையில் செல்வோரை நெருக்க அவர்கள் படாத பாடுபடுகின்றனர்.
ஒருவர் சடாரென்று குனிந்து குண்டரின் கால் வழியே
தப்பிக்கிறார்!
2) வழியில் போவோர் மீது ரப்பர் ஹோஸின் மூலம் திடீரென்று
தண்ணீர் பீச்சப்பட அவர்கள் படும் பாடு இன்னொரு நிகழ்ச்சி!
3) ஒரு கடல் நண்டு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் நெளிகிறது. அதை
ரோடு ஓரமாக வந்து நிற்கும் காரின் உரிமையாளரிடம் காண்பிக்க
அவர் திகைக்கிறார். திடீரென்று திரும்பி அந்த பிளாஸ்டிக்
டப்பாவை காத்திருக்கும் இன்னொருவர் கொண்டு வந்த டப்பாவில்
வைத்துவிட்டு வேறோரு புதிய டப்பாவை எடுத்து காருக்குள் "தவறிப்"
போட்டு விடுகிறார் நிகழ்ச்சியாளர். காரில் உள்ளவரின்
ரியாக்க்ஷன் எப்படி இருக்கும்? சிலர் வேகமாகக் கதவைத் திறந்து
கொண்டு வெளியே ஓடி வருகின்றனர். சிலர் அலறுகின்றனர். ஒருவர்
அதை வெளியில் வேகமாக எறிகிறார்! கடைசியில் கேமராவைக்
காண்பிப்பதோடு, முதலில் காண்பித்த நண்டு உண்மையானதென்றாலும்
உள்ளே போடப்பட்டது போலி என்பதை நிகழ்ச்சியாளர் விளக்கும் போது
அனைவர் முகத்திலும் ஒரே "சிரிப்போ சிரிப்பு"!
4) ஒரு வீட்டில் எஜமானி வீட்டினுள்ளே டெலிவரி பாய் சாமான்களை
எடுத்து வர நுழைகையில் திடீரென்று ஆமை போன்ற குட்டி மிருகம்
சர சரவென்று வட்டமடித்து ஓடுகிறது. போதாக்குறைக்கு மேலிருந்து
அதே வகைகள் விழுகின்றன. எஜமானியம்மாள் அலறி அடித்துக்கொண்டு
வீட்டிற்குள்ளே போக டெலிவரி பாய் கெஞ்சினாலும் கதவைத் திறக்க
மாட்டேன் என்கிறார்.
5) ஆம்புலன்ஸ் வண்டிக்காரர் ஸ்ட்ரெட்சரில் படுத்திருக்கும்
பேஷண்டை ஒரு நிமிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி தொங்கிக்
கொண்டிருக்கும் சலைன் பாட்டிலை வழியில் வந்தவரிடம் கொடுக்க
அவரும் பொது நல சேவையாக அதைப் பிடிக்க, ஆம்புலன்ஸ்காரர்
வண்டியருகே செல்லும் போது திடீரென்று ஸ்ட்ரெட்சர் மடங்கித்
தாழுகிறது. பேஷண்ட் கீழே போக பாதுகாப்பவர்
விதிர்விதிர்க்கிறார். காமராவைக் காண்பித்தவுடன் ஒரே
மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி ஏன், வேடிக்கை விநோத நிகழ்ச்சி
என்பதாலா, அல்லது நிஜமாக பேஷண்ட் ஒருவரை கீழே போட்டுவிட்ட
பயங்கரமான செயலைத் தான் செய்யவில்லை என்ற நிம்மதியினாலா,
யோசித்துப் பார்க்க வேண்டிய மனித மனம் சம்பந்தப்பட்ட
நுட்பமான விஷயம்!!
போஸ்ட் பாக்ஸில் லெட்டரைப் போட்டால் லெட்டர்களை எடுக்கும்
கதவு வழியே ஒரு மனிதர் வருகிறார், எப்படி இருக்கும்?
டெலிபோனில் பேசப் போனவர் ரிஸீவரை கையில் எடுக்க அது
திடீரென்று கீழே போகிறது.
திடீரென்று ஒரு போலீஸ்காரர் நம்மை மட்டும் நிறுத்தி விட்டு
மற்றவர் அனைவரையும் போகச் சொன்னால் நமக்கு எப்படி இருக்கும்?
நம் கண் முன் எதிரிலேயே ஒரு போலீஸ்காரர் யாரோ ஒருவரை அடித்து
விட்டு அவர் கீழே விழ அவரை அருகிலுள்ள புதருக்குள் தரதரவென்று
இழுத்துக் கொண்டு போகிறார். சீரியஸான இந்த விஷயத்தில்
அனைவருக்கும் கோபம் தானே வரும்!
இப்படி எண்ணற்ற நிகழ்ச்சிகள். சிரித்துச் சிரித்து மகிழலாம்.
யாருக்கும் தீங்கு பயக்காத, எளிய, அருவருப்பில்லாத, பாசமற்ற,
இரட்டை அர்த்தங்கள் கொண்ட டயலாக் இல்லாத, பால் உணர்ச்சி
வக்கிரம் இல்லாத நல்ல குட்டிக் குட்டி நிகழ்ச்சிகள்!
சீண்டல்கள் பல;
இதில் கொஞ்சம் பேர் சிணுங்குவர்;
கொஞ்சம் பேர் சீறுவர்! ஆனால்
Just For
Laughs
என்று தெரிந்த உடனேயே அனைவருக்கும் ஒரு பரவசம்! அந்த
ஆனந்தத்தை இந்தத் தொடரில் பார்த்து அனுபவிக்கலாம்! கனடாவின்
நம்பர் ஒன் சீரியல் இது; இங்கிலாந்தில் ஐந்தாவது பெரிய
என்டெர்டெயின்மெண்ட் நிகழ்ச்சி என்ற புகழைப் பெற்றது இது!
கனடாவிலேயே கட்டுப்பாடான சூழலில் படமாக்கப்பட்ட இந்த
நிகழ்ச்சிகள் பின்னால் இங்கிலாந்திலும் மெக்ஸிகோவிலும் கூட
படமாக்கப்பட்டன. இதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிதான்
Just For
Kidding.
ஆனால் இதில் ஒரு மிருக காட்சி சாலையில் தப்பி வந்த (போலி)
கொரில்லா பார்வையாளர்களிடையே பாய்வது போன்ற சற்று அதிரடி
காமெடி நிகழ்வுகள் உண்டு.
வருடத்திற்கு ஒரு முறை 'Just
For Laughs'
நிறுவனம் காமெடி திருவிழா ஒன்றை நடத்தி வருகிறது. இதில் காமெடி
கலைஞர்கள் அனைவரும் தத்தம் திறமையைக் காண்பிப்பர். 2006ல்
மாண்ட்ரீயாலில் நடந்த நிகழ்ச்சிக்கு 20 லட்சம் பேர் போஷகர்கள்.
இதன் பட்ஜட் 335லட்சம் டாலர்கள். 400 இன்டோர் நிகழ்ச்சிகள்;
1200 வெளிப்புற நிகழ்ச்சிகள். நகரின் 24 இடங்களில் இது
நடைபெற்றது. 2007ல் ஜூலை மாதம் 12 முதல் 22ம் தேதி வரை இந்த
திருவிழா நடைபெற இருக்கிறது.
என்ன, நாம் பெருமூச்சு விட வேண்டியது தான் என்கிறீர்களா?
பாசமில்லாத அருமையான நகைச்சுவையைத் தர நம் நாட்டில் கலைஞர்கள்
ஏராளம்! பொது மக்கள் கனடா பாணி நிகழ்ச்சியை வரவேற்றால் புதிய
தொலைக்காட்சி தொடர் நமக்கு நிச்சயம் கிடைக்கும்; புதிய
கலைஞர்களும் கிடைப்பார்கள்!
உலகின் நேர்மையான யதார்த்த நிகழ்ச்சி என்ற பெயரைப் பெற்றுள்ள
(Honest
Reality Show)
இது போன்ற நிகழ்ச்சிகள் இதே தரத்தில் தமிழ்நாட்டிற்கு
உடனடியாகத் தேவையாக இருக்கிறது என்பதில் ஒருமித்த கருத்தே
இருக்க முடியும்!
பார்ப்பதற்கு நாம் ரெடி, தரமாக எடுப்பதற்கு.. .. ..?
*******