அனாடமிக் தெரபி (3)

வாந்தியைக் குணமாக்குவது எப்படி?

நமக்கு எப்பொழுதாவது ஒரு முறைதான் வாந்தி வருகிறது. தினமும் வருவது கிடையாது. வாந்தி எப்பொழுது வருகிறது எனச் சற்று யோசித்துப் பாருங்கள். நாம் ஏதாவது கெட்டுப்போன பொருட்களைச் சாப்பிட்டால் வரும்; அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வரும்; பசி இல்லாமல் சாப்பிட்டால் வரும்; உடல்நிலை சரியில்லாதபொழுது சாப்பிட்டால் வரும்.

கெட்டுப்போன ஓர் உணவை ஹோட்டலில் சூடுபடுத்திக் கொடுக்கும்பொழுது நாம் தெரியாமல் சாப்பிட்டு விடுகிறோம். ஆனால், நம் வயிற்றுக்கு என ஓர் அறிவு உள்ளது. ஓர் உணவு வயிற்றுக்குள் சென்றவுடன் நல்ல உணவாக இருந்தால் மட்டுமே அது ஜீரணம் செய்யும். கெட்டுப்போன உணவுகளை ஜீரணம் செய்யாது. நம் வயிற்றுக்கு உள்ள அறிவு நாம் சாப்பிட்ட உணவை நல்லதா கெட்டதா என ஆராய்ச்சி செய்யும். நல்ல உணவாக இருந்தால் ஜீரணச் சுரப்பிகளைச் சுரக்க வைக்கும். கெட்டுப்போன உணவாக இருந்தால் வாந்தி எடுப்பதற்கு என உள்ள சுரப்பிகளைச் சுரக்கச் செய்யும்.

உணவை நாம் பற்களால் நன்றாக அரைக்காமல் குண்டு குண்டாகச் சாப்பிட்டிருப்போம். வாந்தி எடுப்பதற்காக அந்த உணவைத் துண்டு துண்டாக்கிச் சிறிதுபடுத்தும் நம் வயிறு. மேலும், வயிற்றில் நீரை அதிகரிக்கும். நாம் இரவு சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருப்போம். ஆனால் வாந்தி வரும்பொழுது பாருங்கள், அதில் ஐந்து டம்ளர் தண்ணீர் இருக்கும். இந்த நான்கு டம்ளர் தண்ணீர் எங்கிருந்து வந்தது? நம் வயிறு, உடலில் அனைத்து உறுப்புகளிலுள்ள தண்ணீரையும் எடுத்து தனக்குள் ஊற்றிக் கொள்ளும். மேலும், வயிற்றிலிருந்து வாந்தி வேகமாக வெளியே வரும்பொழுது உணவுக்குழாயும், வாயும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக லூப்ரிகேசன் எண்ணெய்களை ஊற்றிப் பத்திரமாக வெளியனுப்பச் சில சுரப்பிகளைச் சுரக்கும்.

இப்படி, உடல் கெட்டுப்போன உணவை அல்லது தேவையில்லாத உணவை, அளவுக்கு அதிகமான உணவை ஜீரணம் செய்தால் குடல் மற்றும் இரத்தத்தில் கழிவுகள் தேங்கி உடலுக்கு ஆபத்து வரும் என்ற நல்ல எண்ணத்தில் நமது உடலில் உள்ள மருத்துவர், வாந்திக்கான சுரப்பிகளைச் சுரக்க வைத்து, நமக்குத் தெரியாமல், நம்மை மீறி "ரெடி 1, 2, 3" என்று கூறி, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஒன்று சேர்ந்து வயிற்றில் இருக்கும் கழிவுப்பொருட்களை வெளியேற்றும்படி வாந்தி என்கிற ஒரு சிசிச்சையைச் செய்கிறார். நாம் அறிவில்லாமல் சாப்பிட்ட ஒரு கழிவுப்பொருளை நம் வயிறு அறிவுடன் தூக்கி வெளியே வீசும் ஒரு சிசிச்சைக்குப் பெயர்தான் வாந்தி! வாந்தி என்பது ஒரு நோய் கிடையாது. அது நம் உடல் பார்க்கும் சிசிச்சை.

ஆனால் நம்மில் பலர், வாந்தி வருவது போல் இருந்தால் உடனே எலுமிச்சம்பழத்தை எடுத்து முகர்வார்கள். மருந்துக் கடைக்குச் சென்று "வாந்தியை நிறுத்துவதற்கு ஏதாவது மருந்து கொடுங்கள்!" என்று வாங்கிச் சாப்பிடுவார்கள். அப்படியெல்லாம் தயவுசெய்து செய்யாதீர்கள்! ஒரு கழிவுப்பொருள் வயிற்றில் இருக்கும்பொழுது அதை ஜீரணம் செய்வதற்காக நாம் ஒரு வேலையைச் செய்தால் அது நம் உடலுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? எப்பொழுது நம் வயிறு, இது கழிவுப்பொருள், இது உடலுக்குத் தேவையில்லை என்று வெளியே தூக்கி வீசத் தயாராகிவிட்டதோ அந்தக் கழிவு வெளியே வந்தே தீர வேண்டும். அதை ஜீரணம் செய்வதற்கு நீங்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டால் என்னவாகும்? நீங்கள் வாந்தியை ஜீரணம் செய்துவிட்டீர்கள் என்று அர்த்தமாகும். இந்தக் கழிவு ஜீரணம் ஆகி உடலுக்குள் போகும்பொழுது குடலில் நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், அந்தக் கழிவுப்பொருள் இரத்தத்திலும் கலந்து பல உறுப்புகளுக்கும் நோயை ஏற்படுத்துகிறது.

எனவே, வாந்தி வரும்பொழுது உலகத்தில் மிகச்சிறந்த சிசிக்சை ஒன்றே ஒன்றுதான்! நன்றாக வாந்தி எடுக்கவேண்டும். உடல் கழிவைத் தூக்கி வெளியே வீசும்பொழுது அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? எனவே, வாந்தி வரும்பொழுது தயவுசெய்து ஓரமாக அமர்ந்து விரலை வாய்க்குள் விட்டு நன்றாக வாந்தி எடுங்கள்! வாந்தி எடுத்தவுடன் தண்ணீரைக் குடித்தால் மீண்டும் வாந்தி வரும். இப்படி உங்கள் வயிற்றிலிருக்கும் கழிவுப்பொருட்கள் வெளியே வரும் வரைக்கும்தான் வாந்தி வரும். என்றாவது உங்கள் வயிறு வெளியே வந்து விழுந்திருக்கிறதா? கழிவுதானே வெளியே வருகிறது? அது வெளியே சென்றால் நம் உடல் ஆரோக்கியமாகத்தானே இருக்கும்? எனவே, தயவுசெய்து வாந்தி வரும்பொழுது அதற்கு எந்த ஒரு சிகிச்சையும் செய்யாதீர்கள்! வாந்தி என்பதே ஒரு சிகிச்சைதான்.

வாந்தி எடுத்து வயிற்றிலுள்ள கழிவுகள் வெளியே வந்து முடிந்த பிறகு, சாதாரணத் தண்ணீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து, கல் உப்பு தேவையான அளவு கலந்து குடித்தால் ஓர் அரைமணி, ஒருமணி நேரத்திற்குள் நம் வயிறு பழைய நிலைமைக்குத் திரும்பும். நன்றாகப் பசிக்கும். இப்படி, கழிவை வெளியேற்றிய பிறகு உணவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, வாந்தி வந்து கொண்டு இருக்கும்பொழுது அல்லது வருவது போல் ஓர் உணர்ச்சி இருக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு குடிக்காதீர்கள்! வாந்தி எடுத்து முடித்து வயிறு காலியான பிறகு மட்டுமே எலுமிச்சம்பழச் சாறு குடித்து வயிற்றைச் சுத்தம் செய்ய வேண்டும்.

அடுத்த அமர்வில் சந்திப்போம்…

*******

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

About The Author

2 Comments

  1. buvana

    இது சாதாரண உணவு வாந்தி. பேருந்து, மகிழுந்து, படகு ல பொகும்பொது வருதே அந்த வாந்திக்கு என்ன செய்வது? வாளியைக் கைல வச்சுகிட்டு வாந்தி எடுதுகிட்டே போகணுமா?

Comments are closed.