அனாடமிக் தெரபி (68)

யாரெல்லாம் படுத்தவுடன் தூக்கம் வராமல் 3 மணி நேரம் புரண்டு புரண்டு படுக்கிறீர்களோ, பல ஆண்டுகளாக இப்படி அவதிப்படுகிறீர்களோ, நீங்களெல்லாரும் ஒரு நாள் 10 அல்லது 20 கி.மீ தூரம் நடைப் பயிற்சி செய்துவிட்டுப் படுத்துப் பாருங்கள். படுத்தவுடன் தூக்கம் வந்துவிடும்.

இத்தனை நாட்களாக இப்படிப் படுத்தவுடன் தூக்கம் வராத உங்களுக்கு இன்று எப்படி வந்தது என்பதைச் சற்று யோசியுங்கள். உடலுக்கு வேலை கொடுத்தால் மட்டுமே தூக்கம் தேவை; தூக்கம் வரும். மனதிற்கும், புத்திக்கும் வேலை கொடுத்தால் தூக்கம் தேவையில்லை என்பதால் அது வருவதில்லை. எனவே, படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றதும் தயவு செய்து மனதைக் குழப்பிக் கொள்ளாதீர்கள். தூக்கம் தேவை என்றால் மட்டுமே நமக்குத் தூக்கம் வரும். தேவையில்லாத தூக்கத்தை நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? அதற்காக ஏன் பயப்பட வேண்டும்?

எனவே, நமக்கு ஓய்வு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது படுக்கைக்குச் செல்ல வேண்டும்; கண்ணை மூடி, படுக்கையில் தளர்வாகப் படுப்பது மட்டுமே நம் வேலை. முதலில் மனதையும், புத்தியையும் ஒழுங்குபடுத்த ஆரம்பிக்கும் இந்த வேலை முடிந்த அடுத்த நொடி உடலுக்குத் தேவையான தூக்கம் வரும். எப்பொழுது உடலுக்குத் தேவையான தூக்கம் முடிகிறதோ அப்பொழுது நமக்கு விழிப்பு வரும்.

இப்படி, படுத்தால் நாமாகத் தூங்க வேண்டும், நாமாக எழுந்திருக்க வேண்டும். இப்படி ஒருநாள் தூங்கி எழுந்தால், அதுவே ஆரோக்கியமான நிம்மதியான, அமைதியான, ஒழுங்கான தூக்கமாகும்.

ஆனால் நம்மில் பலர், படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் ஒருவேளை இரத்த அழுத்தம் அதிகமாக இருக்குமோ, ஒருவேளை சர்க்கரை குறைவாக இருக்குமோ, வேறு ஏதாவது நோய் வந்திருக்குமோ என்றெல்லாம் தேவையில்லாமல் கற்பனை செய்து, தேவையில்லாமல் பயப்பட்டு மனதையும், புத்தியையும் மேலும் கலைத்துப் போடுகிறோம். இப்படி, ‘தூக்கம் வரவில்லையே’ என்று நினைத்துப் படுத்திருந்தால் அதுவே பெரிய ஒரு நோய். இப்படி நாம் பயப்பட்டு, மனநிலை பாதிக்கப்பட்டுப் படுத்திருக்கும்போது தூக்கம் இன்னும் தள்ளிப் போகிறது. ஏனென்றால், நாம் மனதையும், புத்தியையும் மேலும் மேலும் கலைத்துப் போடுகிறோம்.

சற்று யோசித்துப் பாருங்கள்! காலை முதல் மாலை வரை நாம் பல இடங்களில் தவறாகப் பேசி இருப்போம். சில விஷயங்களை, மறந்திருப்போம். சில விஷயங்களில் தவறான முடிவு எடுத்திருப்போம். இரவு படுத்தவுடன் இவை அனைத்தும் நமக்கு நினைவுக்கு வரும். உதாரணமாக, ‘நாம் இன்று அவரை அது போலத் திட்டியிருக்கக்கூடாது. நாம் தவறு செய்துவிட்டோம்’ என்று இரவு படுத்த பிறகுதான் நினைவு வரும், அல்லது புரியும். நாம் இன்று செய்ய வேண்டிய வேலை எதையாவது மறந்திருந்தால் அதுவும் படுத்த பிறகுதான் நினைவு வரும். இந்தக் கலைத்துப் போட்ட விஷயங்களை, மறந்த விஷயங்களை சரி செய்யும் வரை நமக்குத் தூக்கம் வராது. சரி செய்து முடித்தவுடன் தூங்கி விடுவோம். எனவே, படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் பயப்பட வேண்டாம்!

படுத்தவுடன் தூங்குபவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம் என்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். படுத்தவுடன் தூக்கம் வராதவர்கள் நாம் உடலுக்கு அதிகமாக வேலை கொடுக்கவில்லை; மனதிற்கும், புத்திக்கும்தான் அதிகமாக வேலை கொடுத்திருக்கிறோம்; எனவே நமது மனமும், புத்தியும் தங்களைத் தாங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றன; அதனால்தான் தூக்கம் வரவில்லை என்று புரிந்துகொண்டு அமைதியாக இருங்கள்!

தூக்கத்துக்கும், ஓய்வுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்! தூக்கம் என்பது பற்றி நமக்கு ஏற்கெனவே தெரியும். ஓய்வு என்றால் தூங்காமல் மனதையும், புத்தியையும் அடுக்கி வைக்கும் நிலை என்று பொருள். இந்த ஓய்வை கீழ்க்கண்ட முறைகளில் நாம் பெற முடியும்.

ஒன்று, படுத்துக்கொண்டு கண்களை மூடிக் கொள்ளலாம். தூங்க வேண்டிய அவசியம் இல்லை. புரண்டு புரண்டு படுத்தாலே போதும். ஓய்வு கிடைத்துவிடும்.

இரண்டு, கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கலாம்.

மூன்று, நாற்காலியில் அமர்ந்து கொண்டு, முன்னால் இருக்கும் டேபிள் அல்லது ஏதாவது ஓர் இடத்தில் தலையைத் தாங்கி வைத்துக் கொண்டால் சிறப்பாக ஓய்வு எடுக்க முடியும்.

நான்கு, சுவரில் ஒரு தலையணை அல்லது விரிப்பைச் சார்த்தி வைத்து, சாய்ந்து அமர்ந்து, இரண்டு கால்களையும் நீட்டிக் கழுத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாலும் ஓய்வு கிடைக்கும்.

நாம் இங்கு ஓய்வு, ஓய்வு என்று பார்த்துக் கொண்டிருக்கும் விஷயத்தைத்தான் ‘தியானம்’ என்று அழைக்கிறார்கள். தியானம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்பொழுது ஏதோ ஆன்மிகவாதிகளும், பொழுது போகாதவர்களும், வயதானவர்களும் செய்வது என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை; ஓய்வுக்கு மற்றொரு பெயர்தான் தியானம்.

தியானம் செய்யும்பொழுது நம்முடைய மனதும், புத்தியும் ஓய்வு எடுக்கின்றன. எனவேதான் தியானம் செய்பவர்களுக்குப் படுத்தவுடன் தூக்கம் வருகிறது. "நான் தியானம் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் படுத்தவுடன் தூக்கம் வரவில்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் ஒழுங்காக தியானம் செய்யவில்லை என்று அர்த்தம்.

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்…

About The Author