அமானுஷ்யன்(33)

ஆனந்த் பெங்களூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் லலிதாவின் போன் நம்பரையும், அக்‌ஷய் அவளுக்குப் போன் செய்த நேரத்தையும் சொல்லி அந்த போன் எங்கிருந்து வந்தது என்று கேட்டிருந்தான். சிறிது நேரத்தில் அந்த போன் நம்பரை அவர்கள் சொன்னார்கள். டில்லி டெலிபோன்ஸில் அந்த போன் நம்பரைக் கொடுத்து விசாரித்ததில் அது ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தினுடையது என்பது தெரிந்தது. அங்கும் சென்று விசாரித்தான். அந்த பப்ளிக் பூத் காரனுக்கு அந்த நேரத்தில் போன் செய்தவனுடைய எந்த அங்க அடையாளமும் நினைவு இருக்கவில்லை. ‘இதையெல்லாம் யாராவது நினைவு வைத்திருப்பார்களா, இத்தனை பேர் வந்து போகும் இடத்தில்’ என்பது போல ஆனந்தைப் பார்த்தான்.

டில்லியிலேயே தன் தம்பி இருந்தும் அவன் தன்னிடம் தொடர்பு கொள்ளாதது ஆனந்திற்கு மனதை என்னவோ செய்தது. அந்த டெலிபோன் பூத்தின் வெளியே நின்று சந்தடி மிக்க அந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்தான். இதில் ஒருவன் அவன் தம்பியாக இருந்தாலும் தோற்றத்தை வைத்து அவனால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது…

"தம்பி நீ எங்கிருக்கிறாய்?" மனம் கூக்குரலிட்டது.

*************

"அந்த ரெடிமேட் கடைக்காரன் இப்போதுதான் போன் செய்தான். அந்தப் பெண் யார் என்று தெரிந்து விட்டது" பரபரப்புடன் மந்திரி குரல் கேட்டது.

"யார்?"

"ரெயின்போ டிவியில் வேலை பார்க்கிறாள். இப்போது அவள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகியதைப் பார்த்து அந்த ரெடிமேட் கடைக்காரன் போன் செய்தான்."

"வீட்டு விலாசம் எங்கே என்பது தெரிந்ததா?"

"அதுவும் தெரிந்து விட்டது. ஆபீஸ் விலாசமும் என் மேசை மேல் இருக்கிறது"

"ஆபிசிற்கு வேண்டாம். அதுவும் டிவி ஆபிஸ் என்றால் உடனே அது விளம்பரம் ஆகும். இப்போது மணி இரவு ஏழரையாகி விட்டதால் அந்தப் பெண் அவள் வீட்டிலேயே இருக்கலாம். இல்லா விட்டாலும் அவள் வரும் வரை வீட்டு ஆட்களை விசாரிக்கலாம். அதிகமான ஆட்கள் வேண்டும். திறமையான போலீஸ் அதிகாரிகள் இரண்டு பேரை உடனடியாக அனுப்புங்கள். எதற்கும் இரண்டு பேரிடமும் துப்பாக்கி இருக்கட்டும்"

**************

"ஆச்சார்யா மனைவியிடம் பேசினீர்களா?" சஹானா கேட்டாள்.

அக்‌ஷய் "ம்" என்றான்.

"ஏதாவது தகவல்?"

"கிடைத்தது. ஆனால் நான் எதிர்பார்த்த தகவல் இல்லை……" என்றவன் லலிதா சொன்னதெல்லாம் சொன்னான்.

"உங்களுக்கு அந்தம்மாள் சொன்னதில் நம்பிக்கை இல்லையா?"

"அந்தம்மாவை யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள்"

"எப்படி சொல்கிறீர்கள்?"

"சஹானா. ஆச்சார்யா கொலை பற்றிய பத்திரிகை செய்திகள் எல்லாம் பார்த்தீர்களா? சிபிஐ அடிஷனல் டைரக்டரை கொன்றிருக்கிறார்கள். எவனோ ஒரு ஆளைப் பிடித்து போலீஸ் அவன் தான் கொலைகாரன் என்கிறது. அவனைப் பற்றிப் படித்தால் அவன் சதா போதையுடன் இருந்தவன், பல பேரிடம் சண்டை சச்சரவு என்றிருந்த மூன்றாம் தர போதை நோயாளி மாதிரி தோன்றுகிறது. ஆனால் ஆச்சார்யாவைக் கொன்ற ஆளோ கச்சிதமாகக் கொலை செய்த திறமைசாலியாக இருக்கிறான். சிபிஐக்கு இவன் கொலை செய்யவில்லை என்று தெரியாமலா இருக்கும். ஆனாலும் மௌனமாக இருக்கிறது என்றால் அவர்களுக்குள்ளேயே கொலையாளி இருக்கக்கூடும். இல்லாவிட்டால் அவர்கள் ஒத்துழைப்போடு கொலை நடந்திருக்கக்கூடும். இப்போது யாரோ ஒரு சிபிஐ அதிகாரி வந்து ஆச்சார்யா மனைவியிடம் சொல்கிற இந்தக் கதையைக் கேட்டால் என்னைப் பிடிக்க அந்தம்மாளை பகடைக்காயாய் பயன்படுத்துகிற மாதிரி இருக்கிறது. என்னையும் பிடித்து கொன்று விட அவர்களும் முயற்சி செய்கிற மாதிரி தோன்றுகிறது…"

அவளுக்குத் தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. "அந்தம்மாள் கொடுத்த போன் நம்பரைப் பற்றி விசாரித்தீர்களா? மதுவிடம் வேண்டுமானால் கேட்டு சொல்லச் சொல்லட்டுமா?"

"நம்பர் கையில் இருந்தால், பணமும் செலவு செய்யத் தயாராக இருந்தால் எல்லாவிதமான தகவல்களும் கிடைக்கும் சஹானா. நான் அதைப் பற்றி எல்லாம் விசாரித்தாகி விட்டது. நாளைக்கு வருண் பிறந்த நாள். அது முடிந்து இங்கிருந்து போன பிறகு அவனைக் கவனிக்கிறேன்….." என்றவன் அது பற்றிய பேச்சு அத்துடன் முடிந்தது என்பது போல் மௌனமானான்.

அவன் ‘கவனிக்கிறேன்’ என்று சொன்ன விதம் அவளுக்கு இயல்பான விதத்தில் சொன்னது போல் தெரியவில்லை. மது அவன் சில நாட்களுக்கு முன் அந்தப் பையன் வீட்டுக்குப் போய் வந்த பிறகு அந்தப் பையன் வீட்டுக்கு மது போய் வந்து அவர்கள் பயத்தைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. சற்று முன் மது போன் செய்து இன்னொரு தகவல் சொன்னான். ‘சஹானா, அந்தப் பையன் வீட்டுக்காரர்கள் இரவோடு இரவாக யாருக்கும் சொல்லாமல் எங்கேயோ போய் விட்டார்கள். வீடு பூட்டிக்கிடக்கிறது’

அவனைப் புரிந்து கொள்வது இன்னமும் சஹானாவிற்கு கஷ்டமாக இருந்தது. அவன் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்து கொள்ள அவளால் முடியவில்லை. அதுவும் சில சமயங்களில் அவன் கண்கள் அவளுடைய இதயத்தின் ஆழம் வரை போய்ப் பார்ப்பதுபோல் தெரிந்தது. சில வினாடிகளில் ஒன்றுமே நடக்காதது போல் அவன் இருந்தான். ஆனாலும் அந்த ஆழமான பார்வையின் போது அவளுடைய இதயத்தின் ஆழத்தில் இருந்து அவளையும் அறியாமல் ஏதோ பதில் அவளைப் போய்ச் சேர்ந்தது போலிருந்தது.

அவள் கேட்டாள். "ஏன் அந்த ஆளை இங்கிருந்து போன பிறகு போய் பார்க்கிறேன் என்கிறீர்கள்?"

"இனி வரப் போகும் காலங்கள் அபாயமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது சஹானா. அதில் உங்களை எல்லாம் ஈடுபடுத்த எனக்கு மனமில்லை"

அவள் முகத்தில் கவலை படர்ந்தது. "இங்கிருந்து போன பிறகும் ஜாக்கிரதையாய் இருங்கள்"

அவன் புன்னகைத்தான். "சஹானா கடவுள் எனக்காகக் குறித்து வைத்திருக்கிற நேரத்திற்கு ஒரு நிமிஷம் முன்னாலும் நான் சாக முடியாது. ஒரு நிமிஷம் பின்னாலும் நான் சாக முடியாது. அதனால் இதில் பயம் கவலை இதற்கெல்லாம் அர்த்தமில்லை"

சொல்லிவிட்டு அக்‌ஷய் சுற்றும் முற்றும் பார்த்தான். மரகதம் சமையலறையில் ஏதோ வேலையாக இருந்தாள். அவள் சமையலறையில் வைத்திருந்த டேப் ரிகார்டரில் விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்டுக் கொண்டிருந்தது. வருண் பள்ளியில் எங்கோ பிக்னிக்கிற்கு கூட்டிக் கொண்டு போயிருந்தார்கள். அவன் வர இரவு எட்டரை ஆகி விடும்.

அவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான். "சஹானா நான் போவதற்குள் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். நீங்கள் என்னைத் தப்பாக நினைக்கக் கூடாது"

அவளுக்கு இதயம் ஒரேயடியாகப் படபடத்தது. "சொல்லுங்கள்"

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் பார்வை ஜன்னல் வழியே கீழே தெரிந்த காட்சியில் ஐக்கியமாகி இருந்தது. அவன் திடீரென்று அவள் கண் முன்னாலேயே சிலை போல ஆனான்.

என்ன பார்க்கிறான் என்று ஆச்சரியத்துடன் எழுந்து சஹானா தானும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அவர்கள் ஃப்ளாட்டின் வாசலில் போலீஸ் ஜீப் ஒன்றிலிருந்து மூன்று போலீஸ் அதிகாரிகள் இறங்கினார்கள். இருவர் அவர்கள் மெயின் கேட்டைக் கடந்து உள்ளே வர ஒரு இளம் போலீஸ் அதிகாரி அந்த ஜீப்பில் சாய்ந்து நின்று கொண்டார். அவர் கையில் வயர்லஸ்
இருந்தது.

சஹானாவின் முகம் வெளிறியது. "அக்‌ஷய் நீங்கள் இங்கிருந்து ஓடி விடுங்கள்" என்று அவசரமாகச் சொன்னாள்.

அக்‌ஷய் அசையக் கூட இல்லை. அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.

"அக்‌ஷய்! சீக்கிரம் ….."

அவளுடைய அவசரம் அவனை அவசரப்படுத்தவில்லை. அவன் நிதானமாக எழுந்தான். "சஹானா பயப்படாதீர்கள்"

அழைப்புமணி ஒலித்தது. சஹானா கேட்டாள். "என்ன செய்யப் போகிறீர்கள்?"

"கதவைத் திறக்கப் போகிறேன். நீங்கள் முடிந்த வரை வாயைத் திறக்காதீர்கள்" என்று அவளிடம் தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டு அக்‌ஷய் கதவைத் திறந்தான்.

(தொடரும்)

About The Author

2 Comments

  1. prem

    ம்ர் கனெசன் . ப்லெஅசெ உப்லொஅட் ஃஉஇcக்ல்ய் நெ௯ட் எபிசொடெ… திச் இச் நிcஎ ச்டொர்ய்… இ லிகெ திச் ச்டொர்ய்

  2. Gopinath

    ஏன் சார் இது உங்களுக்கே நியாயமாய் தெரியுதா? இந்த இடத்தில் போய் நிறுத்தி இருக்கிறீர்களே. ஒரு வாரம் பொறுக்க முடியுமா? புதன் அல்லது வியாழன் ஆவது அப்லோட் செய்யுங்க ப்ளீஸ்.

Comments are closed.