அறிவியல் முத்துக்கள் (25)

ஆண்களுக்கு வழுக்கை உண்டாதல்

Baldnessமன உளைச்சல் (stress), தோலில் தொற்று (skin infection), மருந்து அல்லது கதிர்வீச்சு (radiation) போன்றவற்றின் பக்க விளைவுகள் ஆகியவற்றால் ஆண், பெண் இரு பாலார்க்கும் முடிகொட்டுதல் தற்காலிகமாக ஏற்படுவது உண்டு. ,நிரந்தரமான வழுக்கை என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும்; இது மரபு வழிப்பட்டதாகும். தலை வழுக்கைக்கான மரபணு (gene) எக்ஸ்-குரோமோசாமில் உள்ளது. இருப்பினும் கூட்டுக் குரோமோசாமில் (partner chromosome) இயல்பான (normal) மரபணுப் பதிப்பு இருக்குமானால், அது தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை; இதனால் வழுக்கையும் உண்டாவதில்லை. பெண்களுக்கு இரண்டு எக்ஸ்-குரோமோசாம்களும் ஆண்களுக்கு ஒரே எக்ஸ்-குரோமோசாமும் இருக்கின்றன; பெண்ணின் ஒரு எக்ஸ்-குரோமோசாமில் வழுக்கைக்கான மரபணு இருந்து மற்றொரு எக்ஸ்-குரோமோசாம் இயல்பாக இருக்கும் நிலையில் பெண்ணின் தலை வழுக்கையாவதில்லை. வழுக்கை மரபணு இருக்கும் ஒரே குரோமோசாம் உள்ள ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுகின்றது. பெண்களுக்கு இரண்டு குரோமோசாமிலும் வழுக்கை மரபணு இருக்குமானால், அவர்களுக்கும் தலை வழுக்கையாகும் வாய்ப்பு ஏற்படுவதுண்டு. நீண்ட தலை முடியை வளர்க்கும் பழக்கமுள்ள பெண்களிடம் அவ்வழுக்கை மறைக்கப்படலாம்..

தலைவலி ஏற்படுதல்

Headacheதலைவலி உண்டாவதற்குப் பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், முகம், கழுத்து, முதுகு ஆகியவற்றில் உள்ள நரம்புகளால் வலி சமிக்கைகள் (signals) மூளைக்கு அனுப்பப்படும்போது நாம் வலியை உணர்கிறோம். மண்டையோட்டு நரம்பு என்னும் வேர்ப்பகுதியிலிருந்து அவை எழும்புகின்றன. எனவேதான் முகத்தைச் சுற்றி வலி நரம்புகளைத் தூண்டும் எந்தக்காரணமும் தலைவலியாக உணரப் பெறுகிறது. மிகச் சிறிய எழுத்துகளைப் படித்தல் அல்லது நீண்ட நேரம் வாசித்தல் அல்லது ஓரக்கண் பார்வை போன்ற குறைபாடுகள் ஆகியவற்றால் நமது கண்களின் தசைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாகவும் தலைவலி ஏற்படுகிறது. உட்செவியில் உள்ள சின்னஞ்சிறு எலும்புகள் நாம் ஒலியைக் கேட்கும்போது சோர்வடைதல் அல்லது கழுத்துத் தசைகளில் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றாலும் கூட தலைவலி உண்டாகும். காரணம் ஏதும் இல்லாமலே சிலருக்கு மைக்ரேய்ன் (migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படுவதுண்டு. ஐஸ் கிரீம், கொழுப்பு உணவு, உடலில் நீரிழப்பு (dehydration) சில உணவுப் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை (allergy) போன்றவற்றால் ஒற்றைத்தலைவலி கூடுதலாகலாம். பல்வலி, வாய்ப்புண் ஆகியவையும் தலைவலியை மிகுதிப்படுத்தும்.

கண் சிமிட்டுதல் அல்லது கண்ணிமைத்தல்

Eyes Blinkingகண் சிமிட்டுதல் அல்லது கண் இமைத்தல் என்பது கண்ணை ஈரப்பசையோடு வழவழப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதனை உயவிடுதல் (lubricaton) என்பர். இதன் காரணமாக வெளிப்பொருட்கள் கண்களில் சேராமல் நீக்கப்படுகின்றன. விழிவெண்படலத்தின் (cornea) தெளிவான பார்க்கும் தன்மையை நன்கு பராமரிக்க இவ்வுயவுத்தன்மை உதவுகிறது. ஒவ்வொரு கண்ணிமையின் விளிம்பிலும் நீர்த் திரவத்தைக் கசியும் சுரப்பிகள் உள்ளன; கண்ணிமை மூடும் ஒவ்வொரு முறையும் இத்திரவம் கசிகிறது. கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும் கண்ணீர்ச் சுரப்பிகளும் ஓரளவு திரவத்தை வெளிவிடுகின்றன. இத்திரவங்கள் கண்ணைக் கழுவ உதவுவதோடு கண்ணையும் ஈரப்பசையுடன் வைத்திருக்க உதவுகிறது. கண்ணெதிரே திடீரெனெ ஒரு பொருள் அசைந்தாலும் கண்கள் இமைக்கின்றன; இஃது ஒரு வகைப் பாதுகாப்பு உத்தியாகும். சாதாரண மனிதர் ஒருவர் தம் வாழ்நாளில் 250 மில்லியன் முறை கண் சிமிட்டுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

About The Author