அறிவியல் முத்துக்கள் (5)

இரு குவியக் கண்ணாடிகள் (Bifocals)

Bifocalsகண்ணுக்கு அணியும் மூக்குக் கண்ணாடி இருகுவியக் கண்ணாடி எனப்படுகிறது. இதன் இரு வில்லைகளிலும் மேலேயுள்ள பகுதியின் குவியத் தூரம் (fical length) ஒரு அளவாகவும், கீழேயுள்ள பகுதியின் குவியத் தூரம் வேறோர் அளவாகவும் அமைந்திருக்கும். இதனால் எட்டப் பார்வைக்கு ஒன்றும், படிப்பதற்கான கிட்டப் பார்வைக்கு ஒன்றுமாக இரு வேறு மூக்குக் கண்ணாடிகள் அணிவது தவிர்க்கப்படுகிறது. சாதாரண வகை இருகுவியக் கண்ணாடியை "பிளவுபட்ட" இருகுவியக் கண்ணாடி என்பர் (split bifocals) என்பர். அதாவது, இவ்வகைக் கண்ணாடியின் ஒவ்வொரு பக்க வில்லையிலும் இரு வேறு பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே சட்டகத்தில் பொருத்தப்படுகின்றன. வில்லையின் மேற்பகுதி எட்டப்பார்வைக்கும், கீழ்ப்பகுதி கிட்டப்பார்வைக்கும் என அமைந்துள்ளன.

"ஒன்றிணைக்கப்பட்ட (fused)" இருகுவியக் கண்ணாடி வில்லைகள் பலகணிக் கண்ணாடியையும் (crown glass) தீக்கல் கண்ணாடியையும் (flint glass) ஒன்றிணைத்து உருவாக்கப்படுபவை. இரு வகைக் கண்ணாடிகளும் ஒரே வகையில் மெருகூட்டப்பெற்று, சாணை பிடிக்கப்பட்டு, ஒன்றாகப் பொருத்தப்பட்டு 6000 செ.கி. அளவில் வெப்பமூட்டப் பெறுகின்றன. இதன் விளைவாக இரு பகுதிகளும் ஒன்றிணைகின்றன. அடுத்து, "திடவகை" இருகுவிய வில்லை (solid type bifocals) எனும் மற்றொன்று இரு வேறு கண்ணாடிகள் இணையாத முழுமையான ஒற்றை வில்லையாகும். இது ஒரே கண்ணாடி வில்லையில் உருவாக்கப்படுவது. இரு வேறுபட்ட வளைவுகள் (curvatures) ஒரே கண்ணாடிப் பரப்பில் சாணை தீட்டப்பட்டு உருவாக்கப்படுகின்றன. ஒளிக் குறைபாடுகள் இவ்வகைக் கண்ணாடிகளில் உண்டாவதில்லை.

ரேடார்கள்

Radarரேடார் (Radar) எனும் சொல் Radio detecting and ranging எனும் ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். நுண்ணலைகள் (microwaves) எனப்படும் மிகச் சிறிய ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட பொருள் எவ்வளவு தொலைவில் உள்ளது மற்றும் அது விரைந்து செல்லும் பொருளாக இருப்பின் எவ்வளவு வேகத்தில், எத்திசையில் செல்லுகிறது, என்பவற்றைக் கண்டறியும் திறன் கொண்டதாக இந்த ரேடார் என்னும் கருவி விளங்குகிறது. இந்த அலைகள் தனிச் சிறப்பு வாய்ந்ததோர் ஆண்டனாவில் (antenna) இருந்து பரப்பப்படும். தொலைவிலுள்ள பொருளின் வானொலி அலைகளுடைய குறுகிய ஒளிக்கற்றையை வழிப்படுத்தக்கூடியது இந்த ஆண்டனா. மேலும் இந்த ஆண்டனா வானொலிக் கற்றைகளை அனுப்புவது மட்டுமலாமல், தொலைவிலுள்ள பொருளின் எதிரொளிக்கும் (reflected) குறிப்பலைகளைப் பெறவும் செய்யும். தொலைக்காட்சித் திரையில் விழும் பிம்பத்தைப் போன்று, எதிரொளிக்கும் ஒளிக்கற்றையானது ஒரு உருவத்தைப் போல திரையில் காட்சிப் பொருளாக மாறும். இதுவே தொலைவில் இருக்கும் பொருளின் உருவமாகும். பொதுவாக இந்த ஆண்டனா தொடுவானத்தை ஸ்கேன் செய்யும் வகையில் சுற்றிச்சுழலுமாறு அல்லது கிடைமட்டத்தில் ஊசலாடும் வகையில் அமைந்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் திரையில் உருவாகும் பொருளினுடைய பிம்பத்தின் அமைவிடத்தைக் கவனித்து, அது இருக்குமிடம், அது செல்லும் திசை, செல்லும் வேகம் ஆகியவை கணிக்கப்பெறும்.

About The Author