இரகசியம் தெரிந்துகொள் தம்பி! (1)

(நிலாச்சாரலுக்காக விசேஷ அனுமதியுடன் – ‘வெற்றிக்கு முதல் படி’ நூலிலிருந்து)

ப்போது சில இரகசியங்களை கவனிப்போம்.

இந்த இரகசியங்களை இத்தனை நாள் மேல்மட்டத்து மனிதர்களும் விஷயம் தெரிந்தவர்களும் தான் பயன்படுத்தி வந்தார்கள். இந்த விஷயங்கள் படிப்பில்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் கிடைக்கவில்லை. காரணம் – "அடிமட்டத்து மக்கள் ஆர்வம் இல்லாதவர்கள். அதனால் அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை" என்று சொல்கிறார்கள்.

ஆனால் இந்த விஷயங்களை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். அவற்றில் மந்திரசக்தி இருக்கிறது. உங்களையும் உங்கள் சந்ததிகளையும் உயர்த்தக்கூடிய வலிமையும் மந்திரசக்தியும் கொண்டது இந்த விஷயம். எனவே கவனமாக மேலே படியுங்கள்.

இராமானுசர்

வைணவ ஆசாரியார்களில் ஒருவரான இராமானுசர் மந்திர சக்தியை அடைய திருக்கோட்டியூர் என்ற ஊருக்கு செல்கிறார். அங்கே நம்பி என்று அறிஞர் இருந்தார். அவர் பெரிய மகான். இராமானுசர் அவர் காலில் விழுந்து வணங்கினார். மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.

சாதாரணமாக மந்திரங்களை எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள். மந்திர உபதேசம் செய்யச் சொல்லி 18 முறை அணுகினார் இராமானுசர். நம்பியின் மனம் இறங்கவில்லை.

இராமனுசரின் வருத்தத்தைக் கண்ட நம்பி அவரிடம் சொன்னார், "இந்த மந்திரத்தின் மகிமை பலருக்குத் தெரியாது. நீ திரும்பத் திரும்ப வந்து இந்த மந்திரத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்வதால் உன்னிடம் சொல்கிறேன். இதை வேறு யாருக்கும் கூறாதே" என்று கூறி, அந்த "எட்டு எழுத்து" மந்திரத்தை அவருக்கு உபதேசித்தார்.

மந்திரத்தை மனதுக்குள் சொல்லத் தொடங்கியவுடன் இராமானுசர் மனதில் ஒரு சாந்தியும், அமைதியும், இன்பமும் தோன்றின. ஒரு தெய்வீக சக்தி தன்னை ஆட்கொண்டதை இராமானுசர் உணர்ந்தார்.

திருக்கோட்டியூர் நம்பியிடமிருந்து விடைபெற்று, இராமானுசர் திருவரங்கத்திற்கு புறப்பட்டார். திடீரென்று அவருக்கு ஒரு அதிசய எண்ணம் உண்டாயிற்று.

"இவ்வளவு பெரிய கருவூலமான இந்த தெய்வீக ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்தால் எவ்வளவு பேர் பயனடைவார்கள். இதனால் எவ்வளவு பேர் வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து மீள்வார்கள்" என்ற எண்ணம் அவர் மனதில் ஓடியது. இப்படி எண்ணியதும் அவரது ஆனந்தம் அதிகமாயிற்று.

எட்டெழுத்து மந்திரம்

"எல்லாரும் கோவிலுக்கு வாருங்கள். உங்களுக்கு விலைமதிப்பற்ற கருவூலம் ஒன்றைத் தருகிறேன்" என்று சொன்னார். நகருக்கு ஒரு மகான் வந்திருப்பதாகவும், அவர் கேட்டதையெல்லாம் கொடுப்பதாகவும் செய்தி ஊரில் வெகு வேகமாகப் பரவியது. சிறிது நேரத்தில் ஏராளமான பேர் அங்கே கூடினார்கள்.

இராமானுசர் கோபுரத்தின் உச்சியில் ஏறினார். கூட்டத்தை நோக்கிப் பேசலானார்.

"சகோதர சகோதிரிகளே! இவ்வுலகின் துன்பங்களிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுதலை பெறுங்கள். நிரந்தர இன்பத்தையும் வலிமையையும் தரும் ஒரு மந்திரத்தை நான் உங்களுக்கு சொல்லப் போகிறேன். இது மகா மந்திரம். இதை என்னுடன் சேர்ந்து எல்லாரும் மூன்று முறை உச்சரியுங்கள்" என்று சொல்லி அந்த "எட்டெழுத்து மந்திரத்தை" உபதேசித்தார்.

பசித்தவன் உணவைக் கண்டதுபோல – வறண்ட பயிர் தண்ணீரைக் கண்டதுபோல – எல்லாரும் அதை உரக்க உச்சரித்தார்கள்; புளகாங்கிதம் அடைந்தார்கள்.

இப்படி நடந்ததைக் கேள்விப்பட்டார் குரு. அவருக்கு தாங்க முடியாத கோபம் வந்தது. மகா மந்திரத்தை ஊரிலுள்ள எல்லாருக்கும் இராமானுசர் சொல்லிக் கொடுத்ததைக் கேட்டு மனம் பதைத்தார். "நீ என்னை மோசம் செய்துவிட்டாய்! மந்திரத்தை எல்லாருக்கும் சொல்லிய நீ நரகத்திற்குப் போவாய்!" என்று சாபம் கொடுத்தார்.

இராமானுசர் மனம் நொந்து தன் குருவிடம் சென்னார், "ஐயா! இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் உயர்ந்த பாக்கியத்தை அடைவார்கள் என்று சொன்னீர்கள். எனவே நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் ஆயிரமாயிரம் மக்கள் இதனால் உயர்ந்த நிலை அடைவார்களே. அதனால் தான் அவர்களுக்கு இதை உபதேசித்தேன்!" என்று மனம் உருகிக் கூறினார்.

இராமானுசர் தனக்கென வாழாத வள்ளல் என்பதை குரு உணர்ந்தார். பின் சமாதானமடைந்தார்.

அத்தகைய மந்திரத்தைக் கற்றுக் கொண்டு தினமும் அதைச் சொல்வதும் தியானிப்பதும் மனதிற்கு மகத்தான வலிமை தரும். மிகுந்த அமைதியையும் நிறைவான இன்பத்தையும் தரும்.

அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஞானவழி

மனதைக் கட்டுப்படுத்தும் மார்க்கத்தைத்தான் "ஜபம்", "தியானம்" என்கிறோம்; ஞான மார்க்கம் என்கிறோம். மூச்சை அடக்கி சீர்படுத்தும் வழி முறைகளை "பிராணாயாமம்" என்கிறோம். உடலை நெறிப்படுத்தும் ஆசனங்களை "யோகங்கள்" என்கிறோம்.

இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டோமானால் நாம் ஒரு மேலான வாழ்க்கையை வாழலாம். அற்புதமான வாழ்வை வாழலாம். உலகில் நாம் விரும்பியதை அடையலாம். ‘நமது வாழ்வின் பயன் என்ன? நாம் ஏன் பிறந்திருக்கிறோம்?’ என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நெடுநாளாக இத்தகைய அறிவு எல்லாருக்கும் கிடைப்பதாயில்லை. ஒரு சில மகரிஷிகள், ஒரு சில யோகிகளுக்குத்தான் இதன் வழிமுறைகள் தெரியும். அவர்களும் காடுகளிலும் மலைகளிலும் வசித்தார்கள். தெரிந்துகொள்ள நாமும் காட்டுக்கு போய் கற்றுக் கொள்ள வேண்டும்; காடுகளில் அவர்களுடன் சுற்ற வேண்டும்.

யோகிகளுக்கு அடுத்தடியாக நமது நாட்டில் இவற்றை எல்லாம் பிராமண சமூகத்தினர் அறிந்து வைத்திருந்தனர். ஜெபம், தியானம் செய்வதை அவர்களின் குழந்தைகளுக்கும் 10-12 வயதில் சொல்லிக் கொடுத்தார்கள். இப்படி சொல்லிக் கொடுப்பதை பூணூல் போடும் சடங்காக செய்வார்கள். அவர்களும்கூட இதைப் பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை.

காலம் செல்லச் செல்ல, பிற சாதியினரிடையேயும் இதை அறிந்து கொண்ட மகான்கள் தோன்றினார்கள். இவர்கள் இதைப் பரப்ப மடங்களை ஏற்படுத்தினார்கள். தருமபுரமடம், திருவாடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் என்று பல மடங்களாக உருவெடுத்தன.

தமிழ் நாட்டில் பரஞ்சோதி மகான் என்றொரு யோகி இருந்தார். பிறப்பால் அவர் முஸ்லிம். அவருடைய சீடர்களாக இன்று பலர் யோக மார்க்கத்தை சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இலங்கையில் "யோக சுவாமி" என்பவர் இருந்தார். அவருடைய சீடர்தான் ஹாவாயியில் என்று இருக்கும் சுப்பிரமுனிய சுவாமிகள்.

இவர்கள் காட்டும் வழி என்ன? வாழ்க்கைக்குப் பயன்படுமா?

(தொடரும்)

About The Author

2 Comments

  1. maleek

    இது போன்ற பயனுள்ள தொடர்களை வரவேற்கிறோம்.நிலா குழுவுக்கு நன்றி.

  2. ganesh

    mthipukuriya iyya naan upathesam peravendum athargu guru yaar yaaridam sellavendum enpathaipatri gurauvm iyya.

    nantri.

Comments are closed.