இரத்தினச் செவ்வி -நிலா

கடந்த பத்து வருடங்களாக நிலாச்சாரல் நடத்தி வரும் நிலா நம் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். அவர்தம் இதழில் எழுதும் எத்தனையோ இளம் எழுத்தாளர்களுக்கு உந்து சக்தியாக விளங்குகின்றார். இவரது சிறுகதைகளும் கட்டுரைகளும் பிரபல இதழ்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. கருவறைக் கடன் என்ற சிறுகதைத் தொகுப்பு, மூன்று நாவல்கள் மற்றும் ஒரு சிறுவர் கதைத் தொகுப்பு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. மத நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிறப்பிரிகை என்று ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார். இது ஐரோப்பிய குறும்பட விழாவில் நற்சான்றிதழ் பெற்றது. பூஞ்சிட்டு என்ற சிறுவர் அச்சு இதழ் நடத்திய, தொலைக்காட்சிக்கு சில நிகழ்ச்சிகள் தயாரித்த அனுபவங்களும் இவருக்கு உண்டு. ஆங்கிலத்திலும் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நிலாச்சாரலில் சமீபத்தில் வெளியான அமுதென்றும் நஞ்சென்றும் என்கிற தொடர் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு இவரின் பன்முக ஆளுமையையும் காட்டியுள்ளது. இவருடைய கலக்கல் காவ்யாவை யார் மறந்திருப்பார்கள்? இவருடைய படைப்புகள் அனைத்தையும் அறிய இங்கே சொடுக்கவும்.

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Nila

https://www.nilacharal.com/ocms/log/authorlist.asp?authorid=Athmanudatn%20Nila

நிலாச்சாரலில் தன்னை விட புதியவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதையே வலியுறுத்துகிற நிலாவிடம் வற்புறுத்திப் பெற்ற பதில்கள்:

1. உங்கள் எழுத்தின் நோக்கம் என்ன?

ஒருவிதமான வெளிப்பாடு என்று தோன்றுகிறது.

2. உங்களுக்கு எதில் ஆத்ம திருப்தி எழுத்தாளர் / பத்திரிகையாசிரியர்?

முன்பு இரண்டும். தற்போது சுகமளிப்பது (healing).

3. இணைய இதழ் ஆரம்பிக்க உந்து சக்தியாக விளங்கியது எது தமிழ்மொழிப்புலமை/ கணிப்பொறி புலமை?

இரண்டுமே என்றும் இருந்ததில்லை. படைப்பார்வம்தான் காரணம்.

4. நிலாச்சாரலின் எதிர்காலம்?

வாசகர்களின், தன்னார்வலர்களின் கையில்.

5. பதிப்பாசிரியராக உங்கள் பணி பற்றி..?

வீணான முயற்சி. தமிழ் மின்னூல்களுக்கு இன்னும் காலம் கனியவில்லை என்று நினைக்கிறேன்.

6. பெண் எழுத்தாளராக பெண்ணினத்திற்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும் வாழ்வது போக தானாகவும் வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறேன்.

7. மதம் கடந்த வழிபாடு என்பது உருவமில்லா வழிபாடிலிருந்து மாறுபட்ட்தாகுமா?

இல்லை. உருவத்திலும் அருவத்திலும் இறையைக் காண்பதுதான் மதம் கடந்த வழிபாடு – என்னைப் பொறுத்தவரை.

8. மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்திகளை ஆராய்வதில் எதிர் விளைவுகள் ஏற்படுமா?

மனிதனுக்கு அப்பாற்பட்டது எது? நிலவில் கால்பதிக்கும் வரை அது மனிதனுக்கு அப்பாற்பட்டதாகத்தானே இருந்தது? ஏன் மனிதன் தனது முழு ஆற்றலை இன்னும் உணரவில்லை என்பது உண்மையாக இருக்கக் கூடாது?

9. படைப்புகள் மூலம் ஆண் எழுத்தாளர், பெண் எழுத்தாளர் என்று பகுப்பது பற்றி..?

குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு

10. இணையத்தில் வானொலி சேவை செய்கிறீர்களா..?

ஆர்வமிருக்கிறது. ஆனால் நேரமில்லை.

11. பத்து வருட கால பத்திரிகையாளாராக நீங்கள் பெற்றவை.?

ஈடு இணையற்ற நிலாக் குடும்பம், ஆழ்ந்த அனுபவம், மிகுந்த தன்னம்பிக்கை.

12. விளம்பரமில்லாமல் அயல்நாட்டிலிருந்து தமிழ்ச்சேவை செய்யும் உங்களைத் தமிழ்நாடு அடையாளம் கண்டுள்ளதா?

தமிழ்ச் சேவை????

13. தங்களின் அடுத்த படைப்பு?

தலைக்குள் நூறு நாவல்கள் ஆயிரம் சிறுகதைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இறக்கி வைக்க நேரமில்லை. உடனடியாக ஒரு சிறுகதையாவது எழுதவேண்டும் என்ற உந்துதல் இருக்கிறது. கேள்விகளுக்கு பதிலெழுதும் யோசனையும் இருக்கிறது.

14. படைப்பாளிகளினால் சமுதாய மாற்றம் சாத்தியமா?

நெடுந்தொடர்கள் நம் சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் மாறுதல்களைக் கண்டுமா இந்தக் கேள்வி?

15. உங்களுடைய கதைகளில் மிகவும் சிக்கலான மன உணர்வுகளை வெளிக்கொண்டு வருகிறீர்கள் (எ.கா: கருவறைக் கடன், கரு). கதைக் கரு மட்டுமல்ல… பாத்திரப் படைப்பு, அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு என மனதைத் தொடும் வண்ணம் உங்களால் எப்படி படைக்க முடிகிறது? எப்படி கதைக் கருவைத் தெரிவு செய்கிறீர்கள்?

மனிதர்களில் மிகவும் மென்மையானவர்கள் என்ற ஒரு வகை உண்டு. அவர்களால் உணர்வுகளை ஆழமாக உணர முடியும். அந்த வகையை நான் சார்ந்திருப்பதால் என்னைச் சுற்றி வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என்னை அதிகம் பாதிக்கின்றன; நெகிழ வைக்கின்றன. இது இயல்பாய் நடப்பதால் கதைக் கருவைத் தேடி நான் போக வேண்டி இருப்பதில்லை மற்றும் அதனை வெளிப்படுத்த வார்த்தைகளையும் தோண்ட வேண்டிய தேவை வந்ததில்லை.

16. உங்களை எப்படி வரையறுப்பீர்கள்?

தெரிந்திருந்தால் எப்போதோ ஞானியாகி இருப்பேனே! :-))

17. நீங்கள் ஆன்மீகவாதியா? நாத்திகவாதியா?

இப்படி வரையறுக்கப்படுவதை விரும்பாத ஒரு மனுஷி என்று கொள்ளலாம்

18.சுகமளிப்பதில் ஆர்வம் காட்டுகிறீர்கள்… ஆவி உலகத் தொடர்பு கொள்ளும் மீடியமாக இருக்கிறீர்கள்… கொஞ்சம் விநோதமாக இருக்கிறது. எது உங்களை இந்தப் பாதையில் திருப்பியது?

பெரிய கதை. பின்பு விரிவாய் நூல் எழுதுகிறேன்.

19. இந்தப் பாதையில் என்ன கிடைத்திருக்கிறது உங்களுக்கு?

எல்லாம் நலமே என்கிற நம்பிக்கை கிடைத்திருக்கிறது (அவ்வப்போது அது போய் திரும்பி வந்தாலும்).

About The Author

1 Comment

 1. Hema

  //மகளாகவும், சகோதரியாகவும், மனைவியாகவும், தாயாகவும் வாழ்வது போக தானாகவும் வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்த விரும்புகிறேன்.//

  இதை பற்றி சற்று விரிவாக சொல்லுங்களேன். தங்களுடைய சுகமளித்தல் பற்றி விரைவில் ஒரு கட்டுரை எதிர்பார்க்கலாமா?
  //நீங்கள் ஆன்மீகவாதியா? நாத்திகவாதியா?

  இப்படி வரையறுக்கப்படுவதை விரும்பாத ஒரு மனுஷி என்று கொள்ளலாம்//

  தங்களது பதில்கள் அனைத்தும் தாங்கள் வரையறைக்கப்பாற்பட்டவர் என்றே உணர்த்துகிறது. தங்களது புதிய படைப்புகள், கேள்வி-பதில்களுக்காக-ஆவலுடன் காத்திருக்கிறோம். நன்றி.

Comments are closed.