கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

புத்த மதத்தில் ஒரு பூமியோகம்

பூமியைத் தொட்டு வணங்குதல் (Touching the earth) என்று புத்த மதத்திலிருந்து பரிணமித்த ஒரு யோகா முறை இருக்கிறது. இதன் மூலம் நம்மிடம் மகிழ்ச்சி, இரக்கம், அன்பு, சகோதரத்துவம் ஆகிய நல்ல பண்புகள் வளருகின்றனவாம். இந்த முறையை பழகும் போது பூமியை ஆறு முறை மிக அழுத்தமாகத் தொடவேண்டும்.

நமது நெற்றி, கால்கள், கைகள் இவைகளால் பூமியைத் தொட்டு வருடுகையில் நமது அகங்காரம், பயம், வெறுப்பு ஆகிய எதிர்மறைப் பண்புகளை சரணடையச் செய்கிறோம். நமது மனமும் உடலும் ஒரு முழுமையை அடைகிறது. நாமும் அன்னை பூமியும் வேறல்ல என்ற ஒரு ஞானம் ஏற்படுகிறது.

இந்த முறையின் போது நமது உள்ளங்கைகளை ஒன்று சேர்த்துக் குவித்து எட்டுத் திசைகளையும், வானம், பூமியையும் நோக்கி வணங்குகிறோம். இது போல் ஆறு முறை பூமியை தொட்டு வணங்குவது இந்த யோக முறையின் சிறப்பு.

ஒவ்வொரு முறை இந்த யோகாவைச் செய்யும்போதும் நாம் அகத்தை உற்று நோக்குகிறோம். நமக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உள்ள தொடர்பை நினைவுபடுத்திக் கொள்கிறோம். நாம் இதுவரை வெறுத்தவர்களிடம் அன்பு செய்யத் தொடங்குகிறோம். அவர்களது நல் வாழ்வை விரும்பி வேண்டுகிறோம்.

இந்த யோக முறையை குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாகச் செய்யும்போது நாம் – உடலிலும், உள்ளத்திலும் – புது சக்தி பெற்றவர்களாக உணர்வோம். வாழ்க்கையை ஒரு புன்னகையோடும் புதுப் பொலிவோடும் ஏற்றுக் கொள்ளும் சக்தி பிறக்கும்.

செட்டியார் – நல்ல செட்டியார்!

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஆரிங்டன் சாலை வரை (தற்போதைய டெய்லர்ஸ் ரோடு) உள்ள நிலப்பரப்பு "தாட்டிகொண்ட நம்பெருமா செட்டியார்" என்பவருக்கு சொந்தமாக இருந்தது. அதனால், ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், ‘செட்டிபேட்டை’ என மருவி, இன்று, ‘செட்பெட்’ (தமிழில் சேத்துப்பட்டு!) என மாறிவிட்டது. அப்போது இருந்த ஆங்கிலேய அதிகாரிகள், செட்டியாரின் நிலத்தை வாங்கி அவரையே வீடுகள் கட்டித் தரும்படி கேட்டுக் கொண்டனர். அப்பகுதியில் இன்றும் அநேக வீடுகள் ஆங்கிலேயப் பெயர்களாக காசா மேஜர், ஜார்ட்ஸ் கார்டன் (தற்போது சமூக சேவா பள்ளி) ஹாரிங்டன், பாந்தியன் என்ற பெயர்களுடன் விளங்குகின்றன.

சென்னையிலுள்ள பல பிரசித்தி பெற்ற, சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கிய கட்டிட மேதை இந்த தா.ந.செட்டியார்தான்! பாரிமுனையில் உள்ள ஐகோர்ட், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.

பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த இவரது மாளிகை, ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன், சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில் உள்ளது. இது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. காலம் சென்ற கணித மேதை ராமானுஜம் தன் கடைசி நாட்களை இந்த செட்டியார் வீட்டில்தான் கழித்தார்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு காசநோய் அதிகமாகி விட்டதால் அவரது உறவினர்கள் பயந்துபோய் திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது, பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் பலியானார். தமிழ்நாடு மிகப் பெரிய கணிதமேதையை இழந்தது. அவர் கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக் கொள்ள உறவினர்கள் மறுத்தனர். ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ் இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்ற முதல் வைசியர் நம்பெருமாள்; முன்னாள் இம்பீரியல் வங்கி (தற்போது எஸ்.பி.ஐ.) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர்; சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் (பிரெஞ்ச் டிட்கன்) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்தக் கார் யுனைடெட் கம்பெனியின் சேர்மன் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் சொந்த உபயோகத்திற்காக நான்கு பெட்டிகள் தனி ரயில் வண்டியே வைத்திருந்தார்.

தான் சேமித்த பணத்தில் பெரும்பகுதியை மொழி வளர்ச்சி, கோவில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்ற சமூக சேவைகளுக்கே செலவழித்தார் செட்டியார்.

(சென்னைக்கு வயது 370 – செய்திக் குறிப்பு : தினமலர்)

அந்த நல்ல நாலு பேர்!

தமிழகத்திலிருந்து பீகாருக்கு கடத்தப்பட்ட ஒரு சிறுவன் பொறுப்பு வாய்ந்த காவல்துறை அதிகாரி ஒருவரின் கண்காணிப்பில் அங்கு இருக்கிறான், அவனுடைய பெற்றோர்கள் பற்றிய தகவல்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என்ற செய்தி ஒரு தமிழ்ப் பத்திரிகையின் மூலம் பலரின் கண்களில் பட்டது. சேவாலயா தொண்டு நிறுவனத்தின் முரளியின் கண்களிலும் பட்டது. வித்தியாசமே அங்குதான்.

அவன் பெற்றோர்களைக் கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் வரை சேவாலயாவின் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தில் தங்க வைத்துக் காப்பது என்று முடிவு செய்யப்பட்டது. பின் பாட்னா சென்று அங்குள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் அவர்களின் உதவியோடு சென்னையில் சேவாலயாவிற்கு செப்டம்பர் 20ந்தேதி அழைத்து வந்தார் முரளி. சேவாலயா தொண்டர்கள் சிறுவன் சாயியுடன் பேச்சுக் கொடுத்ததில், மிகுந்த பிரயாசைக்குப் பின்பு அவன் பெற்றோர்கள் ஆந்திராவில் விசாகப்பட்டணம் அருகில் உள்ள அனகபள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. பின் ஆந்திர காவல் துறை அதிகாரிகளுடன் வந்த சாயின் பெற்றோர்களிடம் அவன் ஒப்படைக்கப்பட்டது இந்த நீண்ட தேடலின் சுபமான முடிவாக அமைந்தது. "என் சொத்து எனக்குக் கிடைத்துவிட்டது" என்று கண்ணீருடன் சாயியை அணைத்துத் தேம்பும் பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு ஏது ஈடு?

பீகாரின் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், சிறுவனைப் பெற்றோர்களிடம் எப்பாடு பட்டாகிலும் சேர்த்தே தீருவேன் என்ற முனைப்புடன் செயல்பட்ட சேவாலயா முரளி, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சிதான் கடத்தப்பட்ட சிறுவனை அவன் பெற்றோர்களுடன் சேர வைத்திருக்கிறது.

வன்முறைகளையும், பாலியல் பலவந்தங்களையும், கொலைகளையும் பற்றிய செய்திகளையே படித்து மனித இனத்தின் மீது நம்பிக்கை இழந்து இருக்கும் வேளைகளில் அவ்வப்போது மின்னல் கீற்று போல வரும் இவ்வாறான செய்திகள் நம்பிக்கையை மலர வைக்கின்றன.

மாமியார்களுக்கு ஒரு மன்றம்!

அ.இ.மா.பா.க – குழம்ப வேண்டாம்! – இது அனைத்திந்திய மாமியார்கள் பாதுகாப்புக் கழகத்தின் சுருக்கம்.
தொலைக்காட்சிகளில் மாமியார்களை ஒரு கொடுமையான அரக்கியாக சித்தரிப்பது போன்ற பல தவறான கருத்துக்களை எதிர்த்து கொடி தூக்கி சுமார் 500 மாமியார்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கழகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரம்பமே களை கட்டியிருக்கிறது. பல்கலைக்கழக பேராசிரியைகள், ஒரு பிரபல அறுவை சிகிச்சை மருத்துவர் என பெங்களூரு, சென்னை ஆகிய முக்கிய நகரங்களிலிருந்து உறுப்பினர்களாக இணைந்திருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு Save India Family Foundation என்ற சமூக அமைப்பு முழு ஆதரவை அளித்திருக்கிறது. இந்த அமைப்பு கொடுமைப் படுத்தப்பட்ட கணவர்களுக்காகவும் பாடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

இதன் உறுப்பினர்கள் மருமகள்களாலும், மருமகன்களாலும் ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்களாம். மாமியார்கள்தான் மருமகள்களை கொடுமைப்படுத்துவது போல் பொதுவாக சித்தரிக்கப்பட்டாலும் உண்மை பல சமயங்களில் வேறு விதமாக இருக்கிறதென்பது இவர்கள் கட்சியின் வாதம்.

இந்த குடும்ப வன்முறைகளை மௌனமாக பல மாமியார்கள் சகித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை போன்ற பல தவறான வழக்குகளைத் தொடுத்து ‘மாமியார்’ வீட்டுக்கு அனுப்பிவிடுவதாக குறைபட்டுக் கொள்கிறார்கள் மாமியார் கழக உறுப்பினர்கள்!

எனக்கு எதுக்கு மாலை?

ஒருமுறை திருச்சிக்கு வந்திருந்த அப்போதைய முதலமைச்சர் காமராஜரைச் சந்திக்க, மாலையுடன் ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும் வந்திருந்தார். அவரைக் கண்ட காமராஜர் கோபமாக "படிக்காதவங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுங்கன்னு சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கீங்களே" என்று கேட்டாராம்! (இப்போதெல்லாம் வெறுங்கையோடு போனால் "மாலை கூட இல்லாமல் எதுக்கு வெட்டியாக வரணும்னேன்" என்று பாய்வார்கள்)
.

About The Author

4 Comments

  1. P.Balakrishnan

    சேத்துப்பட்டுக்கு நம்பெருமாள் பேட்டை என்று பெயர் வைத்தால் அவரைப் பற்றிய வரலாறு மறையாமல் இருக்கும்.

  2. Rishi

    //(இப்போதெல்லாம் வெறுங்கையோடு போனால் மாலை கூட இல்லாமல் எதுக்கு வெட்டியாக வரணும்னேன்” என்று பாய்வார்கள்) //

    :-))”

Comments are closed.