கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 31

யமுனாவைத்தான் என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பிப் போனாள் கங்கா.

"எங்க வீட்ல தங்கிப் படிக்கட்டுமே. அவளும் எங்க வீட்டுப் பொண்தானே" என்று மங்கை சொன்னபோது ஒரேடியாக மறுத்தவன் விக்ரம்தான்.

"ஹாஸ்டல்ல இருந்தாத்தான் வாழ்க்கைன்னா என்னென்னு தெரியும்" என்று விடாப்பிடியாய் ஹாஸ்டலில் கொண்டு சேர்த்தான்.

"நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க, ஆன்டி. இனி அவள் என் பொறுப்பு" என்று விக்ரம் தன் கைபிடித்துச் சொன்ன போது கங்காவுக்கு மலையொன்று மனதிலிருந்து அகன்றது போலிருந்தது.

கங்கா கிளம்பிய ஒரு மாதத்தில் விக்ரமும் இங்கிலாந்துக்குப் பயணப்பட்டான்.

"தினம் மெயில் அனுப்பணும். வாரம் ஒரு தடவையாவது ஃபோன் பண்ணணும். எவ பின்னாடியாது அலைஞ்சேன்னு தெரிஞ்சது, மவனே கொலைதான்" என எச்சரித்து அனுப்பி வைத்தாள் யமுனா.

***

இரண்டாவது ஆண்டு விடுமுறையில் யமுனாவும் விஜியும் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார்கள். போகும் வழியில் இலண்டனில் ஒரு வாரம் செலவழித்தார்கள்.

"நான்தான் கூடப் போறேனே… தைரியமா அனுப்பி வைங்க" என்று விஜி பெரியவர்களைச் சரிக்கட்டி இலண்டன் பயணத்துக்குச் சம்மதம் வாங்கியிருந்தாள். யமுனா அவளுக்கு சிலை வைக்காத குறைதான்.

"எல்லாம் சரிதான். ஆனா அங்கே வந்து கரடி மாதிரி தொந்தரவு பண்ணக் கூடாது. ஏதாவது பண்ணினே. அப்புறம் யு.எஸ் போனதும் அதையே நீ அனுபவிக்க வேண்டியிருக்கும், ஜாக்கிரதை" என ப்ளாக்மெயில் செய்திருந்தாள் யமுனா.

ஏர்ப்போட்டில் அவனைப் பார்த்ததும், "ஹே, மை மாமூ" என்று ஓடிப்போய் கூச்சமில்லாமல் கட்டிக் கொண்டதிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறும் வரை யமுனாவை விக்ரமிடமிருந்து பிரித்து வைப்பது பகீரதப் பிரயத்தனமாகத்தானிருந்தது விஜிக்கு.

"இதப் பாரு, இப்போ நீ என் பொறுப்பிலே வந்திருக்கே. ஏதாவது தப்பு கிப்பு நடந்திச்சு, என் தலைதான் உருளும். அப்புறம் ஒவ்வொரு வருஷமும் நீ விக்கியைப் பாக்கறதும் நான் ஷங்கியைப் பாக்கறதும் வெறும் கனவுதான். கொஞ்ச நாள் அடக்க ஒடுக்கமா இருடீ" என்று கெஞ்சாத குறையாக அவளை அடக்கி வைத்தாள்.

லண்டனிலிருந்து நேராய் நியூயார்க் சென்று கங்காவுடன் இரண்டு வாரமும் பின் ஷங்கர் குடும்பத்துடன் இரு வாரமும் இருப்பதாய் ஏற்பாடு.

கங்காவின் அபார்ட்மென்ட் மிக வசதியாக இருந்தது. அலங்கரிப்பில் செல்வச் செழிப்பு தெரிந்தது. அப்பழுக்கில்லாமல் தூய்மையாய் இருந்தது.

"நீங்களாம்மா வீட்டை இவ்வளவு நீட்டா வச்சுக்கறீங்க?" யமுனா அதிசயித்துக் கேட்டாள்

"நோ..நோ… தினமும் காலையில ஒரு வேலைக்காரி வருவா"

அமெரிக்காவில் வேலைக்காரி வைத்துக் கொள்ள மிகவும் செழிப்பாய் இருக்க வேண்டும் எனக் கேள்வியுற்றிருக்கிறாள் யமுனா.

"பிடிச்சிருக்காம்மா?"

"ம்ம்ம்" உதட்டைச் சுழித்து யோசனையாய்த் தலையாட்டிய கங்கா, "கொஞ்சம் லோன்லியா இருக்கு" என்றாள்.

"இங்கே இண்டியன்ஸ் யாரும் இல்லையாம்மா?"

"இருக்காங்களே" கங்காவின் குரலில் இருந்த சோகம் யமுனாவை என்னவோ செய்தது. அதற்குத் தானும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்வில் குறுகினாள். தினமும் தன் தாய் எழுதும் மூன்று மின்னஞ்சல்களுக்கு மாதம் ஒரு பதிலனுப்பினால் அதிகம். அவளுக்குத்தான் வேறு யார் இருக்கிறார்கள்? தன் தாயின் தோளைப் பாசத்தோடும் பச்சாபத்தோடும் அணைத்துக் கொள்கிறாள்.

கங்கா ஏதோ கேட்க நினைப்பதும் தயங்குவதுமாயிருப்பதைப் பார்த்துவிட்டு, "என்னம்மா?" என்றாள் யமுனா கனிவுடன்.

"எப்படியிருக்காங்க?"

"யாரு?" என்று கேட்டவள் சட்டென்று விளங்கியவள் போல, "அஞ்சலிம்மாவா?"

ஆமெனத் தலையாட்டினாள் கங்கா.

"ப்ச்… பரவால்ல. மெல்ல மெல்ல நடக்கறாங்க. இன்னும் பேச வரலை. இன்னும் தன்னால சாப்பிட, குளிக்க முடியலை" என்று துயரத்தோடு சொன்னவள், "தங்கக் கலசம்போல பளபளன்னு எப்படி இருப்பாங்க!" என்று ஒரு பெருமூச்சோடு முடித்தாள்.

"யார் பாத்துக்கறாங்க?"

"முழு நேரமா கூட சுசீலாம்மா இருக்காங்க. அப்பா நல்லா பாத்துக்கறார். ஆஃபீஸ்லருந்து நேரத்துக்கு வந்திடறார். வீக் எண்ட்லாம் கூடவே இருக்கார். நான் அப்பப்ப போய்ப் பார்த்துட்டு வருவேன். அஞ்சலிம்மாவுக்கு என்னை அடையாளம் தெரியுது"

"பேச்சு வந்திடுமாமா?"

தன் தாயின் இந்த அக்கறை அஞ்சலியின் மீதா தன் தந்தை மீதா என்று யமுனாவுக்கு சந்தேகமாக இருந்தது.

"நீங்களே அப்பாகிட்ட கேக்க வேண்டியதுதானேம்மா?"

எதிர்முனையில் பதிலில்லை.

"நீங்க எப்போம்மா இந்தியா வரப்போறீங்க?"

"ஏன் வரணும் யமுனா? அதான் இதோ உன்னைப் பார்த்தாச்சு. வேற என்ன இருக்கு எனக்கு இந்தியாவில?"வெறுமையுடன் கேட்டாள்.

"நீ அடுத்த வருஷமும் வந்துட்டுப் போடா" என்றாள் தொடர்ந்து.

"ஸாரிம்மா… அடுத்த வருஷம் விக்கி இந்தியா வர்றான்"

"ஓ… அஃப் கோர்ஸ்" ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சமாளித்தாள் கங்கா.

கங்கா இரு வார விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களை நியூயார்க், வாஷிங்டன், நயாகரா என அழைத்துச் சென்றாள். அவர்கள் விடைபெறும்போது கண்கலங்கி, "இவளைக் கொஞ்சம் பாத்துக்கம்மா" என்றாள் விஜியிடம்.

(தொடரும்)

About The Author