கந்தர்வ வீணைகள் (8)

இந்த இரண்டு, மூன்று நாட்கள் சஞ்சய்க்கு பொழுது சுகமாகப் போனது. இனிமையாகப் போனது. ப்ரியாவுடன் கண்ணாமூச்சி ஆடுவதும், அவளுக்குப் பிடித்த விளையாட்டுக்களை விளையாடிப் பார்ப்பதிலும், நினைத்தால் பிரிஜ்ஜை திறந்து ப்ரீசரிலிருந்து ஐஸ்கிரீம் எடுத்து கப்பில் போட்டு ஸ்பூனுடன் தருவதும்.. பிஸா.. ஸ்வீட், ஹோட்டல் என்று பொழுது மிக இனிமையாகச் சென்றது.

சொன்னதுபோல் மறுநாள் காலை 10 மணி சுமாருக்கு ப்ரியாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள் ப்ரவீணா. அவளுக்குத் தேவையான உடமைகள் ஒரு சோல்டர் பையில்..

”சமத்தா இருக்கணும் ப்ரியா. அங்கிளுக்கு தொந்திரவு தரக் கூடாது. அங்கிள் சொன்னபடி கேக்கணும்..”

”முதல்லே நீங்க.. நான் சொன்னபடி கேளுங்க.. சமத்தா இருக்கிற குழந்தைககிட்ட ச்சும்மா சமத்தா இருக்கணும். சமத்தா இருக்கணும்ன்னா என்ன அர்த்தம்.. அவளை நீங்க அசடாக்கிறீங்க..?”
ப்ரியா கை தட்டி சிரித்தாள்.

”அங்கிள் சொல்றதுதான் ரைட். நீ சமத்தா ஊருக்குப் போயிட்டு வா மம்மி. நான் அங்கிளை பத்திரமா பாத்துக்குறேன்..”

அவர்கள் சிரித்தார்கள்.

”என்னங்க முத முதல்லே எங்க வீட்டுக்குக் குழந்தையோட வந்திருக்கீங்க? என்ன சாப்பிடுறீங்க?” என்றான் இவன்.

”லேட்டாச்சு. நீங்க கேட்டதே சாப்பிட்ட மாதிரிதான். நான் ஊரிலே இருந்து திரும்பி வந்ததும் சாப்பிடறேன்..”
சிரித்தபடி கூறினாள் ப்ரவீணா.

”குட்டி பிளாட்தான். ஆனாலும் அழகாய் இருக்கு. நீட்டா வைச்சிருக்கீங்க.. அட புக் ஷெல்ப் பூரா புத்தகம்..”

”பின்னே புக் ஷெல்பிலேய புத்தகம்தான் இருக்கும். சமையல் பாத்திரமா இருக்கும்..?”

”ஜோக்கா.. அட.. தொலைந்து போன வானங்களைப் பத்திரமா வைச்சிருக்கீங்க.. பிரிச்சுப் படிக்கவே இல்லையா..?”

இவன் அவளைப் பார்த்தான்.

இவன் ஒவ்வொரு பக்கமாக ரசித்துப் படித்ததை எப்படிச் சொல்லுவான்..?

ப்ரவீணாவின் நினைவுகளைப் பிரித்துப் பிரித்து ஆராய்ந்ததை எப்படிச் சொல்லுவான்..?

”அடுத்த புஸ்தகத்துக்கு புள்ளையார் சுழி போட்டிருக்கேன். இன்னும் ஆரம்பிக்கலை.. நேரமே இல்லை..”

”பரவாயில்லைங்க.. நீங்க கவிதையா எழுதித் தள்ளுறீங்க.. அடுத்த புஸ்தகத் தலைப்பு என்ன? காணாமல் போன கனவுகளா..?”

”அட.. இந்த டைட்டில்கூட நல்லாத்தான் இருக்கு. இது அடுத்த புஸ்தகத்துக்கு.. இப்போதைய புஸ்தக டைட்டில் என்ன தெரியுமா.?”
கந்தர்வ வீணைகள்..

மனித வீணையாக இருந்தால் நாம மீட்டலாம். கந்தர்வ வீணையை மீட்ட ஒரு கந்தர்வனுக்காகக் காத்திருக்கணும்.
அவள் சிரித்தபடி ப்ரியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு இவனுக்கு டாட்டா சொல்லியபடியே விடைபெற்றாள்.

குழந்தை ப்ரியா ரொம்ப சமர்த்து.. தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்கிறாள். மேக்கப் போட்டுக் கொள்வது.. சாப்பிடுவது.. எதற்கும் மற்றவரின் உதவியை நாடாமல் தானே பார்த்துக் கொள்கிறாள்.

”அங்கிள்.. தட்டு வைச்சாச்சு.. சாப்பிட வர்றீங்களா? அப்பவே டிபன் பாக்ஸ் வந்தாச்சு அங்கிள்.. சூடு ஆறறதுக்குள்ளே சாப்பிட்டிரலாம்..”

”அங்கிள் பாத்ரூம் போகும்போது மறக்காம டவல் எடுத்திட்டுப் போங்க.. பாதி குளிக்கும்போது சோப்பைத் தேடாதீங்க..”

யாரை, யார் பார்த்துக் கொள்கிறார்கள் என்று புரியாமல் ரொம்ப சமர்த்தாக செயல்படும் குழந்தை..

போகோ டிவி சேனலில் மிஸ்டர் பீன் காட்சிகளைப் பார்த்துவிட்டு விழுந்து, விழுந்து சிரிப்பாள்.

”அங்கிள், இந்த மிஸ்டர் பீன் வேஷம் நீங்க போட்டா எப்படியிருக்கும்..?”

அசிங்கமாயிருக்கும்.. அவர் நடிக்கிறதையே நிறுத்திடுவார் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

ரோவன் அட் கின்சன் என்கிற அந்த பிரிட்டிஷ் நடிகர் குழந்தைகளிடம் மிக நல்ல பெயரை எடுத்திருக்கிறார். இவனுக்கு யாரிடமும் நல்ல பெயர் கிடையாது. சின்ன வயதில் அப்பா இவனை அலட்சியம் செய்தார். அம்மா, அப்பாவுக்குப் பயந்தே தன் அன்பை இவன் மீது காட்டப் பயந்தாள். தினம், தினம் தங்கை சுருதியுடன் ஏதாவது தகராறு..

இப்போது யோசித்துப் பார்க்கிறான். ப்ரியாவுடன் இவன் விளையாடும் இந்தத் தருணங்களில் பழையவற்றை நினைத்துப் பார்க்கிறான்.

தன்னை தன் தங்கை மிஞ்சுகிறாள் என்ற கோபம்தான் இருந்தது. அந்த கோபத்தில் பாசத்தை இழந்தவன் இவன். ஒரு நாளாவது தங்கையுடன் கண்ணாமூச்சி ஆடியதில்லை.

அம்மா தயிர் சோற்றைப் பிசைந்து வைத்துக் கொண்டு, ”சஞ்சு வர்றியாடா கையில சாப்பாடு போடுறேன்.. நீயும் சுருதியும் சாப்பிடுங்க..” என்று கூப்பிட்டால் கூட..

”அவ முதல்ல சாப்பிட்டுட்டுப் போகட்டும்.. அப்புறமா நான் வர்றேன்..” என்று ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டவன் இவன்.ரசிக்கும் நேரங்களை இழந்தவன் இவன்.அன்பின் ஸ்பரிசங்களை அலட்சியப்படுத்தியவன் இவன்.

இவன் தொலைத்த வானங்களில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். தனிமையில் நீந்தி வந்த தென்றலின் சுகங்கள்..

குடும்பப் பாசம், நேசம்.. உறவு.. இன்று அத்தனைக்கும் மனம் ஏங்குகிறது. ப்ரியாவுடன் விளையாடும் இந்தக் கணங்கள்.. அற்புதமானவை..

அவளுடன் கூட அமர்ந்து தனக்குப் பிடித்ததோ, பிடிககவில்லையோ.. அவள் ரசித்தக் காட்சிகளைத் தானும் ரசிப்பதாகக் காட்டிக் கொண்டு போலியாகச் சிரிப்பதில்கூட ஒரு அன்பின் வெளிப்பாடு இருக்கிறது. நேசத்தின் பதிவுகள் இருக்கின்றன.

தனக்காக மட்டும் வாழ்வது வாழ்வல்ல. மற்றவர்களின் உணர்வுகளை மதித்து வாழ்வதும் வாழ்வுதான் என்பதை இவன் மெல்ல, மெல்ல உணர்ந்து கொண்டபோது உறவுகளின் கூட்டத்தை விட்டு வெளியே வந்துவிட்ட உண்மை புரிந்தது.

தினம், தினம் சுருதி கல்லூரிக்கு புதிய ஸ்கூட்டியில் போவதும், இவன் அருகில் இருக்கும் டுடோரியல் காலேஜுக்கு நடந்து போவதும்.. தான் பெற்ற பரிசுகளை.. சர்டிபிகேட்டுகளை சுருதி தன்னிடம் காட்ட வந்தபோதெல்லாம் ஏதோ பெரிய முக்கிய வேலையில் இருப்பதுபோல் பாசாங்கு செய்து பாராமுகமாக இவன் இருந்தும்.. அன்று உறுத்தாத உண்மைகள் இன்று உபத்திரவிக்கின்றன.

”அம்மா…” என்று அழுதபடி சொன்னது இன்றுகூட நினைவில் இருக்கிறது.

”சஞ்சு.. சுருதியை இன்னும் காணலையப்பா.. இத்தனை நேரம் காலேஜ்ல இருந்து வந்திருப்பா.. இன்னிக்கு இன்னும் வரலை.. அப்பாவும் ஊரிலே இல்லை. நிலபுலனைப் பார்க்க கிராமம் போயிருக்கார்.. நீ போய் கொஞ்சம் பார்த்துட்டு வர்றியா..?”
இவனுக்கு எரிச்சல் வந்த நேரம் அது..

”எங்கே போகப் போறா..? எங்காவது பிரெண்ட்ஸோட அரட்டை அடிச்சிட்டிருப்பா.. தானே வருவா.. எனக்கு வேலையிருக்கு..”

”ஒரு வேலையும் இல்லை.. வெட்டி வேலைதான்.”. செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

இவன் வீடு திரும்பியபோது இரவு மணி பத்து.

வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம்..

பகீரென்றது.. வயிற்றில் ஏதோ அமிலம் சுரந்த உணர்வுகள்..

என்னவாயிற்று..?

இவன் உள்ளே வருவதற்கும், இவன் தந்தை வெளியே இருந்து பரபரப்புடன் வருவதற்கும் சரியாக இருந்தது..

அம்மாடி. என்றி இவன் தந்தை அலறிய அலறலில் இவன் ரத்தம் உறைந்தது..

அம்மா அரை மயக்கத்தில் அழுதபடியிருக்க..

அந்தக் கூட்டத்தில் சுருதி பிணமாகப் படுத்திருந்தாள்.

நினைவு நிழல்கள் கனலாய் கொதித்தன.
(தொடரும்)

About The Author