சத்யத்தின் கதை (2)

என்னவோ நடக்குது, மர்மமாய் இருக்குது!

‘கேப்பையில நெய் வடியுதுன்னு சொன்னா, கேக்கிறவனுக்கு புத்தி எங்க போச்சு’ என்று எங்கள் பாட்டி ஒரு வசனம் சொல்லுவார். அதுதான் நினைவுக்கு வருகிறது. I.T. மார்க்கெட் குறைகிறது என்று சத்யம் நிர்வாகம் சொன்னதும், ‘ஆஹா, அப்படித்தான் போல’ என்று நம்பி விட்டார்கள்(?) டைரக்டர்கள்.

மீட்டிங்குக்கு முன்னால் ராமலிங்க ராஜு, நாம் வேறு துறைக்கு மாறாவிட்டால் I.T.யில் I.B.M பூதம் நம்மை விழுங்கி விடும் என்று பயமுறுத்தியிருக்கிறார். அதற்கு இரண்டு நாள் முன்னால்தான் சத்யத்துடன் நான்காவது இடத்துக்குப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிற H.C.L. சொந்தப் பணம் கூட இல்லாமல் கடன் வாங்கி AXON என்ற I.T. நிறுவனத்தை வாங்கியிருக்கிறது. இதை விட வேடிக்கை, மீட்டிங் முடிந்ததும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மைனம்பட்டி தகவல் தொழில் நுட்பத் துறைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று விளாசிக் கொண்டிருக்கிறார். டைரக்டர்கள் வீட்டில் பேப்பர் வாங்குவதில்லை போல!!

அடுத்தபடியாக, Ernest & Young என்னும் தணிக்கை நிறுவனம் Maytas Capitalsஐ மதிப்பீடு செய்து ரூ. 6523 கோடி பெறும் என்று கணக்கிட்டுச் சொல்லியதாக அதிகாரிகள் அறிக்கை வைத்தார்கள். "அண்டப் புழுகு ஆகாசப் புழுகு! நாங்கள் சத்யம் கம்பெனி Maytasஐ எடுத்துக் கொள்வதற்காக மதிப்பீடு செய்து தரும்படிக் கேட்டுக் கொள்ளப்படவும் இல்லை; நாங்கள் அப்படிச் செய்யவும் இல்லை. Maytasக்காக வேறு இடத்தில் வேறு சந்தர்ப்பத்தில் சொன்னதை எல்லாம் தப்பான சந்தர்ப்பத்தில் பிரயோகிக்கிறார்கள்" என்று அதிரடியாகச் சொல்லி விட்டது Earnest & Young. அப்பவே நமக்கு சந்தேகம் வந்தது, போர்டு மீட்டிங்கில் சொன்னார்கள், மதிப்பீடு செய்தவர்கள் தங்கள் பெயரை வெளியிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் என.

இதுதான் போகட்டும், I.Tக்கு துளியும் சம்பந்தம் இல்லாத புதிய துறையில் பிரவேசிக்கப் போகிறார்கள். அதுவும் நிறுவனர்களுக்குத் தொடர்புள்ள கம்பெனியை வாங்கப் போகிறார்கள். முதலீட்டாளர்களின் அனுமதி தேவையில்லை என்றதும், "ஆஹா, ரொம்ப நல்லது" என்று தலையசைத்து விட்டார்களே டைரக்டர்கள்? சட்டப் புத்தகத்தின் சின்ன எழுத்துகளின்படி இந்த நிலைப்பாடு சரிதான். ஆனால் "தங்க மயில்" கார்ப்பரேட் தரமாக இல்லையே?

மேலும், ஒரு மனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அப்புறம் நிபந்தனைகளைப் போடுவானேன்? "நாங்கள் சொல்கிற விதத்தில் மதிப்பீடு செய்து கொண்டு வாருங்கள்; அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கலாம் அல்லவா?

சரிதான், போகட்டும். நிபந்தனைகளை மதித்தாரா ராஜு? போர்டு மீட்டிங் முடிந்த கையோடு நிதி பகுத்தாய்வாளர்களையும், முக்கிய முதலீட்டாளர்களையும் சந்தித்து முடிவை வெளியிட்டார். அந்த நிமிஷமே அத்தனை பேரும் அவரை மொலு மொலுவென்று பிடித்துக் கொண்டு விட்டார்கள். ஒரு குட்டிப் புரட்சியே நடந்து விட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ் வர்த்தகங்கள் நடந்து கொண்டிருந்தன. (நேர வித்தியாசம்) இந்தச் செய்தி தெரிந்ததுதான் தாமதம். சத்யத்தின் American Depository receipts (ADR) என்று அழைக்கப்படும் பங்குகள் 50 சதவீதத்துக்கு மேல் சறுக்கி விட்டன.

பார்த்தார் ராஜு, அடித்தார் பல்டி! "வாபஸ், வாபஸ். தீர்மானத்தை நிறைவேற்ற மாட்டோம்" என்று உறுதி அளித்தார். சரிந்த அமெரிக்க மார்க்கெட் பங்குகள் உயர்ந்தன. ஆனால், இந்திய முதலீட்டாளர்கள் இந்தக் கபட நாடகத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. 17ம் தேதி ஏறத்தாழப் பங்குச் சந்தையைப் புறக்கணிக்கவே செய்து விட்டார்கள். பங்குச் சந்தை வர்த்தகம் அன்றைய தினம் நடந்தது ஐந்தாண்டு காலத்தின் அடிமட்டம். சத்யம் பங்குகள் இருபது ரூபாய் அளவுக்கு வீழ்ந்து விட்டன.

சரிவை நிறுத்த சில வழிகளைக் கையாண்டார் ராஜு. "மார்க்கெட்டிலிருந்து பங்குகளை நிர்வாகமே வாங்கிக் கொள்ளும் (buy back). நம்மிடம்தான் உபரிப் பணம் இருக்கிறதே, அதிலிருந்து வாங்கிக் கொள்ளுவோம்" என்றார். இதற்கான போர்டு மீட்டிங் டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால் அமெரிக்காவிலிருந்து, சென்ற முறை தொலைபேசி மூலம் பங்கு கொண்ட கிருஷ்ண பலெலுவும் வினோத் தாமும், நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியபடியால் மீட்டிங் ஜனவரி, 10, 2009க்கு ஒத்திப் போடப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் டைரக்டர்களின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டும். "ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினோமே தவிர, நிபந்தனைகள் விதிக்கத்தான் செய்தோம்" என்றார்கள். முதலில் மங்களம் ஸ்ரீனிவாசன் தார்மிகப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். ராம் மோகன் ராவ், "அவசரப்பட்டு எதுவும் செய்யப் போவதில்லை; அடுத்த கூட்டத்தில் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்றார். வினோத் தாம், “சுலப வழியைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. போர்டு சந்தித்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவோம்” என்றார். இப்படிச் சொன்னார்களே தவிர, ஓரிரு நாட்களில் இவர்களும் ராஜினாமா செய்து விட்டார்கள். கிருஷ்ண பலெலுவும் ராஜினாமா செய்ய, மிஞ்சி நின்றவர்கள் டி. ஆர். பிரசாத்தும், (ஆபத்தில் சிக்கியுள்ள கப்பலிலிருந்து தப்பி ஓடுவது முறையாகாது!) வி.எஸ்.ராஜுவும் ராஜினாமா செய்யாத டைரக்டர்கள்.

ராஜு கையாண்ட இன்னொரு நடவடிக்கை, முதலீட்டு பேங்கர்களான D.S.P.Merril Lynch என்ற அமைப்பிடம், கம்பெனியில் இணைந்து பணியாற்ற, நன்கு திட்டமிட்டு செயல்படக்கூடிய பங்காளி (strategic partner) ஒருவரைச் சேர்த்துக் கொள்வது சம்பந்தமாக ஆலோசனை தரும் பொறுப்பைக் கொடுத்தார்.

அப்போது இடி போல இன்னொரு செய்தி வந்து சேர்ந்தது.

(தொடரும்)

About The Author