சினி சிப்ஸ் (24)

தடபுடலாக வருகிறது ‘குசேலன்’

ஜூலை 31ஆம் தேதி வெளியீட்டுக்கு தயாராகிறது ‘குசேலன்’. பிரமிட் சாய்மீரா நிறுவனம் இப்படத்திற்கு 1200 பிரிண்ட்கள் வெளியிடவுள்ளனர். படத்தின் விளம்பரத்திற்காக ரஜினிகாந்தின் ஸ்டில்ஸ் கொண்ட பஸ் ஒன்று சென்னையை விரைவில் வலம் வரவிருக்கிறது. போட்டிகளும் நடத்தவிருக்கின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு ‘குசேலன்’ ஸ்டில்ஸ் பதித்த டீ-சர்ட்ஸ், தொப்பிகள் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரஜினியின் 25 அடி உயர கட்-அவுட் அமெரிக்கா செல்கிறது என்பது விசேஷ செய்தி.

*****

பிஸியாகிறார் ஆர்யா

‘நான் கடவுள்’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் ‘சர்வம்’. இது தவிர, ஜீவாவின் ‘தாம் தூம்’ படத்தினை முடித்த ஜீ.கே.மணிகண்டனின் இயக்கத்தில் வரவிருக்கும் படத்திலும் ஆர்யா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹிந்தி, ஆங்கிலப் படங்கள் தயாரித்த மீடியா குளோபல் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது.

*****

போலீஸ் ஆபீஸராகத் தோன்றும் ரிச்சர்ட்ஸ்

சுரேஷ் குமார் இயக்கும் ‘தமிழகம்’ படத்தில் போலிஸ் ஆபீஸராகத் தோன்றுகிறார் ரிச்சர்ட்ஸ் என்கிற ரிஷி. ஆற்காட் நவாப் இளவரசர் முகமது அப்துல் அலியின் மகன் ஆசிப் அலி இப்படத்தின் இசையமைப்பாளர். பூந்தமல்லியில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி படத்தின் ஹைலைட்டாக அமையும் என்று கூறி இருக்கிறார் இயக்குனர்.

*****

படத்திற்குள் படம்

எஸ்.ஏ.சந்திரசேகர் தாயாரித்து இயக்கும் அடுத்த படம் ‘பந்தயம்’. கதைப்படி படத்தின் நாயகன் நிதின் சத்யா தீவிரமான விஜய் ரசிகர். பேரரசு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘எம்.ஜி.ஆர்’ படப்படிப்பை நிதின் சத்யா காணச் செல்வதாகப் படமாக்கப்பட்டது. பிரகாஷ்ராஜ், சிந்து துலானி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

*****

ஸ்வீடனுக்கு செல்கிறது ‘மர்மயோகி’ குழு

6ஆம் நூற்றாண்டில் நடைபெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் தயாராகிறது ‘மர்மயோகி’. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதன் படப்பிடிப்பு ஸ்வீடனில் நடைபெற இருக்கிறது. கமலுடன் ஹேமமாலினி, கஜோல், அமிதாப் பச்சன் மற்றும் பலர் நடிக்கும் இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

*****

‘சத்யம்’ ரெடி

விஷால், நயன்தாரா நடித்த ‘சத்யம்’ படம் தெலுங்கில் ‘சல்யூட்’ ஆக சுதந்திர தினத்தன்று வெளியிடப்படுகிறது. 4 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் 23 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதன் வெளியீட்டுக்காக 600 பிரதிகள் தயார் நிலையில் உள்ளது.

*****

டைரக்டர் விஜய்யின் அடுத்த ரீமேக்!

ஹிந்தி படம் ‘கோஸ்லா கா ஹோஸ்லா’வின் ரீமேக்கான ‘பொய் சொல்ல போறோம்’ படத்தில் நாசர், நெடுமுடி வேணு, கார்த்திக், பியா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். "ரீமேக் செய்வது எளிதல்ல. என்னுடைய முதல் படமான ‘கிரீடமு’ம் வெற்றி பெற்ற ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்தான். ரீமேக் செய்யும் போது அதன் ஒரிஜினாலிட்டி கெட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறி இருக்கிறார் இயக்குனர் விஜய்.

*****

திருவள்ளுவருக்கு சமர்ப்பணம்

தன்னுடைய நீண்ட நாள் லட்சியமான ‘திருக்குறள்’ ஆல்பத்திற்கு தயாராகிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆல்பம் பற்றி கேட்ட போது, "திருக்குறளை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். மிகவும் கவனத்துடன் உருவாக்கும் இதனை திருவள்ளுவருக்கு சமர்ப்பிக்கிறோம்" என்று கூறி இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

*****

செய்திகள் இரண்டு :

* ‘வெடிகுண்டு முருகேசன்’ படத்தில் ஜட்ஜாக நடிக்கிறார் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி.
* ‘சுல்தான் – தி வாரியர்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் விஜயலக்ஷ்மி.

*****

About The Author