சில்லுனு ஒரு அரட்டை

எல்லோருக்கும் வணக்கம்!

எப்படியிருக்கீங்க? மாலிக், நம்ம பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியலையா? சவால் தொடருது.. ஒரு குறிப்பு வேணும்னா தர்றேன்.. ‘ஓரெழுத்துப் பேர்.. இந்தப் பேர் நிலாச்சாரல் கட்டுரைகளில் அடிக்கடி பார்த்திருப்பீங்க.. படைப்பாளியா இல்லைங்க.. பாத்திரப் படைப்பா..’

சமீபத்தில் நடந்த சட்டக் கல்லூரி சம்பவம் நினைச்சா இப்பவும் நெஞ்சு பதைக்குதுங்க.. இவங்கதானா சட்டத்தோட காவலர்களா பின்னாளில் உருவெடுக்கப் போறாங்க? மருத்துவம், பொறியியல் மாதிரி, நிறைய மதிப்பெண் எடுத்தாத்தான் சட்டம் படிக்க முடியும்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா, இந்த மாதிரி தடுக்கி விழுந்தவரெல்லாம் சட்டக் கல்லூரியில் மாணவராகறதைத் தடுக்க முடியும்ங்கறது என்னோட அபிப்ராயம். உங்க அபிப்ராயத்தையும் எழுதுங்க. இதை விட முக்கியமா, பள்ளிக்கூட விண்ணப்பப் படிவத்திலிருந்து ‘சாதி’ங்கற கேள்வியையே அகற்றிடலாம். இது நிரந்தரமா சாதிப் பிரச்சனையைத் தீர்த்திடும். இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அலுவலகத்துல வேலை பார்த்துட்டுருந்தப்போ (அலுவலகத்துல வேலைதான பார்க்கணும், அதைப் போய் பெருசா சொல்றதா நீங்க முணுமுணுக்கறது காதுல விழுகுது. என்னங்க செய்யறது, நான் தூங்கறதால்ல ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.) திரு. நம்பியார் இறந்த தகவல் வந்தது.. எவ்ளோ பெரிய மனிதர்! அவரோட பழைய நேர்காணலை பொதிகையில் ஒளிபரப்பிட்டிருந்தாங்க (அப்பப்ப சில நல்ல நிகழ்ச்சிகளும் பொதிகையில் வருதுங்க). துளசி தேநீர் குடிச்சுட்டே (இந்த மழைகாலத்துல சளி பிடிக்காம இருக்கணும்னா, நீங்களும் துளசி தேநீர் குடிங்க. எப்படி செய்றதுன்னு இங்க தெரிஞ்சுக்கலாம். https://www.nilacharal.com/tamil/marunthu169.html) பார்த்துட்டிருந்தேன். அவரோட பேட்டியில் அவருடைய மனைவியைப் பத்தி சொன்னது எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க: "தெய்வம் தந்த தெய்வம்"ன்னு சொன்னார். ‘என்னைத் தவிர இவ்வுலகத்தில் வேறொரு சிந்தனையே அற்றவள் அவள். ஏழேழு பிறவிகளில் நான் செய்த புண்ணியம் அவள் என் மனைவியாகக் கிடைத்திருக்கிறாள்’ன்னு சொல்லி, கூடவே சிரிச்சுட்டே, ‘ஏழேழு பிறவிகளில் அவள் செய்த பாவம் நான் அவள் கணவனாய் அமைந்திருக்கிறேன்’னார். நான் எங்க அப்பாவை அப்படியே பார்த்தேன்.. கண்ணாலேயே ‘இப்படி என்னைக்காவது அம்மாவை சொல்லிருக்கீங்களா?’ன்னு கேட்டு வச்சேன்.

நம்பியார் சுத்த சைவமாம். ஆனா அதுக்காக அவர் எல்லாரும் சைவமா இருக்கணும்னு சொல்லாம, அப்படி மாறிப் போனா பூமியில் புல் பூண்டு இருக்காதுன்னார். நமக்கு ஒரே சந்தோஷமாப் போச்சுங்க.. (நமக்கு சாதகமா இந்தத் தகவல் வேற: http://in.tamil.yahoo.com/Health/Issues/0809/18/1080918023_1.htm)

ஆனா திரு. நம்பியார் உடனே எனக்கு ஆப்பு வைப்பாருன்னு நான் நினைக்கலையே! அவர் பிள்ளைங்க வளர்க்கறதைப் பத்தி, "தானாக இரை தேடும் அளவு வளர்த்து விடும் வரைதான் நம் பொறுப்பு. அதற்கு மேல் பாசம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் துன்பம். நமக்கும் துன்பம். இந்த விஷயத்தில் மிருகங்களைப் பாருங்கள். ஒரு வயது வந்தவுடன் தன் குட்டிகள் நெருங்கி வந்தால், அடித்தோ, கடித்தோ விரட்டிவிடும். நீ உன் காலில் நின்று கொள் என்று. அது போலத்தான் மனிதனும் இருக்க வேண்டும்"ன்னு சொன்னதும், எங்கப்பா திரும்பி என்னைப் பாத்து ‘உன்னை அப்பவே பத்தி விட்டிருக்கணும்னு’ அதே கண்ணாலேயே சொன்னாரு பாருங்க, அன்னைக்கு ராத்திரி வருத்தத்தில் மூணு இட்லி கூட சாப்பிட வேண்டியதாப் போச்சு (ஹி.. ஹி.. வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா..)

சும்மா வெட்டியா இருந்தப்போ, இணையத்தில் இந்தத் தளம் கிடைச்சுச்சு.
http://generatorblog.blogspot.com/2008/10/babymaker3000.html
இந்தத் தளத்தில் அப்பா, அம்மா புகைப்படம் கொடுத்தா, குழந்தை எப்படி இருக்கும்னு காட்டிடும். (கற்பனை தாங்க) இப்படி ஒரு தளம் கிடைச்சா சும்மா இருப்போமா? இல்லாத சேட்டையெல்லாம் பண்ணிப் பார்த்துட்டோம்ல. என் நண்பன் தன் படத்தோட த்ரிஷா, நயன் தாரா புகைப்படமெல்லாம் போட்டுப் பார்த்தான். நேரம் கிடைக்கும்போது நீங்களும் பாருங்க. கலகலப்பா பொழுது போகும்..

காய்கறி விலையெல்லாம் சகட்டுமேனிக்கு ஏறிடுச்சுங்க. ஊர்ப்பக்கமா இருந்தா வீட்டுக்குப் பின்னாடி கொஞ்சம் நிலம் இருக்கும். வெண்டைக்காய், மிளகாய், தக்காளி விதைக்கலாம். சென்னை அடுக்குமாடியில் இதெல்லாம் எப்படி சாத்தியம்னு யோசிச்சு யோசிச்சு ஒரு வழி கிடைச்சுச்சு. நல்ல நீளமான CEMENT(கலப்புச் சுண்ணாம்பு) தொட்டி இரண்டு வாங்கி பால்கனியில் வச்சு மணல் போட்டு நிரப்பி வச்சேன். வீட்டில் கீரை வாங்கின அன்னைக்கு மீந்த தண்டெல்லாம், ஒரு தொட்டியில் ஊன்றி வச்சேன். எல்லாமே வளர்ந்துடுச்சு. இப்போ எனக்கு தினமும் 5 ரூ மிச்சம். ( சென்னையில் கொஞ்சூண்டு தண்டுக் கீரை 5ரூ.. கொஞ்சம் சத்தான கீரையெல்லாம் இதை விட அதிக விலை, அளவு குறைவு.) இன்னொரு தொட்டியில் தக்காளி, மிளகாய் விதை தூவி விட்டிருக்கேன். நமக்கு சாதகமா மழைச் சாரல் வேற அடிக்கிறதால, உடனே தளிர் விட ஆரம்பிச்சிருக்கு. நீங்களும் உங்க வீட்டில் ஒரு சின்னத் தோட்டம் போட்டுப் பாருங்க.. வாரத்திற்கு 20 ரூபாயிலிருந்து 50ரூ வரை மிச்சமாகும். ஒரே மாதத்தில் தொட்டிக்கும், மண்ணிற்குமான முதலீட்டை நீங்க திரும்ப எடுத்திடலாம். தோட்டக்கலையில் ஆர்வம் இருக்கிறவங்க உங்ககிட்ட உள்ள தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். நாலு பேருக்கு உபயோகமா இருக்கும்.

போன தடவை விமலா ரமணி கதை படிக்கப் போறதா சொன்னேனில்லையா.. அவங்க கதைகளெல்லாம் அற்புதமா இருக்குங்க.. உதாரணத்துக்கு இந்தக் கதையைப் படிச்சுப் பாருங்க:  https://www.nilacharal.com/stage/kathai/tamil_story_307b.asp
ஒரு ஐந்தறிவு உயிரை வச்சு ஒரு நல்ல கருத்தை ஆறறிவு உயிர்களுக்கு (நம்மளைத்தாங்க சொல்றேன்) உணர்த்திருக்காங்கல்ல?
//அன்பைத் தர வாரிசு தேவை இல்லை. வம்சம் தேவையில்லை. வாஞ்சை போதும். நேசிக்கும் மனமும், அன்பைச் சுவாசிக்கும் இதயமும் இருந்தால் போதும்!// இந்த வரி மனசைத் தொட்டிருச்சு.

நிலாச்சாரல்ல இன்னும் நிறைய கதைகள் இருக்குங்க..
https://www.nilacharal.com/ocms/log/subjectlist.asp?subjectid=கதை
இந்தப் பக்கத்திலேயே கீழே வந்தீங்கன்னா, "ARCHIVES" (பழைய தொகுப்புகள்) தலைப்புக்குக் கீழே, இன்னும் நிறைய சுட்டிகள் இருக்கும். அங்க நிலாச்சாரலோட ஆரம்ப காலத் தொகுப்புகள் முதற்கொண்டு எல்லாமே கிடைக்கும்.

என்ன அங்கங்க ஆங்கில வார்த்தை வர்ற இடத்துல தமிழ் வார்த்தையை அடைப்புக் குறிக்குள் கொடுத்திருக்கேன்னு பார்க்கறீங்களா? (தப்பா அர்த்தம் கொடுத்திருந்தா சொல்லுங்க), ஆமாங்க, முடிஞ்ச மட்டும் ஆங்கிலக் கலப்பில்லாம எழுதிருக்கேன. இப்படி நம்ம முயற்சிக்கு ஊக்கம் தர்ற வானொலிகளுக்கு நன்றி! எப்படின்னு கேட்டீங்கன்னா, அலைவரிசைகள்ல (நிகழ்ச்சிகள் மட்டுமில்லாம பேரையும்தான் பாருங்களேன் – RAINBOW, BIG, RADIO CITY, MIRCHIE!!) தமிழ் வார்த்தைங்கன்னு காதுக்குள்ள விழுறது ரொம்பக் குறைச்சல்: ‘வந்து’, ‘நீங்க’, ‘அது’ – இது மாதிரியான வார்த்தைங்க மட்டும் தான் தமிழ்ல் இருக்கான்னு சொல்ற அளவுக்கிருக்கு அவங்க பேச்சு! "ஆங்கிலம் 99% + தமிழ் 1% = தமிழ் அலைவரிசை". கேட்கறப்போல்லாம் கோபமாவும், வருத்தமாவும் இருக்கும்.. பாட்டுக்காகத்தான் கேட்டுட்டிருந்தேன். இப்பல்லாம் அலைபேசியிலேயே பதிவு பண்ணி கேட்க ஆரம்பிச்சுட்டேன். இவங்களை எப்படித் திருத்தறது? உங்க கிட்ட ஏதாவது வழி இருக்கா?

போன முறை நாஸ்ட்ரோடாமஸ் பத்தி கேட்டிருந்தேன்.. யாருமே சொல்லலையே? கடைசியா ஒரு நண்பர் தேடித் தந்தார்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..

http://www.nostradamus.org/

http://nostradamus2012.com/

இந்தத் தடவை என்னோட அரட்டை உங்களுக்கு ஓரளவுக்குப் பயனுள்ளதா இருக்கும்னு நம்புறேன். (சொர்ணாக்கா, ரிஷி, ஜி3 எல்லாரும் கலக்குறாங்க.. நான் அந்த அளவுக்குத் தேறுறேனான்னு நீங்கதாங்க சொல்லணும். ஒரு பின்னூட்டம் கொடுங்களேம்ப்பா..)

அன்புடன் விடைபெறுவது,

உங்கள் !?

About The Author

5 Comments

  1. Hema

    Very nice talk. You and your team is rocking. periya periya visayaththai simpla alzhaga sollureenga. Thanks to nila family.

  2. maleek

    கெளம்பிட்டார்யா கெளம்பி…….
    பூமில இருந்தா கண்டுபிடிச்சிரலாம்–நீங்க நிலா க்ருப் மேல வந்துல தேடனும்
    பொறுங்க …மிஸ்ட்ர் எக்ஸ்.அரட்டை கலிஃபோர்னியா குளிர் மாதிரி சில்லுனு
    இருக்கு.எங்கே இருந்தாலும் பின்னூட்டத்திற்கு வந்திருவோம்ல.சமயங்கள்லே
    டிராfபிக்கா இருந்தா சிரமம்{காயத்ரி மேடத்துக்கு வேற நெறயா நன்றிசொல்லனும்}

  3. !?

    வணக்கம் மாலீக்! பொறுமையா தேடி சொல்லுங்க.. உங்க பின்னூட்டம் தானே எங்களுக்கு ஊக்கமே! நீங்களும் ஒரு அரட்டையை அரங்கேற்றுங்களேன்..

  4. Rishi

    வாங்க மாலீக். எனக்கு அவங்க யாருன்னு தெரியும்.. அவங்க மிஸ்டர்.எக்ஸ் இல்ல… மிஸ்.எக்ஸ்.

    மிஸ். ?!, நான் போட்டு உடச்சிடட்டுமா?

    ஆமா. மாலிக்.. நீங்க அமெரிக்கால தானே இருக்கீங்க.. அரட்டைக்குத் தோதா ச்சில்லுனு படங்களை கேமராவுல சுட்டு அனுப்பறது..

Comments are closed.