சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

வெளியே லேசான தூறல், சிலுசிலுனு காத்து, சில நேரம் ஆளையே தள்ளிட்டுப் போற மாதிரியான காத்து (சும்மாவா! ஆடிக் காத்துல அம்மியே நகருமாமே!!), கையில கமகமக்கும் ஃபில்டர் காபியோட மறுபடியும் ஒரு சுவாரஸ்யமான ‘சில்லுனு ஒரு அரட்டை’க்குத் தயாராயிட்டேன். என்னதிது.. உப்புமாவிற்குப் பதிலா காபியோட இருக்கேனேன்னு சந்தேகமா பார்க்கறீங்களா? மழை பெய்யும் நேரத்தில்தான் நான் உப்புமாவும் கையுமா இருப்பேன். இந்த மாதிரியான சாரலுக்கு காபிதான் சரியான சாய்ஸ்.

‘ஜூன், ஜூலை மாதத்தில்…’ அப்படீன்னு பாட்டு எல்லாம் பாடப்போறது இல்லை. நல்ல கோடைக்கு (அப்போ கெட்ட கோடைன்னு இருக்கா என்ன?!) அப்புறம் வானிலை சாரலும் காத்துமா இருப்பது இதமா இருக்கு.

எல்லோரும் சூப்பரா இருக்கீங்க போல? கீதா மற்றும் சித்ராவின் பின்னூட்டங்கள் எல்லாம் படிச்சிட்டு மன்னை பாசந்தி சார் ஏக குஷியில இருக்காரு. கதை, கவிதை, ஆன்மீகம், கைமணம் இப்படி பலவகையான சுவைகளில் அவருடைய படைப்புகள் நிலாச்சாரலில் வந்திருக்கு. உங்களுடைய படைப்பு அடுத்து எந்த சுவையில இருக்கப் போகுது சார்?

கீதா மட்டும்தான் என்னுடைய கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஆறுதலா பின்னூட்டம் அனுப்பி இருந்தாங்க. மத்தவங்க எல்லாம் கப்சிப்னு இருக்கீங்க? சத்தமே இல்லை?

யாகவா, அந்த போட்டோல எவ்வளவு அழகா பாத்துண்டு இருக்கேன், இப்படி ‘திரு திரு’ன்னு முழிச்சுட்டு இருக்கேன்னு சொல்லிட்டீங்களே… முன்ன இருந்த மாதிரி இப்பவும் ‘துறு துறு’ன்னு இருக்கேன். என்னங்க அவ்வளவு பெரிய படம் போட்டும், (சத்தியமா படம் காட்டலீங்கோ!) படம் எங்கேன்னு கேக்கறீங்களே? Optical Illusion படம் பத்திதான் சொல்றேன். எப்படிப் போனாலும் இப்படி அணை கட்டினா எப்படி? என்னதான் செய்யறது? கீழே கடைசியா இருக்கும் படத்துல என்னவெல்லாம் உங்களுக்குத் தெரியுது சொல்லுங்க? (ஹையா! யாகவா மாட்டிக்கிட்டாங்க)

‘கடைசிக் கட்டி மாம்பழம்’ பத்தி கேட்டிருந்தீங்க இல்லையா? சின்ன வயசுல நான் பாட்டி வீட்டுல இருந்துதான் படிச்சு வளர்ந்தேன். அப்போ எல்லாம் அழாம, அடம்பிடிக்காம நான் சமத்தா சாப்பிட எங்க பாட்டி உபயோகப்படுத்தும் வார்த்தை இது. சாப்பாடு ஊட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே கதை சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ஆனால் எப்பவுமே கடைசியில சாதம் முடியற தருவாயில நான் ‘போதும்.. இது வேண்டாம்’னு சொல்லி ரகளை பண்ணுவேனாம். என்னை எப்படியாவது சாப்பிட வைக்க எங்க பாட்டி கண்டுபிடிச்சதுதான் இந்த கடைசிக் கட்டி மாம்பழ டெக்னிக். ரொம்ப சுவையா இருக்கும்னு சொல்லி என்னை தாஜா செய்து சாப்பிட வைப்பாங்க. நானும் அதை உண்மைன்னு நம்பி சாப்பிட்டுடுவேன் (நான்தான் ரொம்ப அப்பாவிப் பெண்ணாச்சே!). அப்புறம் கொஞ்சம் பெரியவளானதுக்கப்புறம், வெளியூரிலிருந்து தங்கைகளெல்லாம் பாட்டி வீட்டுக்கு வரும்போது, பாட்டி கையால சாதம் கொடுப்பாங்க. அப்போ அந்த கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு ஒரு அடிதடி நடக்கும் பாருங்க… இப்போவும் பாட்டி கையில சாதம் பிசைந்து போட்டா அதோட சுவையே தனிதான். கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு தனிச்சுவை இல்லேன்னு தெரிஞ்சாலும் ‘கடைசிக் கட்டி மாம்பழம்’ ஒரு தனி ஸ்பெஷல்தான். ஹப்பா… ஒரு வழியா கதை சொல்லி முடிச்சாச்சு!!

போன வார அரட்டையைப் படிச்சுப் பாராட்டின தேவி, ஹேமா, ஜனனி, மாலீக் மற்றும் எல்லோருக்கும் ரொம்ப நன்றி. 

உங்களுக்கு ‘Making of the Film’ தெரியும்னு நினைக்கிறேன். ஆனால் ‘Making of my அரட்டை’ தெரியுமோ? அது என்னன்னா… அதை இங்கே ஒலிவடிவ அரட்டையில சொல்லியிருக்கேன். கேட்டுதான் பாருங்களேன்.

நம்ம இந்தியாவின் முதன்மைப் பெண்கள் பட்டியல்ல முதல் பெண் பிரதமர், கவர்னர், ஐ.எஃப்.எஸ் அதிகாரி, விண்வெளி வீராங்கனை யார் யார்ன்னு (இவங்க எல்லாரையும்) நமக்குத் தெரியும். ஆனா முதல் பெண் முதல்வர், முதல் பெண் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, முதல் பெண் மந்திரி யாரா இருந்தாங்கன்னு உங்களுக்கு தெரியுமா? பரவாயில்லை Open book test மாதிரி இணையத்துல தேடிக் கூட சொல்லலாம்.

போன வாரம் நம்ம அரட்டையில சூரியகலாவின் பயிற்சி சம்பந்தமா பேசியது நினைவிருக்குமே? அவங்களுக்கு டில்லியிலிருக்கும் ‘ஷர்தக் கல்வி அறக்கட்டளை’யிலும் (Sharthak Educational Trust), பெங்களூரில் உள்ள ‘Enable India’விலும் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைச்சுது. பயிற்சி பத்தின விவரங்கள் தெரிந்து கொள்ள டில்லிக்கு போன் செய்த போது அறக்கட்டளையின் ஸ்தாபகரிடமே (Dr. Jitender Aggarwal) நேரிடையா பேசுவேன்னு எதிர்பார்க்கலை. பயிற்சி சம்பந்தமா பேசும்போது அவர் தன்னைப் பற்றியும் நிறையவே சொன்னார். பல் மருத்துவம் படித்து பல் மருத்துவராக தன்னுடைய பணியை தொடங்கும் வரை எல்லாம் இயல்பாகவே நடந்திருக்கு. திடீரென்று அவருடைய கண்ணின் மையப்பகுதியில் பார்வை கோளாறுகள் ஆரம்பிச்சுதாம். இதனால அவருடைய வாழ்விலும், மருத்துவத்துறையிலும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கு. இவ்வளவு நாளாக பார்வை இருந்து இப்போ கொஞ்ச நாட்களா பார்வையில்லாம நாம இவ்வளவு தவிக்கும் போது பிறவியிலேயே பார்வையற்றோ/சிறு வயதின் நோய் காரணமாகவோ பார்வையில்லாதவங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்கன்னு நினைத்து இந்த அறக்கட்டளையை ஆரம்பிச்சிருக்காரு. ‘ஷர்தக் அறக்கட்டளை’யில் பார்வையற்றவர்களுக்கு கணினியில் 6 மாதம் பயிற்சியளிக்கிறாங்க. பயிற்சி முடிந்ததும் அவர்களுடைய வேலை வாய்ப்புகளுக்கும் உதவி செய்யறாங்க. மேலும் விவரங்களுக்கு, அறக்கட்டளையின் இணையத்தையோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

http://www.sarthakindia.org
011-42004238

‘Enable India’வில் நிறைய பயிற்சிகள் அளிக்கிறாங்க. பார்வைற்றவர்களுக்கு மட்டுமில்லாம உடல் ஊனமுற்றவர்களுக்கும் பயிற்சியளித்து வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர்றாங்க. உதாரணமா 2011 ஆகஸ்ட்டு மாதம் 9ம் தேதியிலிருந்து CCCT (Career Centric Computer Training for Visually Impaired)ங்குற பயிற்சி தொடங்குறாங்க. இந்தப் பயிற்சி 9 மாதம் நடைபெறுமாம். இதில் ஆங்கிலப் பயிற்சி, கணினி பயிற்சி, பகுத்தாராய்கின்ற (Analytical) பயிற்சிகள் எல்லாம் அடக்கம். இது மட்டுமில்லாம பயிற்சிக் காலத்தின் கடைசி 2 மாதம் வேலை வாய்ப்புகளுக்கான நேர்முகத் தேர்விற்கும் இவங்களை தயார் செய்யறாங்க. இந்தியாவிலுள்ள 100க்கு மேலான கூட்டு நிறுவனங்களுடன் மட்டுமில்லாமல் அரசுடனும் தொடர்பில் இருப்பதால் இவர்களால் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் உதவிட முடிகிறது. மேலும் விவரங்களுக்கு, அறக்கட்டளையின் இணையத்தையோ அல்லது கீழ்க்கண்ட தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.

http://www.enable-india.org
080 42823636, 098453 13919

சூரியகலா ‘Enable India’வின் பயிற்சியில் சேர்ந்திட முடிவு செய்திருக்காங்க. அவங்களுடைய பயிற்சி நல்லபடியா முடிஞ்சு நல்ல வேலை கிடைத்து அவங்க வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்திடணும்னு கடவுளை வேண்டிக்குறேன். பெட்டி செய்தி – ராதா என்கிற இன்னொரு பெண்ணும் இந்த பயிற்சியை பங்கேற்று பயனடையவிருக்காங்க.

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் பல்வேறு திறமைகள் இருக்கு. இன்னும் சொல்லப் போனா நம்மை விட மாற்றுத்திறனாளிகளிடமும், பார்வையில்லாதவர்களிடமும் மிகுதியாகவே காணப்படும். சூரியகலாவிடம் நல்லா பாடும் திறனிருப்பது தெரியவந்தது. அவளுடைய குரல்வளம் எப்படி இருக்குன்னு கேட்டு பாத்து சொல்லுங்க.

 

Botanical Garden Flowersஇந்த வருடம் மார்ச் மாதம் இங்க பக்கத்துல இருக்கிற நம்ம ‘மலைகளின் ராணி’யைப் (நம்ம ‘ஊட்டி’யைத் தான் அப்படி சொன்னேன்) பார்க்கப் போயிருந்தேன். ஸீஸன் இன்னமும் ஆரம்பிக்காத நிலையில் கூட்டம் ஏதுமில்லாம அமைதியா சில இடங்களை பார்க்க முடிஞ்சுது. உங்களுக்குத்தான் ஏற்கெனவே தெரியுமே.. எனக்கு பூக்கள் என்றால் ரொம்பவே இஷ்டம். ஊட்டி Botanical Gardenல் இருக்கும் பூக்களுடன் நிறைய நேரம் இருந்தேன். அங்கே நான் பார்த்து ரசித்த பூக்களை நீங்களும் பார்த்து ரசிக்கலாமே?

போன வாரம் எதேச்சையா டிஸ்கவரி சானலில் ஒளிபரப்பாகிட்டிருந்த ‘Dual Survival’ நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. ஆரம்பத்துல சுவாரசியமே இல்லாம பார்க்க ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல என்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னே தெரியாத அளவுக்கு ஊன்றிப் பார்க்க ஆரம்பித்து விட்டேன். தேவ் (Dave Canterbury) மற்றும் கோடி (Cody Lundin) ஆகிய இருவரும்தான் இந்நிகழ்ச்சியின் கதாநாயகர்கள். நான் நிகழ்ச்சியைப் பார்த்த அன்று வட அமெரிக்காவில் உள்ள வயோமின் (Wyoming) என்ற பனி படர்ந்த காட்டிற்குள் இருவரும் நுழைந்து சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து வெளிவந்ததை ஒளிபரப்பினாங்க. அடர்ந்த காடு, கடுமையான பனிப்பொழிவு, இதைத் தவிர எதிர்பார்த்திராத நிகழ்வுகள் இப்படி நிறைய விஷயங்கள் அந்த நிகழ்ச்சியிலிருந்தது. எந்த விதமான முன்னேற்பாடுகளில்லாமல் எந்த இடத்தில் என்ன கிடைக்கிறதோ, என்ன இருக்கிறதோ, அதைக் கொண்டு வாழ்ந்திடறாங்க.. இல்லைன்னா தேவைக்கேற்ப மாற்றியமைச்சுக்கறாங்க. நீர், உணவு போன்ற முக்கியமான விஷயங்களும் இதில் அடக்கம். அது மாதிரியான இடத்தில் என்ன மாதிரியான உணவு கிடைக்கும், அப்படியே கிடைத்தாலும் அதை சாப்பிடறதுக்கு முன்னாடி எதிலெல்லாம் கவனமா இருக்கணும்.. இப்படி நிறைய விஷயங்களைப் பத்தின விவரங்கள் அதுல சொல்றாங்க. இதில் என்னை ரொம்பவே கவர்ந்த விஷயம் என்ன தெரியுமா? ஒருவருக்கு விருப்பமில்லாததை இன்னொருவர் செய்யறதில்லை. எது செய்தாலும் இரண்டு பேரும் கலந்து பேசி முடிவெடுக்கிறாங்க. என்னதான் இவங்க இரண்டு பேரும் இந்த மாதிரியான இடங்கள்ல வாழ பழகியிருந்தாலும், இது போன்ற விஷயங்கள்ல இவங்களுக்கு நிறைய அனுபவம் இருக்குன்னு புரிஞ்சாலும் சில நேரங்கள்ல எப்படிதான் இதெல்லாம் முடியுதோன்னு கொஞ்சம் பயமாவே இருக்கு.

Handicrafts with Icecream sticksகைவேலைகள் செய்யறது ரொம்பப் பிடிச்ச விஷயம் எனக்கு. ரொம்ப பெரிய அளவுல இல்லேன்னாலும் சின்னச் சின்னதா செய்து வீட்டை அலங்கரிக்கறதுண்டு. கைவினைப் பொருள்கள் செய்யும்போது என்னுடைய மன அழுத்தம் குறைவதை பல சமயங்கள்ல உணர்ந்திருக்கேன். என்ன ஆனாலும் சில விஷயங்களிலே உறுதியாயிருப்பேன். என்னதான் கைவினைப் பொருட்கள் செய்யறது பிடிச்சிருந்தாலும், மன நிறைவைத் தந்தாலும் அதுக்காக அதிகப்படியா செலவு செய்யறதில்லை. அதே போல அந்தப் பொருள் வெறும் அழகுப் பொருளா மட்டுமில்லாம உபயோகமானதாவும் இருக்கணும். எளிதாகக் கிடைக்கக்கூடியதோ/வீட்டிலேயே கிடைக்கக்கூடிய பொருள்கள் மூலமாகவோ செய்யறதுல எனக்கு விருப்பம் ஜாஸ்தி. இப்போ சமீபத்துல ஐஸ்க்ரீம் குச்சிகளாலான ‘Pen stand’ மற்றும் ‘Wall Hanging’ செய்தேன். உங்களுக்கும் இந்த மாதிரியான வேறு பொழுதுபோக்குகள் இருக்கா? என்ன மாதிரியான பொழுதுபோக்குகள்னு எங்கிட்ட சொல்லுங்க.

பொதுவாவே அரசு அலுவலகங்கள்ல நமக்கு வேலை ஏதாவது இருந்தா ஒரு வெறுப்பு கலந்த எரிச்சலோடதான் போவோம். நானும் அதுக்கு தப்பிச்சவளில்லை. அதுவும் போஸ்ட் ஆபிஸுக்குப் போறதுன்னா கேக்கவே வேண்டாம். ஒண்ணுக்கு ரெண்டு படிவம் வாங்கறதுக்குள்ள நான் படறபாடு எனக்குத்தான் தெரியும். எதைக் கேட்டாலும் எரிச்சல், ஒரு கேள்விக்கு இரண்டு கேள்வி கேட்டா சலிப்பு. அவங்களோட எரிச்சல், அவங்க சலிப்பப் பார்த்தா நமக்கும் வாழ்க்கையே வெறுத்துடும்.

நான் கோவை வந்ததும் என்னுடைய பாஸ்புக் டிரான்ஸ்பர் செய்யணும்னு என்னுடைய வீட்டுக்குப் பக்கத்துல இருக்கற பாரதியார் யுனிவர்சிட்டியில் இருக்கும் போஸ்ட் ஆபிஸுக்கு ஒரு கலக்கத்தோடயே போயிருந்தேன். ஆனா அங்க நடந்தது கம்ப்ளீட் உல்டா. யாருமே சலிச்சுக்கல, சந்தேகம் கேட்டா எரிஞ்சு விழல. ரொம்பவே சந்தேகமாப் போச்சு. இந்தியாவுல அதுவும் தமிழ்நாட்டுலதான் இருக்கறோமான்னு செக் பண்ண ரெண்டு தடவ கிள்ளி பார்த்துக்கிட்டேன். இது கனவல்ல நிஜம். இதை எல்லாம் விட ஒரு பெரிய ஷாக்! அவ்வளவு நேரமும் என்னுடைய எல்லா கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பொறுமையா பதில் சொன்னவரு (ஃபார்ம் நிரப்பும்போது எனக்கு சந்தேகம் வந்தப்போ மாதிரிக்கு ஒரு ஃபார்ம் நிரப்பிக் குடுத்தாருங்கறதை கண்டிப்பா இங்க சொல்லியே ஆகணும் யுவர் ஹானர்!) போஸ்ட் மாஸ்டர்ங்கறது கவனிக்க வேண்டிய விஷயம். போஸ்ட் ஆபிஸுகள் சரியா உதவறது இல்லைனு திட்டறதுக்கு நமக்கு உரிமை இருக்குன்னா அதே நேரத்துல அவங்க நல்ல விதமா கவனிக்கும்போது பாராட்டறதும் நம்ம கடமையில்லையா?

Insectsகடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோமா? இந்த ஆடிக்காத்துல என்னுடைய வீட்டுக்கு சில வித்தியாசமான விருந்தினர்கள் வந்திருந்தாங்க. வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் ரொம்பவே வித்தியாசமானவங்க மட்டுமில்லாம கொஞ்சம் ஸ்பெஷலானவங்ககூட. அவங்க எல்லாம் யார் யார்ன்னு அறிமுகப்படுத்த முடியலேன்னாலும் அவங்களுடைய போட்டோக்களை இங்கே இணைச்சிருக்கேன். உங்களுக்கு யாரையாவது அடையாளமோ இல்லை அவங்களுடைய பெயர் தெரிஞ்சாலோ சொல்லுங்க. (காணவில்லைன்னு யாரேனும் விளம்பரம் குடுத்திருக்காங்களா இல்லை.. குடுத்திருக்கீங்களா?)

சரிங்க விஷயங்களை பேசி, சொல்லி, அலசி ஆராய்ச்சி செய்தாச்சு. நம்மளுடைய அரட்டையை மறுபடியும் அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீ யூ…

About The Author

3 Comments

 1. Hema

  Great effect, Hats off Yash. Surya Kala voice is so sweet and the song is inspirational one. We pray for her good future.

 2. Hema

  We all are thankful to Nila for her encouragement and motivation. Nila not only identifies individual talents, she puts so much effect to give shape to our talent, heartfelt thank you Nila. Our (nilacharal family, neyam team) love and prayers for you Nila.

 3. maleek

  பாட்டிகள் வாழ்க!
  சூரியகலா அன்பிலிவபில்..இன்னொரு சாதனைக்கு தயாராகுங்கள்-வாழ்த்துக்கள்.

Comments are closed.