சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் சுகமா, நலமா இருக்கீங்களா? நான் இங்கே எப்பவும் போல நலமாவே இருக்கேன்.

எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் ஒரு ஆன்டிக்கு நான் வைத்திருக்கும் பெயர் ‘எல்லாம் தெரிஞ்ச எல்லம்மா’. அவங்களுக்கு இந்தப் பெயர் எதனால் கிடைத்தது தெரியுமா? அவங்களைப் பொறுத்தவரைக்கும் அவங்களுக்கு எல்லாமே தெரியும். அதுமட்டுமில்லாம அவங்களுக்கு மட்டும்தான் எல்லாமே தெரியும். அதனால் யார் என்ன பேசினாலும் அவங்க பேசுறதை முழுசா கேக்கறாங்களோ இல்லையோ அவங்க சொல்ற விஷயத்தைக் கண்டிப்பாக வார்த்தைக்கு வார்த்தை சரிபார்த்துட்டே இருப்பாங்க.

நவராத்திரி சமயத்துல எங்க வீட்டுக்கு அவங்களை வெற்றிலை பாக்கு வாங்கிக்க வருமாறு அழைத்திருந்தேன். வீட்டுக்குள்ளே நுழைஞ்ச உடனே அவங்களுடைய கேள்விக் கணைகளை ஆரம்பிச்சுட்டாங்க. ‘படி எந்த திசையை நோக்கி இருக்கு? இந்த திசையை நோக்கி இருக்கலாமா? ஒவ்வொரு படியிலேயும் இந்தந்த பொம்மைகள்தான் வைக்கணும்னு இருக்கு.. அதைப் பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா? எதுக்கும் ஒரு முறை சரிபார்த்துடறேன். நாங்க வெற்றிலை பாக்கு கொடுக்கும்போது என்னவெல்லாம் வைத்துக் கொடுப்போம் தெரியுமா? அப்படித்தான் கொடுக்கணும். அதுதான் சரியும்கூட. அப்புறம்…’ இப்படி போய்க்கிட்டே இருக்கும்.

சரி.. இதெல்லாம் கூட ஒரு ஆர்வத்துல சொல்றாங்கன்னு விட்டுடலாம். ஒரு முறை காலங்கார்த்தால வாசலில் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு அங்கே போய் பார்த்தா அவங்க (‘எல்லாம் தெரிஞ்ச எல்லம்மா’) வந்திருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சா… ‘எப்பவும் சாதம் வைக்கும் போது உங்க வீட்டு குக்கரில் இருந்து மூணு விசில் தானே வரும். இன்னிக்கு ஏன் உங்க குக்கரில் இருந்து ஐந்து விசில் வந்தது. இந்த மாதிரி நிறைய விசில் விட்டா சாதம் குழைந்து போயிடும் தெரியுமா. அப்புறம்…’ அப்படீன்னு அவங்க லெக்சர் குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் பேசாம இருந்திருந்தா அந்த ஒரு லெக்சரோட முடிஞ்சிருக்கும். ‘இல்லைங்க இன்னிக்கு எங்க வீட்டுல பொங்கல் செய்திருக்கேன். அதனாலதான் ரெண்டு விசில் கூடுதலா விட்டேன்’னு தெரியாம சொல்லிட்டேன். (நுணலும் தன் வாயால் கெடும்!) உடனே அவங்க, ‘பொங்கல் செய்தீயா? எப்படி செய்தேன்னு சொல்லு? நாங்க எப்படி செய்வோம் தெரியுமா? எப்படி செய்தா சூப்பராயிருக்கும் தெரியுமா?’ன்னு ஆரம்பிச்சு எனக்கு ‘பொங்கல்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே அலறி அடிச்சு ஓடிவிடும் அளவுக்கு லெக்சர் குடுத்தாங்க. அவங்க வயதின் காரணமா அவங்களிடம் ரொம்ப பதில் பேசவும் முடிஞ்சதில்லை. (பதில் சொன்னா அதுக்கும் ஒரு லெக்சர் கிடைக்குமோ அப்படீங்கிற பயமும் உண்டு).

எங்க நகரில் இருக்கும் இன்னொரு ஆன்டியின் வீட்டில் போன மாதம் துளசி பூஜை செய்திருந்ததாலே எங்க எல்லோரையும் அவங்க வீட்டுக்கு வெற்றிலை பாக்கு வாங்கிக்க வருமாறு அழைத்திருந்தாங்க. அவங்க வீட்டில் ஆன்டி, அங்கிள், பாட்டி (அங்கிளோட அம்மா) இருக்காங்க. அங்கேயும் வந்தாங்க நம்ம ‘எல்லாம் தெரிஞ்ச எல்லம்மா’. எப்பவும் போல அவங்களுடைய கேள்விக் கணைகளை ஆரம்பிச்சதோட இல்லாம அவங்களுடைய பழக்கவழக்கங்களைச் சொல்லி செயல்முறை விளக்கமும் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அவங்க சொல்லி முடிக்கும் வரை அமைதியா எல்லாத்தையும் கேட்ட அந்தப் பாட்டி, ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்க சொன்ன கதையை நீங்களும் கேளுங்க.

ஒருநாள் மஹா விஷ்ணுவை சந்திக்க நாரதர் வைகுந்தம் போயிருந்தாராம். விஷ்ணுவிடம் நாரதர் "ஒரு நாளைக்கு உங்களுடைய பெயரை ஓராயிரம் தடவை சொல்றேன். இந்த உலகத்திலேயே எங்கே தேடினாலும் என்னைப் போன்ற ஒரு பக்தன் உங்களுக்கு கிடைக்கவே மாட்டான்" அப்படீன்னு சொன்னாராம். இதைக் கேட்ட விஷ்ணு, "அப்படியா?"ன்னு கேட்டு, நாரதரை ஒரு விவசாயியின் வீட்டிற்கு அழைச்சிட்டு வந்தாராம். நாரதர்கிட்ட, "எனக்குத் தெரிஞ்சு இவன்தான் என்னுடைய சிறந்த பக்தன்" அப்படீன்னு சொன்னாராம். இதைக் கேட்ட நாரதர், "எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?"ன்னு கேட்டாராம். அதுக்கு விஷ்ணு, "விவசாயியின் ஒருநாள் செயல்பாட்டைக் கவனித்தால் உனக்கே புரியும்"ன்னு சொன்னாராம். விவசாயியின் செயல்களை நாரதரும் கவனிக்க ஆரம்பிச்சாரம்.

காலையில் எழுந்ததும் அந்த விவசாயி ‘நாராயணா’ அப்படீன்னு ஒரு முறை சொல்லிட்டு தன்னுடைய வேலைகளை செய்ய ஆரம்பிச்சாராம். அதுக்கப்புறமா இரவு படுத்துத் தூங்கறதுக்கு முன்னாடி ‘நாராயணா’ அப்படீன்னு மீண்டும் ஒரு முறை சொல்லிட்டு படுத்துத் தூங்கிட்டாராம். இதைப் பார்த்ததும் நாரதருக்கு ரொம்ப ஏமாற்றமாப் போச்சாம். "ஒரு நாளைக்கு நான் பல முறை ‘நாராயணா, நாராயணா’ன்னு சொல்றேன். ஆனால் இந்த விவசாயி ஒரு நாளைக்கு ரெண்டே ரெண்டு தடவை உங்களுடைய பெயரைச் சொல்றாரு. எப்படி என்னை விட விவசாயி சிறந்த பக்தன்னு சொல்றீங்க?" அப்படீன்னு கேட்டாரம். அதுக்கு விஷ்ணு, "உன்னுடைய கேள்விக்கு நான் கண்டிப்பாக பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கொடுக்கும் இந்த எண்ணைக் கிண்ணத்தை உன்னுடைய உள்ளங்கையில் வைத்துக் கொண்டு இந்த வீட்டை ஒருமுறை சுற்றி வா. ஆனால் ஒரு விஷயம். ஒரு துளி எண்ணை கூட சிந்தக் கூடாது. ஜாக்கிரதை"ன்னு சொன்னாராம்.

மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்காமல் நாரதர் அந்த எண்ணைக் கிண்ணத்தை வாங்கி, தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அந்த வீட்டை சுற்றி வர ஆரம்பிச்சாராம். கிண்ணத்தின் விளிம்பு வரை எண்ணை இருந்ததாலே ரொம்பவும் ஜாக்கிரதையா எண்ணை சிந்திடாத வகையில அந்த வீட்டைச் சுற்றி வந்தாராம் நாரதர். சுற்றி வந்தப்புறம் ரொம்பப் பெருமையா விஷ்ணுவிடம், "பார்த்தீங்களா, ஒரு துளி கூட சிந்தாம நான் இந்த வீட்டைச் சுற்றி வந்துட்டேன்" அப்படீன்னு சொன்னாராம். அதுக்கு மஹாவிஷ்ணு, "இந்த வீட்டைச் சுற்றி வரும்போது எவ்வளவு முறை என் நினைவு வந்தது?"ன்னு கேட்டாராம். அதுக்கு நாரதர் சொன்னாராம், "கிண்ணத்தின் விளிம்பு வரைக்கும் எண்ணை இருந்தது. சிந்திடாம சுற்றி வரணும் என்கிற எண்ணம் மட்டுமே இருந்ததாலே எனக்கு உங்களுடையப் பெயரைச் சொல்லவோ, இல்லை உங்களை நினைக்கவோ முடியவில்லை." இதற்கு மஹாவிஷ்ணு, "ஒரு சின்ன எண்ணைக் கிண்ணத்துடன் இந்த வீட்டை ஒரு முறை சுற்றி வந்த உன்னால் என்னை ஒரு முறை கூட நினைக்க முடியவில்லை. ஆனால் இந்த விவசாயியோ அவனுக்கு இருக்கும் பல வேலைகள், பல பிரச்சனைகளுக்கிடையே ஒரு நாளில் என்னை இரண்டு முறை நினைத்துக் கொள்கிறான். யார் சிறந்த பக்தன்னு நீயே முடிவு செய்துக்கோ" அப்படீன்னாரம்.

"பக்தி முக்கியமே தவிர அதை இப்படித்தான் வெளிப்படுத்தணும்னு எந்த ஒரு கண்டிப்பான விதிமுறையும் கிடையாது. உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, தெரிஞ்ச மாதிரி நீங்க செய்யறீங்க, எங்களுக்குப் பிடிச்ச மாதிரி நாங்க செய்யறோம். இவ்வளவுதான் விஷயமே. அதை மாதிரி எப்படியெல்லாம் செய்கிறோம் என்பதைவிட மனதார என்ன செய்கிறோம் அப்படீங்கிறதுதான் முக்கியம். இது சரி அது தப்பு அப்படீன்னு எதையுமே வகைப்படுத்த முடியாது"ன்னு கதையும் சொல்லி கதையின் மூலமா அவங்க சொல்ல நினைத்த கருத்தையும் சொன்னாங்க. அதுக்குமேல் ‘எல்லாம்மா’வால ஏதாவது பேச முடியும்? கப்சிப் கபர்தார்…

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் ‘ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?‘ அப்படீங்கிற கேள்வி நம்ம எல்லோருடைய மனசுலேயும் நம்மை அறியாமலேயே வருது இல்லையா? ஆனா நமக்கு மட்டுமில்லாமல் உலகத்துல இருக்கும் எல்லோருக்குமே பிரச்சனைகள் இருக்கிறதுண்டு. இதுல சாதனை புரிந்த எத்தனையோ பேர்களும் அடக்கம். ஆனா அது பலருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு, கீழே உள்ள சுட்டியை லேசா தட்டிவிட்டு அதிலிருக்கும் வீடியோவைப் பாருங்க.. நான் சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு உங்களுக்கே புரியும்.

http://vidsage.com/inspirational-spirituality/53-inspirational-spirituality/1155-the-best-motivation-video.html

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author