சில்லுனு ஒரு அரட்டை !

எல்லாருக்கும் வணக்கம், வந்தனம், ஸ்வாகதம்.

அடிப்படையில் எந்த மாநிலத்தில் பிறந்திருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதால்தான் இப்படிக் குறிப்பிட்டேன். அரசியல் வணிகத்தில் ‘என் ஜாதி, என் மாநிலம் – இங்கே யாருக்கும் இடமில்லை என்று சொல்வதுதான் எவ்வளவு வா(வே)டிக்கையாகி விட்டது!. சச்சின் டெண்டுல்கர் "நான் மஹராஷ்ட்ரியன் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். அதையும் தாண்டி நான் இந்தியன் என்பதில்தான் எனக்குப் பெருமை. மும்பை எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது" என்று கூறியதும் பால் தாக்கரேக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அரசியல் ஆடுகளத்தில் இறங்கவேண்டாம் என சச்சினை எச்சரித்திருக்கிறார். ‘மராத்திய நிலத்தில் இந்த மாதிரி ரன் எடுக்க விரும்பினால் ரன் அவுட் ஆகிவிடுவாய்!’ என்றும் பயமுறுத்துகிறார். “நான் ஒரு இந்தியன்” என்று கூறுவது கூட அரசியலாகப் படுகிறது தாக்கரேக்கு!

அறிஞர் அண்ணா ஒரு சமயத்தில் தனி நாடு பிரிவினை கேட்பது குற்றம் என்று சட்டம் வந்தபோது தனது திராவிட நாடு கோரிக்கையையே கைவிட்டார். இன்று பத்திரிக்கைகளில், மேடைகளில் மஹாராஷ்டிர மாநிலம் மஹாராஷ்டிரருக்கே என்று முழங்குகிறார்கள். தட்டிக் கேட்க யாருமில்லை, கேட்டால் எங்கே தங்கள் ஓட்டுகள் போய்விடுமோ என்று பயம்.

ஜாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் தாண்டி உலகில் வாழும் அனைவரும் சகோதர சகோதரர்கள் என்ற உணர்வில் சகோதரத்துவத்தைப் பரப்பும் பிரம்மஞானசபையின் கொள்கை இந்த சமயத்தில் நினைவிற்கு வருகிறது. அடையாறில் இருக்கும் The Theosophical Society எனக் கூறப்படும் பிரம்ம ஞான சபை தோன்றி 130 ஆண்டுகள் ஆகின்றன. உண்மைதான்! உண்மையை விட உயர்ந்த மதம் எதுவும் இல்லை எனக் கூறும் இந்தச் சபையின் பணி இன்னும் பல நூற்றாண்டுகள் தொடர வேண்டும்.

சுயநலம் மனிதர்களைக் காலம் காலமாக ஆட்டிப் படைக்கிறது. தனக்கு ஒரு கஷ்டமும் இல்லாதவரை ‘யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன?’ என்ற மனப்பான்மை அடிப்படையில் எல்லாரிடமுமே இருக்கிறது. "முதலில் அவர்கள் வந்தார்கள்" என்ற தலைப்பில் பாஸ்டர் மார்டின் நீமில்லர் எழுதியதாகக் கருதப்படும் கவிதை வரிகள் நமது சுயநலத்தைத் துகிலுரிக்கின்றன. ஜெர்மனியில் நாசிப்படைகளின் அடக்குமுறையால் பலதரப்பட்ட மக்களும், இனத்தவர்களும் கொடுமைப்படுத்தப்பட்டபோது ஜெர்மனியிலுள்ள படித்தவர்கள் ‘தனக்கு ஏதும் நேராதவரை எது நடந்தாலென்ன?’ என்று வாய்மூடி மவுனிகளாக இருந்தார்கள். அதைச் சொல்கின்றன இந்தக் கவிதை வரிகள் :

அவர்கள் முதலில் வந்தார்கள் – கம்யூனிஸ்டுகளை நோக்கி
நான் ஒன்றும் பேசவில்லை- ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை
பிறகு அவர்கள் வந்தார்கள் – சமவுடமைவாதிகளை நோக்கி
அப்போதும் நான் பேசவில்லை- ஏனென்றால் நான் சோஷலிஸ்ட் இல்லை
தொழிலாளர் சங்கங்களை அவர்கள் நசுக்கியபோதும் நான் மவுனமாயிருந்தேன்
ஏனென்றால் நான் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவன் இல்லை
பின்னர் யூதர்களைக் குறி வைத்து அவர்கள் வந்தார்கள்
எனக்குக் கவலையில்லை – ஏனென்றால் நான் யூதன் இல்லை
பிறகு அவர்கள் என்னை நோக்கி வந்தார்கள் –
அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை

இப்படித்தான் அரசியல் ஏமாற்று வித்தைகளும், லஞ்சமும் நாட்டில் தலைவிரித்தாடுகின்றன. அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும், நியாயத்திற்காகப் போராட வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் நமது அறிவாளிகள் வாய் மூடியிருக்கிறார்கள்.

மனித நேயத்தைப் பற்றிப் பேசுவதென்றால் பேசிக் கொண்டேயிருக்கலாம். அது பல நேரங்களில் வெறும் பேச்சளவிலேயே நிற்கிறது. உடைகளிலும், கேளிக்கை நடனங்களிலும் அமெரிக்காவின் நாகரிகத்தைப் பின்பற்றும் பலர் அவர்களது மனிதநேயத்தையும் பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?!

Shopping Mallசமீபத்தில் அமெரிக்காவில் இருந்தபோது ஒரு கப்பல் பயணம் மேற்கொண்டேன். கப்பல் போல வீடு என்பார்கள். அந்தக் கப்பலை ஒரு குட்டி நகரம் என்றே சொல்ல வேண்டும். காசினோ, நீச்சல் குளம் (பலர் ஹாயாக உடையணிந்து வெய்யில் காய்ந்து கொண்டிருந்தார்கள்), பல கேளிக்கை விளையாட்டுக்கள், அற்புதமான உணவு விடுதி என்று ஒரு சொர்க்கமே அங்கு விரிந்திருந்தது. ஒவ்வொரு இடத்திலும் கப்பல் பணியாளர்கள் விருந்தாளிகளிடம் நடந்து கொண்ட விதமும், வந்திருந்தவர்கள் அவர்களைப் பணியாளர்கள் என்று பார்க்காமல் ஒரு சகோதரத்துவத்துடன் பழகிய விதமும் மனதை மிகவும் கவர்ந்தன. ‘நான் பெரியவன், நீ ஒரு பணியாளன்தான்’ என்றில்லாமல் அதுவும் ஒரு தொழில்தான் என்ற வகையில் எந்த பணியில் எந்த நிலையிலிருந்தாலும் அவர்களையும் மனிதர்களாகப் பார்க்கும் அவர்களது பாங்கு நாம் அவர்களிடமிருந்து கற்று கொள்ள வேண்டிய ஒன்று.

அரட்டை ரொம்ப சீரியஸாகப் போகிறாற்போல் தோன்றுகிறது. கொஞ்சம் சப்ஜெக்டை மாற்றலாமோ?

புடவை என்றால் அதிக பட்சம் எவ்வளவு விலையிருக்கும்? இரண்டு லட்சம், மூணு லட்சம் – இல்லை 10 லட்சம்? ஊஹூம்! அதையும் தாண்டி விலை அதிகமாஆஆஆஆஆஆஆனது நாற்பது லட்சம் ரூபாய்! சென்னை சில்க்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கும் புடவையின் விலைதான் இது. கின்னஸ் ரிக்கார்டில் இடம் பிடித்திருக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புடவையில்?

Silk sareeநேர்த்தியாக நெய்யப்பட்டிருக்கும் புடவையில் பன்னிரண்டு வித விலையுயர்ந்த கற்களாலும் உலோகங்களாலும் ராஜா ரவிவர்மாவின் 11 ஓவியங்கள் அழகாக நெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ‘வெவ்வேறு கலாசாரத்தினைச் சேர்ந்த பெண் பாடகிகள்’ என்ற தலைப்பில் ரவிவர்மா வரைந்த பிரபலமான ஓவியம். புடவையின் கரையிலும் பத்து ஓவியங்கள். விசேஷம் என்னவென்றால், பெண்களின் ஓவியங்கள் சிறப்பாகக் கைகளால் கவனமாக நெசவு செய்யப்பட்டிருப்பதோடு அழகான கண்ணைக் கவரும் தங்க, வைர, ப்ளாட்டின, வெள்ளி மற்றும் ரூபி எமரால்ட் போன்ற ஆபரணங்களோடும் அழகுபடுத்தப் பட்டிருக்கின்றன. இதைத் தயாரிக்க நெசவாளர்களுக்கு 4680 மணி நேரம் தேவைப்பட்டதாம். அடுத்த தீபாவளிக்கு உங்கள் மனைவிக்கு வாங்கிவிடவேண்டியதுதானே! (நீயா காசு கொடுக்கப் போறே என்ற உங்கள் முணுமுணுப்பு காதில் விழுகிறது)

‘ஆறாவது அறிவு’ கண்டுபிடிப்பாளர் 28 வயதே ஆன ப்ரணவ் மிஸ்த்ரியைப் பற்றி அறிவீர்களா? தன் கரங்களையே கம்ப்யூட்டராக்கி வேண்டிய தகவல்களைப் பெறும் தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்தவர். இந்தக் கருவி எதையுமே காட்சித் திரையாக்கும் தன்மையுடையது. உ ங்கள் மணிக்கட்டே ஒரு கடிகாரமாகலாம். உங்கள் உள்ளங்கையே ஒரு தொலைபேசியாகும். இந்தக் கருவியில் இருப்பது கழுத்தில் அணிந்து கொள்ளக் கூடிய ஒரு காமிரா, ஒரு ப்ரொஜெக்டர், மற்றும் ஒரு கண்ணாடி. காமிரா உங்களது கைகளின் அசைவைக் கொண்டு அவைகளைக் கட்டளைகளாக மாற்றுகிறது.

ஒரு கடையில் நீங்கள் ஏதாவது பொருளை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால் இந்தக் கருவி நீங்கள் வாங்கப் போகும் பொருளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் உங்கள் உள்ளங்கையில் கொடுத்துவிடும். ஒரு புத்தகக் கடையில் ஒரு புத்தகம் வாங்க எண்ணி எடுத்தால், அதைப் பற்றிய வாசகர்களின் விமரிசனம், அதன் தரம் பற்றிய எல்லாத் தகவல்களையும் உடனே அறிய முடியும். உங்கள் கைகளின் அசைவுகளால் ஒளிப்பதிவாளர்களைப் போல ஃபோட்டோ எடுக்க முடியும். இதைப் பற்றிய செயல்முறையை அவர் தனது குரு பட்டி மேஸுடன் இணைந்து செய்து காண்பித்தார்.

தகவல் தொடர்பில் ஒரு புதிய புரட்சியையே உண்டாக்கும் இந்தக் கண்டுபிடிப்பினால் அவர் பணம் சம்பாதிக்க நினைக்கவில்லை. பல பெரிய பெரிய கம்பெனிகள் இவரது கண்டுபிடிப்பை வாங்க முயற்சிக்கையில், இந்திய அரசுக்கே முதல் உரிமை தர எண்ணுகிறார் இந்த இளைஞர்! பிரணவ் மிஸ்ட்ரியின் டெமோவைப் பார்க்க…

http://www.ted.com/talks/pranav_mistry_the_thrilling_potential_of_sixthsense_technology.html

இரண்டு இருபதாண்டு சாதனைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஒன்று பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு இருபதாண்டுகளானது. இன்னொன்று சச்சினின் 20 ஆண்டு கால கிரிக்கெட் சாதனை.

சாதனைகளை முறியடிப்பதற்கென்றே பிறந்தவர் சச்சின். இடைக்காலங்களில் அவரது தோள்பட்டை வலியினால் “எங்கே இனி கிரிக்கெட்டைத் தொடரமுடியாதோ?"என்ற அச்சம் எழுந்த நேரத்திலும் கிரிக்கெட்டின் மேல் அவருக்கிருந்த தணியாத தாகமும் மன உறுதியும்தான் இன்னும் இந்த முப்பத்தாறு வயதிலும் தொடர்ந்து அவரை ஆட வைத்திருக்கின்றன.

அமெரிக்காவிலிருந்து நான் திரும்பியபோது கொட்டும் மழைதான் என்னை வரவேற்றது. ‘நல்லார் ஒருவர் உளரேல் (உளறினாலா என்று கேட்பது காதில் விழுகிறது!!) எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்பதுதான் எவ்வளவு உண்மை! அதுவரை அடித்த வெயில் போய் நான் காலடி வைத்ததும்தானே மழை பெய்கிறது!

மழை அரை மணி நேரம் பெய்தால் கூட போதும். தெருவெங்கும் வெள்ளம் என்பது வருஷா வருஷம் நடக்கும் வழக்கமான சங்கதி. மழைக்காலம் வருவதற்கு முன்னால் "பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயாராயிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன. வடிகால்கள் சரி செய்யப்பட்டுவிட்டன” என்று பீற்றுவார்கள். அரை மணி நேர மழை போதும்! ரோடுகள் பல்லை இளிக்க ஆரம்பித்து விடும். வாகன ஓட்டிகள் ஒட்டக சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் நிவாரணம், உணவுப் பொட்டலம், போர்க்கால நடவடிக்கை என்று எல்லா நாடகங்களும் அரங்கேறும். மறுபடியும் அடுத்த ஆண்டு வரை ‘கொர்ர்ர்’தான்!!

அறுவை அதிகமாகி விட்டது என்று நினைக்கிறேன். உங்கள் கொர்ர் சத்தம் கேட்கும் முன் முடித்துக் கொள்கிறேன். முடிக்கும் முன்னால் ஒரு சின்ன தத்துவம்:

”பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும், மனிதர்களை நேசிக்க வேண்டும். ஆனால் நாமோ மனிதர்களைப் பயன்படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம்”

இப்போதைக்கு விடைபெறுகிறேன். அடுத்த அறுவைக்குத் தயாராயிருங்கள்!

About The Author

4 Comments

 1. mini

  பொருட்களை உபயோகப்படுத்த வேண்டும், மனிதர்களை நேசிக்க வேண்டும். ஆனால் நாமோ மனிதர்களைப் பயன்படுத்துகிறோம், பொருட்களை நேசிக்கிறோம்”

  Nice one!

 2. P.Balakrishnan

  சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரப் பட்டுச்சேலைகள் அழகுதான்!

 3. Jo

  மனதில் பதியக் கூடிய நிறைய நல்ல தகவல்கள்

Comments are closed.