தருணம் 11.1

நொண்டிச்சாக்கு (2)

ஆ.மாதவன்

கதையின் முன்பாதி: தருணம் 11

எங்கள் காவடியூர் பஞ்சாயத்து பஸ் நிலையமும், கடைத் தெருவும் ஒன்று. கடைத் தெரு என்றால், வடக்கே ஒட்டன்சாவடி பாழடைந்த சத்திரத்திலிருந்து தெற்கே பாலதேவி டூறிங் டாக்கீஸ் வரை ஒரு அரை மைல் அன்னியூர் தோப்புக்கடவு மெயின் ரஸ்தாவில் அடங்கியிருந்தது. முதலில் குடிசை குடிசைகளாக சக்கிலியன் கடை, நிலக்கடலை பொரிகடலை வறுத்து விக்கிற கடை, இடையே ஓட்டை ஒடசல் கண்ணாடி சாமானும், அலுமினியக் குப்பைகளும் நிறுத்து வாங்குகிற நாலு தினுசு படிக்கல் கடைகள். கப்பி ரோட்டின் அத்தனை தூசும் அந்த வளைவு திருப்பக் கடையில் மண்டிக் கெடக்கும். இடது புறம் தனியாக தட்டுக் கடையாக இரண்டு. ஒன்று ஆட்டுக்கறி அறுத்து விக்கிற நைனான் சாகிபு கடை; இன்னொன்று மாட்டுக்கறி வியாபாரம் தும்மிடு சோஸப்பு கடை. ஒரு நாலு ஏக்கர் பாழ்வெளியில் வாத்து மேயுற குட்டை. பஸ்ஸில் முக்கு திரும்புகையிலேயே மொடை நாற்றம் தலையை வலிக்கும்!

வலது பக்கம்தான் எல்லாக் கடை கண்ணியும். நாலு மொட்டைமாடிக் கடைகளும் பலசரக்கு மண்டிகள் அடுத்தாற்போலப் பழக்கடை. கூரை மேயாத திண்ணையில் இளநீர்க் குவியலும், ரெண்டு நீள பெஞ்சுகளும் போடப்பட்டிருக்கும். அடுத்தாற் போல நம்ம கடை, தையல்கடை. பக்கத்திலே ஷாப்பு கடை. சோப்பு, சீப்பு, பீடி, புகையிலை வியாபாரம். செய்தி பேப்பர் எல்லாம்கூட அங்கேயே கிடைக்கும். அடுத்தாற் போல வட்டிக் கடை அமீர்சந்து சாயிராம் சேட் கடை. தரித்திரம் பிடித்த சாயிபு வீட்டு முன்வாசல் மாதிரி, எப்பொழுதும் ஓஞ்சுபோய்க் கிடக்கும். ஆனால் அங்கேதான் கடைத் தெருவிலேயே பெரிய வியாபாரமெல்லாம் நடக்கும். லாட்டு பிரகாரம் பணம் பொரளும்.

மூக்குத்திப் பொட்டு அடகு வைக்கும் சேரிக்கார சின்னம்மா முதல், வைர அட்டிகை அடகு வைக்கிற அய்யரு வீட்டு சாமி வரைக்கும் அங்கேதான் வந்து போவாங்க. அடுத்தாற்போல சைக்கிள் கடை. பஸ் நிலையத்து குட்டி வியாபாரிகளுக்கெல்லாம் வெயிலுக்கும், வம்புக்கும் புகலிடம் அதுதான். அதுக்கு அடுத்தாற்போல அய்யர் கடை, பெரிய ஹோட்டல் துர்க்கா லஞ்சுஹோம்…

எதுத்தாப்போல பஸ் நிலையம். அரை சினிமா கொட்டகை மாதிரி தகரக் கூரை மண்டபம். வெய்யிலோ, மழையோ எதுவானாலும் அங்கேயே பட்டுக்கொள்ளலாம். பிறகு அரசமரத் திடல்… மைதானம்… தொலை தள்ளி, நாயர் டீக்கடையும், மிலிட்டேரி ஓட்டலும்… பிறகு டூறிங் டாக்கீஸ் – திருப்பம் முடிகிறது. தெற்கே பார்த்து ஊரும் வயல் வெளியும் எல்லாம்…
துரைப்பாண்டி இந்தக் காவடியூர் சீமைக்கு வந்து என் நினைவு தெரிந்து அஞ்சாறு வருஷம் இருக்கும். வருகிறபோதே நொண்டியாக – ‘ஒண்டியாக’த்தான் வந்தான். எங்கியோ பொம்மலப்பட்டியாம் சொந்த கிராமம். பெரு நோயிலே பொண்டாட்டியும் ஆயாக்காரியும் – மாடு கண்ணுகளும் பூண்டோடு போய்விட்டதாம். வேட்டு வச்சு மலை பொளக்கிற சித்தாள் வேலை பார்த்து வந்தானாம். ‘கிரகசாரம்’, ஒரு நாள் வெடிக்காத வேட்டை மிதிக்கப்போய் கால் ரெண்டையும் வாங்கிக் கொண்டு போய் விட்டது, அந்தப் பொய்வேட்டு…

கடைசியில் மனம் சடைஞ்சு சர்க்கார் ஆஸ்பத்திரியே விட்டு, குச்சியில் ஊஞ்சல் நடையுடன் வெளியே வந்தபோது, பொம்மலப்பட்டி வெறுத்துப் போய் விட்டது… கடைசியில் காவடியூர் சீமையும் – பஸ் நிலையத்துப் ‘பொழைப்பும்’ எனது தையல்கடை வாசமும் நிலைத்துப் போய் விட்டது.

இப்போ துரைப்பாண்டி தன் தொழிலில் ரெம்பவும் தேறிப்போனான். கொடுக்கிற புண்ணியவான் யாரு, கஞ்சம்பட்டி ஆசாமி யாரு, ஈரெட்டிக்காரன் யாரு என்பதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. ‘கவிழ்ந்தா பூமி. நிமிர்ந்தா மானம்’ என்கிற உறைப்பும் மனத்திற்கு வந்து விட்டது. ‘நொண்டிதானே கொடுத்தா என்ன?’ என்கிற நியாயம் மட்டும் மிகவும் அழுத்தமானது, என்று அவன் நம்புகிறான். அதனால் அதிகாரமாகக் கூடப் பிச்சை கேட்பான். சந்தைக்குப் போய்விட்டு பஸ்ஸில் வருகிற துப்பட்டா தலைப்பாகைக்காரர் போன்ற அழுத்தமானவர்களை ஆரம்பத்தில் விட்டுப் பிடித்துப் பிறகு அதட்டிப் பிடித்துக் காசு வாங்குகிற வித்தையெல்லாம் துரைப்பாண்டிக்கு சுளுவாகிவிட்டது. சமயத்தில், எனக்குக்கூட இந்தத் தய்யல்காரப் பிழைப்பை விட்டெறிந்துவிட்டு, கண்ணை மூடிக் கொண்டு, அய்யா சாமீ – என்று புறப்பட்டால் என்னவென்று தோன்றி விடுகிறது! துரைப்பாண்டிக்கு சந்தை பஸ்தான் நித்ய வருமானத்தின் மொத்த இடம். சந்தை பஸ்ஸில் வரும் ஒட்டு முக்கால் ஆசாமிகளும் துரைப்பாண்டிக்கும் கைநீட்டும் புண்யாத்மாக்கள்தான். ஆனால் அந்தத் துப்பட்டிக்காரர் இப்போ இடையில் வந்தவர் – அவரிடம் துரைப்பாண்டியின் அசகாய வித்தை பதினெட்டையும் பிரயோகித்தும் சல்லி பெயரமாட்டேன் என்கிறது.

அதற்குதான் அவன் "அடுத்த சந்தைகெடு பாரு சாமி, அந்த துப்படிக்காரனை வகையா நாலு கேக்கிறேன். பாத்துப்பிடுறது. என்ன செஞ்சிடுவான்… எந்திச்சு வந்து நாலு போட வருவானாக்கும்? அதையும்தான் பாத்துப்பிடுறது… நாயம் தெரிஞ்ச நாலு சனங்க, நொண்டிக்காரனுக்கு ரெண்டு சல்லி போட்டா தேஞ்சா போவீங்கள்… அதான் அவன் பொறுக்காம திட்றான்னு சொல்லாமலா போவாங்க…" என்று கறுவியிருந்தான்.

"இந்தா தைய்யக்கார சாமி, மணி என்னா ஆவுது? பன்னண்டு இருக்குமா? சந்தை பஸ் வர்ற நேரமாச்சுதான்னு கேக்கிறேன்… வர வர சாமி, சனங்ககிட்டே ஈன எரக்கம் கொறஞ்சு போயிட்டே இருக்கு, பாத்துக்கிங்க. முந்தியெல்லாம் கால்ணா அரையணா கணக்கு பாக்காமெ கொடுப்பாங்க. இப்பப் பாரு, பைசா காசு. முந்தின கால்ணா கணக்குன்னா இந்த பைசாவிலெ மூணு சேர்ந்தாத்தான். இந்தத் துக்கிணி துட்டுக்கொடுக்க யோசனை பண்றாங்கோ… நேத்துப் பாரு சாமி, நீ நம்புனா நம்பு, நம்பாட்டிப் போ. நாலே நால்ணா காசுதான் கடவுள் என் மனசறிய கெடச்சுது. என்னாத்துக்கு காணும் சாமி? பத்து பைசா இட்லீங்கிறான். இப்போ பொறந்த புள்ளைக்கு சம்பாத்யம்னா என்னா செய்யிறது? இன்னைக்கு சந்தெ கெடு. பஸ் நெறையா ஆள் வரும். வர்ற புண்யவாங்க ஆளுக்கு ரெண்டு காசு கணிசமா போட்டாங்கன்னா இன்னிய நாளுக்கு பொழுதுக்கு கவலை இல்லை. ஆனா கெடைக்கோணுமே… தா வர்து பாரு… ராஜாவாட்டம் சந்தை பஸ்… வர்றேன் சாமியோ!…"

அன்னியூர் சந்தை பஸ், வழக்கம்போல வேகமாக இரைத்துக் கொண்டு வந்து, ஒரு திரும்பு திரும்பிக் குலுக்கிக் கொண்டு சடக்கென்று நின்றது. பஸ்ஸை விட்டு ஆட்கள் இறங்குவதற்கு முன்னரே ஏற வேண்டியவர்களும், நெருக்கமும், குட்டி வியாபாரிகளின் கூச்சலும் திமிலோகப்படுகிறது. இத்தனைக்குமிடையே துரைப்பாண்டியின் குரல்தான் அழுத்தமாகவும் கணீரென்றும் கேட்கிறது. அதையும் மீறி பஸ் கண்டக்டரின் அதட்டல் எழும்புகிறது… "இந்தா, எறங்கிறவங்களை மொதல்லே உட்டுடுங்க… எறங்கி முடிஞ்சுட்டுதுன்னா அல்லாத்துக்கும் டிக்கட் இருக்குது… ஏன் நெரிச பண்றீங்க?…"

"அய்யா தர்ம தொரையுங்களே! காலில்லாத ஆத்மா அய்யாமாரே! ஒங்களெப் போல ஓடியாடி பாடுபட முடியாத பாவி நான். தர்மவாங்களே, ஒரு ரெண்டு பைசா, ஐந்து பைசா போடுங்க சாமிகளே…"

"இஞ்சி மொரப்பா… இஞ்சி மொரப்பா…"

"யார்றா அவன் பெரிய இவன்! அய்யா வாடிக்கையா எங்கிட்டெதான் சந்தெ சொமையைத் தூக்கியாரச் சொல்லுவாரு… நீ இருபது பைசா கொடு சாமி! எங்கே வேணாலும் தூக்கியாறேன். போடா தெரியும்…"

ஓசைகளின் கம்பீரம், ஆரம்ப சூரத்தனம் முடிந்ததும், மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது. துரைப்பாண்டியின் குரலும் ஒன்று விட்டு மெதுவாகவும், சிலபோது அழுத்தமாகவும் கேட்டது. சட்டைக்குப் பிசிறு நூல் வெட்டிக் கொண்டிருந்த வாக்கில் நிமிர்ந்து பார்த்தபோது, பஸ்ஸின் இடதுபுறம் மூன்றாவது வரிசையில் முண்டாசுக்கட்டும் கம்பீரமுமாக இருந்த துப்பட்டிக்காரரிடம் காசு கேட்டுக் கொண்டிருந்த துரைப்பாண்டியைத்தான் பார்த்தேன். அவன் ஏற்கெனவே சொல்லியிருந்த வண்ணம் ஏதேனும் வேடிக்கை நடக்கப் போகிறதென்ற எண்ணத்தில் நானும் கைவேலையில் பாதி கவனமும், பஸ்ஸடியில் பாதி கவனமுமாக பாவனையில் இருந்தேன்.

"நீயும் எத்தினியோ சந்தைக்கு வந்துக்கினுமிருக்கிறே. அள்ளிக் கட்டிக்கினு போயிக்கினுமிருக்கிறே. இன்னியாச்சும் ஒரு அஞ்சு பைசா குடுத்தா கொறஞ்சா பூடுவே?… அட நானும் உன்னியெப் போல கால் கை உள்ளவன்னா இப்பிடியா வந்து கெஞ்சிக்கிட்டு கெடப்பேன்… குடு சாமி, இன்னிக்கு கெராக்கியே கம்மி சாமி…"

துப்பட்டிக்காரர் அசைவதாக இல்லை. அவர் பாட்டுக்குப் பொரிகடலையோ ஏதோ ஒன்றைக் கொறித்தவாறு, அந்த அலட்சியப் புன்சிரிப்புடன், பஸ்ஸின் உள்ளேயே அமர்ந்திருந்தார். துரைப்பாண்டியின் வசன மழை ஒன்றையுமே அவர் கேட்டதாகக் கூட இல்லை.

"சாமி… சாமி… நீ கடலெ திங்கிற காசு போட்டா கொறஞ்சா போவே சாமி?… இந்த மாதிரி நொண்டி மொடத்துக்கு கொடுக்காட்டி யாருக்கு கொடுக்கப் போறே புண்யவானே!"

துரைப்பாண்டியின் அரற்றல் பொறுக்க மாட்டாமல் துப்பட்டிக்காரரின் பக்கத்தில் இருந்தவர், தம் பையிலிருந்து காசை எடுத்துக் கொடுத்து, "போப்பா அந்தண்டை! காது அடைக்கிது…" என்று விரட்டினார்.

"நீ கொடுத்திட்டே சாமீ. புண்யவான் இதோ இவருக்கிட்டெதான் கேக்கிறேன். ரெண்டு காலும் இல்லாத நொண்டி சாமீ நானு…"

"அட, அவர்தான் இல்லைங்கிறாரே அந்தண்டை போயேன்" என்றார் இன்னொருவர் துப்பட்டிக்காரரைக் கீழ் மேலாகப் பார்த்தவாறு.

"அவர் கொடுக்க வேணும் சாமி! அல்லாத்தையும் சந்தையிலெ வித்து அள்ளிக்கினு போறாரே… காசு இவருக்குத் தங்குமா சாமி? பிச்சைக்காரனெ பாக்க வச்சி தீனி வாங்கித் தின்னுறாரே சாமி… ஒரு ரெண்டு காசு இந்தாடான்னு வீசியெறிஞ்சா கொறஞ்சா போயிடுவாரு?… எனக்கு மட்டும் கால் இருந்திச்சுன்னா இப்படியா சாமி தலை வெடிக்கிற வெய்யில் மேலெ கத்திக்கினு இருப்பேன்?… ராஜாவாட்டம் சந்தை யாவாரம் நானும் பண்ண மாட்டனாக்கும்?"

"அல்லாரும் ஏறிட்டாங்களாப்பா? கண்டக்டரு, நேரமாச்சு. என்னா நீ இன்னுமா டிக்கட் கிழிக்கிறே…?" என்று ஹாரனை அழுத்தியவாறு பின்னால் பார்த்துக் குரல் கொடுத்தான், டிரைவர்.

"இரு அண்ணே… மூணே டிக்கிட்டுதான்… ரெண்டே நிம்மிசம்… தா ரைட் போட்டுறேன்" என்றவாறு உள்ளங்கையிலிருந்த சிறிய டிக்கட் புத்தகத்தில் மளமளவென்று எழுதிக் கொண்டிருந்தான் கண்டக்டர்.

"வண்டி போகப் போகுது சாமி… நீ குடுக்க மாட்டே. நீ நாசமாகப் போக… உன் புள்ளை குட்டிங்க…"

துரைப்பாண்டியை முடிக்க விடவில்லை துப்பட்டிக்காரர்.

"அடடே இரப்பா இரப்பா… இதோ வர்றேன் பொறுத்துக்க… பாவம் நீ" என்று கையமர்த்திவிட்டு, சட்டென்று பக்கத்தில் எதையோ எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சீட்டாகத் தாண்டி பஸ்ஸிற்கு வெளியே வந்தார் துப்பட்டிக்காரர்.

"என்னா பெரியவரே, பஸ் பொறப்படற நேரத்திலே வெளியே?" என்று வாசல்லேயே தடுத்த கண்டக்டரிடம் எதையோ சொல்லி விட்டு, வாசற்படி மேல் நின்றிருந்த நாலைந்து ஆட்களை விலக்கிக்கொண்டு வெளியே வந்த துப்பட்டிக்காரரைப் பார்த்தபோது –
துரைப்பாண்டியென்ன, பஸ்ஸின் உள்ளேயிருந்தவர்களைத் தவிர எல்லோருமே அசந்து போனோம்.

துப்பட்டிக்காரரும் துரைப்பாண்டியைப் போல, இரண்டு கால்களும் இல்லாமல் – கையிடுக்கில் சொருகிய மரக்குச்சிகளில் ஊஞ்சலாடி நடந்து வந்து துரைப்பாண்டி பக்கத்தில் நின்றபோது, பஸ்ஸிற்கு வெளியே என்னையும் சேர்த்த கடைத் தெருக்காரர்களுக்கு முகத்தில் கொப்பளித்துக் கொட்டினது மாதிரி ஆகிவிட்டது!

"சந்தெக்காரப் பெரியவரே! வாங்க சீக்கிரம். அவன் கெடக்குறான் பிச்சைக்காரக் களுதெ… ஏறுங்க சீக்கிரம்… அவன் பொளைப்புக்கு அது ஒரு நொண்டிச் சாக்கு… விட்டுப்பிட்டு வருவீங்களா?" என்ற கண்டக்டரின் குரலுக்குக் கை காட்டிவிட்டு, "நீ போப்பா! நான் அடுத்த பஸ் போல வர்றேன்…" என்ற பெரியவர் – துரைப்பாண்டியின் அருகே நிற்பது – கடைத் தெருவில் என்னைப்போல் எல்லோருக்குமே வெட்கமாக இருந்தது!

அன்னியூர் சந்தை பஸ் புறப்பட்டுப் போயிற்று. செம்மண் ரோட்டில், ஆயில் மிச்சமும், டயர்களின் தடமும் தெளிந்து கிடந்தன!

–சந்திப்போம் வேறொரு தருணத்தில்…

About The Author